செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைசிறப்பு கட்டுரை உளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி | நிலவன்

உளச் சமூகத் தலையீட்டின் முதலுதவி | நிலவன்

17 minutes read

உலக சனத்தொகையினை ஐக்கிய நாடுகள் அமைப்பு 11.07.2019 அன்று மாலை 4.00 மணிக்கு வெளியிட்ட  அறிக்கையில்  7,716,834,712. தொகை எனவும் 700 மில்லியன் கடந்த பத்து ஆண்டுகளில் கூடி இருக்கிறது. எனவும் சனத்தொகையில் 12 வீதமானோர் ஏதாவதொரு உளநோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. உலக சனத்தொகையில் ஏறக்குறைய 450 மில்லியன் மக்கள் அதாவது உலக சனத்தொகையில் நான்கில் ஒருவர் ஏதாவது உளநோய்க்கு ஆளாகியுள்ளனர். உளநல பாதிப்பு உள்ளவர்களில் பொதுவான உளநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 30-40 சதவீதத்தினர். அது ஒரு நோய் என்பதை அறியாமல் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். மனித வாழ்வை பாதிக்கும் நோய்கள் வரிசையில் உளநோய்கள் 3வது ஸ்தானத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது உளவியல் மற்றும் சமூகவியல் தாக்கங்கள் பற்றி அதிகளவு கவனயீர்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

 உலக சுகாதார நிறுவனத்தின் தரவின்படி, உலகம் முழுவதும் 10 சதவீத கர்ப்பிணிப் பெண்களும், குழந்தை பெற்ற 13 சதவீத பெண்களும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 154 மில்லின் மக்கள் மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் மையக் கருத்தாக ‘தற்கொலை தடுப்பு’ உள்ளது. ஒவ்வொரு 40 செக்கனும் ஒருவர் என்ற கணக்கில் ஆண்டுக்கு சுமார் 8,00,000 பேர் உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. 15-29 வயதுக்குட்பட்டவர்களிடையே உயிரிழப்பிற்கு இரண்டாவது மிகப் பெரிய காரணியாக தற்கொலை உள்ளது. நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் மனித, பொருளாதார வளத்தை மனநோய்கள் வெகுவாகப் பாதித்திருக்கிறது. இதனால் மக்கள் ஏதோ ஒரு உளநலப் பிரச்சினைக்கு உள்ளாவார்கள் என்று கணித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து தேசிய உளநல கூட்டமைப்பு 150-இற்கும் மேற்பட்ட நாடுகளில்  1992-ம் ஆண்டு முதல் வருடந்தோறும் ஒக்டோபர் 10-ம் திகதி உலகம் முழுவதிலும் உளநலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட கருத்தைப் பிரகடனம் செய்து உளநல தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இலங்கையில் 1839ஆம் ஆண்டு உளநோயாளர்களுக்கான சட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1847ஆம் ஆண்டு பொரளையிலும் 1882இல் கருவாக்காட்டிலும் 1917 – 1927 இல் அங்கொடை மற்றும் முல்லேரியாவிலும் உளநோயாளர்களுக்கான வைத்தியசாலைகள் உருவாக்கப்பட்டன. இந்த முல்லேரியா மற்றும் அங்கொடை வைத்தியசாலைகளாகும் தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பழைமை வாய்ந்த உளநல வைத்தியசாலையான அங்கொடை வைத்தியசாலையானது இலங்கையில் மன ரீதியாக பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சையளிக்கக் கூடிய வகையில் விடுதிகளைக் கொண்ட வைத்தியசாலை ஆகும். வடகிழக்கில் உளநல வைத்தியசாலை என்று தனி வைத்தியசாலை இல்லை. ஆனால்  மாவட்ட வைத்தியசாலைகள் தனி அலகாக உளநல சிகிச்சை வழங்கப்படுகிறது.

உளநலம் குன்றினால், உடல் நலமும் குன்றும். உடல் நலத்தைப் போலவே மனநலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உடல் நலம் குன்றினால் மனநலத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி தனது ஆற்றலை அறிந்து தினசரி வாழ்வில் ஏற்படும் மன இறுக்கத்தை சமாளித்து ஆக்கப்பூர்வமாக உழைத்து சமுதாயத்திற்கு உருப்படியாக பங்காற்றுபவரே உளநலனுடன் இருப்பவர் ஆவார். வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் நமது சிந்தனை, உணர்வுகள், நடத்தை ஆகியவற்றை தீர்மானிப்பது மனநலம் தான். தனி மனிதன், குடும்பம், சமூகம் நெருக்கடிகளோடும், அழுத்தங்களோடும் பிரச்சினைகளோடும்; வாழ்நாட்கள்  நாளாந்தம் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தும், உளச்சுகாதாரப் பிரச்சினைகள் பற்றிய விழிப் புணர்வை உளச் சுகாதார பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உதவி செய்தலும் அவசியமானதாகும். இலங்கையில் இடம்பெற்ற போர்க்கால சூழலில் பெரும்பான்மை படையினரின்  ஆக்கிரமிப்பு அட்டூழியத்தினால் எம் இளம் பெண்கள் பலர் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதை யாவருமறிவர். யுத்தத்தின் பின்னரான பலவிதமான உளப்பாதிப்பு நிலையிலுள்ளவர்களை குறிப்பாக உளவடு நோயினால் பாதிக்கப்பட்ட எண்ணிலடங்காதவர்கள் உயிரை மாய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் உளக்கோளாரினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை புள்ளிவிபரங்களினூடாக அவதானிக்க முடிகிறது.

