செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை மாலதியைப் போன்ற மகத்துவமான பெண்கள் சாதனை செய்த தேசம்! | தீபச்செல்வன்

மாலதியைப் போன்ற மகத்துவமான பெண்கள் சாதனை செய்த தேசம்! | தீபச்செல்வன்

4 minutes read

சிறிலங்கா அரசின் அடக்குமுறைக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பங்களிப்பது என்பது ஈழப் பெண்களின் தார்மீக கடமை என்று அன்றைய தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி அவர்கள் ஒரு நேர்காணலில் கூறுகின்றார்.

ஒரு தேசம் அடக்குமுறைக்கு எதிராக களமாடுகின்றபோது அதில் பெண்களின் பங்களிப்பும் சமவிகிதத்தில் இருக்க வேண்டும் என்பது தமிழினி அவர்களின் கருத்து.

அதுவே ஈழ விடுதலையில் பெரும்பாலான பெண்களின் கருத்தாகவும் இருந்தது.

இதனால்தான்  தமிழ் சமூகத்தில் காலம் காலமாக புரையோடியிருந்த சமூகக் கட்டுப்பாடுகள் மற்றும் மூட நம்பிக்கை விலங்குகளை தகர்த்தெறிந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈழப் பெண்கள் பெரும் சாதனைகளை செய்தனர்.

அதில் முதல் விதையாக எங்கள் தேச நிலத்தை அணைத்துக் கொண்ட மாலதி அவர்களின் நினைவுநாள் இன்று.

யார் அந்த லெப்டினன் மாலதி?

ஒக்டோபர் 10 தமிழ் ஈழப் பெண்கள் எழுச்சி நாள். ஈழப் பெண்களுக்கு அடையாளம் கிடைத்த நாள். ஈழப் பெண்கள் வீரமுகம் பதித்த நாள். ஈழப் பெண்கள் வரலாற்றில் பெரும் விடுதலை வகிபாகத்தை சூடிய நாள்.

மாலதியைப் போன்ற மகத்துவமான பெண்கள் சாதனை செய்த தேசம்! | Women Heroes Like Malathi Make History

கோப்பாய் வெளியில் இந்திய இராணுவத்தினருடன் நடந்த போரில் இரண்டாம் லெப் மாலதி வீர மரணம் அடைந்த நாளே ஒக்டோபர் 10. அதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் பெண் மாவீரராக தமிழ் ஈழத்தின் முதல் பெண் மாவீரராக மாலதி அவர்கள் வரலாற்றில் தம் பெயரையும் முகத்தையும் பதித்த உன்னதமான நாள்.

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற இயற்பெயரைக் கொண்ட மாலதி அவர்களின் வீர மரணம், ஈழப் பெண்களின் வாழ்விலும் விடுதலைப் போராட்டத்திலும் பெருந்தாக்கமாய் மாறிற்று.

காயமடைந்த நிலையில், தொண்டைக் குழியில் நஞ்சுடன் “எனது துப்பாக்கியை எடுத்துச் செல்லுங்கள்” என்ற அவரின் இறுதிக் குரல், ஈழ விடுதலைப் போராட்டத்தில் என்றும் அடங்காத தீராத குரலாயிற்று.

அன்றைய தமிழீழம் என்பது பெண்களுக்கு பேரிடத்தை வழங்கியது. ஆண்களும் பெண்களும் சமம் என்ற சிந்தனையை தான் உலக நாடுகள் ஆகச் சிறந்த அடைவென்றும் உயர்வென்றும் கொண்டிருந்த நிலையில், ஆண்களைவிடப் பெண்கள் மேலானவர்கள் என்பதை வரலாற்றினாலும் சரித்திரத்தினாலும் ஈழத்தில் தலைவர் பிரபாகரன் அவர்கள் சாத்தியமாக்கினார்.

இதனால் இரண்டாம் லெப் மாலதி, கப்டன் அங்கயற்கண்ணி, மேஜர் சோதியா, கஸ்தூரி, கப்டன் வானதி, கப்டன் கஸ்தூரி என்று ஈழ விடுதலைப் புலிப் பெண் போராளிகள் உலகின் முன்னூதாரணம் மிக்க பெண்கள் என மிளிர்ந்தனர்.

தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

அன்றைய தமிழ் ஈழத்தில் ஒக்டோபர் 10 தமிழ் ஈழப் பெண்களின் எழுச்சி நாளாய் தனித்த அடையாளத்துடன் இருக்கும். பெண் போராளிகளின் அணிவகுப்பு, வீரப் பெண் தளபதிகளின் வழிநடத்தல் என்று ஈழ தேசம் எங்கும் தமிழீழ மகளீர் எழுச்சி நாள் நிகழ்வுகள் வெகு சிறப்பாக இடம்பெறும்.

மாலதியைப் போன்ற மகத்துவமான பெண்கள் சாதனை செய்த தேசம்! | Women Heroes Like Malathi Make History

உண்மையில் சிறப்பு தினங்கள் என்பன வெறும் தினங்களாக மாத்திரம் அன்றிருக்கவில்லை என்பதையே இப் பத்தி சொல்ல விளைகிறது. இன்றைய காலத்தில் பல்வேறு தினங்களும் கொண்டாடப்படுகின்றன.

பெயரளவில் தான் அந்த தினங்கள் இருக்கின்றனவே தவிர, அர்த்தம் அளவில் அந்த தினங்களுக்கு எதிரான நிலையில்தான் உண்மை இருக்கிறது. அன்றைய காலத்தில் பெண்களுக்கு மிகச் சிறந்த பாதுகாப்பை வழக்கும் தேசமாக தமிழர் தேசம் இருந்தது.

