அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் லொஸ் ஏஞ்சல்ஸ் மாநகரில் உள்ள தமது வீட்டில் வியாழக் கிழமை 18 ஏப்ரல் 2024 அன்று பகல் 11:55 மணிக்கு கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்கள் காலமானார். அவரது அமைதியான மறைவின்போது அவரது குடும்பத்தினர் அவரின் அருகில் இருந்தனர். அப்போது அவருக்கு வயது 89.
நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (எதிர்) 1934ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள பெரியவிளான் என்ற ஒரு சிறிய கிராமத்தில் களிமண் தரையும் பனை ஓலைக் கூரையும் கொண்ட ஓர் அறைக் குடிசையில் பிறந்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடந்த போட்டி ஒன்றில் அவருக்குப் பரிசாகக் கிடைத்த தடகள மெய்வல்லுனர் புத்தகமொன்றில் இருந்த படங்களைக் கவனமாக ஆராய்ந்து உயரம் பாய்வது எப்படி என்று தமது சிறிய பின்வளவில் எதிர் தானாகவே கற்றுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் 1948 ஒலிம்பிக் போட்டிகள் குறித்த செய்திப்படம் ஒன்றைப் பார்த்த பின்னர் இப்படியான ஓர் ஒலிம்பிக் போட்டிக்குத் தானும் போவேன் என்று ஓர் உறுதியை எதிர் தனக்குள் எடுத்துக்கொண்டார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, 17 வயதான எதிர் ஹெல்சிங்கி – பின்லாந்து 1952 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றார். மெல்பேண் – அவுஸ்திரேலியா 1956 ஒலிம்பிக் போட்டிகளினூடாகத் தொடர்ந்த அவரது தடகளப் பயணத்தில், ரோக்கியோ – ஜப்பான் 1958ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எதிர் கண்ட வெற்றி எந்த விளையாட்டிலும் இலங்கை பெற்ற முதல் தங்கப் பதக்கம் என்ற பெருமையையும் பெற்றது. நான்கு ஆண்டுகளின் பின்னர், ஜகார்த்தா – இந்தோனேசியா 1962ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எதிர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயரம் பாய்தல் போட்டிகளில் எதிர் கலந்து கொண்ட ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் இருந்த சாதனைகளை முறியடித்தார். பழைய பஸ் வண்டி அச்சுகள் மற்றும் பிற பஸ் பாகங்களைப் பயன்படுத்தி வீட்டில் உருவாக்கிய பொருட்களைத் தனது உடலை வலுப்படுத்தும் பயிற்சிகளுக்காக எதிர் பயன்படுத்தினார். கொழும்பில் 1951ஆம் ஆண்டு நடந்த தேசிய மட்டத்திலான போட்டியில் வென்ற பின்னர் அவருக்கு முதற்தடவையாக ஒரு சிறப்பு தடகள பயிற்சியாளரான பி. இ. ராஜேந்திராவின் நெறிப்படுத்தலும் கட்டமைப்பான உடற்பயிற்சி வழிமுறைகளும் கிடைத்தன. பின்னர்,
1952 ஒலிம்பிக் போட்டிகளுக்கான அணியில் எதிர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்லாந்து நாட்டிலுள்ள ஹெல்சிங்கி நகரத்தை அடைய ஒரு மாதத்திற்கும் மேலாகக் கடற்கப்பலிற் பயணம் செய்து எதிர் அதிலே கலந்து கொண்டார். 1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அவருக்குப் பதக்கம் ஏதும் கிடைக்காவிட்டாலும், தங்கம் – வெள்ளி – வெண்கலம் என்று பதக்கங்கள் வென்ற வீரர்கள் தாண்டிய 1.95 மீற்றர் உயரத்தை அவரும் தாண்டியிருந்ததால் அவருக்கு விதிகளின்படி நான்காவது இடம் கிடைத்ததுடன், வெற்றியாளர்களுடன் புதிய உயரம் பாய்தல் ஆசிய சாதனையை எதிர் மூன்று வீரர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
