சர்வதேச காணாமல் போனோர் தினம்- தாங்களாக காணாமல் போகவில்லை இராணுவத்திடம் சரணடைந்தே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர்: நிக்சன்
சிறிலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக்கூறலைத் தவிர்த்து வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைஇன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை. 1980ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழ்ந்து வரும் ஒரு வகை இனவழிப்பின்செயற்பாடு.
குடும்பத்தலைவரைத் தொலைத்த குடும்பங்கள், பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர், பெற்றோரைத் தொலைத்த பிள்ளைகள், வாழ்க்கைத்துணையைத்தொலைத்தவர்கள் எனப் பல வகைப்பட்டவர்கள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
2009ம் ஆண்டிற்கு முன்னர் சிறிலங்கா அரசின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டு காணாமல்ஆக்கப்பட்டார்கள். இராணுவ சோதனைச் சுற்றிவளைப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டார்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அதேவேளை இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வீடுகளில் வைத்து விசாரணை என அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்கள். தடுப்புக்காவலின் கீழ் சித்திரவதை, சர்வாதிகாரத்தைச் செயல்முறையின் பின்னர் பெறப்பட்டிருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்களாக காணாமல் போகவில்லை. படையினரால் கைது செய்யப்பட்ட பின் காணாமல் போயுள்ளனர். பலரை உறவினர்களேபடையினரிடம் நேரடியாகக் கையளித்தும் உள்ளனர். இதற்கு வலுவான சாட்சியங்களும் உண்டு. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் மதகுருமாருடன் இராணுவத்திடம்சரணடைந்த போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இவர்களில் 280 பேரின் பெயர் விபரங்களையும் அவர்களது புகைப்படங்களையும் itjp – (International Truth and Justice Project) என்ற இணையதளம் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகள் தமது உயிர் துறந்து உரிமைப்போரிற்கான விதையாகியுள்ளார்கள். ஆயுத மௌனிப்பின் முடிவுப்புள்ளியாகவும், தொடக்கப்புள்ளியாகவும் அமைந்துவிட்ட இராணுவக் கட்டுபாட்டிற்கு மக்கள் வரும்போது, விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு நாள்இருந்த எல்லோரையும் பதிவு செய்யும் படியும், சிறு விசாரணைகளின் பின்னர் குடும்பத்தினர்களுடன் அவர்கள் இணைக்கப்படுவார்கள் என்றும் இராணுவத்தினர்அறிவித்தனர். அதன் படி பதிவு செய்தவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுப் பின்னர் காணாமல் ஆக்கப்படுள்ளனர். இதே காலப்பகுதியில் இடம்பெயர்ந்து, மீண்டும் பொருட்களை எடுப்பதற்கு இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குச்j சென்றபோது காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
2008 -2009 காலப் பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் கட்டாய ஆள் இணைப்பில் இணைக்கப்பட்டு போராளியாக இருந்தவர்கள் சிலர் தற்போது காணாமல் போய்உள்ளார்கள். இவர்களின் உறவுகள் கூறும் விடயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அவர்கள் தங்களுடைய உறவுகள் இறக்கவில்லை எனவும் இறந்திருப்பின்விடுதலைப் புலிகளின் மாவீரர் என்னும் கௌரவத்துடன் மாவீரர் பட்டியலில் தமது உறவுகள் இடம்பிடித்திருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அதே வேளை தங்களதுபிள்ளைகளை, உறவுகளை இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்ததை கண்டதற்கான முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைச் சாட்சிகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
2009 ஆம் ஆண்டின் பின்னர் மீளக்குடியேற்றச் செயற்திட்டத்தையடுத்து தொழிலுக்குச் சென்ற போதும், காணி வீடு பார்க்கச் சென்ற போதும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான்கீமூனால் அமைக்கப்பட்ட குழுவின் இலங்கை தொடர்பான விவகாரத்திற்குப் பொறுப்பாக இருந்த உறுப்பினரும்சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார் .
காணாமற் போனோர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளின்போது, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பு முனையைக் குறிக்கிறது. 2016 இன் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டம் (தாபித்தலும் ஃ நிருவகித்தலும்/ பணிகளை நிறைவேற்றுதலும்) சுயாதீன ஆணைக்குழு என்ற வகையில் நிறுவப்பட்டுள்ளது.
