வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை காரணமாக மரணித்துள்ளார்கள். இவர்கள் அனைவரும் 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.
குறிப்பாக, மரணித்தவர்களில் சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறையிலிருந்து நீதிமன்றத்தின் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தனது விடுதலையை கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்த போதை விருந்துபசாரத்தின் போது மரணமடைந்துள்ளார்.
மற்றையவர்கள், அதிகளவான போதைப்பொருளை பயன்படுத்தியமை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழந்தவர்களாக உள்ளனர். இந்த மரணங்கள் நிகழ்ந்த பின்னரும் கூட போதைப்பொருள் பாவனை குறைந்ததாக தகவல்கள் இல்லை.
கடந்த வாரத்தில் குறிப்பாக 2024.03.26 முதல் 2024.04.16 வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் தொடர்பில் 29 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. அதில் 23.075 கிராம் அளவு ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பில் இரண்டு வழக்குகளும் 0.08 கிராம் அளவு ஐஸ் வைத்திருந்தமைக்காக ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், கஞ்சா பயன்பாடு மற்றும் வியாபாரம் தொடர்பில் 21 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதோடு 21.299 கிலோகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கும் அதேநேரம் வடக்கில் போதைப்பொருள் விவகாரமானது, சமூகப் புற்றுநோயாக தொடர்ந்து கொண்டே செல்கிறது.
பூகோள ரீதியில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தின் தெற்குப் பாதை இந்து சமுத்திரத்துக்கூடாகச் செல்கின்றது. இதற்கான முக்கிய காரணியாக கடல்வழி அமைகின்றது.
அந்தக் கடல்வழியில் கேந்திர ஸ்தானமாக இருப்பது இலங்கை. இதனால் இலங்கை பூகோள போதைப்பொருள் வர்த்தகத்தில் பிராந்திய மையமாக விளங்குகின்றது என்று ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
நாடொன்றின் கடல் எல்லையாக தரையிலிருந்து 12 கடல்மைல்கள் காணப்படுகின்ற நிலையில் அந்தக் கடல் எல்லைக்குள் தான் கைதுகளை மேற்கொள்ள முடியும் என்பது சர்வதேச கடல் எல்லை விதியாகவுள்ளது.
அதற்கு அப்பாற்பட்ட கடல்வெளியானது எந்தவொரு தரப்பினராலும் கண்காணிக்கப்படாமலேயே உள்ளது. இதுதான் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு நம்பிக்கையான ஏதுநிலையை வழங்குவதாக உள்ளது.
அந்த வகையில், இலங்கையின் கடல் எல்லைக்குள் கடத்தப்படுகின்ற போதைப் பொருள் சர்வதேச கடல் எல்லைக்கு அண்மையில் வைத்து கொள்கலன்களுக்குள் அடைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டு அதிலிருந்து வெவ்வேறு இடங்களுக்கு விநியோகிக்கப்படுகின்றது.
இந்தக் கடத்தலின் யுக்தியாக, சர்வதேச கடல் எல்லையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலம் தான் அதிகளவில் கொண்டுவரப்படுகின்றன. இன்னும் சில போதைப்பொருள்கள் அதிகாரம் மிக்கவர்களின் செல்வாக்கால் கொண்டு வரப்படுகின்றன. இதற்கு வேலியே பயிரை மேய்வது போன்று பாதுகாப்புத் தரப்பினர் சிலரது பூரணமான ஆதரவும் இருக்கின்றது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் கடந்த 2023 ஜனவரி முதல் ஜூன் வரை போதைப்பொருள் துஷ்பிரயோக கண்காணிப்பு அமைப்பினால் பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட நபர்கள் பற்றிய பகுப்பாய்வு அறிக்கையை அவதானிக்கின்றபோது போதைப்பொருளின் வெகுவான தாக்கம் வெளிப்படுகின்றது.
அதனடிப்படையில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 19,544 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் 10,396 பேர் கஞ்சா பயன்படுத்துபவர்களாகவும் 7,778 பேர் 25 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 98 சதவீதமானவர்கள் ஆண்களாக இருப்பதோடு 2சதவீதமானவர்கள் பெண்களாக உள்ளனர். மேலும், 10,029 நபர்கள் திருமணமானவர்களாகவும் 7,621 பேர் தனிமையில் இருப்பவர்களாகவும் உள்ளனர். அவர்களின் கல்விப் பின்னணியைக் கருத்திற் கொள்ளும்போது கா.பொ.த. சாதாரண தரம் முடித்தவர்களிடமிருந்தே அதிக அளவு போதைப்பொருள் பாவனை பதிவாகியுள்ளது. 12 பேர் தொழில்வான்மையாளர்களாகவும் உள்ளனர்.
