செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை தேர்தலை குழப்ப புலிகள் வன்முறையையும் பாவித்ததுண்டு; ஏன்?: நிலாந்தன்

தேர்தலை குழப்ப புலிகள் வன்முறையையும் பாவித்ததுண்டு; ஏன்?: நிலாந்தன்

5 minutes read

பகிஸ்கரிப்பு எனப்படுவது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை புதியது அல்ல. ஆயுதப் போராட்டம் பலமாக இருந்த கால கட்டங்களில் விடுதலை இயக்கங்கள் பகிஸ்கரிப்பை தமது எதிர்ப்பு முறைகளில் ஒன்றாக பயன்படுத்தின.

குறிப்பாக விடுதலைப் புலிகள் இயக்கம் அதன் கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் பெரும்பாலான தேர்தல்களை அனுமதித்ததில்லை. அதேசமயம் படைத் தரப்பின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் அவர்கள் தேர்தலை குழப்புவதுண்டு.

அவ்வாறு குழப்புவதற்கு அவர்கள் வன்முறையை பிரயோகிப்பதும் உண்டு. மிக அரிதான சந்தர்ப்பங்களிலேயே ஆயுதப் போராட்டமானது தேர்தலை ஒரு பரிசோதனைக் களமாக பயன்படுத்தியது உண்டு. மற்றும்படி பகிஷ்கரிப்பு எனப்படுவது தமிழ் ஜனநாயக மரபில் ஒரு தொடர்ச்சியான இயல்பாக காணப்படுகிறது.

தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய முதலாவது இளையோர் அமைப்பாகிய யாழ் இளைஞர் காங்கிரஸ் இலங்கைத் தீவின் முதலாவது தேர்தலை பகிஷ்கரித்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்த காரணத்தால் பூரண சுயாட்சி தவிர வேறு எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்து இலங்கைத் தீவின் முதலாவது மக்கள் வாக்கெடுப்பை யாழ் இளைஞர் காங்கிரஸ் புறக்கணித்தது இது நடந்தது 1931 இல்.

அதிலிருந்து தொடங்கி தமிழ் மக்கள் பல தேர்தல்களை புறக்கணித்து வந்திருக்கிறார்கள். ஆனால் இப்புறக்கணிப்புகளில் அதிகமாக விவாதிக்கப்படுவதும் விமர்சிக்கப்படுவதும் 2005 இல் மேற்கொள்ளப்பட்ட பகிஸ்கரிப்புதான். அதில் புலிகள் இயக்கம் ரணிலை தோற்கடிப்பதற்காக தேர்தலை பகிஸ்கரிக்குமாறு தமிழ் மக்களை கேட்டது. அதன் விளைவாக மஹிந்த ஆட்சிக்கு வந்தார். அவர் யுத்த களத்தில் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தார்.

இது காரணமாக அப் பகிஷ்கரிப்பு இன்றுவரை விமர்சிக்கப்படுகிறது. தேர்தலைப் பகிஷ்கரித்ததன் மூலம் புலிகள் இயக்கம் தம்மை அழிக்கும் ஓர் எதிரியை தாமே தேர்ந்தெடுத்தது என்று இப்பொழுது விமர்சிக்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல அந்தப் பகிஷ்கரிப்பின் விளைவுகளே கடந்த 15 ஆண்டுகால தமிழ் மக்களின் அரசியலை தீர்மானித்து வருகின்றன. இப்பொழுது வந்திருக்கும் ஜனாதிபதி தேர்தலையும் அதுதான் தீர்மானிக்கிறது.

யுத்த வெற்றிக்குத் தலைமை தாங்கும் ராஜபக்ஷ குடும்பம் மறுபடியும் ஆட்சியை கைப்பற்ற முயற்சிக்கிறது. யுத்த வெற்றியே அவர்களுடைய அரசியலுக்கான முதலீடு. யுத்த வெற்றிவாதத்துக்கு தலைமை தாங்கும் ஒரு கட்சி யுத்தக் குற்றங்களை விசாரிக்க ஒப்புக்கொள்ளாது. அதாவது இறந்தகாலத்தை விசாரிப்பதற்கு ஒப்புக்கொள்ளாது. அதாவது இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூறத் தயாராக இருக்காது. அதைத்தான் கோத்தபாய செய்கிறார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார விளம்பரம் ஒன்றில் அவர் தேசத்துக்கு பொறுப்பு கூறுவார் என்று கூறப்படுகிறது. தேசத்துக்கு பொறுப்புக்கூறல் என்றால் என்ன? அனைத்துலக சமூகத்துக்கு பொறுப்புக்கூற மாட்டேன் என்று பொருள். அதாவது ஐ.நா.வின் முப்பதின் கீழ் ஒன்று தீர்மானத்துக்கு பொறுப்புக் கூற மாட்டேன் என்று பொருள்.