ஆசிய சாதனைக்கு அடுத்து வந்த ஆண்டுகளில் (1955 மற்றும் 1956), சிலோன் டெய்லி நியூஸ் குழுமத்தின் “ஆண்டின் விளையாட்டு நட்சத்திரமாக” (Sports Star of the Year) எதிர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பயிற்சியாளருக்கு அருகிலேயே இருப்பது சிறப்பு என்பதால், தனது பல்கலைக்கழகப் புகுமுகக் கல்வியைத் தொடர்வதற்காகக் கொழும்பில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் எதிர் சேர்ந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகம் லொஸ்ஏஞ்சல்ஸ் (University of California, Los Angeles – UCLA) 1956ஆம் ஆண்டில் வழங்கிய முழுமையான மெய்வல்லுனர் புலமைப்பரிசு விருது அவரை அமெரிக்காவுக்கு அழைத்தது. தனது முதுகலைப் பட்டத்தை சான் லூயிஸ் ஒபிஸ்போ கலிபோர்னியா பொலிரெக்னிக் பல்கலைக்கழகத்தில் (California Polytechnic University, San Luis Obispo) பெற்றுக்கொண்ட எதிர் 1971ஆம் ஆண்டில் கோணேல் பல்கலைக்கழகத்தில் (Cornell University) முனைவர் பட்டமும் பெற்றார்.
உயரம் பாய்தலில் இலங்கைக்கான சாதனையை மட்டுமன்றி ஆசிய மட்டத்திலும் சாதனையைக் கொண்டிருந்த போதிலும், 1958ஆம் ஆண்டு ரோக்கியோ – ஜப்பான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான அணியில் எதிர் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இருந்தாலும், டெய்லி நியூஸ் பத்திரிகையின் விளையாட்டுப் பிரிவு செய்தியாசிரியர் காள்ரன் செனிவிரத்தின தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளின் அழுத்தம் காரணமாகத் தெரிவுக்குழு இறுதியில் தன்னைத் தளர்த்திக்கொண்டு கொண்டு எதிர் இந்த போட்டிகளிற் கலந்து கொள்ள அனுமதித்தது. இருந்தாலும், பிந்தி அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்ற காரணத்தைக் காட்டிய தெரிவுக்குழு இந்தப் போட்டிகளிற் கலந்து கொள்வதற்காக லொஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து ரோக்கியோ சொல்வதற்கான செலவை அவரே பார்த்துக் கொள்ளவேண்டும் என்று அறிவித்தது. அப்போது அவருக்கு ஆதரவாக புரவலர் டொனவன் அந்திரே கொடுத்த ஐயாயிரம் அமெரிக்க டொலர்களின் உதவியுடன் அந்தப் பயணத்தை எதிர் மேற்கொண்டு, போட்டிக்குச் சில நாட்கள் மட்டுமே இருக்கையில் ரோக்கியோவில் அணியுடன் இணைந்து கொண்டார். இந்தப் போட்டிகளின் போது அவருக்கான சீருடைகளை இலங்கை வழங்கவில்லை என்பதால், அவரது பல்கலைக்கழகத்தின் விளையாட்டுச் சீருடையில் இலங்கை அணியின் இலச்சினையை குத்திக்கொண்டு எதிர் அந்தப் போட்டிகளிற் கலந்து கொண்டார். இவற்றையெல்லாம் தாண்டி, இலங்கையின் அணியிலிருந்த மற்றைய போட்டியாளர்கள் அவரையே இலங்கை அணியின் தலைவராகத் தீர்மானித்தார்கள்.