எமது மூதாதையரின் பண்பட்ட வாழ்வியல் நெறியைக் காட்டி நிற்பது கடல் போல பொருள் கொண்ட எமது சங்க இலக்கியம் மட்டுமே என்றால் மிகையாகாது. 2000 வருடங்களுக்கு முன்பு தமிழரின் திருமண நிகழ்வில் தலைவன் தலைவிக்குத் தாலி அணிவித்த சடங்கு முறை நிலவியிருக்கின்றதா? என்று இந்தப் பதிவில் ஆய்ந்து நோக்கப்படுகின்றது.
சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும், அவை தோன்றக் காரணமாகவும் விளங்கிய இலக்கண நூலை எமக்கு எழுதியவர் தொல்காப்பியர். அவர் எழுதிய பொருள் அதிகாரம் முழுக்க முழுக்க 5000 வருடங்களுக்கு முற்பட்ட எமது வாழ்வியல் நெறிமுறைகளை எமக்கு பறைசாற்றுகின்றது. அன்றைய தலைவன், தலைவி வாழ்வியலை அவர் இரண்டாகப் பிரிக்கின்றார். களவு ஒழுக்கம் அடுத்து கற்பு ஒழுக்கம் என்பதாகும். களவு ஒழுக்கம் என்பது திருமணத்திற்கு முன்னர் ஆணுக்கும் பெண்ணுக்குமான தொடர்பை விளக்குகின்றது. களவு ஒழுக்கத்தில் இருப்பவர்கள் பெற்றோர்கள் விரும்பாத பட்சத்தில் உடன் போக்குத் திருமணம் செய்து கொள்வர். இதைக் “கொண்டு தலைக் கழிதல்” என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். காதல் கொண்ட தலைவனும் தலைவியும் பிறருக்கு சொல்லாமல் ஊரை விட்டு சென்று வாழ்வது இந்த உடன்போக்கு திருமணம் ஆகும்.
கற்பு ஒழுக்கம் என்பது திருமணத்திற்கு பின்பு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்வைக் காட்டுகின்றார் தொல்காப்பியர்.
அன்று பெற்றோர்கள் செய்து வைக்கும் திருமணங்கள் பல்வேறு நிலையில் இருந்திருக்கின்றன. இப்படி பத்துக்கும் மேற்பட்ட திருமணங்கள் அன்று நடந்திருக்கின்றன.
அவையாவன; தொன்றியல் மரபின் மன்றல்- அதாவது நமது மரபு வழி திருமணத்தை நடத்துதல். அடுத்து பொருள் கொடுத்து மணத்தல் – அன்றைய காலத்தில் ஆண் மகன் மட்டுமே பெண்ணுக்குப் பொருளைக் (சீர்வரிசை) கொடுத்து திருமணம் செய்திருக்கின்றான். அடுத்து சேவை மணம் – சில பெற்றோர்கள் பொருள் கொடுத்தும் பெண்ணை கொடுக்க மறுக்கும் பட்சத்தில் அந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு சேவை செய்து திருமணம் செய்திருக்கின்றார்கள். அடுத்து திணைக் கலப்புத் திருமணம் – எமது ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள் அந்தந்த நிலங்களிலேயே திருமணம் செய்யாது வேறு நிலங்களில் உள்ளவர்களைத் திருமணம் செய்வது. உதாரணமாக நெய்தல் நிலத்தில் இருப்பவர் முல்லை நிலத்தில் வாழ்பவரைத் திருமணம் செய்தல். அடுத்து ஏறு தழுவி மணமுடித்தல் – அதாவது காளைகளை அடக்கித் தமது வீரத்தை பெண் வீட்டாருக்குக் காட்டி மணம் முடித்தல். வேறாக மடல் ஏறி மணம் முடித்தல் -அதாவது பனை மட்டைகளைக் கட்டிக்கொண்டு குறிப்பிட்ட பெண்ணை எனக்கு மணம் முடித்துத் தாருங்கள் என்று ஆண் ஊருக்கெல்லாம் அறிவித்து ஊரைச் சுற்றி வந்து திருமணம் முடிப்பது. அடுத்து போர் நிகழ்த்தி திருமணம் நடத்துவது – அதாவது ஒரு மன்னன் பெண்ணின் தந்தையான அரசனுடன் போர் புரிவான். போர் புரிந்து வெற்றி பெற்றுத் திருமணம் செய்வது. இவ்வாறு பல வகையான திருமணங்கள் அன்று நடைபெற்றிருக்கின்றன.