படையினரின் கையில் கொடுத்தபிள்ளைகளை கேட்கின்றார்கள் . காணாமல் போனோர் அலுவலகம் காணாமல் போனவர்களை பற்றித்தான் கேட்ப்பார்கள் இவர்கள் தங்கள் பிள்ளைகளை படையினரின் கையில் கொடுத்தவர்கள் காணாமற் போனோர் அலுவலகமானது இவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களே சாட்சியாக உள்ளனர். இந்நிலையில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாகச் சாட்சியமளிப்பதற்கு அவர்களது பாதுகாப்பையும், உடல் உள நலத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு எங்கள் அனைவருக்கும் உள்ளது. காணாமல் செய்யப்படுதல் என்பது ஒருவருடைய அடிப்படை உரிமையான வாழுதலுக்கான உரிமையினைப் பறித்தலாகும் என வரையறை செய்யப்படுகின்றது. ஒருஜனநாயக நாட்டில் காணாமல் செய்யப்படுதல் என்பது அந்நாட்டின் ஜனநாயகத்தின் மீது ஐயத்தினை ஏற்படுத்தும் ஒன்றாகவே அமையும்.
இலங்கையின் வட புலத்தில் அதாவது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களில் 60,000பேர் காணாமல் போயுள்ளனர் என அல் ஜசீரா ( Al Jazeera )ஆவணப்படம் ஒன்றின் மூலம் அதனை ஆவணமாக்கி உள்ளது.
பல குடும்பங்கள் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள நகரங்களில் தற்காலிகமாகக் கூடாரங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு உறவினர்கள் வீதிகளில் அமர்ந்து, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பிவருகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்ட நேசமானவரின் இடத்திலேயேநீதி மற்றும் பதில்களைப் பெறுவதற்கான நம்பிக்கையில் முழுமையான விசாரணை மேற்கொண்டு தங்கள் உறவினர்களைக் கண்டுபிடித்து தருவார்கள் என நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
உரிமைக்காக போராடுபவர்களை அடக்கினால் நீதி எப்படி கிடைக்கும்? இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களும் மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதும், போராட்டக்குழுவிற்கு தீவிரவாத சாயம் பூசுவதும் அரசியல் எதிராளிகளை இல்லாதொழிப்பதும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது மக்கள் மீதான இந்த ஜனநாயகமற்ற ஒடுக்குமுறையினையும் சிறிலங்க அரசு நிகழ்த்தி வருகின்றது.
1979ல் இன்பம், செல்வம் என்ற இரு வாலிபர்களைக் கொலை செய்து பண்ணை–மண்டைதீவுச் சந்தியில் வீசிவிட்டுச் சென்றது அன்றைய ஆயுதப்படை இதன் தொடர்ச்சியாகவட–கிழக்கில் பல கைதுகள் நடைபெற்று வந்திருக்கின்றது. மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் அடிக்கடி கடத்தப்பட்டுக்காணாமல் கடத்தப்பட்டார்கள். 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி மாலை, சிவலிங்கம் சிவகுமார் என்ற தமிழ் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவமும் பதிவானது. இந்தச்சம்பவம் நடந்து 5 தினங்களின் பின்னர் அதாவது ஏப்ரல் 18ம் திகதி அவரது சடலம் யாழ்ப்பாணம் தொண்டமானாறு பிரதேசத்தில் மீட்கப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தமானது மக்களுக்குப் பல்வேறு கசப்பான அனுபவங்களைத் தந்துள்ளது. அந்த வகையில் யுத்தத்தின் விளைவால் பொதுமக்களிற்குஏற்பட்ட பாதிப்புகள் பாரதூரமானவையாகும். உயிரிழப்புக்கள், காணாமல் ஆக்கப்படுதல், அங்கவீனமானோர், சொத்திழப்புக்கள் எனப் பாதிப்படைந்து காணப்படுகின்றனர்.யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்தும் இத்தகைய பாதிப்புகளிலிருந்து மீளாதவர்களாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
-நிக்சன்