ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 11 ஆண்டுகளின் பின்னரும் கூட ஓர் உலகப் பெரும் தொற்று நோயின் காலத்திலும் கூட நாடு அதன் அரசியல் அர்த்தத்தில் இரண்டாகப் பிரிந்தேயிருக்கிறது என்பதனைத்தான் மே 18ஆம் திகதி தமிழ் பகுதிகளிலும் தெற்கிலும் இடம்பெற்ற சம்பவங்கள் நிரூபித்திருக்கின்றன.
தமிழ் பகுதிகளில் இறந்தவர்கள் நினைவு கூரப்பட்டனர். தென்னிலங்கையில் யுத்த வெற்றி கொண்டாடப்பட்டது. அந்த வெற்றியை நினைவுகூர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி ஒரு விடயத்தை துலக்கமாகத் தெரிவித்திருக்கிறார்.
அரச படைகளை விசாரிக்க முற்படும் அல்லது தண்டிக்க முற்படும் எந்த ஒரு சர்வதேச நிறுவனத்திலிருந்தும் இலங்கை வெளியேறும் என்பதே அந்தச் செய்தி ஆகும். அதாவது படைத் தரப்பை விசாரிக்க முற்படுகின்ற எந்த ஒரு வெளித்தரப்புக்கும் எதிராக தான் செயற்படுவார் என்பதனை அவர் தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறார்.
நடைமுறையில் இலங்கை அரசாங்கம் போர் குற்றம் புரிந்திருக்கிறது என்பதனை உலகில் பெரும்பாலான நாடுகள் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐநா போன்ற உலக பொது அமைப்புகளும் அவ்வாறு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. சில சுயாதீன செயற்பாட்டாளர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோரே இது தொடர்பில் தொடர்ந்தும் ஆணித்தரமாகவும் கூர்மையாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மற்றும்படி உத்தியோகபூர்வ ஆவணங்களிலோ அல்லது மனித உரிமைகள் ஆணையரின் உத்தியோகபூர்வ அறிக்கையிலோ போர்க்குற்றம் தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. இது முதலாவது.
இரண்டாவது- அவ்வாறு போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஓர் அனைத்துலக பொறிமுறையை ஐநா பரிந்துரைக்கவில்லை. ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக ஒரு கலப்பு பொறிமுறையை தான் ஜ.நா.முதலில் ஏற்றுக் கொண்டது. அதைக்கூட பின்னர் கைவிட்டது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையே போதும் என்ற தனது முடிவை நோக்கி உந்தித் தள்ளிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தான் மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியைக் கவிழ்த்தார்.
மூன்றாவது- ஐநாவும் உட்பட பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் தமிழ்மக்களுக்கு நிலைமாறு கால நீதியைத் தான் வழங்கத் தயாராக காணப்படுகின்றன. ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் கேட்கும் பரிகார நீதியை அதாவது இனப்படுகொலைக்கு எதிரான பரிகார நீதியை தருவதற்கு அல்லது அதற்கு உரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பெரும்பாலான உலக நாடுகள் தயாராக இடல்லை.
ஏனைய உலக பொது நிறுவனங்களும் தயாராக இல்லை. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் நிலைமாறுகால நீதிக்குரிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒப்புக்கொண்டார். ஆனால் அதையும் ராஜபக்சக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் நிலைமாறுகால நீதியை அமுல்படுத்தும் ஐநா தீர்மானத்தை நிராகரித்து விட்டார்கள்.
நிலைமாறுகால நீதி எனப்படுவது அதன் சாராம்சத்தில் பொறுப்புக் கூறல் தான். ஆனால் ராஜபக்சக்கள் என்றைக்குமே தாங்கள் பொறுப்புக்கூறத் தயார் என்று ஏற்றுக்கொண்டதில்லை. இது விடயத்தில் அவர்கள் தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் கூர்மையாகவும் தங்களுடைய நிலைப்பாட்டை வெளிக் காட்டி வருகிறார்கள். அந்த நிலைப்பாட்டின் தொடர்ச்சியே கடந்த 18ம் திகதி வெற்றி விழா கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கள் ஆகும்.