அனர்த்தங்கள் நிறைவுற்ற போதிலும் உளநெருக்கீடுகள் மற்றுமொரு அனர்த்தத்தின் பரிணாமத்திற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. தற்கால சூழலில் மனநலத்தை ஒவ்வொரு கவனமாக பாதுகாக்க மன சுகாதாரப் பிரச்சினையால் ஒருமனிதனது உரிமை மற்றும் அவன் சார்ந்த குடும்பத்தினரின். வாழ்க்கைத் தரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. நாம் உடல் நலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உளநலனுக்குக் கொடுக்காததால் வேண்டும். அனர்த்தங்களால் ஏற்படும் உளநெருக்கீடுகள் ஒருங்கிணைந்து சமூக மட்ட நெருக்கீடுகளாகப் பரிணமிக்கின்றன. ‘நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என பஞ்ச பூதங்களால் ஆனது நம் உலகம். இந்த ஐந்து வகையிலும் நமக்கு எதிர்பாராத பேரிடர்கள் ஏற்படு கின்றன. இந்த இயற்கைப் பேரிடர் ஆகும்.

உளநல முதலுதவி என்றால் என்ன?

உளநல முதலுதவி என்பது உதவி தேவைப்படுகின்ற பாதிப்பிற்குட்பட்ட மனிதர்களுக்கு நெருக்கீட்டுக் காலத்தில் மனிதாபிமான ஆதரவு வழங்கும் செயற்பாடாகும். ஒரு நபரின் உளநலப் பிரச்னையைக் கண்டறிந்து சரியான முறையில் பராமரிப்பும், ஆதரவும், பாதுகாப்பும் வழங்குவதாக உள்ளடக்கியள்ளது. ஒருவருடைய உணர்ச்சி மற்றும் நடத்தைப் பிரச்னைகளின் குறியீடுகளை அடையாளங்காணுவது,.அவசர கால நிலையில் அத்திய அவசியத் தேவையான உணவு குடிதண்ணீர் இருப்பிடம் போன்ற சில குறிப்பிடத்தக்க வசதிகள் கிடைக்கும்படி செய்து  உடல் பிரச்சினையோ, மனப் பிரச்சினையோ, விரைவாக கவனித்தால் குணமாகும் சாத்தியம் அதிகம். உளநெருக்கீட்டால் பாதிக்கப்பட்ட ஒரு வருக்கு முதலில் அடிப்படைத் தேவையான ஒன்றாகும்  உடல் நல குறைபாடு அல்லது உடல் நலப் பாதிப்பு ஒருவரில் ஏற்படுத்துகின்ற உடனடித்தாக்கம் போன்று உளநலப் பாதிப்பு தனிநபரிலோ, குடும்பத்திலோ அல்லது சமூக மட்டத்திலோ பெரிதுபடுத்தப்படாமல் இருப்பது இப்பாதிப்பின் வேகத்தை அதிகரிக்கச் செய்கிறது.

உணர்ச்சித் துயரத்தை அனுபவிக்கும் மற்றும் உதவி தேவைப்படும் நபர்கள். உறவின் பிரிவை எதிர்கொள்பவர்கள் புதிய நகருக்கு இடம் பெயர்வது, அன்புக்குரியவர்களின் இழப்பு, வேலை இழப்பு, நிதி இழப்பால் வருந்துதல் போன்ற பல சூழல்களில் உணர்ச்சிநிலை அதிகரிக்கிறது அல்லது குறைகிறது. தீடீரென்று எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்வதால், அவருக்கு மன அழுத்தம், பயம் மற்றும் பதற்றம் ஏற்படலாம், இது ஆரம்பத்திலே கண்டறியப்படவில்லையெனில், உளநலப் பிரச்னையாக வளரலாம். எனவே, அந்த நபரைப் பாதுகாக்க, அவருக்கு மேலும் சேதம் ஏற்படாமலிருக்க உதவி தேவை.

