பின்னேரம் புகைக்கூட்டடியில ஆணியில தொங்கிக்கொண்டிருந்த சுளகை எடுத்து அதில ஒட்டியிருந்த காய்ஞ்சு போன பழைய மாவை தட்டி சுரண்டிப்போட்டு , சாடையா நுனி கருகின நீத்துப் பெட்டியை கழுவி அம்மம்மா எடுத்து வைக்கேக்க அண்டைக்கு புட்டுத்தான் எண்டு தெரியும் .
மூடி போட்ட பிளாஸ்டிக் பக்கட்டில இருந்து மூண்டு சுண்டு மா.
பிளாஸ்டிக்கிற்கு முன்னைய காலம் சருவச்சட்டிலையும் அதுக்கு முந்தி மண் பானையிலும் தான் அரிசி மாவை போட்டு வைக்கிறது .
ஒரு சுண்டு எண்டுறது பழைய ரின்பால் பேணி , சிலர் அளக்கிற பேணி எண்டும் சொல்லுறவை.
சோறு எண்டால் அப்ப ஒரு சுண்டு மூண்டு பேருக்கு தான் காணும், புட்டுக்கு எண்டா இரண்டு பேருக்கு தான் சரி. ஆனால் இப்ப dieting எண்டு வந்தா பிறகு doctors advise பண்ணினம் carbohydrates cut பண்ணட்டாம்.
ஆனால் என்னத்தை சாப்பிட்டாலும் யாழ்ப்பணத்தானுக்கு இரவு புட்டும் குளம்பும் சாப்பிட்டாத்தான் நித்திரை வரும்.
அதிலயையும் மொட்டைக்கறுப்பன் அரிசிமாப்புட்டு புட்டுக்கே தனிச்சிறப்பு தரும்.
தட்டார் சந்தீல இருக்கிற வைத்திலிங்கம் மரக்காலை தான் ஏரியா எல்லாருக்கும் விறகு , மரம், பலகை supply .
துலாபாரம் படத்தில வாற பெரிய தூக்குத்தராசு தான் விறகு நிறுக்கிறது .
தூக்கு கணக்கு தான் விறகுக்கு . 4 படி ஒரு பக்கம் வைப்பினம் ஒண்டு 54 றாத்தல் , 216 றாத்தல் ஒரு தூக்கு . விறகிலும் பாக்க பிறவெட்டு மலிவு ஆனால் வாங்கேக்க வெறும் பட்டை மட்டும் வாங்காமல் கொஞ்சம் விறகுத்துண்டும் இருந்தாத் தான் நல்லா எரியும். கொத்தின விறகில்லாமல் முழு விறகை வாங்கி வீட்டை கூலிக்கு கொத்திறது தான் லாபம், அதோட கொத்தேக்க வாற சிராகையையும் பாவிக்கலாம்.
சின்ன சிராகையை தணல் மூட்டி புகைச்சட்டிக்குள்ள வைச்சு வேப்பமிலையை வைச்சுத்தான் நுளம்பு விரட்டிறது .
குவிச்சு வைச்ச உமிக்குள்ள இரண்டு சிராகையை தணல் மூட்டி வைச்சிட்டா அடுத்த நாள் பல்லு மினுக்க கரி ready .
விறகு கொத்தேக்க ஏலாமல் விட்ட வைரமான விறகான மொக்கை ( மொக்கு விறகை – கொமர்ஸ்காரன்கள் எல்லாம் வரிஞ்சு கட்டப்போறாங்கள்) வைச்சு பிறவெட்டையும் அடுக்கி அடீல வைச்சு தென்னம் மட்டை , சிரட்டை , பொச்சு மட்டை எல்லாம் அடுக்கி பெரிய கிடாரம் முட்டத் தண்ணி விடவேணும் .