அத்தோடு இக்காலத்தில் 23 சதவீதமானவர்கள் சதாரண தொழிலாளர்களாகவும் 12.8 சதவீதமானவர்கள் வேலையில்லாதவர்களாகவும் 8.8 சதவீதமானவர்கள் விவசாயிகளாகவும் 3.2 சதவீதமானவர்கள் சாரதிகள் அல்லது போக்குவரத்து துறையில் பணியாற்றுபவர்களாகவும் உள்ளனர்.
நாடாளவிய ரீதியில் நிலைமைகள் மேற்கண்டவாறு அமைந்திருந்தாலும், போதைப்பொருளின் தாக்கத்துக்கு வடக்கு, கிழக்கு விதிவிலக்கல்ல. வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் என்பது தமிழ் பேசும் இனத்தின் மீது திட்டமிட்டு திணிக்கப்படும் ஒருவிடயமா என்ற சந்தேகம் எழுகின்றது. .
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரும் மாறிமாறி ஆட்சிப்பீடத்தில் அமருகின்ற அரசாங்கங்கள் வடக்கு, கிழக்கை தொடர்ந்தும் போர்க்கால சூழலிலேயே வைத்துக்கொள்வதையே வெகுவாக விரும்புகின்றன.
இதற்காகவே மூன்று பொதுமகனுக்கு ஒரு படைவீரர் என்ற விகிதத்தில் முப்படைகளையும் வடக்கு, கிழக்கில் குவித்து வைத்துள்ளது இலங்கை அரசாங்கம். இதற்கு அப்பால் பொலிஸ், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் செயற்பட்டு வருகின்றார்கள்.
இவ்வாறு அதிகரித்த எண்ணிக்கையான படைகளை வடக்கு, கிழக்கில் இருந்து குறைத்துக்கொள்ள வேண்டுமென்ற அழுத்தங்கள் ஏற்பட்டபோது, ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெற்றுவிடுவார்கள் என்று காரணம் கற்பிதித்தது இலங்கை அரசாங்கம்.
உண்மையில், வடக்கு, கிழக்கில் போதைப்பொருள் விநியோகமானது ஆரம்பத்தில் போதைப்பொருளுக்கான தேவையை அதிகரித்து, வழங்கலைக் மட்டுப்படுத்துகின்றபோது, போதைப்பொருளின் விலை அதிகரிப்பதோடு, பல விநியோக வழிகளை திறப்பதற்காக வலிந்து தள்ளப்படுவதை நோக்காக கொண்டே காய்கள் நகர்த்தப்பட்டன.
அந்த நோக்கம் தற்போது வடக்கு, கிழக்கில் வெற்றிகண்டுவிட்டது. இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது இப்பிராந்தியத்தில் உள்ள எட்டு மாவட்டங்களில் இளைஞர்களின் சமூக அக்கறைகள் திசைத்திருப்பப்பட்டு போதைப்பொருள் பாவனையை நோக்கி வலிந்து தள்ளப்பட்டுள்ளது.
இதனால் அதிகளவான இளையோரே போதைப்பொருள் பாவனையாளர்களாக மாறியுள்ளனர். அண்மைய காலத்தில் அவர்கள் போதைப்பொருளுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.
இதனால், வடக்கு இளைஞர்களின் எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகியுள்ளதோடு, அடுத்த சந்ததியானது, இனவிடுதலைச் சிந்தனையில் இருந்தும், அறிவுசார்ந்த சமூக கட்டமைப்பிலிருந்தும் திசை திருப்பப்படுகின்ற செயற்பாடே சூட்சுமமாக முன்னெடுக்கப்படுகின்றது.
