கொழும்புத் தலைமைகளால் வடக்கு கிழக்கு மக்கள் ஆளப்படுகின்ற ஒரு சூழ்நிலை காணப்படுகிறது. தென்னிலங்கையின் பிடியிலிருந்து கொழும்பின் பிடியிலிருந்து சிங்களத் தலைமைகளின் பிடியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என நினைக்கும் வடகிழக்கு ஈழத்தமிழ் மக்கள், கொழும்பு தமிழ் தலைமைகளால் ஆளப்படுகின்ற ஒரு சூழலுக்குள் செல்லுவது சரிதானா?
கொழும்புத் தமிழ் தலைமைகள் தமிழர்களுக்கு எவ்வாறான நன்மைகளைச் செய்து உள்ளார்கள்? அவர்களால் வரலாற்றில் எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை குறித்து ஆராய வேண்டிய ஒரு அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பை தனது சொந்த இடமாகக் கொண்டவர். இவரது தந்தை மற்றும் தாத்தா கொழும்பை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவரது தாத்தா ஜிஜி பொன்னம்பலம் அன்றைய காலத்தில் எடுத்த தீர்மானங்கள் அனைவரும் அறிந்ததே.
அதனால் ஈழத்தமிழ் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. டிஜி பொன்னம்பலம் தந்தை செல்வநாயகத்தை விட்டு பிரிந்து அரசாங்க அமைச்சராக பதவி ஏற்றமை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக கருதப்படுகிறது.
அதேபோன்று வடக்கில் முன்னாள் முதல்வர் திரு விக்கினேஸ்வரன் அவர்கள் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர். கொழும்பில் இருந்து வடக்கு முதலமைச்சராக இறக்குமதி செய்யப்பட்டவர். ஒப்பீட்டளவில் ஏனைய தமிழ் தலைவர்களை விட விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் இனஅழிப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகின்றார் என்றாலும் அவரும் கொழும்பின் அல்லது தென்னிலங்கையின் இறக்குமதி என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விடயம்.
கொழும்புத் தமிழ் தலைமைகளால் ஆளப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதன் உச்ச கொடுமையாக சுமந்திரனின் வருகையை குறிப்பிடலாம். சுமந்திரன் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவும் அதன் தலைமைக்கு எதிராகவும் தெரிவித்து வரும் கருத்துக்கள் தமிழ் மக்களை பெரும் சினம் கொள்ள வைத்துள்ளன.
தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டு தமிழ் மக்களின் இதயத்தில் இடம்பிடித்த தலைவரையும் தமிழ் மக்களுக்காக உன்னதமான போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொச்சைப்படுத்தும் சுமந்திரனை கொழும்பில் இருந்து நாம் ஏன் அழைத்து வரவேண்டும்?
அத்தகைய சுமந்திரன் தற்போது அம்பிகாவை பாராளுமன்ற உறுப்பினராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கொழும்பில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மற்றொரு புதிய நபராக அம்பிகா கருதப்படுகின்றார். இவரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒருவர்தான்.
இம்முறை தேர்தலில் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் தமிழ் மக்களின் தலைமை முழுமையாக கொழும்பின் கீழ் போகக்கூடிய அபாய நிலை காணப்படுகிறது. சுமந்திரனின் வெற்றியுடன் அம்பிகாவும் பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றால் அது தமிழ் மக்களுக்கு பல்வேறு பின்விளைவுகளை தருகின்ற ஒரு விடயமாகும்.
பல்வேறு தியாகங்களின் மத்தியில் மிகப் பெரும் தலைவர்களை உருவாக்கிய வடகிழக்கு மண்ணில் ஏன் சிறந்த அரசியல் வாதிகள் இல்லையா? ஏன் நாம் கொழும்பிடம் கையேந்த வேண்டும்? அல்லது கொழும்பில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்?
வடகிழக்கில் உள்ள தமிழ் பிரதிநிதிகள் சில விமர்சனங்களை கொண்டாலும் சிறந்த அறிவை கொண்டவர்களும் அணுகுமுறையை கொண்டவர்களும் உள்ளனர். அப்படி உள்ள நிலையில் நாம் ஏன் தென்னிலங்கையிலிருந்து கொழும்பிலிருந்து அரசியல்வாதிகள் இறக்குமதி செய்ய வேண்டும்?
பிரபாகரன் என்ற வரலாற்றில் அதி உன்னத தலைவன் உருவாகிய மண்ணிலிருந்து ஏன் எம்மால் சிறந்த அரசியல்வாதிகளை மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க முடியாது? அனைவரும் சிந்திப்போமாக…
வணக்கம் லண்டனுக்காக சுபாஷ் சந்திரபோஸ்