பண்டைய சங்கத் தமிழ் இலக்கியத்தில் உயிர்த் தியாகமும் – வீரவழிபாடும்!
—————————————————
ஆக்கியோன் – ஐங்கரன் விக்கினேஸ்வரா
ஈழப் போரில் உயிரிழந்த வீர மைந்தர்களின் வீரத்தியாகத்தினை வெளிப்படுத்தும் நடுகல் மாவீரர் துயிலும் இல்லங்களில் நிறுவப்பட்டுருந்தன. இன்று அவை சிதைக்கப்பட்டாலும் நடுகல் வரலாறு தமிழர்களின் வாழ்வோடு ஒட்டிப் பிணைந்ததாகும்.
உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிகழ்ந்திராத அற்புதமான தியாகங்கள் ஈழ மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை ஈழ போராட்ட வரலாறு தொட்டு நிற்கிறது. இந்த மகோன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் மாவீரர்கள். அவர்கள் கண்ட கனவுகளுடன் மீளாத் துயில் கொள்ளும் கல்லறை மேல் பேரொளியாக அவர்களை அடையாளப் படுத்துவதே இந்த நடுகற்கள் ஆகும்.
தமிழில் நடுகற்கள் 2 ஆயிரத்து 500 ஆண்டுகால வரலாற்றினை உடையவை. தமிழர் வீரத்தை பறைசாற்றும் நடுகற்கள் இறந்தவர்களின் நினைவாக எடுக்கப்படும் நினைவுக்கல் ஆகும்.
போரில் தன் உயிர் துறந்து தாய் மண்ணுக்காக செய்யும் உயிர் தியாகத்திற்கான அடையாளச் சின்னங்களாக விளங்குகின்ற நடுகற்கள் அல்லது இவற்றை “வீரக் கற்கள்” என்றும் கூறுவர்.
பழந்தமிழ்ப் பண்பாட்டில் நடுகல்:
உலகின் பல பகுதிகளிலும் பெருங்கற்காலம் முதலே இவ்வழக்கம் இருந்து வந்துள்ளது. நினைவுக் கற்கள் எடுக்கும் வழக்கம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கோ, ஒரு பிரதேசத்துக்கோ அல்லது தனிப்பட்ட பண்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கோ உரிய வழக்கம் அல்ல.
போரில் பங்கு பெற்று உயிர்த்துறந்த வீரனுக்கு நடுகல் எடுத்து அவன் வீரத்தினை போற்றி அவனை இறை நிலைக்கு உயர்த்துவது பழந்தமிழரின் உயர்ந்த வீரப்பண்பாடு. நடுகற்களில் பொறிக்கப்படும் செய்திகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. வீரம் பொறிக்கப்பட்ட நடுகற்களும், உயர்ந்த தமிழ் பண்பை உலகிற்கு எடுத்துக்காட்டுகின்றன.
தமிழ் மக்களின் அறிவு, ஆற்றல், பண்பு, கொடை, வீரசுவர்க்கம் என பல பண்பாட்டுக் கூறுகள் நடுகற்களின் வழி பழந்தமிழ்ப் பண்பாட்டை எடுத்துக் கூறுகின்றன. நடுகற்கள் பிற்காலங்களில் கோவில்களாகவும், தூண்களாகவும், வழிபாட்டுச் சின்னங்களாகவும், சுமைதாங்கி கற்களாகவும் உருமாற்றம் பெறுகின்றன. நடுகற்கள் வீரன் குலதெய்வமாக மாற்றப்பட்டு நாட்டார் தெய்வநிலைக்கு உயர்கின்றன.
போரில் மடிந்த வீரர்களுக்காக எடுக்கப்படும் நினைவுக் கற்களை மக்கள் வணங்கி வந்தமை பற்றியும் பண்டைக்கால இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளன.