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எதிர் ஆறு அடி எட்டு அங்குலம் (2.03 மீற்றர்) தாண்டித் தங்கப்பதக்கம் பெற்றது மட்டுமல்லாது, இலங்கைக்கும் ஆசியாவுக்குமான உயரம் பாய்தல் சாதனைகளையும் நிலைநாட்டினார். இலங்கையின் இந்த உயரம் பாய்தல் சாதனை 1989ஆம் ஆண்டு வரை நிலைத்திருந்தது. இலங்கையின் சார்பில் உயரம் பாய்ந்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையின் முதலாவது தங்கப்பதக்கத்தை எதிர் பெற்ற அதே வேளையில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான 1958 இன வன்முறை நடந்திருந்தது. இந்த இன வன்முறையை பற்றிய தகவல்களையோ இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் குறித்தோ இந்தப் போட்டிகளின் முடிவில் அமெரிக்காவுக்கு திரும்பிய பின்னர் அவரது சகோதரர் சொல்லும் வரையில் எதிர் எதுவும் அறிந்திருக்கவில்லை.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1958இல் நடந்த அதே விடயங்கள் 1960 மற்றும் 1962ஆம் ஆண்டுகளிலும் நடந்தன! இலங்கைக்கானதும் ஆசியாவுக்கானதுமான உயரம் பாய்தல் சாதனைகளைத் தன் பெயரிலே கொண்டிருந்ததுடன் ஒலிம்பிக் போட்டிகளுக்கான உயரம் பாய்தல் தகுதிகாண் உயரத்தைத் தாண்டியிருந்த போதிலும், மெக்சிகோ 1960 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு எதிர் தேர்வு செய்யப்படவில்லை. ஜகார்த்தா – இந்தோனேசியா 1962 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் கூட அவர் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் என்ற இறுக்கமான பிரசார முன்னெடுப்புகளின் பின்னரே எதிர் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அங்கே அவர் வெள்ளிப் பதக்கத்தை இலங்கை சார்பில் பெற்றிருந்தார்.
போருக்கு முந்திய இலங்கையின் வரலாற்றில் நடைபெற்ற பல சிக்கலான நிகழ்வுகளின் முதன்மையான நேரடிச் சாட்சியாக எதிர் இருந்திருந்தார். இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் 1956ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நிகழ்வுக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சி காலிமுகத் திடலில் நடத்திய சத்தியாக்கிரகத்தைப் பார்ப்பதற்காக இரண்டு நண்பர்களோடு சென்றிருந்த போது எதிர் மரணத்திலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தார். அமைதியான சத்தியாக்கிரகப் போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான வன்முறை நாடெங்கும் பரவியிருந்தது. அப்போதுதான் அவரும் அவரது இரண்டு நண்பர்களும் வன்முறையாளர்களால் கொல்லப்படும் நிலைமை வந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக, ஒரு வன்முறையாளர் தான் முன்னர் பார்த்த ‘ஆண்டின் விளையாட்டு நட்சத்திரம்’ விருது வழங்கப்பட்ட படத்திலிருந்து எதிரை அடையாளம் கண்டுகொண்டார். அந்த வன்முறையாளர் அவரைப் பாதுகாப்பாக ஒரு மருத்துவ நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மருந்தாளரிடம் பாதுகாப்பாக நிலைமைகள் வரும் வரை அவர்களை உள்ளே வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
தமிழர்கள் எதிர்கொண்ட இன்னொரு வரலாற்று நிகழ்ச்சியை நேரடியாக எதிர் கண்டிருந்தார். யாழ்ப்பாணம் அரச அதிபர் பணிமனைக்கு முன்பாக தமிழ் அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள் மேற்கொண்ட சத்தியாக்கிரகத்தைப் பார்ப்பதற்காக 20 பெப்ரவரி 1961 அன்று எதிர் யாழ்ப்பாணம் போயிருந்தார். அங்கும் அமைதியான போராட்டக்காரர்கள் அரச வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள்.