அவர்களின் கதைகளைச் உன்னிப்பாக  செவிமடுத்து ஒத்துணர்வு வழங்கி அவர்களுக்குச் சௌகரிய மானசூழலை ஏற்படுத்தி அமைதியான மனநிலையை உணரும்படி  செய்து அவர்களைப் பொருத்தமான தகவல் தொடர்பாடல் முறை சேவைகள் மற்றும் சமூக ஸ்தாபகங்களிடம் பொறுப்புக் கொடுத்து மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்குமாறு செய்துவிடலே அவர்களுக்கு நாம் வழங்கும் உளரீதியான முதலுதவி ஆகும். உளநல அல்லது உளவியல் சிக்கல் உள்ளவர்களுக்கு ஆரம்பக்கட்ட முதலுதவி அளித்தாலே 70 சதவீதப் பாதிப்புகள் குணமாகிவிடும்.  மேலதிக  சிகிச்சைக்கு உரிய முறையில் பரிந்துரை செய்து தேவைப்பட்டால், அவரை பயிற்றப்பட்ட உளவளத்துணையாளர்களை அல்லது உளநல நிபுணரின் உதவியை நாடச்செய்தல் வேண்டும்.

உளநலரீதியான முதலுதவியார் யாருக்கு தேவை?

ஆயுத முரண்பாட்டினாலோ போர் நடவடிக்கையால் இன்னலுற்றோர், மற்றும் இடப்பெயர்வுக்குட்பட்ட மனிதன் அல்லது சமுதாயமாக இருக்கலாம். அல்லது மழை, வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள், இயற்கை அழிவுகளினாலோ இழப்பை சந்தித்தோர்,  மீளா நோயின் தாக்கத்துக்குட்பட்டோர், வாகன விபத்துக்குள்ளானோர், ஏற்படும் சிக்கலான மனிதாபிமான அவசரகால நிலைமைகள், சிறை , சித்திரவதை,  மனக்கலக்கம், தனிமை, சகவாச நெருக்கடி, சுயமரியாதைக் குறைவு, குடும்பத்தில் மரணம், அல்லது மணவிலக்கு ஆகிய சூழ்நிலை அழுத்தங்கள்,  பாரிய நோயாளர்கள், தொற்றுநோயாளர்கள் குறிப்பாக தற்போது  கோரோனா நம்முடன் தொடர்ந்து பயணிக்கிறது. அதனால் கோரோனா பேரிடரால் ஊரடங்கால் மனதளவில் பல தரப்பினரும் பாதிக்கப்படுகிறார்கள்.  இவர்களில்  குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.

விபத்து, காயம், வன்முறை, வன்புணர்ச்சி ஆகியவற்றால் உண்டாகும் உளவியல் அதிர்ச்சிகளைக் கொண்டவர்களுக்கும்  பிரச்சினைகளோடு வாழப் பழக்கிக்கொண்டவர்கள் வாழ்க்கையை, பிரச்சினையோடு வாழ முடியாதவர்கள், பிரச்சினைகளை எதிர்நோக்கச்  சக்தி இழந்தவர்கள்,  அப்பிரச்சினைகளுக்குள் முழுமையாக அமிழ்ந்து போகிறார்களுக்கும்  தனக்கு தானே பாதிப்பை ஏற்படுத்துவோர்,  பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர்,  குடும்பத்தை பராமரிக்க முடியாதவர்கள்,  மன அழுத்தத்திற்கு உள்ளனவர்கள், உளநலத்தில் ஏற்படும் பிரச்சினைகளோ அல்லது மனநோயின் ஆரம்ப அறிகுறிகளோ இருந்தால்,  இதனால், அவர்கள் மன நிம்மதி இழந்து அவர்களின் குடும்பத்தின் நிம்மதியையும் இழக்கச் செய்து துயரங்களால் சூழப்பட்டு உள நோய்களின் சொந்தக்காரர்களாக மாறுகின்றவர்களுக்கு உளநலரீதியான முதலுதவி  தேவைப்படுகிறது.

உளநல முதலுதவி தேவைப்படும் நபர்களை அடையாளம் காணுவது எப்படி?

ஒருவரைப் பார்த்தவுடன் அவருக்கு உளநல முதலுதவி தேவை’ என்று பொதுமக்களால் கண்டறிய இயலாது. ஆனால், தீவிர மன மற்றும் உணர்வுத் துயரத்தைச் சந்திப்போர், சில குறிப்பிட்ட எண்ணங்கள், நடத்தைகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள், உளநல பிரச்சினையை ஐந்து முக்கிய வகைகளாகப் பிரித்து  இதை வைத்து அவர்களுடைய துயரத்தைக் கண்டறிய உதவியாக இருக்கும். ஒருவரின் உணர்வுகள், எண்ணங்கள் அல்லது நடத்தை ஆகியவற்றைப் பாதித்து அவருடைய வாழ்க்கையிலோ அல்லது அவருடைய குடும்பத்தினரின் வாழ்க்கையிலோ எதிர்மறை பாதிப்பை விளைவிக்கும் விதத்தில் ஒருவர் அனுபவிக்கும் உளநல முதலுதவி தேவை உதாரணமாக…