முப்பத்தின் கீழ் ஒன்று தீர்மானம் எனப்படுவது நிலைமாறுகால நீதி இலங்கைத்தீவில் ஸ்தாபிப்பதற்குரியது. நிலைமாறுகால நீதி எனப்படுவது அதன் பிரயோக நிலையில் சாராம்சத்தில் பொறுப்புக்கூறல்தான். அதாவது இறந்த காலத்துக்கு பொறுப்பு கூறுவதன் மூலம் நிகழ்காலத்துக்கு வருங்காலத்திலும் பொறுப்பாக நடந்துகொள்வது.

ஆனால் தனது பத்திரிகையாளர் மாநாட்டில் கோட்டாபய என்ன கூறினார்? இறந்த காலத்தை கடந்து வாருங்கள் என்று கூறுகிறார். யாழ்ப்பாணத்தில் வைத்தும் அவர் அதைத்தான் கூறினார்.

இறந்த காலத்துக்கு பொறுப்புக் கூறுவது என்பது தமிழ் மக்களைப் பொருத்தவரை நீதியின் தொடக்கமாகும். இறந்த காலத்தை கடந்து வாருங்கள் என்று கூறுவது நான் பொறுப்பு கூறமாட்டேன் என்பதன் மறுபக்கம் தான்.

கோட்டாபய பகிரங்கமாக கூறுகிறார் உலகத்துக்கும் உலகத்தோடு செய்து கொண்ட உடன்படிக்கைகளுக்கும் தமிழ் மக்களுக்கும் தான் பொறுப்பு கூறப்போவதில்லை என்று. தேசத்துக்கு மட்டுமே அவர் பொறுப்பு கூறுவார். இங்கே தேசம் என்று கருதப்படுவது சிங்கள பௌத்த பெருந்தேசிய அரசு கட்டமைப்புத்தான் அதற்குத்தான் அவர் பொறுப்பு கூறுவார்.

இவ்வாறு பகிரங்கமாக ஓர் அனைத்துலக தீர்மானத்தை மீறப்போவதாக அவர் கூறுகிறார். அதை முன்னிறுத்தி தமிழ் மக்கள் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் முடிவை நியாயப் படுத்தலாமா? என்று ஒரு கிறிஸ்தவ மதகுரு கேட்டார். சிவில் சமூக பிரதிநிதிகளுடனான ஒரு சந்திப்பின் போது அவர் மேற்கண்டவாறு கேட்டார்.

பகிஸ்கரிப்பு என்ற தெரிவை தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர வேறு யாரும் முன் நிறுத்தவில்லை. கோட்டாவும் சஜித் பிரேமதாசவும் அனுரகுமாரவும் இனப்பிரச்சினைக்கான ஒரு துணிச்சலான தீர்வை முன்வைக்க தயங்கும் ஒரு பின்னணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இத்தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்கிறது. ஏற்கனவே அக்கட்சி மாகாணசபை தேர்தலை புறக்கணித்திருக்கிறது.

ஆனால் தேர்தல் பகிஷ்கரிப்பு எனப்படுவது ஒரு கோரிக்கை மட்டுமல்ல. ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில் யாழ் இளைஞர் கொங்கிரஸ் குடாநாட்டுக்குள் நடத்திக் காட்டியதை போல அது ஒரு கூட்டு அபிப்பிராயமாக மாற்றப்பட வேண்டும். இன்னும் தெளிவாகச் சொன்னால் ஒரு பகிஸ்கரிப்பு அலை உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

இப்போது இருக்கும் தேர்தல் களநிலவரங்களின்படி பகிஷ்கரிப்பு அலை எனப்படுவது எல்லாவிதத்திலும் ஒரு தேசிய அலைதான். அப்படி ஒரு அலையை தோற்றுவிக்க மக்கள் முன்னணி தயாரா? கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்கு முன்பு ஹண்டி பேரின்பநாயகம் அப்படியோரு அலையை தோற்றுவித்த பொழுது ஜிஜி பொன்னம்பலம் அதற்கு எதிராகத் தேர்தலில் போட்டியிட்டார்.

அப்பொழுது இணைந்திருந்த முல்லைத்தீவு மன்னார் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஆனால் தோல்விக்குக் காரணம் மதரீதியான வாக்குகளே. பகிஷ்கரிப்பு அல்ல. ஹண்டி பேரின்பநாயகத்தின் பகிஸ்கரிப்பு அலை குடாநாட்டில் மட்டுமே வெற்றி பெற்றது.