நள்ளிரவு வேளையிலும் ஒரு பெண் தனியாய் பயணம் செய்கின்ற சுதந்திரமும் சமூகச் சூழலும் அன்றைக்கு இருந்தது. அத்துடன் கொடிய போர்க்காலத்திலும் பெண்கள் எதிர்கொள்ளுகின்ற பல்வேறு அவலங்களையும் துயரங்களையும் எதிர்கொள்ளுகின்ற நடவடிக்கைகள், பயிற்சிகள் அன்றைக்கு இருந்தன.

பெண்களுக்கு போர்க்காலத்திலும் பல்வேறு வேலை வாய்ப்புக்கள் இருந்தன. குறிப்பாக தமிழீழ காவல்துறையில் பெண் காவல்துறைப் பிரிவு பெண்கள் சார்ந்த பல்வேறு நலன்களை முன்னெடுத்த கட்டிக்காத்த அமைப்பு என்ற பெருமையை வகித்தமை முக்கியமானது.

ஈழத்தில் பெரும்பான்மை விதவைகள்

உலகில் சுமார் 260 மில்லியன் பெண்கள் விதவைகளாக வாழ்கின்றனர். அவர்களில் 115 மில்லியன் விதவைகள் வறுமையின் பிடியில் உள்ளனர். 85 மில்லியன் விதவைகள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

மாலதியைப் போன்ற மகத்துவமான பெண்கள் சாதனை செய்த தேசம்! | Women Heroes Like Malathi Make History

1.5 மில்லியன் விதவைகள் குழந்தைகளுடன் வாழ்வதாகவும் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. இதில் இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புப் போரின் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் வடக்கு கிழக்கில் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.

இந்த புள்ளி விபரத்தை இலங்கை அரசின் கணக்கெடுப்புகளின் வாயிலாகவே அறிகிறோம். அத்துடன், கிழக்கில் சுமார் 49ஆயிரம் விதவைகளும் வடக்கில் சுமார் 40ஆயிரம் விதவைகளும் போரினால் விதவைகளாக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன.

போர் விதவைகளில் 12ஆயிரம் பேர் நாற்பது வயதை அண்மித்தவர்கள் என்றும் 8000ஆயிரம் பேருக்கு மூன்று வயதுப் பிள்ளைகள் இருக்கின்றன என்றும் இலங்கை அரசின் மகளீர் விவகார அமைச்சின் தகவல்கள் கூறியிருக்கின்றன.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் சிறுபான்மையினர். ஆனால் சிறுபான்மை ஈழத் தமிழர்களின் பெரும்பான்மையாக விதவைகள் எனப்படும் கைம்பெண்கள் வசிக்கின்ற நிலை வாயிலாக நாம் அவதானிக்க வேண்டிய செய்திகள் மிகவும் முக்கியமானது.

ஏன் முல்லைத்தீவில் அதிக விதவைகள்?

போரில் அதிக ஆண்கள் கொல்லப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு என்றும் அங்கே தான் அதிகமான விதவைகள் வாழ்கின்றனர் என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரம் கூறுகின்றது.

மாலதியைப் போன்ற மகத்துவமான பெண்கள் சாதனை செய்த தேசம்! | Women Heroes Like Malathi Make History

போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வியல் நிலமை என்பது மிகவும் துயரமாகவும் போராட்டம் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.

போரில் விதவைகளாகப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என்பது இந்த நிலவரம் குறித்து ஐ.நா இலங்கைமீது முன்வைத்த குற்றச்சாட்டாகும்.

அதிகளவான ஆண்கள் கொல்லப்பட்ட இடமாக முல்லைத்தீவை சொல்லுகிற ஐ.நா, அதிகளவான விதவைப் பெண்கள் வசிக்கும் மாவட்டமாக முல்லைத்தீவை சொல்லுகிற ஐ.நா, அவர்கள் இனவழிப்பினால் தான் இத்தகைய நிலையை அடைந்தார்கள் என்பதை மாத்திரம் சொல்லாமல் தவிர்ப்பதும் இருப்பதும் தான் ஐ.நா போன்ற அமைப்புக்கள் ஈழப் பெண்களின் துயரத்திற்கு காரணமாய் இருப்பதாகும்.

அத்துடன் இதுவே உலகளவில் பெண்களின் வீழ்ச்சி நிலைகளுக்கும் துயர நிலைகளுக்கும் காரணமாயும் அமைந்துவிடுகிறது. போருக்குப் பிந்தைய ஈழ நிலத்தில் பெண்களின் அவலம் பலவாறு வெளிப்படுகின்றது.

இன்றும் எங்கள் நிலத்தில் வாழ்வுக்காகவும் விடுதலைக்காகவும் போராடுபவர்களாக பெண்கள்தான் உள்ளனர். போரில் கணவனை இழந்த பெண்கள் தங்கள் பிள்ளைகளை ஆளாக்க வேண்டும் என்று சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் போராடுகின்றனர்.

இன்றைய பொறிமிகுந்த சூழலில் தம் பிள்ளைகளை அவர்கள் ஆளாக்க பல்வேறு சவால்களை எதிர்கொள்ளுகின்றனர். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் நீதிக்காகவும் விடுதலைக்காகவும் இன்று பெண்கள்தான் களத்தில் நின்று போராடுகிறார்கள்.

ஆயிரம் ஆயிரம் மாலதிகள் மகத்துவமான சாதனை செய்த தேசத்தில் அவர்களின் கதைகளை நம் தலைமுறைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம். அறவழியில் எங்கள் விடுதலைக்கும் நீதிக்குமாய் மாலதிகளே அவசியப்படுகின்றனர்.

தீபச்செல்வன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More