உடல் சார்ந்த நோய்க்குறிகள் உடல் வலி, களைப்பு, சோர்வு, எடைக் குறைவு, ஜீரணக்கோளாறு, பசியின்மை, தூக்கமின்மை உடல் சோர்வு. மூளைக்காயம் /குறைபாடு. மது, போதைப் பழக்கம். தொற்றால் உண்டாகும் மூளைச் சிதைவு. நாக்கு வறட்சி, பேச்சில் தடுமாற்றம், வயிறு வலி, புலியல்  பிரச்சினை  ஆகியவற்றோடு உடலையும் உடலின் செயல்பாடுகளையும் பாதிப்பவை  போன்றவையாகும்.

உணர்வு சார்ந்த நோய்க்குறிகள் பயம்,  சோகம், அல்லது பதற்றம் வருத்தம், குற்றவுணர்வு, எளிதில் கண்ணீர் விடுவது அடிக்கடி அழுதல், தன்னம்பிக்கையின்மை, உதவியற்ற உணர்வுகள்,  நம்பிக்கையற்ற உணர்வு. நீடித்திருக்கும் கவலை அல்லது எரிச்சல் மாறிவரும் அதிக சந்தோஷம்/ அதிக கவலை போன்றவையாகும்.

அறிதிறன் (சிந்தனைநோய்க்குறிகள் தெளிவற்ற சிந்தனை, எதிர்மறையான எண்ணங்கள்.தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம், தெளிவாகச் சிந்திக்க இயலாமை, குழப்பமாக இருத்தல், தன்னைத்தானே குற்றம் சாட்டிக்கொள்வது நம்பிக்கையற்ற உணர்வுகள் ஞாபக மறதி, அதிகமாக சந்தேகப்படுதல் தொடர்ந்து பாலியல் எண்ணங்களோ/ஆசையோ இல்லாமல் இருத்தல் பாலுறவில் வெறுப்பு /துணையை இதுசம்பந்தமாக தவிர்ப்பது போன்றவையாகும்.

நடத்தைசார்  நோய்க்குறிகள், தோல்வி,கவனம் செலுத்தாமல் இருத்தல், விருப்பமான செயல்களில் கூட ஆர்வம் இல்லாமல் இருத்தல், சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பது, மூர்க்கமாக நடந்து கொள்ளுதல், அடிக்கடி கோபம் கொள்ளுதல் எரிச்சலைடைந்து, இருப்பது  தற்கொலைக்கு முயற்சி செய்தல் பள்ளி/கல்லூரி/பணியிடத்துக்குப் போக மறுத்தல்; தனிமையை நாடுவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகுவது, உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் மிகுந்த மாற்றம் ஏற்படுவது,  தினசரி செயல்பாடுகளைக் கூட சமாளிக்க முடியாமல் திணறுதல்,  தன்னைத் தானே காயப்படுத்தி கொள்ளுதல் போன்றவையாகும்.

புலன்சார் நோய்க்குறிகள் தேர்வில் தோல்வி,  விபரீத கற்பனை, மாயக்குரல் கேட்டல், தனக்குத்தானே பேசிக்கொள்ளல் – சிரித்துக்கொள்ளல், அனைவரும் தன்னைப்பற்றியே பேசியதாக உணர்வு, கண்களுக்குத் தெரியாத காட்சிகளைக் காண்பதாக உணர்வு, இல்லாத விஷயத்தைப் பார்ப்பது / யாரோ தம் காதில் பேசுவது போல உணர்தல் திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யும், விரும்பத்தகாத எண்ணங்கள் /திரும்பத் திரும்ப ஒரே செயலை கட்டுப்பாடின்றி பதற்றத்துடன் செய்வது  (உதாரணம் அடுப்பை அணைத்து விட்டோமா என பலமுறை சரிபார்ப்பது/ கையை கழுவிக்கொண்டே இருப்பது) போன்றவையாகும்.