அன்றைய நாளில் எப்படி திருமண நிகழ்வு நடந்தது என்பதை எமக்கு படம் பிடித்து காட்டுவது கி.மு 500 இருந்து கி.பி 200 வரையான காலப்பகுதியில் அமைந்த அகநானூறு 86வது பாடலாகும். இதை நல்லாவூர் கிழார் பாடுகின்றார்.
உளுந்து நிறையச் சேர்த்த பெரிய சோற்று உருண்டைகளைக் கூடி இருந்தவர்கள் உண்பது இடையறாது நிகழ்ந்து கொண்டே இருந்தது. வரிசையாகக் கால்களிட்டு அமைத்த பெரிய பந்தல் விளங்கியது. அதன் கீழ் தரையிலே மணலைக் கொணர்ந்து பரப்பி இருந்தனர். எங்கும் மாலைகளைத் தொங்க விட்டிருந்தனர். மனை விளக்கை ஏற்றி வைத்திருந்தனர். புகழுடைய ரோகிணி நட்சத்திரத்தில் இருள் நீங்கிய காலை வேளை வந்தது. உச்சியிலே நிறை நீர் குடத்துடன் கைகளிலே புதிய மண் கலயங்களை உடைய பெண்கள் திருமணத்தினை செய்து வைக்கும் ஆரவாரத்துடன் கூடினர். மணமகளுக்கு முன்னும் பின்னுமாக முதுபெண்டிர், இழை மகளிர் அதாவது அணிகள் அணிந்த பெண்கள் வந்தனர்.
மணப் பெண் பந்தலில் வந்து அமர்ந்ததும் முது பெண்டிர் கூடி “மணவாளனை பேணிக்காக்கும் துணைவியாக, நல்ல மனைக் கிழத்தியாக வாழ்வாயாக” என வாழ்த்தினர். நீரில் நனைந்த இதழ்களை உடைய பூக்களையும் நெல்லையும் கலந்து அந்த தலைவன், தலைவியின் தலைகளில் தூவி வாழ்த்தி முழுக்க முழுக்கப் பெண்களே திருமண நிகழ்வினை நிகழ்த்தி முடித்ததாக இந்தப் பாடல் சித்தரிக்கின்றது. இதில் எந்த இடத்திலும் ஆண் தலைவிக்கு தாலி அணிவித்ததாக ஒரு செய்தியும் குறிப்பிடப்படவில்லை.
அகநானூறு 136
இந்தப் பாடலும் கி.மு 500 இலிருந்து கி.பி 200 வரையான காலத்தில் அமைந்திருக்கின்றது. அக்காலத்தில் நடந்த ஒரு திருமண முறையையே இப்பாடலிலும் நாம் காணலாம். விற்றூற்று மூதெயினார் எனும் புலவர் இந்தப் பாடலைப் பாடுகின்றார். நெய் கனிந்த இறைச்சியோடு கலந்த வெண்ணிறச் சோற்று விருந்து அனைவருக்கும் படைக்கப்பட்டது. திருமண வீட்டில் மணப்பந்தல் போடப்பட்டு தெளிந்த ஒளியுடைய ரோகினி நட்சத்திரத்தில் பெரிய முரசம் ஒலிக்க தலைவிக்கு மங்கல நீராட்டித், தூய ஆடை சூட்டித் திருமணம் நடந்தது. ஆபரணங்கள் அணிந்த சிறப்பொடு தலைவி வீற்றிருந்தாள். எங்கும் ஆபரணத்தை தலைவன் தலைவிக்கு அணிவித்தான் என்று குறிப்பிடப்படவில்லை. “இழை அணி சிறப்பின் பெயர் வியப்பு ஆற்றி” என மட்டுமே வருகின்றது. அதாவது தலைவிக்கு ஆபரணங்கள் அணிந்த சிறப்பினால் வியர்வை உண்டாகின்றது எனப் பாடலில் வருகின்றது.