அதாவது உலக சமூகம் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் சேர்க்கும் பரிகார நீதியை தரத் தயாரில்லை. நிலைமாறுகால நீதியைத்தான் அவர்கள் தரத் தயாராக இருக்கிறார்கள். அதைக்கூட ராஜபக்சக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் ஜ.நாவை எதிர்க்கும் சமிக்ஞையை கடந்த 18 ஆம் திகதி கோட்டாபய வெளிப்படையாக காட்டினார்.
அவர் இவ்வாறு தெரிவித்தமை தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விமர்சனங்கள் எழுந்தன. அவர் அவ்வாறு உலக சமூகத்தை பகைக்கக் கூடாது என்று உள்நாட்டிலேயே ஓய்வுபெற்ற ராஜதந்திரிகள் சிலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். பெரும்பாலான மேற்கத்திய ராஜதந்திர வட்டாரங்களில் அவருடைய கருத்துக்கள் சினேகபூர்வமாக பார்க்கப்படவில்லை. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் அவர் அவ்வாறு உரையாற்றி சரியாக 5 நாட்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ராஜபக்சவுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார்.
இந்த உரையாடலின் போது இருவரும் ஒருவர் மற்றவரை புகழ்ந்திருக்கிறார்கள். ‘தெளிவான சிந்தனையுடன் விரைவாக கடினமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு தலைவராகவே’ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைத் தான் புரிந்து வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல அந்த உரையாடலில் மேலும் ஒரு விடயம் உரையாடப்பட்டிருக்கிறது.
அது என்னவெனில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் பற்றியதாகும் இதுதொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது….
‘தற்போது தனது முன்னுரிமை பொருளாதார புத்தெழுச்சியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சில முன்னணி திட்டங்களுக்கு மீண்டும் உயிரூட்டுவதற்கு இந்தியாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விரைவாக நிர்மாணிப்பது அவற்றில் ஒன்றாகும்.’
இந்த இடத்தில் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். மேற்படி முனையத்தை இந்தியாவின் உதவியோடு நிர்மாணிப்பதற்கு முன்னர் பதவியில் இருந்த ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயாராக காணப்பட்டது. ஆனால் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆட்சியை குழப்பிய மைத்திரிபால சிறிசேன அதற்கு தடையாக காணப்பட்டார்.
அவருக்கு பின்னணியில் ராஜபக்சக்கள் இருந்ததாக நம்ப முடியும். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் இந்தியாவுக்குத் தர மறுத்த ஒரு வாய்ப்பை இப்பொழுது கொவிட்-19 சூழலுக்குள் வழங்கத் தயாராக இருப்பதாக சமிக்ஞை காட்டப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மே 18ஆம் திகதி ஜ.நாவைப் புறக்கணிக்கும் தொனியில் அமைந்த ஒரு உரையை ஜனாதிபதி ஆற்றிய பின்னரே இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.
ஒரு நோய்த்தொற்றுக் காலத்திலும் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான நடவடிக்கைகளை ராஜபக்சவின் அரசு முன்னெடுத்து வருகிறது என்ற குற்றச்சாட்டுக்களின் மத்தியில் ஐநாவைப் புறக்கணிக்கும் கருத்துக்களை தெரிவித்து சரியாக ஐந்தாவது நாளில் ராஜபக்சக்கள் இந்தியாவுக்கு சாதகமான ஒரு சமிக்ஞையைக் காட்டியிருக்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது?
ஒருபுறம் அவர்கள் மேற்குநாடுகளுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு முரண்படத் தயாராக காணப்படுகிறார்கள் அதேசமயம் சீனாவைத் இதயத்தில் வைத்துக்கொண்டு இந்தியாவைத் தூக்கி மடியில் வைத்திருக்கும் ஒரு வெளியுறவுக் கொள்கையை முன்னெடுக்கிறார்கள். சீனாவின் பின் பலமே ராஜபக்ஷக்களுக்கு ஐநாவை எதிர்க்கும் துணிச்சலைக் கொடுக்கிறது. மேற்கு நாடுகளோடு முரண்படும் துணிச்சலை கொடுக்கிறது.