மற்றவர்கள் மதிக்காதது போல் உணர்தல், உதவிக்கு யாருமில்லாதது போல் உணர்தல், தற்கொலை எண்ணம் மற்றும் தற்கொலைக்கு முயற்சி செய்தல், இவை மன அறிகுறிகளாக இருக்கின்றன. இந்தச் சூழல்கள் நம்மில் தென்படின் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்  என்பதை பார்த்தல், செவிமடுத்தல், இணைத்தல், தயார்ப்படுத்தல், பரிசோதனை  கோட்பாட்டினை புரிந்து அல்லது தெரிந்து கொண்டு உளநல முதலுதவியை வழங்க வேண்டும்.  இணையத்தளத்தினுடனான சமூகவலைத்தள பாவனையினாலும் பல்வேறு உளநலப்பாதிப்புக்களைப் பாவனையாளர்கள் எதிர்நோக்குகின்றனர்.  தங்கள் உணர்வுகளை சமூகவலைத்தளப் பதிவுகளில் பாவிக்கிறார்கள்., முகநூல் கமென்ட்டில் யாரேனும் ஏதாவது சொன்னாலோ அல்லது லைக் வரவில்லை என்பதற்காகவோ, அலுவலக வேலைப் பழுவை வீட்டில் இருப்போரிடம் எரிந்து விழுவதோகூட ஒருவகையில் உளநல ம் பாதிப்பு தன்மையே. வீதியில்,  தனியாக பேசி கொண்டு அழுக்கு உடையுடன் சுய கவனிப்பில்லாது இருப்பவர்கள்தான் உளநலம் பாதிக்கப்பட்டவர் என்றில்லை.

உண்மையில் இந்த நோய்க்குறிகள் வெவ்வேறாக வெளிப்பட்டாலும், அனைத்தும் ஒன்றொடு ஒன்று தொடர்புடையன. சிலநேரங்களில், அந்த நபருக்கு உளநல நிபுணர்களின் உதவி தேவைப்படலாம், ஆனால் பெரும்பாலும் அவர்கள் புரிந்துகொள்ளும் உரையாடல்கள் மற்றும் ஆதரவைத்தான் மற்ற நபர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். நாம் ஒவ்வொருவரும், தங்களை தைரியமான, வாழ்க்கையின் சவால்களை யாருடைய துணையும் இன்றி தாங்களே எதிர்கொள்ளும் சக்தி உடையவர்கள்.  என நம்பினாலும், சில நேரங்களில் மற்றவரிடம் உதவி பெறுவது என்பது நடைமுறை அவசியமாகிறது. இன்னும் சொல்லப்போனால், ‘தன்னால் முடியாத போது, அதை ஒப்புக்கொண்டு மற்றவரிடம் உதவி கேட்பது’ என்பது ஒரு தனிமனிதனின் பலம் என்று சொன்னால் அது மிகையாகாது. பின்வரும் தருணங்களில், உளவியல் பூர்வமான உதவியை நாடுவது மிகவும் அவசியம். உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காத உளநலப் பிரச்சினை உள்ளவர்களை புறக்கணிக்கப்படுதல், சமூகத்தில் ஓரங்கட்டப்படுதல் போன்ற செயல்பாடுகளால் நோயின்தாக்கம் அதிகரிக்கிறது.

ஒருவர் உளநல முதலுதவியை யார் வழங்கலாம் ?

இது உளவியல் சிகிச்சை அல்ல உளவியல்  அல்லது உளநல முதலுதவி. யார் வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேவையுள்ளவர்களுக்கு அவர்களை வருத்தாமல் ஆலோசனை வழங்குவதே உளவியல் முதலுதவி ஆகும். உளநலப்பிரிவு-வைத்தியசாலை, பிரதேச செயலகம் -DS, கச்சேரி, சமுக சேவைகள்திணைக்களம், ONUR),  உளசமுகப் பணியாளர்கள் (psw), பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் (WDO) , மருத்துவச்சி (PHM), மதத்தலைவர்கள், கிராம சேவகர்(GS),  சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ( SDO), சமுகசேவைகள் உத்தியோகத்தர். (SSO), பாடசாலை சூழலில் – உளவளத்துணை ஆசிரியர், அதிபர், வகுப்பாசிரியர், நம்பிகைக்குரிய ஆசிரியர், பாட ஆசிரியர், ஆன்மீகவாதிகள், உளநல வைத்தியர்கள், பிரதேச வைத்தியர்கள்,  நாட்டு வைத்தியர்கள், அண்மையில் இலகுவாக அணுகக்கூடிய உறவினர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள், குறித்தநபரின் குடும்ப உறுப்பினர்கள்., நெருக்கமானஉறவினர்கள், நண்பர்கள்,  ONUR ~உளச்சமுகப் பணியாளர்கள், தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள்(NGO) ஆகியோர்  பாதிக்கப்பட்டவர்களின் உரிமை, மாண்பு, பாதுகாப்பு ஆகிய மூன்றுக்கும் அணுவளவும் குறை ஏற்பட்டு விடாமல், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முதலுதவியை வழங்க வேண்டும்.

உளநல முதலுதவியை வழங்குவது எப்படி?

