“‘இனிமேல் பிணம்போலதான் இருக்க முடியும்’னுகூட மருத்துவர்கள் சொன்னாங்க. ஆனா, இப்போ நான் நடமாடுறேன். காரணம், யோகா. எல்லாத்துக்கும் மேல 40 வயசுக்கு மேல நான் கடைப்பிடித்த முறையான வாழ்க்கை நெறிகளும் காரணம்” என்று கணீர் குரலில், ‘தன் கதைச் சுருக்கம்’ சொல்லி ஆரம்பிக்கிறார் வையாபுரி.
” ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’னு கணியன் பூங்குன்றனார் சொன்னது 100 சதவிகிதம் சரி. வயசுத் திமிருல நான் பண்ணுன தப்பு, முறையற்ற உணவுகளால 35 வருஷத்துக்கு முன்னாடி ஒருபக்கம் கைகால் செயல்படாமப் போயிட்டுது.
‘சரிபண்ணமுடியாது’னு சொன்னாங்க. ஆனா, மீண்டு வந்தேன். இதுமாதிரி அஞ்சுதடவை நான் செத்துப் பொழைச்சுருக்கேன். ‘இனிமே பிணம்போலதான் இருக்க முடியும்’னுகூட டாக்டர்கள் சொன்னாங்க.
ஆனா, இப்போ நான் நல்லாத்தான் நடமாடுறேன். இதுக்குக் காரணம், யோகா. இது எல்லாத்துக்கும் மேல, 40 வயசுக்கு மேல நான் பின்பற்றின முறையான வாழ்க்கை நெறிகளும் காரணம்னு சொல்லலாம். ‘அனுபவங்களே ஆசான்’ங்கிறது எனக்கு நூத்துக்கு நூறு பொருந்தும்” என்று கணீர் குரலில், தன் கதைச்சுருக்கத்தைச் சொல்லி ஆரம்பித்தார் வையாபுரி.
கரூர் மாவட்டம், ராமக்கவுண்டனூரைச் சேர்ந்தவர் வையாபுரி. வயது 79. ஆந்திராவில் மட்டுமே கிடைக்கும் மஞ்சா புல்லைவாங்கி வந்து, கூரை வேய்ந்து, வீட்டைக் குளிர்ச்சியாக்கி அதில் வாழ்கிறார்.
வீட்டைச் சுற்றி ஆக்சிஜனை அதிகம் வெளியிடும் தீக்குச்சி மரங்களையும், முள் இல்லாத மூங்கிலையும் வளர்த்து வருகிறார். சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் காட்டு அத்திச்செடி, கொசுக்களை விரட்டும் நொச்சிச்செடி என்று வீட்டைச் சுற்றிலும் நோய் தீர்க்கும் மூலிகைச்செடிகளாகக் காணப்படுகின்றன.
வீட்டில் யோகாசனத்தில் ஈடுபட்டிருந்த வையாபுரியைச் சந்தித்துப் பேசினோம். “வசதியான குடும்பம். செல்லப்பிள்ளையா வளர்ந்தேன். ஒரு வரைமுறையில நிக்காம, இஷ்டத்துக்கு வாழ்ந்தேன். அதனால, உடல்ல பல பிரச்னைகள் ஏற்பட்டுச்சு. என்னோட 31-வது வயசுல, வயல்ல வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன்.
கீழே கிடந்த நல்ல பாம்பை மிதிச்சுட்டேன். அது கடிச்சுட்டுது. ஆனா நான் பதறல. பிளேடால கடிபட்ட இடத்துல அறுத்தேன். ஊதா கலர்ல ரத்தம் வந்துச்சு. உடனே, வாழைத்தண்டு சாற்றைக் குடிச்சுட்டு, கடிச்ச இடத்துக்கு மேல இறுக்கமா கயித்தால கட்டிக்கிட்டு, கரூர் தர்மாஸ்பத்திரியில போய் படுத்துக்கிட்டேன்.
என்னோட சேர்த்து அஞ்சு பாம்புக்கடி கேஸ். அதுல நான் மட்டும்தான் பொழச்சேன். இதுக்குப் பிறகும் என்னோட போக்கு மாறல. என் இஷ்டப்படி வாழ்ந்ததால, 35 வருஷத்துக்கு முன்னாடி என்னோட வலதுபக்க கைகால் செயல்படாமப் போயிட்டு. ஊர்ப்பட்ட டாக்டர்கள்கிட்ட காண்பிச்சாங்க.