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தை பெற்ற பின்னர் எதிர் இலங்கை திரும்பினார். ஆனாலும் தான் தேர்ந்த விவசாயக் கல்வித் துறையில் தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்வதில் அவருக்குச் சிரமங்கள் இருந்தன. ஒரு முதுகலைப் பட்டத்தைப் பெற்று இலங்கை திரும்பினால் தொழில் வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் எதிர் மீண்டும் அமெரிக்கா திரும்பினார். ஆனாலும் பல்லாயிரம் தமிழர்கள் முகம் கொடுத்ததைப் போலவே, முதுகலைப் பட்டத்தின் பின்னரும் இலங்கையில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்போது அவருக்கு கிடைத்த விரிவுரையாளர் பதவி ஒன்றை சியரா லியோன் நாட்டின் நிஜாலா பல்கலைக்கழகத்தில் எதிர் ஏற்றுக்கொண்டார். தமது பல்கலைக்கழகக் கற்பித்தல் துறையில் சியரா லியோன், நைஜீரியா, பப்புவா நியூகினி போன்ற நாடுகளில் அவர் தொடர்ந்து பணியாற்றினார். ஐக்கிய நாடுகள் அமைப்பான UNESCO நிறுவனத்திலும் அவர் பணிபுரிந்தார்.
அவர் சியரா லியோன் நாட்டில் இருந்த காலத்தில், 1965ஆம் ஆண்டு ஜூலியற் ஆன் பவர் (Juliet Ann Power) என்ற தமது முழு அன்புக்குப் பாத்திரமான ஒருவரைச் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டார். தனது பல்கலைக்கழகக் கல்வியை முடித்த ஜூலியற் ஆன் பவர் US Peace Corps அமைப்புடன் இணைந்து அப்போது சியரா லியோன் வந்திருந்தார் இந்த இணையருக்கு மூன்று பிள்ளைகளும் எட்டு பேரப்பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் 2024ஆம் ஆண்டின் மே மாதத்தில் தமது 58ஆவது திருமண நிறைவு நாளைக் கண்டிருப்பர்.
தனது அறுபதாவது வயதில் பணி ஓய்வு பெற்ற எதிர் 1994ஆம் ஆண்டு தான் பிறந்து வளர்ந்த – தனது மெய்வல்லுனர் நாட்களில் தன்னை ஆதரித்த – நாட்டுக்கும் அந்த மக்களுக்கும் நன்றியுடன் பணி செய்ய விரும்பினார். போருக்கு மத்தியிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் விவசாயத் துறையில் பணி செய்வதற்காக அவர் செய்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. தாயகம் திரும்பிய எதிர், தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போர் மற்றும் வடஇலங்கை மக்கள் மீதான எரிபொருள், மின்சாரம், உணவு, மருத்துவம் போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கான கடுமையான பொருளாதாரத் தடைகள் போன்றவற்றுக்கும் மத்தியிலும் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப் பிரதேசத்தில் ஓராண்டுக்கான ஒப்பந்தத்துடன் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்டார்.
ஓராண்டு பணிபுரிந்து விட்டு அமெரிக்கா திரும்புவதை விடுத்து, ஒரு வருமானம் தேடாத தன்னார்வப் பணியாளராகத் தமது ஒப்பந்தத்திற்குப் பின்னரும் வன்னியில் எதிர் தொடர்ந்து பணிபுரிந்தார். மனிதநேயம், கல்வி, விளையாட்டு போன்ற பல துறைகளில் மக்களுக்கான உதவிகளைப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வழங்கும் நோக்கில் அவரது ஓய்வற்ற பணி தொடர்ந்தது. ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்து ஒக்ரோபர் மாதம் 1995ஆம் ஆண்டு வன்னி மற்றும் வேறு பிரதேசங்களுக்குப் போனபோது எதிர் கிளிநொச்சியில் இருந்தார். உள்ளக இடம் பெயர்வாகக் கிளிநொச்சிக்குப் போன மக்களை வரவேற்று அவர்களுக்கான அவசர உணவு மற்றும் உறைவிட வசதிகளைச் செய்யும் பணியாளர்கள் குழுக்களில் எதிர் முக்கிய பங்கு வகித்தார்.