எனக்குத் தெரிந்த ஒருவர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்பதை ஒருவர் பார்த்தால், அவரை அணுகிப் பேசலாம். இந்தப் பேச்சு பச்சாத்தாபத்துடன், அவரைப்பற்றி எந்த்த் தீர்மானத்தையும் எடுக்காமல், ரகசியமாக இருக்கவேண்டும்

எடுத்துக்காட்டாக, ஒரு வங்கி முகாமையாளரின் , ஒரு கீழ்நிலை பணியாளருக்கு இடையில் இடபெற்ற சிறு பகுதி  உரையாடலைப் பாருங்கள்:

முகாமையாளர் – வணக்கம் மேரி , நீங்கள் இப்போது சில  நாட்களாக மிகவும் மந்தமாக மற்றும் சோர்வாகத் தெரிகிறீர்கள்… ஏதாவது சரியில்லையா…?

மேரி – வணக்கம்  சேர்   எனது அம்மா  உடல்நலமின்றி உள்ளார்… ( மேரி கண்கள் கலங்கியது… முகாமையாளர் தன்னுடைய அறையினை மெதுவாக சாத்திவிடடு… முகாமையாளர தனது மேசைக்கு முன்னால் உள்ள இருக்கையில் மேரியை இருக்கும்படி கூறினார். மேரி இருக்கையில் இருந்தார் )

முகாமையாளர் – அம்மா  உடல்நிலைபற்றி கூறினீர்கள்….

மேரி – ஒம் சேர் அம்மாவின்  உடல்நிலை மோசமாகவிட்டது…. நான் வேலையின் காரணமாக அவருடன் நேரம் செலவழிக்க இயலவில்லை…

முகாமையாளர் –  நீங்கள் அவரை மருத்துவரிடம் கூட்டிச் சென்றீர்கள் அவர்கள் என்ன கூறினார்கள்?

மேரி  – வைத்தியர்கள் தங்களால்; ஒன்றும் செய்ய முடியாது என்றார்கள் … அவரது மருந்துகள் வேலை செய்தில்லை எனவும்…  மேலும் அவரை இயன்றவரை அமைதியாக கூடஇருந்து பார்த்துக்கொள்ளுமாறு  கூறினார்…

முகாமையாளர்-  ஓ… நீங்கள் சொல்வதை என்னால்  உணர முடிகிறது…

மேரி  – நான் அவரைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துச் சோர்வடைந்து விட்டேன், மேலும் நான் அவருடன் நேரம் செலவழிக்க இயலவில்லை அவரின் இறுதி நேரத்தில் கூட என்னால் அவருடன் இருக்க முடியவில்லை …. மோசமாக  உணர்கிறேன். ( தொடர் உரையாடலின் பின்னர் )

முகாமையாளர்;-  நீங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு செல்லுங்கள் …உங்கள் அணிக்கு செய்யவேண்டியவைகள் தெரியும் தானே…அலுவலக வேலைகளை நாம் பார்க்கினறேம்…. நீங்கள் அவருடன் உங்கள் நேரத்தை   செலவழியுங்கள்… உங்களுடன் நாம் எப்போதும் உள்ளோம்…  (உரையாடல் தொடர்ந்து… நிறைவாகியது)

மேரி  – நன்றி, சேர் …

முகமையாளர்;-  நன்றி மேரி என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு…

இந்தச் சூழ்நிலையில், ஒருவர் தன் தாயின்; உடல்நலன் குறித்து உதவியற்றுச் சோகமாக உள்ளார்,  என்பதை பார்த்தல் ஊடாக உணர்ந்த அவருடைய முகாமையாளர் தன் சக பணியாளருக்கு உளநல முதலுதவி வழங்கினார். ரகசியம் பாதுகாப்பதை உறுதிப்படுத்தினார். அவர் புரிந்துகொள்பவராக இருந்தார், மேலும் மேரி கூறுவதைக் குறுக்கிடாமல் உன்னிப்பாகக்  கேட்டார், அவரது உணர்வுகளை வெளிப்படுத்த உதவினார்  அவர் மேரிக்கு எளிதாக்கவும் தனது தாயுடன் நேரம் செலவழிக்கவும் உதவியதுடன் கூடஇருப்பது போன்ற உணர்வை வழங்கினார்.

உளநல முதலுதவியாளர் என்ன செய்யக் கூடாது?

உளவியல் முதலுதவி அளிக்கிறோம் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லக் கூடாது என்ற கற்பிதம் தவறானது. நம்மைப் பற்றிய தவறான தகவலை அளிக்கக் கூடாது. பிரச்சினைகளை நாமாகக் கேட்கக் கூடாது. பிரச்சினைகளை இவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்று அவர்கள் முடிவு செய்யும் சுதந்திரத்தை அளிக்க வேண்டும் அவர்கள் கூறுவதை வைத்து எடுகோள் தீர்மானத்தையும் எடுப்பதை தவிர்க்க வேண்டும். என்னால் உங்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும் என்ற ரீதியில் தவறான நம்பிக்கையை விதைக்கக்கூடாது அவர்கள் உணர்வுகளுடன் உங்கள்  உணர்வுபூர்வ இணைப்புக் கூடாது.