சொல்லிவச்சமாதிரி எல்லோரும், ‘சரிபண்றது கஷ்டம்’னு கைவிரிச்சாங்க. ஆனா, கொல்லிமலையில புரளிக்காடுங்கிற இடத்துல இயற்கை வைத்தியம் பார்க்கிறதா கேள்விப்பட்டு, அங்க என்னைக் கொண்டு போனாங்க. 15 நாள் எனக்கு வைத்தியம் பார்த்தாங்க… சரியாயிட்டு.
‘யோகாசனமும் பச்சைக் காய்கறியும் உங்களுக்கு அவசியம் தேவை’னு சொன்னாங்க. என்னை மொத்தமா மாத்திக்கிட்ட நாள் அதுதான். கரூர்ல அப்ப யோகா கலையைக் கத்துத்தந்த விவேகானந்தா யோகா மையத்துல யோகாசனம் கத்துக்கிட்டேன்.
பத்து வருஷம் அவங்களோடவே பயணிச்சேன். பச்சைக்காய்கறி சாப்பிட ஆரம்பிச்சேன். அது இல்லாம வீட்டைச்சுத்தி மூலிகைச்செடிகள் வளர்க்க ஆரம்பிச்சேன். கத்திரி, வெண்டை, தக்காளினு காய்கறிகளை இயற்கை முறையில் விளைவிச்சு, அதையே உணவுக்குப் பயன்படுத்துனேன்.
கொல்லிமலையில சிகிச்சைக்குப் போனப்ப, அங்க ஒருவித புல்லால கூரை வேய்ஞ்சிருந்தாங்க. அதுக்குள்ள உட்கார்ந்தபோது, அவ்வளவு குளிர்ச்சியா இருந்துச்சு. அந்தப் புல்லைப் பத்தி விசாரிச்சப்ப, ‘அதோட பேரு மாஞ்சா புல்லு. அது ஆந்திராவுலதான் கிடைக்கும்’னாங்க.
அந்தப் புல்லை வாங்கிட்டு வந்து, மூன்றரை லட்சம் செலவு பண்ணி இந்தக் குடிலை அமைச்சேன். இதுக்கிடையில, கொல்லிமலைக்கு தொடர் சிகிச்சைக்குப் போனப்ப, பாறை வழுக்கி 30 அடி பள்ளத்துல கீழ விழுந்துட்டேன்.
பாறையில் விழுந்து அடிபட்டுச் சாக வேண்டியது. ஆனா, ஒரு மரத்துல தொங்கி உசுரு தப்பினாலும் கால் முறிஞ்சு போச்சு. குளித்தலைப் பக்கத்துல ஒரு நாட்டுவைத்தியர்கிட்ட போய் என்னோட காலை சரிபண்ணினேன். யோகாசனம் செஞ்சி கால்வலியைப் போக்கிக்கிட்டு இருந்தேன்.
இந்த நிலையில, அஞ்சு வருஷம் கழிச்சு ஒருநாள், ரெண்டு கால்களையும் மடக்க முடியலை. நீட்டுனமாதிரியே இருந்தது. மூட்டு ரெண்டும் காலி. கோயம்புத்தூர்ல உள்ள தனியார் மருத்துவமனையில் நான்கு லட்சம் செலவழிச்சி செயற்கை மூட்டு வச்சிக்கிட்டேன்.
இது நடந்து அடுத்த ரெண்டு வருஷத்துல, டிராக்டர்ல இருந்து விழுந்து, நெஞ்சுப்பகுதியில மூணு எலும்பு உடைஞ்சுபோச்சு.
டிராக்டருக்குள்ள விழ வேண்டியது. அதிர்ஷ்டவசமா நெஞ்சு எலும்பு உடைஞ்சதோட தப்பிச்சேன். அதை சரிபண்றதுக்குள்ள தாவு தீர்ந்துபோச்சு. இந்த நிலையிலதான், கடந்த 2004-ம் வருஷம் ஆகஸ்டு 15-ம் தேதி யோகாவைப் பத்தி மாணவர்களுக்கு சொல்லித்தர நெரூர் காவிரி ஆத்துல ஃபுல்தண்ணியில யோகாசனம் பண்ணினேன்.
அங்கே டைவ் அடிச்சப்ப, ஆத்துக்குள்ள போன இரும்பு பைப் கழுத்துல மாட்டி கழுத்து எலும்பு உடைஞ்சுபோச்சு. தண்ணிக்குள்ள மூழ்குன என்னை சதீஷ்குமார்ங்கிற பையன் தண்ணியில குதிச்சு என்னைக் காப்பாத்தினான். ஆனா, பொணம் மாதிரி கிடந்தேன். கோயம்புத்தூர்ல உள்ள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனாங்க.