இவ்வாறு சீனாவை இதயத்தில் வைத்துக்கொண்டு இந்தியாவை மடியில் வைத்திருப்பதன் மூலம் மேற்கு நாடுகளின் எதிர்ப்பை குறிப்பிடத்தக்க அளவுக்கு வரையறைக்கு உட்படுத்தலாம் என்று இலங்கை அரசாங்கம் சிந்திக்கின்றது. இப்போது உள்ள பூகோள ஒழுங்கின்படி இந்தியாவும் அமெரிக்காவும் பூகோளப் பங்காளிகள்.
இதில் அருகில் இருக்கும் பங்காளியை அரவணைக்கும் அதேசமயம் பிராந்தியத்துக்கு வெளியே இருக்கும் பங்காளியை எதிர்க்கும் ஒரு உத்தியை ராஜபக்சக்கள் கெட்டித்தனமாக முன்னெடுக்கிறார்கள். இந்தியாவை அரவணைத்து வைத்திருக்கும் வரை மேற்கு நாடுகள் தம் மீது ஒரு கட்டத்துக்கு மேல் அழுத்தத்தை பிரயோகிக்க போவதில்லை என்று அவர்கள் சிந்திக்கிறார்கள் உலகப் பெருந் தொற்று நோய்க்கு எதிரான ஓர் அரசியல் சூழலிலும் அவர்கள் தமது வெளியுறவுக் கொள்கையை ஸ்திரமாக முன்னெடுக்கிறார்கள்.
ஆனால் தமிழ்த் தரப்போ கடந்த 11 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருக்கிறது ?
ஒருபுறம் புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதி பரிகார நீதியை கேட்கிறது. இன்னொரு பகுதி நிலைமாறுகால நீதியைக் கேட்கிறது. அதேசமயம் தாயகத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளும் நிலைமாறுகால நீதியை ஏற்றுக் கொள்கிறார்கள். தாயகத்திலுள்ள பரிகார நீதிகோரும் கட்சிகள் மக்கள் ஆணையை இன்னமும் பெற்றிருக்கவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை உற்றுக் கவனித்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும் 2009 க்குப்பின் தமிழகத்தில் காணப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கொதிப்பு மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கிவிட்டது.
இப்படியே போனால் தமிழகத்தை வெற்றிகரமாக கையாள்வதும் கடினமாகி விடும். தமிழகத்தை வெற்றிகரமாகக் கையாளவில்லை என்றால் இந்திய மத்திய அரசை கையாள முடியாது. எனவே கடந்த பதினோரு ஆண்டுகளாக நீதியைப் பெறுவதற்கான தமிழ் மக்களின் போராட்டம் முன்னேறிய தூரத்தை விடவும் அதற்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் அதிக தூரம் முன்னேறியிருப்பதாகவே தெரிகிறது.
ராஜபக்சக்கள் நிலைமாறுகால நீதியை நிராகரித்து விட்டார்கள். இந்த லட்சணத்தில் நிலைமாறு கால நீதியிலிருந்து பரிகார நீதியை நோக்கி செல்வதற்கு ஒரு வேலைத் திட்டமும் வழி வரைபடமும் தாயகத்திலுள்ள தமிழ்த் தலைவர்களில் யாரிடமுண்டு? தாயகத்தில் அப்படிப்பட்ட தரிசனம் இல்லையென்றால் புலம்பெயர்ந்த தமிழர்களையும் தமிழகத்தையும் இணைத்து நீதியைப் பெறுவது கடினமாக இருக்கும்.
ராஜபக்ச சகோதரர்களின் இரண்டாவது ஆட்சியானது புவிசார் அரசியலைப் பொறுத்தவரை தமிழ் மக்களுக்கு புதிய வாய்ப்புகளை திறக்கும் என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் அப்படிப்பட்ட வாய்ப்புக்கள் திறக்கப்படுமாக இருந்தால் அதைக் கையாள்வதற்கு தமிழ் மக்கள் மத்தியில் பொருத்தமான தரிசனங்களை கொண்ட அதேசமயம் மக்கள் ஆணையைப் பெற்ற கட்சிகள் இருக்க வேண்டும்.
-அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்