கேள்வி எழுப்பும் அவதானிப்பு மையம் சிறீலங்கா சனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டு வைப்பதற்கும், துரோக அரசியலுக்கு துணைபோவதற்கும் எத்தனை கோடி வாங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அனைத்துலக தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் 2015, 2019 ஆம் ஆண்டு வரை முன்னெடுத்த துரோகத்தை மீண்டும் உறங்கு நிலையை விலக்கி வெளிப்படையாகத் தொடர்கிறது கூட்டமைப்பு என்றும் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அவதானிப்பு மையம் மேலும் கூறியுள்ளதாவது:
கேள்வி எழுப்பும் அவதானிப்பு மையம்
ரணில் – கூட்டமைப்பு சந்திப்பு
“சிறீலங்கா சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியா மாவட்ட செயலகத்தில் நடாத்திய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டமை உள்முகமாக தொடர்ந்த துரோகத்தினதும், துணைபோதலினதும் வெளிப்படாகும். தமிழ் மக்களுக்கு நீர்ப்பாசனப் பிரச்சினையும், சுகாதாரப் பிரச்சினையும் மாத்திரம் உள்ளதைப் போன்ற தோற்றத்தில் ரணில் விக்கிரமசிங்க இக் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டு ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய கூட்டமைப்பு, தற்போது ரணில் சனாதிபதியாகிய பின்னர் அவருக்கு எதிர்ப்பு என போலி வேடம் காட்டிய நிலையில் உறங்கு நிலையை விலக்கி துணைபோதலை வெளிப்படையாக்கியுள்ளது.
ஏன் வந்தார் ரணில்?
2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் பிரதமராகச் செயற்பட்ட காலத்தில் தமிழர் தாயகத்திற்கு எந்தவொரு நன்மையும் செய்யாத நிலையில், சனாதிபதியாக ரணில் பதவி ஏற்று பல மாதங்கள் ஆகிய நிலையில் வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் வாய் திறக்காத நிலையில் தற்போது மாத்திரம் தமிழர் தாயகத்தை ரணில் விக்கிரமசிங்க இலக்கு வைத்துள்ளார் என்பதைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.
சிறீலங்கா அரசு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது. சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் நிதி உதவிகளை வழங்குவதற்கு சில நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், தமிழர்களின் பிரச்சினையைத் தீர்க்க முயல்வது போன்ற தோற்றத்தையும், தமிழர் தரப்பின் ஆதரவு தனக்கு உள்ளது போன்ற தோற்றத்தையும் காண்பித்து பொருளாதார வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்ளவே தமிழர் தாயகத்தை நோக்கி ரணில் வருகை தந்துள்ளார்.
நரியின் தந்திரம்
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களால் நரி என்று அழைக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தனது நரித்தனமான மூளையைப் பயன்படுத்தி தமிழர் தாயகத்திற்கு எதிரான அரசியலையும், சிறீலங்கா சிங்கள பௌத்த பேரினவாததத்தையும் பாதுகாக்கும் முயற்சிகளை சம நேரத்தில் முன்னெடுக்கும் வகையிலேயே தமிழர் தேசத்திற்கு வருகை தந்துள்ளமை எமக்கு ஏற்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும்.
நரி எனப்படும் ரணில் விக்கிரமசிங்க தமிழர் தாயகத்திற்கு வரும் போதும், ஆட்சியில் இருக்கும் போதும், தமிழர்களின் அரசியலையும், போராட்டத்தையும் பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டமை கடந்த கால வரலாறு ஆகும். தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய இராணுவ பல நிலையில் இருந்த போது வழங்கிய சமாதான வாய்ப்பைப் பயன்படுத்தி நரித்தனமாக பாரிய இனவழிப்புக்கான ஏற்பாட்டை இவர் மேற்கொண்டமையை வரலாற்றின் பெரு அனுபவமாக கண்டுள்ளோம்.
கடந்த காலத் துரோகம்
2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் ரணில் விக்கிரமசிங்க மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து ஆட்சி நடாத்திய போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் ஆதரவை வழங்கியது. சர்வதேச மட்டத்தில் இனப்படுகொலையாளிகளை பாதுகாக்கும் சர்வதேச பிணையெடுப்பை ரணில் மேற்கொள்ள கூட்டமைப்பு காலாகவும், தூணாகவும் ஆதரவு வழங்கியமையை கடந்த காலத்தில் கண்கூடாக கண்டோம்.