பண்டைய இலக்கியத்தில் நடுகல்:
தமிழ் இலக்கியங்கள் சொல்லும் பல உயிர்த்தியாகங்கள் நடுகற்களாக நமக்கு காணக்கிடைக்கின்றன. திருக்குறளில், குறள் எண் 400-ல் மாடு என்ற சொல் செல்வம் என்று சுட்டப்படுகிறது. பசு, எருமை, ஆடு ஆகிய மூன்று விலங்குகளைக் குறிக்க தொறு என்ற சொல்லை நம் முன்னோர் கையாண்டுள்ளனர். போரில் உயிரிழந்த வீரர்களுக்கு மட்டும் நடுகல் எழுப்பப்படுவதில்லை.
போரில் இறந்தால் அவ்வீரர்களுக்கு நடுகல் நட்டு வணங்கி வழிபட்டனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள நடுகல் பற்றிய செய்திகள் அனைத்தும் போரில் வீரமரணம் அடைந்த ஆடவர்களின் நினைவைப் போற்றி வணங்குவதற்காக நடப்பட்ட கற்களைப் பற்றியதாகவே உள்ளன
நடுகற்களில் பழங்கால சமூகநிலை, பண்பாடு, மொழி, நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், உயிர்த்தியாகம், வழிபாடு போன்ற உட்கூறுகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவில்தான் நடுகற்கள் பெருமளவில் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் நடுகற்கள் வரலாற்றுப் பெருமையும் தொன்மையும் உடையன.
உயிர்த் தியாகமும் வீரவழிபாடும்:
குறிப்பாக போர்கள் நிகழ்ந்தபோது ஏற்படும் உயிரிழப்புகளே நடுகற்கள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.
ஊரினை அழிக்க வந்தவர்களிடமிருந்து ஊரைக் காப்பாற்றியவர்களுக்கும், பெண்கள் மானம் காத்தவர்களுக்கும், கொடிய விலங்குகளுடன் போரிட்டு உயிர் துறந்தவர்களுக்கும் நடுகற்கள் எழுப்பப்படுகின்றன.
தமிழ் நாட்டில் நடுகல் எடுக்கும் வழக்கம் மிகப் பழங்காலம் முதலே இருந்துள்ளமை, தொல்லியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும் நடுகற்கள் மக்களால் வணங்கப்பட்டு இறை நிலைக்கு உயர்ந்து ஊர்த் தெய்வங்களாக உருமாறுகின்றன எனவும் அறியப்பட்டுள்ளது.
தமிழ் நாட்டில் நடுகற்கள்:
தமிழ் நாட்டில் சேரன் , சோழன், பாண்டியன் காலத்திலும் நடுகற்கள் எடுக்கப்பட்டுள்ளன. முகத்திலும் மார்பிலும் விழுப்புண்களைப் பெற்று, வீரத்தோடு முன்னின்று,பொருதுபட்ட வீரர்க்கு, அவர் தம் பீடும் பெயரும் எழுதிய நடுகற்களை நிறுவி, பூவும் புகையும் காட்டி, சிறப்பு செய்தல் வழக்கம்.இது நடுகல் வணக்கம் எனப்பட்டது.
அக்காலத்து நிறுவப் பெற்று மண்ணில் புதையுண்ட வீர நடுகற்கள் இக்காலத்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களால் வெளிக்கொணரப்பட்டு வருகின்றன.
சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு நடுகல் நட்டுக்கோயில் அமைத்து வழிபாடு நிகழ்த்த ஏற்பாடு செய்ததனைச் சிலப்பதிகாரம் கூறுகிறது. பெண்களுக்கு நடுகல் நடப்பட்ட செய்தி சங்க இலக்கியங்களில் காணப்படவிலலை. நடுகல் தெய்வமாக வணங்கப்பட்டதனை பண்டைய இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
சங்ககாலத்தில்வீரநடுகல்
சங்கப் பாடல்களிலும், பின்னர் எழுதப்பட்ட நூல்களிலும் நடுகற்கள் பற்றிய தகவல்கள் உள்ளன. தமிழ் நாட்டின் செங்கம், தருமபுரி, தேன்கனிக்கோட்டை ஆகியவற்றை அண்டிய பகுதிகளிலேயே பெருமளவில் நடுகற்கள் காணப்படுகின்றன. இப் பகுதிகளில் ஆட்சி செய்த அதியமான் போன்ற அரசர்கள் காலத்தில் நடுகற்கள் எழுப்பப்பட்டு உள்ளது தெரிகின்றது.