தனது பயிற்சிகள் மற்றும் கற்பித்தல் வாழ்க்கை அனைத்தும் தனது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் ஊதியம் பெறாத தன்னார்வப் பணிக்காகத் தன்னை நெறிப்படுத்தியதாக அவர் உணர்ந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1994ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று பரவும் வரை ஆறு முதல் பத்து மாதங்கள் வரை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்து தனது பணியை அவர் தொடர்ந்தார். புலம்பெயர் தமிழர்கள் வழங்கிய பணிசார் ஆதரவுகளும், தனிப்பட்ட செலவுகளுக்காக அவரது மனைவி ஜூலியற் வழங்கிய ஆதரவும் அவரது பணிகளுக்குத் தோள்கொடுத்தன. கல்வி, விளையாட்டு மற்றும் மிகவும் பின்தங்கிய சமூகங்களுக்கான ஆதரவு போன்வற்றில் எதிர் முக்கிய கவனம் செலுத்தினார். அவரது வாழ்நாள் முழுவதும் சாதிய அமைப்புக்கு எதிரான ஒரு சக்தியாக எதிர் இருந்தார்.
அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்குத் தகுதி பெற்றிருந்தாலும் இலங்கைக்கான குடியுரிமையை அவர் கைவிடவில்லை. இலங்கைக்கான தமது கடைசிப் பயணத்தின்போது, 2023ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தமது 88ஆவது வயதில், கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் தடகளப் பயிற்சியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் எதிர் பயிற்சி முறைகள் மற்றும் திறமைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றில் பட்டறைகளை வழங்கினார்.
சிக்கல்களுக்கு மத்தியில், 1994ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டில் போர் முடிவடையும் வரை, எதிர் அமைதிக்காகவும் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவரவும் அயராது உழைத்தார். போர்க்காலத்திலும் 2004 சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து அரசாங்கங்கள், அரசியல் தலைவர்கள், மனிதநேய மற்றும் மனித உரிமைக் குழுக்கள், மற்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் அமைப்புகளையும் சந்தித்துப் பேசினார். எதிர் செய்த மிகவும் காத்திரமான பணிகள் போர் 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த பின்னர் செய்யப்பட்டன. அவரது விளையாட்டுச் சாதனைகளும் அதனூடு செறிந்த புகழும் மோதலில் ஈடுபட்டிருந்த அனைத்து தரப்பினராலும் நன்கு மதிக்கப்பட்டமையால் எல்லோரையும் அணுகுவது அவருக்கு இலகுவானதாக இருந்தது. இவ்வகையில், எல்லோரையும் சந்திப்பது மாத்திரமல்லாது அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில் போரிடும் தரப்புகளுக்கிடையே அதிகாரப்பூர்வமற்ற செய்திகளுக்கு ஓர் ஊடகமாகவும் பாலமாகவும் இருக்க அவருக்கு முடிந்தது. போர் முற்றுவதற்கு முன்னர், அவரது பங்களிப்புடன் 1997ஆம் ஆண்டில் முயற்சிக்கப்பட்ட ஹார்வர்ட் முன்னெடுப்பு (Harvard Initiative) இந்த எண்ணற்ற முயற்சிகளில் ஒன்றாகும். மற்றவையைப் போலவே இந்த முயற்சியும் தோல்வி கண்டிருந்தது.
