செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன்
மக்கள் மனங்கவர்ந்த மருத்துவர் ப.விக்கினேஸ்வரா மறைந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இருப்பினும் இறந்த பின்னும் பயன்கொண்டோர் நெஞ்சங்களில் வாழும் மாண்புறு வைத்தியராக ப.விக்கினேஸ்வரா திகழ்கிறார் என்றால் மிகைப்படாது.
மருத்துவர் ப.விக்கினேஸ்வரா கைராசியும், வாய்ராசியும் சிறந்து அமையப் பெற்ற மருத்துவர்.
நான் சிறுவனாக இருந்த காலம் தென்மராட்சி சரசாலையிலேயே எனது வாழ்வு அமைந்தது. ஆயினும் எங்கள் குடும்பத்தினருக்கு மருத்துவத் தேவை ஏற்படும் போதெல்லாம் எனது மாமனார் அமரர் நா.இராஜசிங்கத்தின் வழிகாட்டலில் சுன்னாகத்திலிருந்த டாக்டர் ப.விக்கினேஸ்வராவின் மருத்துவமனையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து மருந்தெடுக்கும் வழக்கம் இருந்தது.
அவரது புதல்வர் ஐங்கரன் விக்கினேஸ்வரா பரி. யோவான் கல்லூரியில் எனது வகுப்புத் தோழராக இருந்தமையால் என்மீதான கவனிப்பும் சற்று அதிகமாக இருந்தது. அன்று தொட்டு இறக்கும்வரை டாக்டர் ப.விக்கினேஸ்வராவைப் பொறுத்தவரையில் எனது பெயர் சரசாலைத் தம்பி.
மருத்துவராக என்னோடு பழகிய வைத்தியர் பின் எனது பேச்சின் இரசிகர் ஆனார். அப்போதும் ‘சரசாலைத் தம்பி பேசுது’ என்று புளகாங்கிதம் அடைவார். மகன் ஐங்கரன் அவுஸ்ரேலியாவில் இருந்து தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பங்களில் சரசாலைத் தம்பி என்று அழைத்து தானும் ஓரிரு வார்த்தைகள் வாஞ்சையுடன் பேசுவார்.
அவரது நினைவுகளை அர்த்தப்படுத்தும் வகையில் அவர்தம் குடும்பத்தினர் ஈழத்து எழுத்தாளர் ஒருவரது நூல் ஒன்றை வருடந் தோறும் வெளியிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் இந்த ஆண்டு ஆசிரியரும் கவிஞருமாகிய இ.சு.முரளிதரன் எழுதிய ‘கதைப்பந்தாட்டம்’ என்னும் நூல் ஜீவநதி பதிப்பகத்தின் 436 ஆவது வெளியீடாக மலர்கிறது.
2022 இல் மறைந்த டாக்டர் ப.விக்னேஸ்வராவின் 31ஆம் நாள் நினைவாக பேராசிரியர் சு.பாலசுகுமார் எழுதிய ‘ஈழத்தில் மாட்டுவண்டிச் சவாரியும் தமிழர் மரபும்’ என்னும் நூல் வெளியிடப்பட்டது.
2023 இல் முதலாம் ஆண்டு நினைவாக ஆசிரியர் தீபச்செல்வன் எழுதிய ‘பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகள் அல்ல’ என்னும் கல்வியியல் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
2024 இல் ஈராண்டு நினைவாக (அமரர்) கலாநிதி த.கலாமணி எழுதிய ‘கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்’ (முப்பத்தைந்து படைப்பாளர்களின் நூல்களுக்கான அணிந்துரைகளின் தொகுப்பு) வெளியிடப்பட்டது.
மண் பயனுற வாழ்ந்த மக்கள் மருத்துவர் காலத்தால் இன்றும் எங்களோடு வாழ்கிறார். இதற்கு அவரது நினைவாக அமையும் நூல் வெளியீடுகளும் உரமாக அமைகின்றன.
தந்தையை நீள நினைந்து போற்றும் குடும்பத்தினரையும் அவர்தம் இலக்கிய முயற்சிகளையும் போற்றுகிறேன்.
‘சரசாலைத் தம்பி’
செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன்,
முதல்வர்,
கோப்பாய் ஆசிரியர் கலாசாலை,
யாழ்ப்பாணம்