அத்துடன் கம்பரலிய சிங்கள ஆக்கிரமிப்புத் திட்டம், ஆயிரம் விகாரைகளை அமைக்கும் திட்டம், சிறீலங்கா அரசுக்கு ருரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையைப் பெறுதல் போன்ற பல நடவடிக்கைகளைளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கியதுடன், அதற்கு பிரதியுபகாரமாக கூட்டமைப்புக்கு பணமூட்டைகளும், பதவிகளும் வழங்கப்பட்டிருந்தன. ரணில் மாத்திரமின்றி சுமந்திரனும் மற்றொரு நரியாக வடக்கென தமிழர் தாயகத்தை சுருக்கியுள்ளார். வடக்கு பிரச்சினையை தீர்க்க 2015இலும் ரணிலும் செயற்பட்டார் என்பதன் மூலம் ரணிலின் தந்திரத்தை கூட்டமைப்பு நிறைவேற்ற எத்தனை கோடி வாங்கியது. டக்ளசும் திலீபனும் சுமந்திரன்களும் ஒரே மேடையில் ரணிலுடன் இருக்கவும் மகிழ்ச்சி கொள்ளவும் முடிகின்ற வேளையில் ஏன் தேர்தல் காலத்தில் மாத்திரம் பிரிந்து நின்று நாடகம் ஆடுகிறீர்கள். துரோகத்தில் டக்ளஸையே சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பு விஞ்சிவிட்டது என்பதே இதுவே தக்க சான்று.
ஒரு கல்லில் இரு மாங்காய்
தற்போது ரணில் விக்கிரமசிங்கவுடன் தமது துரோகத் துணைபோதலை கூட்டமைப்பு வெளிப்படையாக தொடர்கின்ற நிலையில், ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை ரணில் எனும் நரி இலக்கு வைத்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது போலவும், தமிழர்கள் மீது அக்கறை உள்ளவர் போலவும், கூட்டமைப்பின் துணையுடன், போலியாக காண்பித்து பின்வரும் இரு துரோகங்கள் அரங்கேற்ற முயற்சிக்கப்படுகிறது.
சிறீலங்கா அரசின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்தல் மற்றும் சர்வதேச மட்டத்தில் இனப்படுகொலை குறித்து ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து தப்பிக் கொள்ளுதல் என்ற இரண்டு விடயங்களை நிறைவேற்றி சிங்கள பௌத்த பேரினவாதத்தையும், இனப்படுகொலையாளிகளையும் காப்பாற்றும் முயற்சியில் ரணில் மீண்டும் தீவிரமாக களம் இறங்கியமையின் வெளிப்பாடே இச்சந்திப்பும் கூட்டமைப்பின் கூட்டுமாகும்.
தமிழர் தேசத்துடன் பேசு
கிழக்கைப் பிரித்து, தமிழர்களின் தாயகத்தை வடக்குடன் சுருக்க முயல்கின்ற ரணிலின் தந்திரத்தின் வெளிப்பாடகாவே வவுனியாவில் நடந்த கூட்டம் அமைந்துள்ளது. அத்துடன் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் கட்சிகள் பாராளுமன்றத்தில் உள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாத்திரம் ரணில் அழைத்தமை மற்றும் பேசியமை தமிழ்த் தேசிய அரசியல் நீக்கத்தை நோக்கமாகக் கொண்டதுடன் தமிழர் தேசத்திற்கு எதிரான ரணிலின் தந்திரமான நூதனமான செயற்பாடாகும்.
தமிழ் மக்களின் நலன்களை மேம்படுத்தவும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலும், இனப்படுகொலைக்கு நீதியை வழங்கும் வகையிலும், பேச வேண்டியதாக அல்லது சந்திக்க வேண்டியதாக இருப்பின் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் அனைவருடன் பேசுவதே தமிழர் தேசத்துடன் பேசுவதாக அமையும். அத்தகைய பேச்சின்றி கூட்டமைப்புடன் நடப்பது துரோகத்தின் துணைபோதலே.
எனவே தமிழ் தேசியப் பற்றுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அனைவரும் இந்த விடையத்தில் உரத்துக் குரல் கொடுப்பதுடன் சிறீலங்கா அரசினதும், சனாதிபதி ரணிலினதும் நரித் தந்திரத்தை உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்…” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.