தாலி என்ற சொல் சில சங்க இலக்கியப் பாடல்களில் பதிவாகி இருக்கிறது. தாலியை சிறுவர்கள் அணிந்திருந்ததாக மட்டுமே சுட்டிக் காட்டப்படுகின்றது. சிறு பிள்ளைகளுக்கு தீயவைகள் அணுகாது இருக்க ஐம்படைத் தாலியை அணிவித்திருக்கின்றனர்.
ஐம்படைத்தாலி என்பது சங்கு, சக்கரம், வாள், வில் தண்டு ஆகிய ஐந்து விதமான படைக் கருவிகளை சிறியதாகச் செய்து அவற்றை ஒரு மெல்லிய கயிற்றில் கட்டி சிறுவர்களின் இடையில் ஐம்படைத் தாலி என்ற பெயரில் அணிந்திருக்கின்றனர். அவ்வாறே சிறுவர்களும் சிறுமிகளும் கூட வீரத்தின் சிறப்பாக புலிப்பல் தாலியும் அணிந்திருக்கின்றார்கள்.
புறநானூறு 77 ஆவது பாடலில் இடைக்குன்றூர் கிழார் “தாலி களைந்தன்று மிலனே” என்று பாடுகின்றார். அதாவது தலையாலங்காலனத்து செருவென்ற பாண்டியனை அவர் போற்றிப் பாடும் பொழுது அவன் சிறியவனாக இருக்கும்போதே தலையாலங்கானப் போர்க்களம் செல்கின்றான் என்பதைத் தாலியைக் கூடக் கழற்றாத சிறுவயதில் அவன் போருக்கு செல்கின்றான் என அவர் பாடுகின்றார்.
தாலி என்ற சொல் தாலிகம் என்ற சொல்லில் இருந்து பிறந்தது எனவும் அறிஞர்கள் கருதுகின்றனர். தாலிகம் என்றால் பனைமரம் என்று பொருள்படும். சங்கம் மருவிய காலத்தில் அதாவது கி. பி 3 ம் நூற்றாண்டில் இருந்து இருந்து கி.பி 6 ஆம் நூற்றாண்டு வரையான காலத்தில் தலைவனுக்கும் “தலைவிக்கும் இந்த நாளில் திருமணம் நடக்கும்” என்று பனை ஓலையில் எழுதி சுருட்டி அவர்கள் கழுத்தில் உறவினர்கள் கட்டி விடுவார்கள். இதுவே பின்னாளில் தாலி என்றானது என்ற கருத்தும் நிலவுகின்றது.
கி.பி 2 ஆம் அல்லது 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில்
மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்” என வருகிறது. அதன் பொருளாவது கோவலன் கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்த காலத்தில் மங்கல அணியைத் தவிர வேறு ஒன்றும் அவள் அணியவில்லை என வருகின்றது.
மங்கல அணி என்றால் தாலி என்று ஒரு சாராரும் இயற்கை அழகு என இன்னொரு சாராரும் கருத்து முரண்படுவதும் உண்டு. கண்ணகி கோவலன் திருமணச் சடங்குகளை மிக அழகாக விபரித்த இளங்கோ அடிகள், கோவலன் கண்ணகிக்கு தாலி அணிவித்ததை எங்குமே பதிவு செய்யவில்லை.
ஆனால் “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீவலம் வந்து” திருமணம் நடக்கின்றது என அவர் கூறுகின்றார். ஆக அகநானூறு 86 இல் பெண்களே முழுக்க முழுக்க நின்று திருமணத்தை நடத்தி வைத்த நிலை போய் சிலப்பதிகார காலத்தில் அந்தணர் நடத்தி வைக்கும் திருமணமாக மாறி இருக்கின்றது.
கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தாலி என்ற பேச்சுக்கே இடமில்லை என்கின்றனர் தமிழ் அறிஞர்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் எழுந்த கந்தபுராணத்தில் மட்டுமே முருகப்பெருமான் தெய்வயானைக்குத் தாலி அணிவித்ததாக வருகின்றது.
ஆகவே சில கலாச்சாரங்களின் தழுவல்களாலும், தாக்கங்களாலும் இந்தத் தாலி எனும் மங்கல நாண் தலைவியின் கழுத்தில் தலைவனால் அணிவிக்கப்படத் தொடங்கியதும் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதும் பிற்காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளே என்ற வரலாற்று உண்மையை நாம் அறிந்து கொள்ளலாம்.
ஜெயஸ்ரீ சதானந்தன்