பொருத்தமற்ற  வார்த்தைகளை அறவே பயன்படுத்தக்கூடாது. அவர்கள் செல்லும்போது பொருத்தமற்று குறுக்கு விசாரணை செய்யக்கூடாது  வறுமையில் இருக்கிறாய், சோகமாய்ப் பார்க்கிறாய், கஷ்டப்படுகிறாய் என்று எந்த முத்திரையும் குத்தக் கூடாது. . ஒருவர் நம்மிடம் மனம் விட்டுப் பேச நண்பராக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்புடன் உரையாடக் கூடாது நாம் மருத்துவராகவே மாறி ஆலோசனை வழங்கக்கூடாது. அதே நேரத்தில் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது நம் வேலையல்ல. தீர்வுகளை அளிக்க முயற்சிசெய்யவேண்டாம், என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். அவர் தன்னுடைய பிரச்சினைகளைக் கலந்தாலோசிக்கவேண்டும் என்று வற்புறுத்தக்கூடாது. அவர்களுடைய சிந்தனைக்காக (எடுத்துக்காட்டாக, தற்கொலை எண்ணம்) அவர்களைக் குற்றம் சாட்டவேண்டாம்.

உளநல முதலுதவியாளர் என்ன செய்யலாம்,?

ஒருவர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருப்பதை ஒருவர் பார்த்தால், அவரை அணுகிப் பேசலாம். அவர்களிடம் உண்மையைச் சொல்லிப் பேசுவதே சரியானது.  ஓத்துனர்வை வழங்குதல் வேண்டும் அவர்களையே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையினை சொல்ல வைக்க வேண்டும். உன்னிப்பாக செவிமடுத்தல் வேண்டும். முன்பின் அறிமுகமில்லாதவர்கள் நம்மை நம்பும் அளவுக்கு வார்த்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டும். நம்மைப் அவர்கள் பாதுகாப்பாக உள்ளார் என்தை உறுதி  செய்தல் வேண்டும்  பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும்.. அவர்களுக்கு நம்பிக்கையை அளித்தால் மட்டுமே நம்மிடம் அவர்கள் பேசுவார்கள் அதற்கான நம்பிக்கையினை வழங்க வேண்டும். அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். முதலுதவி மட்டுமே அளிக்கவேண்டும். தேவைப்பட்டால் உளவியல் மருத்துவர்களைப் பரிந்துரைத்து சிகிச்சையை அவர்களின் சம்மதத்துடன் ஒருங்கிணைக்கலாம்” அவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும் அவர் தீர்வுகளைத் தேட உதவ வேண்டும்.

பெரும்பான்மையான உளநலப் பிரச்சினை உள்ளவர்கள் சராசரி புறத்தோற்றத்தில் வெளியில் தெரிவதில்லை. மனச்சோர்வு, பதற்றம், போதைப் பழக்கம் பாலுறவு சார்ந்த பிரச்னைகள்.  மாறிவரும் பண்பாட்டுச் சூழலில், பொதுமக்களுக்கு குறிப்பாகக் குழந்தைகளுக்கு உளவியல் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு கணிசமாக அதிகரித்திருக்கிறது. இக்காலங்களிலே ஆற்றுப்படாத உளவடுக்கள் அனர்த்தத்தை தொடர்ந்து உளத்தோற்றம் இன்மையால் ஏற்படும் தற்கொலை போன்ற மோசமான நிலைகளுக்கு வழிவகுக்கின்றன. இதை அரசும் மக்களும் கருத்தில்கொண்டு உளவியல் சிகிச்சைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஒரு நபர் தற்கொலை எண்ணங்கள் கொண்டுள்ளதாக, அல்லது பலவீனமாக்கும் உணர்வுகளைக் கொண்டிருப்பதாக, அல்லது நடத்தைப் பிரச்சினைகளான போதைப்பழக்கம் போன்றவற்றைக் கொண்டிருப்பதாக நினைத்தால், அவர்களை ஒரு மனநல மருத்துவரிடம் பரிந்துரைக்கலாம்.

பேரழிவால் ஏற்பட்ட அதிர்ச்சிக்கு பிறகு கவலை, மனச்சோர்வு, மனநிலையில் மாற்றம் போன்றவற்றால் நீங்களோ உங்கள் குடும்ப உறவினர்களோ நண்பர்களோ பாதிக்கபடலாம். அத்தோடு யோசிப்பதும் வேலை செய்வதும் தூங்குவதும் கஸ்டமாக இருக்கலாம். அதனால் உங்கள் மீது அக்கறையாக இருப்பவர்களிடம் மனம் திறந்து பேசுங்கள். அனர்த்தங்களால் ஏற்படும் உளத்தாக்கங்கள் ஒருபுறமும், அனர்த்தங்களைத் தொடர்ந்து நடைபெறும் களவு, கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் நெருக்கீடுகள் தொடர் உளத் தாக்கங்களுக்கு காரணமாக அமைகின்றன.