கழுத்து எலும்பு உடைஞ்சதோட இல்லாம, நரம்பும் உடைஞ்சு போச்சு. ‘ஆபரேஷன் பண்றதே ரிஸ்க்கு’னு டாக்டர் சொன்னார். நான் சைகையால, ‘என்னைக் கொன்னுருங்க டாக்டர்’னு சொல்றேன். ஆனா, என்னோட மனைவி அம்மையக்கா, தாலிக்கொடியைத் தூக்கிக் காட்டி, ‘என்ன ஆனாலும் பரவாயில்லை.
ஆபரேஷன் பண்ணுங்க’னு கெஞ்சினாங்க. பிறகு, ஆபரேஷன் பண்ணிதான் சரிபண்ணுனாங்க. ஆனா, ‘காலத்துக்கும் படுத்த படுக்கையாதான் உங்க கணவர் இருக்க முடியும்’னாங்க. ‘நான் பாத்துக்கிறேன்’னு மனைவி அழைச்சுட்டு வந்து, எனக்கு பணிவிடை பண்ணுனாங்க. ஆனா, என்னையே நினைச்சு எனக்குக் கோபம் வந்துச்சு. அதனால, பிசியோதெரபி பண்ணச் சொன்னேன்; ஆனாலும் சரியாகலை.
ஆறு மாசத்துல நானே முயற்சி செஞ்சு… கை, கால அசைக்கப் பார்த்தேன். ஆனா என்னால முடியலை. விடாம முயற்சி பண்ணினேன். கைகால் லேசா அசைஞ்சுச்சு. ‘இதுபோதும் பழையபடி எழுந்து வந்துவிடுவேன்’னு வீட்டு உத்தரத்துல தொட்டிகட்டுற மாதிரி கயிறால கட்டி, கீழே பைப்பைத் தொங்கவிட்டேன்.
அதுல யோகாசனம் செய்ய முயற்சி பண்ணினேன். சக்கராசனம் செஞ்சேன். ஒரே வருஷத்துல பழையபடி நடமாட ஆரம்பிச்சிட்டேன். விடாம இந்தக்கயிறு மூலமா சிரசாசனம் மாதிரி பல ஆசனங்களைச் செஞ்சேன்.
பழையபடி நல்லா நடமாட ஆரம்பிச்சுட்டேன். பெரும்பாலும் பச்சைக்காய்கறிதான் சாப்பாடு. அதுதவிர, வாரத்துல ஒருநாள் கம்பஞ்சோறு, கேழ்வரகுக் களி சாப்பிடுவேன். இயற்கையான பழங்கள், முளைக்கட்டின பயறுகள்னு சாப்பிட ஆரம்பிச்சுட்டேன். தவிர, ‘நலவாழ்வு மையம்’னு ஆரம்பிச்சு, மத்தவங்களுக்கு என்னையே உதாரணம் காட்டி வாழ்வியல் முறைகளைப் பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துனேன்.
அதோட, ரோடு ஆக்சிடன்ட் ஆகி யாராவது அடிபட்டா, யோசிக்காம அவங்களைத் தூக்கிட்டுப் போய் ஆஸ்பத்திரியில சேர்த்து காப்பாத்திடுவேன். இதுவரை நாலுபேரை அந்தமாதிரி காப்பாத்தி இருக்கிறேன். வாழ்க்கை ஒண்ணுதான் சார். ஆனா, அதை பெரும்பாலும் வேஸ்ட் பண்ணிட்டேன்.
யோகாவும் மனதைரியமும் இல்லைன்னா, இன்னைக்கு நான் செத்த இடத்துல புல் முளைச்சுருக்கும். வெள்ளம் வர்றதுக்கு முன்னாடி அணைபோடணும்; அதுதான் நல்லது. இப்போ உள்ள இளைஞர்களுக்கு என்னோட ஆயுசு முடியுறவரைக்கும் பாடமும் படிப்பினையுமாக இருப்பேன்” என்று முடித்தார்.
இதைக் கேட்டதும் ஒரு த்ரில்லர் மூவி பார்த்த எஃபெக்ட் ஏற்பட்டது.
இந்தக் கட்டுரையில் திரு.வையாபுரி, அனுபவத்தின் அடிப்படையில் தன் சொந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். இது எல்லோருக்கும் பொருந்தும் என்று கூறமுடியாது.
நன்றி-vikatan