தமிழ் மரபில் கிராமப்புறத்தை ஒட்டிய பழந்தெய்வங்கள் நடுகல் ஒட்டியே தோன்றியவை. அத்துடன் பயிர்த் தொழிலுக்கு அடிப்படையாக விளங்குவது நீர். அந்நீரை தேக்கி வைக்க உதவும் ஏரி உடைந்தபோது அதனை பாதுகாப்பதற்காக உயிரை நீத்து சமுதாயக் கடமையாற்றியவருக்கும் நடுகற்கள் உண்டு.
தமிழரின் வீரப்பண்பாடான ஜல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதலின் போது உயிர்நீத்த வீரனுக்கும் நடுகற்கள் எழுப்பப்பட்டுள்ளது. இன்றும் ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீர மைந்தர்களுக்கும் தமிழரின் வீரத்தியாகத்தினை வெளிப்படுத்தும் நடுகல் அமைக்கப்பட்டு வருகின்றன.
நடுகல் வழிபடும் முறை:
நடுகற்களுக்கு நாள்தோறும் தீபதூபம் காட்டிப் பூசைசெய்யும் வழக்கமும் இருந்தது. இதனை புறநானூறு, சிலப்பதிகாரம், மலைபடுகடாம் முதலிய நூல்கள் குறிப்பிடுகின்றன. நடுகல்லைச் சுற்றிலும் கல் அடுக்கி அதனைப் பதுக்கை ஆக்குவர். இந்த நடுகற்களுக்கு ‘வல்லாண் பதுக்கைக் கடவுள்’ என்றும் பெயர் உள்ளது.
நடுகல்லோடு சேர்த்து மயில் தோகைகளை கட்டுவர். உடுக்கு அடிப்பர். தோப்பி என்னும் கள் வைத்துப் படைப்பர். உயிரினங்களைப் பலியிடுவர். இந்தப் பதுக்கைக் கோயில்கள் வழிப்பாதைகள் கூடுமிடத்தில் அமைக்கப்பட்டிருக்கும்.
அத்தோடு நடுகல்லுக்கு விடியற்காலையில் நன்னீராட்டி நெய்விளக்கேற்றிப் படையலைப் படைத்தும் வந்தனர்.
நடுகல் குறித்த நம்பிக்கைகள்:
நடுகல்லை நாள் தோறும் வணங்கினால் விருந்தினர் எதிர்ப்படுவர் என்றும் போரில் கணவனுக்கும் அரசனுக்கும் வெற்றி கிட்டும் என்றும் பெண்களிடையே நம்பிக்கையும் இருந்தது.
நடுகற்களைத் தவறாது வணங்கினால் மழை மிகுதியாகப் பெய்யும். மழை பெய்தலால் கொடுங்கானம் வறட்சி நீங்கிக் குளிரும்; மரம் செடிகள் தளிர்த்துப் பூக்கும்; அதனால் வறட்சிமிக்க இக்கொடிய வழியில் வண்டுகள் மிகுதியும் மொய்க்கும்; வளம் பெருகும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே இருந்தது. இதனை புறநானூற்றுப் பாடலடிகள் தெளிவுற உணர்த்துகின்றன.
மாவீரர்களின் வேட்கையும், வீரமும், விவேகமும் தான் விடுதலைப்போரின் உயிர்மூச்சு. இவர்களது வெற்றிகளின் பின்னால் வேதனைகள், எத்தனையோ வீரமரணங்கள். தமிழ் மண்ணில் கலந்த குருதியின் தியாகமே நாளைய அரசாக உருமாறும். இவர்கள் களம் கண்ட கதையை தலைமுறைகளிற்கூடாக காலம் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும். மாவீரர்களின் வீரத்தை பறைசாற்றும் நடுகற்களை வணங்கி வாழ்வோமாக.