தண்ணி கொதிக்க முதல் பத்தாயத்தில இருக்கிற நெல்லை கடகத்தில கொண்டு வந்து கிடாரத்தின்டை கழுத்து வரைக்கும் நெல்லைக் கொட்டீட்டு கலக்க, பதர் மிதக்கும் அதை அள்ளி எறிஞ்சிட்டு விறகை உள்ள தள்ள அடுப்பு தகதகக்கும்.
நெல்லு புழுங்கலாக மாற நல்ல ஒரு மணம் வரும் , இரண்டு நெல்லை எடுத்து கையால நசிச்சா அவியாத சோறு மாதிரி நசிஞ்சால் பதம் சரி. கிடாரத்தின்டை வளையத்துக்கால உலக்கையை கொழுவி அடுப்பில இருந்து இறக்கி கொண்டு போய் பரவச்சரி. கொழும்பில intern செய்யேக்க Co House officer Jayamal க்கு you know அரிசி is புழுங்கிங் எண்டு அவனுக்கு புழுங்கல் அரிசி எண்டால் என்ன எண்டு நான் விளங்ஙகப்படுத்த அவனும் பாவம் “ஹரி ஹரி“ எண்டு ஏதோ விளங்கின மாதிரி தலையாட்டினது, நான் நொந்து போன தருணம் .
அவிச்ச புழுங்கலை மழை நனையாம காய விட்டு முள்ளு விறாண்டியால இழுத்து இழுத்து சீராப் பரவி பிறகு ,எடுத்து சாக்கில கட்டி வைச்சு குத்தி அரிசியாக்கிறது ஒரு பெரிய procedure .
என்ன தான் mill இல அரிசியை குத்தினாலும் மண்வாசனை படத்தில வாற மாதிரி உரல்ல குத்தி வாற கைக்குத்தரிசி taste mill அரிசில வராது .
வீட்டை இரண்டு கல் உரலும் ஒரு மர உரலும் இருந்தது . மர உரல் எங்கடை வீட்டை சீயாக்காய் அரப்பு இடிக்கவும் ,அக்கம் பக்கம் எல்லாம் செத்த வீட்டுக்கு சுண்ணம் இடிக்க போய் வாறது .
அகண்ட வாய் கல்லுரல் நெல்லுக்குத்தவும் மாவிடிக்கவும் பாவிக்கிறது, ஒடுங்கின வாய் அரிசியை பதத்திக்கு தீட்டவும் மாவிடிக்கேக்க அரிச்சு வாற கப்பியை மாவாக்கவும் பாவிக்கிறது.
இந்தக்கப்பியை கஞ்சியா காய்ச்சி உழுந்தோட தோசை மாவுக்கு சேத்தால் நல்ல soft ஆக தோசை வரும் .
செந்தாவும் நாங்கள் எள்ளுப்பாகு இடிக்கிறதும் ஒடுங்கின உரல் எண்டு சொல்லுறது கேக்குது. ( இப்படி உரலுக்க தான் புது மாப்பிளை தலையை விட்ட கதை நடந்தது எண்டு ஆச்சி சொல்லிறவ) .
புட்டு taste அதன் மாவிலும் குழைக்கிற பதத்திலும் தான் இருக்கு . நெல்லை குத்ததேக்க சரியா தீட்ட வேணும். Mill இல நெல்லை குத்தி அரிசியை தீட்டேக்க முதல்ல அரிசி வந்தாப்பிறகு அவங்கட்டை அண்ணை தவிடும் வேணும் எண்டு சொல்லேக்க ,வேண்டா வெறுப்பா ஒருக்கா பாத்திட்டு அந்த blade ஐ எடுக்க தவிடு ,அரிசி வந்த அதே ஓட்டையால வரும் . ஆனால் உமி எண்டால் பின்னால போய் பிறம்பா அள்ள வேணும் .
மனோகரா சந்தி செல்லையா mill ல நெல்லுக் குத்தி , அரிசியை தீட்டேக்க பார்த்து கொஞ்சமா தீட்ட சொல்லாட்டி வீட்ட வந்தா அம்மா புறுபுறுப்பா.