இவ்வாறு தமிழ் மக்களின் முதலாவது தேர்தல் பகிஷ்கரிப்பின்போது அதை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட ஜி.ஜி. பொன்னம்பலத்தின் பேரன் இப்பொழுது மற்றொரு தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று கேட்கிறார்.

ஆனால் அவருடைய கட்சியைத் தவிர ஏனைய எல்லா கட்சிகளும் பகிஸ்கரிப்புக்கு ஆதரவாக இல்லை. பெரும்பாலான கருத்துருவாக்கிகளும் அதற்கு ஆதரவாக இல்லை. பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவாக இல்லை. ஏன் ஆதரவாக இல்லை?

ஏனெனில் அது மேற்கு நாடுகளுக்கு எதிர்மறையான ஒரு செய்தியை கொடுத்துவிடும் என்று ஒருபகுதி விமர்சகர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது தமிழ் மக்களுக்கு இருக்கின்ற ஒரே செயல் வழி தேர்தல்தான். அந்த வழியையும் அடைந்து விட்டால் தமிழ் மக்கள் அரசியல் செய்வதற்கு வேறு வழி உண்டா என்று வேறு ஒரு பகுதி விமர்சகர்கள் கேட்கிறார்கள்.

ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் பகிஷ்கரிப்பு என்றால் அதைச் சில குண்டுகளை வீசுவதன் மூலமோ அல்லது சில வேட்டுக்களை தீர்ப்பதன் மூலமோ செய்து விடலாம். ஆனால் இப்பொழுது ஆயுத மோதல்கள் இல்லை. எனவே முழுக்க முழுக்க மக்களை அரசியல் விழிப்பூட்டி திரளாக்கி அதைச் செய்ய வேண்டும். மக்கள் முன்னணி அதை செய்யுமா?

ஜந்து கட்சிகள் கையெழுத்திட்ட பொது ஆவணத்தை மூன்று பிரதான வேட்பாளர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவரை மேற்படி பொது ஆவணத்தை சிவாஜிலிங்கமும் சிறீதுங்க ஜெயசூரியவும்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அனுரகுமார திசாநாயக்க அதில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்கிறார். இப்படிப் பார்த்தால் தமிழ் மக்கள் ஒன்றில் சிவாஜிலிங்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது சிறீதுங்க ஜெயசூரியவிற்கு வாக்களிக்க வேண்டும். அல்லது ஜே.வி.பியோடு பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும். இல்லை என்றால் தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்.

விக்னேஸ்வரன் அவருடைய நிலைப்பாட்டை செவ்வாய்க்கிழமை அறிவித்து விட்டார். புதன்கிழமை 5 கட்சிகளும் கூடி முடிவெடுக்க முன்னரே அவருடைய முடிவு வெளிவந்திருக்கிறது. ஆனால் அந்த முடிவு தமிழ் மக்களுக்கு துலக்கமான வழிகாட்டலை செய்யவில்லை. எந்த ஒரு பிரதான வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமது விரலை சுட்டிக் காட்டுவதற்குத் தமக்கு தார்மீக உரிமை இல்லை என்று விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார்.

அப்படி என்றால் 13 அம்சக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட சிவாஜிலிங்கத்தை ஒரு பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ளலாமா? அல்லது சிறீதுங்க ஜெயசூரியவை ஏற்றுக் கொள்ளலாமா?

ஆனால் விக்னேஸ்வரன் பகிஸ்கரிப்பை ஆதரிக்கவில்லை என்று தெரிகிறது. பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரிக்கவில்லை. அப்படி என்றால் தமிழ் மக்கள் என்ன செய்வது? கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தபால் மூல வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் 80 விகிதத்துக்கு மேல் வாக்களித்திருக்கிறார்கள். எனவே மக்கள் தாங்களே முடிவு எடுக்கட்டும் என்று விட்டுவிடலாம் என்று சில கருத்துருவாக்கிகள் கூறுகிறார்கள்.

தமிழ் மக்கள் தாமாக வாக்களித்தால் யார் வரவேண்டும் என்று வாக்களிப்பதற்கு பதிலாக யார் வரக்கூடாது என்று முடிவெடுத்தே வாக்களிப்பார்கள். அது அதன் தர்க்க பூர்வ விளைவாக சஜித் பிரேமதாசவுக்கே சாதகமாக முடியும்.

அதாவது ஐந்து கட்சிகள் கையொப்பமிட்டு உருவாக்கிய பொது ஆவணத்தை ஏற்றுக் கொள்ளாத ஒருவருக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டியிருக்கும். நிச்சயமாக அவை பேர வாக்குகளாக இருக்காது.

-அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More