உளநலச் சமூகப்பணியாளர்கள் பின்வரும் பணிகளில் கவனம் செலுத்துகிறார்கள்:

பாதிக்கப்பட்டவருடைய உணர்வுசார்ந்த, சமூக, பொருளாதார, மனநலத் தேவைகளை மதிப்பிடுதல். பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்ப உறுப்பினருக்கும் அந்தப் பிரச்சினையைப்பற்றிச் சொல்லுதல், அதன்மூலம் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படுகிற சிகிச்சைத் திட்டத்தை அவர்கள் புரிந்துகொள்ள வழிசெய்தல். பாதிக்கப்பட்டவருடைய சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துதல், அவர்களுக்குப் பயன்படக்கூடிய சமூக வளங்களை அடையாளம் காணுதல். தனிநபர், குழு, குடும்பச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தல். பாதிக்கப்பட்டவர், அவரது குடும்ப உறுப்பினர் மற்றும் நலப்பராமரிப்பு உறுப்பினர்களிடையே தகவல் தொடர்பை மேம்படுத்துதல். பாதிக்கப்பட்டவர் மீண்டும் சமூகத்துடன் ஒருங்கிணைவதற்கான ஒரு திட்டத்தைத் தயாரித்தல். சுருக்கமாகச் சொன்னால், உளநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சுமுகமாகக் குடும்ப, சமூக வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு இவர்கள் முக்கியப்பங்காற்றுகிறார்கள்.

உடல்நலத்தை மட்டுமல்ல் மனநலத்தையும் காக்க வேண்டிய கட்டாயத்தில்தான் இன்றைய நவீன காலத்தில் இருக்கிறோம். மக்கள் மத்தியில் உளநலம் தொடர்பாக விழிப்புணர்வூட்டுதல், உளநோய்கள் தொடர்பாக வெளிப்படையான கருத்துப் பரிமாறல்களை மேற்கொள்ளுதல், உளநோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளித்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் . மக்களைப் பாதுகாத்து உளநோய்களிலிருந்து காத்திட உளநல முதலுதவி வழங்கும் பொருட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

மனித வளத்திற்கு ஏற்பட்ட உளநெருக்கீடுகளையும் உள நெருக்கீடுகளால் ஏற்பட்ட அகவடுக்களையும் அகவடுக்களால் ஏற்பட்ட உளத்தாக்கங்களையும் ஆற்றுப்படுத்தவேண்டும். பேறு மிகப்பெரிய பேறாகும். வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணப்படும் மக்களின் மனநிலை நெருக்கீடுகளுக்கு உள்ளான நிலையிலேயே உள்ளது. இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் முற்று முழுதாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்றே கூறவேண்டும்

மருந்துகளால் குணப்படுத்தக் கூடிய பாரிய உளநோய்களைத் தவிர ஏனைய உள நோய்களை உளவளத்துணை அல்லது உள ஆற்றுப்படுத்தல் சிகிச்சை முறையினால் குணப்படுத்த முடியும். பிரச்சினைகளுக்குத் தாங்களே அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களாகத் தம்மை மாற்றியமைக்க வேண்டும்.

வடக்குக் கிழக்கு யுத்த காலப்பகுதியில் ஏராளமான மக்கள் தமது உறவுகளை தொலைத்து உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வர  வேண்டும். வடக்குக் கிழக்குத் தெற்கு என்று வேறுபாடு இன்றி, எதிர்காலத்தில் முழு இலங்கையிலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டியதொரு துறையாக உளவளத்துணை ஆலோசனை உள்ளது. உளவளத்துணையானது பரிசோதனை, கற்றல், பயிற்றுவித்தல் போன்ற மூன்று திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு மக்கள் மத்தியில் காணப்படும.; சமூக சேவை நிறுவனங்களுடன் இணைந்து சமூகத்தில் வாழுகின்ற மக்களுக்கு சமூகம் சார்ந்த விழிப்புணர்வுச் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். உளவளத்துணை பற்றிய விழிப்புணர்வும் அது பற்றிய அறிவும் நமக்கு இன்றியமையாததாகும். எதிர்காலத்தில் பிரச்சினைகள் அற்ற அல்லது பிரச்சினைக்கான தீர்வினை தாமே ஆராய்ந்து தேர்ந்தெடுக்கக் கூடிய மக்கள் கூட்டத்தைக் கொண்டதொரு நாடாக இலங்கை மாறும் என்று நம்புகிறேன்.

-நிலவன்                                                                                                                                                                             உளவளத்துணையாளர்

மற்றும் உளசமூகப் பணியாளர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More