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் கடந்த 2023 ஜனவரி முதல் ஜூன் வரை போதைப்பொருள் துஷ்பிரயோக கண்காணிப்பு அமைப்பினால் பெறப்பட்ட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட நபர்கள் பற்றிய பகுப்பாய்வு அறிக்கையின் தரவுகளின் பிரகாரம் அம்பாறையில் 438 பேரும், திருகோணமலையில் 891பேரும் மட்டக்களப்பில் 143 பேரும் வவுனியாவில் 181 பேரும் முல்லைத்தீவில் 113 பேரும், மன்னாரில் 121 பேரும், கிளிநொச்சியில் 32பேரும் யாழ்ப்பாணத்தில் 371 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கடற்படைத் தகவல்களின் பிரகாரம் இந்த ஆண்டின் பெப்ரவரி 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 120 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதோடு 13 நபர்கள் கைதுசெய்யப்பட்டும் 3 படகுகள் கைப்பற்றப்பட்டுமுள்ளன.
203 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதோடு 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 189 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதோடு 17 நபர்களும் படகொன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 39,301 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு அதுகுறித்த குற்றச்சாட்டில் 9 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், தற்போதும் கூட வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் இனந்தெரியாத படகுகள் போதைப்பொருட்களுடன் ஒதுங்குவதும், பொதிசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் மிதந்து வருவதும் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன.
உண்மையில் வடக்கு, கிழக்கில் முப்படையினரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும், போதைப்பொருள் பாவனையும், போதைப்பொருள் உள்வருகையும் தொடர்வதாக இருக்கின்றதென்றால் நிச்சயமாக அதன் மூலங்கள் யார் என்பது தான் தற்போதுள்ள பெருங்கேள்வியாக உள்ளது.
அதேநேரம், 1984ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க போதைப்பொருள் சார்ந்த நபர்கள் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) சட்டம், 1984 ஆம் ஆண்டு 13ஆம் இலக்க விஷம், ஓபியம் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தம்) சட்டம், 2006 ஆம் ஆண்டு 27ஆம் இலக்க புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய ஆணையம், 2022ஆம் ஆண்டின் 41இலக்க விஷம், ஓபியம் மற்றும் ஆபத்தான மருந்துகள் (திருத்தம்) சட்டம் ஆகிய சட்டங்கள் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக ஏற்பாடுகளாகியுள்ளன.
இதனைவிடவும், 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க போதைப்பொருள் சார்ந்த நபர்கள் (சிகிச்சை மற்றும் மறுவாழ்வு) ஒழுங்குப்படுத்தல் ஏற்பாடு, போதைப்பொருள் மற்றும் மனநோய்க்கான சட்டவிரோத போக்குவரத்துக்கு எதிரான உடன்படிக்கைகள், 2008ஆம் ஆண்டின் முதலாமிலக்க போதைப் பொருள்கள் ஒழுங்குபடுத்தல்கள் ஆகியனவும் காணப்படுகின்றன.
இதனைவிடவும், இலங்கையின் போதைப்பொருள் பாவனையைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசியக் கொள்கையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவையனைத்தும் காணப்பட்டாலும், போதைப்பொருளுக்கு எதிரான போராட்டமானது வெறுமனே அதிகாரிகள், பாதுகாப்புத் துறையினருக்கு அப்பால் இளம் தலைமுறையினரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களாலும் முன்னெடுக்க வேண்டிய துர்ப்பாக்கியத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில், யாழ்.மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்தவாரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றபோது, போதைப்பொருள் விடயம் பேசுபொருளானது.
அதன்போது, போதைப்பொருள் தொடர்பில் சிறுமீன்களே அகப்படுகின்றன. ஆனால் பெரும் முதலைகள் பாதுகாப்பாக உள்ளன என்ற தொனிப்படக் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில், ஹெரோயின் போன்றபோதைப்பொருட்கள் கிடைப்பதில்லை. அதற்காக மனோநிலை சரியில்லாதவர்கள் பயன்படுத்தும் மாத்திரைகளே போதைக்கு அடிமையானவர்கள் பயன்படுத்துகின்றார்கள் என்று பொலிஸார் தரப்பில் கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், மீண்டும் பொலிஸாரும் வடக்கின் போதைப்பொருள் வியாபாரத்துக்கு துணைபோவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. வடக்கினைப் பொறுத்தவரையில் ஒரேயொரு தரைவழித்தொடர்பு தான் காணப்படுகின்றது. ஏனைய மூன்று பக்கங்களும் கடல்வழித் தொடர்புகளே காணப்படுகின்றது.
ஆகவே, போதைப்பொருள் உட்பிரவேசிப்பதை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படுகின்றபோது தான் அவற்றை கட்டுப்படுத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எம்.நியூட்டன்