குத்தின அரிசி தனி உர பாக்கிலேம் , உமி தவிடு தனித்தனி பாக்கிலேம் கட்டி போட்டு , bag கொண்டு போகாட்டி ,அரிசிக்கு மேல harbajan Singh ன்டை கொண்டை மாதிரி தவிட்டை கட்டிக்கொண்டு வாறனாங்கள்.
கடைசீல அவங்கடை mill காசை கட்டப்போனா அவன் தானே பொக்கற்றுக்க கைய விடப் பாப்பான் காசுக்கு? . ஒரு மாரி அதிலையும் தப்பி , பின் கரியரில அரிசியும் முன்னால தவிட்டு பாக்கையும் உமி பாக்கையும் வைக்க ஆரையும் உதவிக்கு கேட்டு சைக்கிளை உழக்க தொடங்க கொஞ்சம் balance தடுமாறும் .
எல்லாத்தையும் சமாளிச்சுப் போய் கொண்டு இருக்கேக்க திடீரெண்டு பண்டிக்கோட்டு பிள்ளையார் கோவலடியால ஏதாவது வாகனம் வந்து ,cycle brake ஐ பிடிச்சா சரி, ஒண்டு முன் bag விழும் இல்லாட்டி பின்னான் சரியும்.
ரோட்டுக் கரையில் cycle நிப்பாட்டி திருப்பி weight balance எல்லாம் செஞ்சு வீட்டை வந்தா அம்மா உடன கணக்கு கேப்பா .
முதலே கள்ளக்கணக்கு சரியாப் பாத்து கவனமா களவா காசை எடுத்து வைச்சிட வேணும் , இல்லாட்டி எப்படி பிடிக்குமோ தெரியாது மனிசி, டக்கெண்டு கண்டு பிடிச்சிடும் . Shorts pocket எல்லாம் Indian army மாதிரி full checking நடக்கும் .எனக்கு அண்ணா தான் போட்டுக் குடுத்ததெண்டு இப்பவும் doubt .
கொண்டந்த உமி மரத்தூளோடு சேந்து தூள் அடுப்புக்க போகும் ( மரத்தூள் அடுப்பும் சிக்கனச் சமையலும் தனியா எழுத வேண்டிய subject ), தவிட்டை பால் கொண்டு வாற பாலன் கொண்டு போவான் . ( பனை மாதிரி நெல்லும் எல்லாப் பாகமும் மனிதனுக்கு பயன் தான் ) .
அரிசியை ஊறப்போட்டு வடிச்சு வீட்டை கல்லுரலில மா இடிக்கிறது Mill க்கு முற்பட்ட (IPKF க்கு உட்பட்ட) காலம்.
அரிசி மாவை வறுத்து பதம் சரியா கொஞ்சம் Reddish brown ஆக வரேக்க அடுப்பை நிப்பாட்ட வேணும் . ஆனா கோதம்ப மா வறுக்கேக்க மணம் நல்லா தூக்கும் . கைவிடாம வறுத்து ஒரு golden colour ம் மணமும் வரேக்க இறக்க சரியா்இருக்கும் அந்த மணம் அரிசி மாவில இல்லை.
அரிசி மாவை வறுத்து அரிச்சு பானைக்க போட்டு வைச்சா கொஞ்ச நாளைக்கு பாவிக்கலாம் , இது கோதம்ப மா மாரி வண்டு வராது. வறுத்த மாவை அரிக்கேக்க வாற அரிசி மா கட்டைக்கு தேங்காப்பூ சீனி போட்டு சாப்பிட்டால் சும்மா…..அப்பிடி இருக்கும்.
