கோவையில் கடந்த 23ம் தேதி அதிகாலையில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கார் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து விட்ட நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக தேசிய பாதுகாப்பு முகமை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இந்தசூழலில் இரு மதத்தினரிடையே சகோதரத்துவத்தை பாராட்டும் வகையிலும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலும் கோவையில் நடந்த நிகழ்வு நெகிழ்ச்சியைத் தருவதாக அமைந்தது.
அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்தனர். அவர்களை கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் கைகூப்பி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர்.
கோவில் பிரகாரத்தில் உள்ள அறையில் அமர்ந்த அவர்கள் அதே பகுதியில் பல தலைமுறைகளாக வசித்து வரும் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின்பு கோவில் அர்ச்சகர்கள் ஜமாஅத் நிர்வாகிகளுக்கு பட்டுத் துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நின்று தோள் மேல் கை போட்டு சகோதரத்துவம் பாராட்டிக் கொண்டனர்.
இந்த நிகழ்வு இந்து & இஸ்லாமியர் இடையே இருந்து வரும் மத நல்லிணக்கத்திற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
அதன் பின் ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அனைத்து ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் இனாயத்துல்லா கூறுகையில், கார் வெடிப்பு சம்பவத்தை எங்கள் அமைப்புகள் கண்டிக்கிறது. சிறுபான்மை மக்களோடு பெரும்பான்மை மக்கள் சமூக நல்லிணக்கத்தோடு வாழ்வதையே விரும்புகிறோம்.
உங்களோடு நாங்கள் எங்களோடு நீங்கள் என்ற நோக்கத்தில் அனைத்து நல்ல விஷயங்களை முன்னெடுக்க உள்ளோம். எவ்வித பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். இந்து -முஸ்லிம் ஒற்றுமையை யாரும் சீர்குலைக்க முடியாது என்றார்.
ஜமாத் நிர்வாகிகள் இந்து கோவிலுக்கு வந்து மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியது, கோவை மாநகர மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் திகட்டாத இனிப்பாக…பெரு மகிழ்வைத் தந்து இருக்கிறது.
மத நல்லிணக்கத்தைத் தொடர்ந்து வளர்த்தெடுக்க இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து… அடிக்கடி நடத்தப்பட வேண்டும். ஏன், அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்யலாம். அதில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உரையாட வேண்டும்.
ஆண்டாண்டு காலமாக வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாகத்தானே இந்தியா சாதித்து வருகிறது. அதற்கு ஊறு விளைவிக்க எந்தவிதத்திலும் அனுமதிக்கக் கூடாது.
எல்லோரும் விரும்பும் மாநகராக
கோவை எப்போதும் திகழ வேண்டும்!
செய்தி பதிவர் Oxford Suresh