போர் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் மனிதநேயம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் எதிர் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் நேரடியாகப் பங்கெடுத்தார். தானே ஓர் உதாரணமாக, மற்றவர்களைத் தன்னலமின்றி வாழவும் சமுதாய முன்னேற்றத்திற்காக உழைக்கவும் ஊக்குவித்தார். எதிர் மேற்கொண்ட திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் பல்வேறு துறைகளிற் பரந்திருந்ததுடன், அவர் எப்போதும் கவனத்திற் கொண்டிருந்த மாற்றுத் திறனாளிகளையும் முழுமையாக உள்ளடக்கியிருந்தன. போர் முடிவடைந்த பின்னர் அவர் இணைந்து உருவாக்கிய SERVE Institute அமைப்பு கல்விக் காணொலிகளைத் தயாரித்து வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விநியோகித்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சில தொலைதூரப் பகுதிகளில், குறிப்பாக சாதியின் காரணமாக ஒதுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால், பல சிரமங்கள் இருந்தன. அவர்களைக் கருத்திற் கொண்டு இந்த அமைப்பு கணிதம், அறிவியல், இரசாயனவியல் (வேதியியல் – Chemistry), பௌதிகவியல் (இயற்பியல் – Physics) மற்றும் பிற பாடங்களில் ஆற்றல் வாய்ந்த ஆசிரியர்களின் காணொலிகளைத் தமிழில் உருவாக்கியது. வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் உள்ள பள்ளிகள் அந்த மேலதிக வளங்களைச் செலவின்றிப் பெற்றுக்கொண்டன. கோவிட் தொற்றுநோய் பள்ளிக்குச் செல்வதைத் தடுத்தபோது இந்தக் காணொலிகள் மாணவர்களுக்கு மதிப்புமிக்க வளங்களாகக் கைகொடுத்தன.
வடமாகாணக் கல்விமுறை குறித்து 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வடமாகாணக் கல்விமுறையின் புதிய ஆய்வுகளுக்குப் பின்னால் இருந்த முதன்மை மூளையாகவும் வலுவாகவும் எதிர் இருந்தார். இந்த ஆய்வு ஆயிரக்கணக்கான பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்களிடம் ஆலோசனைகளைக் கேட்டது. இதன் விளைவாக வடக்கு கல்வி முறை மறுஆய்வு (Northern Education System Review – NERS) என்ற தலைப்பில் கல்வி முறையை மேம்படுத்துவதற்கான பரவலானதும் மாறுபட்டதுமான பல பரிந்துரைகள் இந்த ஆய்வு அறிக்கையில் இருந்தன. இந்த அறிக்கையின் பல பரிந்துரைகள் வட மாகாணக் கல்வி அமைச்சினால் இணைக்கப்பட்டன. இந்த அறிக்கையின் பரிந்துரைகளால் ஈர்க்கப்பட்ட கொழும்பிலுள்ள இலங்கையின் கல்வி அமைச்சு சில பரிந்துரைகளைத் தமது செயற்பாடுகளில் இணைத்துக் கொண்டது. நாட்டின் பிற பகுதிகளிலும் இதே போன்ற ஆய்வுகள் நடாத்தப்பட்டன.
இனம், மதம் அல்லது மொழிப் பின்னணி என்ற வேறுபாடுகள் எதுவுமில்லாமல் மக்களுக்கு உதவுவது தமது பணி என்று எதிர் நம்பினார். இலங்கை முழுவதுமான அவரது பயணத்தில் இவருக்குப் பயிற்சி அளித்து அனைத்துலக மட்டத்தில் இவரைப் போட்டியிட வைக்கலாம் என்று பல விளையாட்டு வீரர்களை எதிர் அடையாளம் காட்டினார். இவர்களில் முதன்மையானவர் மஞ்சுள குமார விஜேசேகர. உயரம் பாய்தல் போட்டியில் இலங்கை மட்டத்தில் உயரம் பாய்தல் சாதனை படைத்த மஞ்சுளவை அமெரிக்காவுக்கு அழைத்துப் போனபோது அவருக்கு கொஞ்சம் ஆங்கிலம் தான் பேச முடிந்தது. எதிர் சிங்களம் பேச முடியாதவராக இருந்தார். தமது குடும்பத்துடன் ஓர் ஆண்டு காலம் மஞ்சுளவை வாழவைத்து எதிர் அவருக்குப் பாய்ச்சலிலும் ஆங்கிலத்திலும் கடுமையான பயிற்சிகளைக் கொடுத்தார் எதிர். முடிவில், மஞ்சுள தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (USC) முழு உதவித்தொகை பெற்றுக் கல்வியையும் விளையாடடையும் தொடர்ந்தார். தற்போதைய இலங்கை உயரம் பாய்தல் சாதனையாளரான உஷான் திவாங்க பெரேராவுக்கும் எதிர் இதே போன்ற வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தார். உயரம் பாயும் வீரர்களான நளின் பிரியதர்ஷன மற்றும் பூர்ணிமா குணரத்தின ஆகியோர் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டிலே தான் தங்கியிருந்தனர். எதிர் அவர்களுக்குப் பயிற்சி அளித்து, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு உதவித்தொகை பெறுவதற்கான தேடலில் அவர்களுக்கு உதவினார்.
இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசாந்திகா ஜெயசிங்கவும் எதிரின் வீட்டிலே தங்கியிருந்தார். தனிப்பட்ட காரணங்கள் ஏற்படுத்திய இடைவெளியின் பின்னர் 2007ஆம் ஆண்டில் சுசாந்திகா தடகளப் போட்டிக்குத் திரும்பும்போதும் எதிர் அவருக்கு மூன்று மாதங்கள் பயிற்சியளித்தார். அந்த ஆண்டு ஜப்பான் ஒசாகாவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சுசாந்திகா வெண்கலப் பதக்கம் பெற்றார். சுசாந்திகா மற்றும் மஞ்சுள போன்றோர் போருக்குப் பிந்தைய இலங்கையின் வடபகுதியில் எதிர் நடத்திய பயிற்சிப் பட்டறைகளில் இணைந்து உதவினர்.
இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க எதிருக்கு 1998ஆம் ஆண்டு ‘தேசபந்து’ என்ற மதிப்புமிக்க விருதை வழங்க முன்வந்தார். இந்த உச்ச அங்கீகாரத்தை மரியாதையுடன் மறுத்த எதிர், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில், “என் மக்கள் துன்பப்படும் வேளையில் போர் தொடரும் வேளையில் எனது மனச்சாட்சியுடன் இந்த விருதை என்னால் ஏற்க முடியாது” என்று குறிப்பிட்டார்.
சகோதரர்கள் செல்லத்துரை நித்தியானந்தம், நாகலிங்கம் இரத்தினசிங்கம், நாகலிங்கம் இராஜசிங்கம், நாகலிங்கம் செகராஜசிங்கம், மற்றும் நாகலிங்கம் பரராஜசிங்கம், சகோதரி பரமேஸ்வரி நடராஜா என்ற ஆறு உடன்பிறப்புகளின் பின்னர் கடைசியாகப் பிறந்தவர் எதிர்.
நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களின் குடும்பத்தில் மனைவி 57 வயதுடைய ஜூலியற் எதிர்வீரசிங்கம், அவர்களது பிள்ளைகள் சகுந்தலா, நகுலன் மற்றும் அர்ஜுனன் ஆகியோருடன் அவரது எட்டு பேரக்குழந்தைகள் உள்ளனர்.
எதிர் நினைவுக்காக மலர்கள் அனுப்ப எண்ணுவோர் மலர்களுக்குப் பதிலாக அவர்கள் விரும்பும் இலங்கையிற் செயற்படும் தன்னார்வ நிறுவனங்களுக்குப் பங்களிக்க நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் அவர்களின் குடும்பம் வேண்டுகிறது.
மேலதிக தொடர்புகளுக்கு:
அர்ஜுனன் எதிர்வீரசிங்கம்
arjunan100@yahoo.com
ஆங்கில மூலம்: அர்ஜுனன் எதிர்வீரசிங்கம்
தமிழ் வடிவம்: பாலா விக்னேஸ்வரன்