அரிசி மாப்புட்டுக்கு குழைக்க பதம் எடுக்கத் தெரியாத மனிசி மார்டை புதுப்புது கண்டு பிடிப்புகள் தான் அவிச்ச கோதம்ப மாவும் ஆட்டாமாவும் mix பண்ணிறது ( தனி அரிசி மா 24 கரட் தங்கம் அதில செப்பு பித்தளை எல்லாம் சேர்க்க கூடாது) .
Experience ஆக்கள் நேர சுளகிலயே புட்டைக் குழைப்பினம் இல்லாட்டை சட்டீல குழைச்சு பிறகு சுளகில போட்டு கொத்த வேணும் . மாவை போட்டு மேல சுடுதண்ணி விட்டு குழைச்சு, கட்டி உப்பு சிரட்டையில கரைச்சு வைச்சு தெளிச்சுத் தெளிச்சு புட்டுக் குழைக்கிறது ஒரு கலை .
ரின்பால் பேணியால இல்லாட்டி விளிம்பில்லாத பித்தளை தேத்தண்ணி பேணி யால கொத்தி கையால பினைஞ்சு சரியான பதத்தை எடுக்க வேணும். அப்பிடி மாவை கொத்திச் சுளகில கொழிச்சா வாற புட்டு அப்படியே ஓரே size ஆ இருக்கும். புட்டு கொஞ்சம் சின்ன size ஆ வர vertical movement ஐ நிப்பாட்டி மெல்லக் கொழிக்க segregation சரியா வரும் .
நுனியல இருக்கிற உதிர்நத மாவை திருப்பி அள்ளி அடியில இருக்கிற கட்டியோட சேத்து குழைக்க வேணும் . சிலர் கையாலயே சின்னன் சின்னனா உருட்டியும் புட்டு செய்வினம் . எப்படி தட்டில போட்டு கொத்திற taste சட்டீல வறுக்கிற கொத்து ரொட்டீல வராதோ அதே போல் சுளகில கொத்திற புட்டு taste எதிலேம் வராது .
சுளகின்டை நடுவில இருக்கிற பதமான size புட்டை நீத்துப் பெட்டீலயோ புட்டுக் குழலிலயோ கையால மெல்லமா ,love பண்ணிற காலத்தில முதல் முதலா மனிசியை தொடுறமாதிரி பட்டும் படாமலும் அள்ளிப்போட்டு , அதோட புட்டுக்கு தேங்காய் பூவை
Mix பண்ணுறதும் ஒரு கலை தான் .
சுளகிலேயே தேங்காய் பூவை mix பண்ணலாம் , இல்லாட்டி நீத்துப்பெட்டீக்க போடேக்க கலந்து போடலாம் , இல்லாட்டி தனிய புட்டை அவிச்சிட்டு பிறகும் தேங்காய் பூவை கலக்கலாம் . ஒவ்வொண்டிலேம் ஒவ்வொரு taste வரும் .
தேங்காய் கொஞ்சம் முட்டுக் காய் எண்டா முதலிலேயே கலக்கிறது தான் நல்லம் . என்னதான் Machine scrapers வந்தாலும் . நல்ல பாரமான செத்தல் தேங்காயை ( அடப்பாமான ) உடைச்சு திருவலையில ஆழமாத் திருவினா ஒவொரு பூவும் இரண்டு inch நீளத்திற்கு வரும் . இது தான் கறுத்த புட்டு மாப்பிளைக்கு ஏத்த வெள்ளை பொம்பிள்ள . இரண்டையும் கலந்தால் வாறதும் ஒரு கலவி இன்பம் தான் .
எனக்கெண்டால் ஆய கலகளில் சிறந்த கலை புட்டவிக்கிற கலை எண்டும் அடுத்தது அதை சாப்பிடுற கலை எண்டும் தான் சொல்லுவன் அவிச்ச் புட்டை எப்படி சாப்பிடுறது எண்டு தனிய எழுதோணும்….
Dr. T. கோபிசங்கர்
யாழ்ப்பாணம்