செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை “தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” – தொடர் -7 | வதிலைபிரபா

“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” – தொடர் -7 | வதிலைபிரபா

3 minutes read

கட்டுரையாளர் – வதிலைபிரபா
சிற்றிதழ் மோசடிகள் இரண்டாம் பாகத்தை மௌனதீபன் ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்திலேயே தொடங்கியிருந்தார்.

  1. சுய அரிப்பை தன் குழுவினருடைய கை தட்டல்களால் சொறிந்துகொள்ள வரும் இதழ்கள்
  2. தான் சார்ந்துள்ள சித்தாந்தங்கள்மீது எவ்வித சுயகேள்விகளோ, மறுபரிசீலனைகளோ எதுவுமில்லாமல் கட்சியின் பிரச்சாரங்களை மட்டும் தாங்கி வெறும் உடல்களாயிருப்பதன் மூலம் விசுவாசத்தையும், பக்தியையும் காட்டவரும் இதழ்கள் (இதற்கு த.மு.எ.ச. கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘ஜால்ரா’ இதழ்களைச் சுட்டலாம்.)
  3. பல்சுவை சமூக இதழெனும் பெயரில் வக்கிரங்களை ‘முற்போக்கு’ வேஷம் போட்டு வாசகரை ஏமாற்ற வரும் இதழ்கள்’. (தமிழில் பெரும்பாலும் சிற்றிதழ்களாக வருகிறவை இந்த வகைதான்)
  4. ஆழமானதும் மிக நுட்பமானதும், விரிவுகளைத் தொடக் கூடியதுமான பல்வேறு கேள்விகளையும், விவாதங்களால் தன்னை மறுபரிசீலனை செய்கிற பலவகை மாதிரிகளைக் கொண்டுவரும் இதழ்கள். (தமிழ்ச் சூழலின் உயிர்த் துடிப்பிற்கு உண்மையான காரணங்களான இவற்றையே சிற்றிதழ்களெனச் சொல்லலாம். இவற்றின் எண்ணிக்கை மிகச் சொற்பம். பொருளாதாரச் சூழலால் தொடர்ச்சியாக வெளி வராமையே இதன் பலவீனம்.)

இப்படி நான்கு வகைகளாகப் பிரித்து எது சிற்றிதழ் எனும் கேள்விக்கு விடையையும் தந்திருந்தார். இந்தக் கட்டுரையின் இறுதி வரியை “தமுஎச, கலை இலக்கியப் பெருமன்றத்தின் ‘ஜால்றா’ இதழ்களோடு ‘மகாகவி’யையும் சேர்க்கலாமா?” என்று முடித்திருந்தார்.

துட்டிலக்கியம் பற்றிய இந்தத் தொடர் சரியாகத் தொடங்கி திசை மாறி கடைசியில் மகாகவியில் முடிந்தது.

“பட்டங்களே தமிழ்ச் சூழலில் முக்கியமாகி விட்டது. அதற்காக, சில ஆயிரக்கணக்கில் கரண்சிகளை ‘நன்கொடை’யாகத் தந்து ‘இலக்கியச் சிற்பி’, ‘இலக்கியத் தேனீ, ‘இலக்கியக் கனல்’, ‘கலைச் சிற்பி’, ‘கலையருவி’ எனும் ஆபாசங்களைக் கரகோஷங்களோடு வாங்கி, இதழின் முன் அட்டையில் ‘தடித்த’ எழுத்துக்களில் வெட்கமில்லாமல் பொறித்துக் கொண்டவர்கள். இவர்களைப் பட்டங்கள் விற்கும் ‘கம்பெனிகள்’ குஷிப்படுத்த உண்டு. ஏதேனும் இதழாசிரியரே இதன் பல முதலாளியாயிருப்பார். இவர்களின் சபலங்களைத் தெரிந்த வாசகனும் மேற்சொன்ன பட்டங்களோடு ‘கண்டபடி’ புகழ்வான். அந்த வாசகனும் ஏதேனும் இதழை நடத்தக்கூடியவனாய் இருப்பான். புகழ்ச்சிகளால் மாறி மாறி தங்களுக்குள் சொரிந்துகொள்ள வேண்டுமென அந்தரங்கமான ஒப்பந்தம் செய்திருப்பார்கள் போலும்.”

என்று அன்றைய நிலைபற்றி பொதுவான கருத்தொன்றைப் பதிவு செய்தபடி ‘மகாகவி’ இதழ் பற்றியும் வலிந்து எழுதினர். மகாகவியின் பிரசுரிப்பீர்களா என்று ஏற்கெனவே உறுதி செய்துவிட்டபடியால் இதை எழுத என்ன தயக்கம் அவருக்கு வந்துவிடப் போகிறது. பரபரப்புக்காகப் படபடப்புடன் எழுதுகிறவர்கள் அள்ளித்தெளித்த நெருப்புத்துண்டுகள் எங்கே விழுகின்றன என்பது பற்றிய கவலை இல்லாதவர்கள். மகாகவி மட்டுமென்ன விதிவிலக்கு..? இத்தனை எழுதக் காரணம் மகாகவி எழுப்பிய “துட்டிலக்கியம்” எனும் கேள்விதானே என்பதை எழுதும் அவசரத்தில் மறந்து விட்டார்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

இப்படி மகாகவி பாரதியின் வரிகள் பெரும் சேதியொன்றைச் சொல்லிச் சென்றதை நாங்கள் அறியாமல் இல்லை. இப்பாடல் புரையோடின சமூகத்திற்கானதா? அடிமைச் சங்கிலி பிணைந்து கிடந்த இந்த தேசத்திற்கானதா? என்பதைப் பகுத்துப் பார்ப்பவர் புரிந்து கொள்வர்.

முண்டாசுக் கவிஞன் எறிந்த அந்தச் சின்ன பொறிதான் எங்களையும் பற்ற வைத்தது. எரிய எரியப் புடம் போடும் தங்கமென உறுதி செய்தது காலம். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பாரதி எறிந்த பொறி அடங்காது எரியும்தான். இதோ! மகாகவி இதழ் இன்னமும் பீடுநடை போடத் தொடங்கியது..

இதற்கான எதிர்வினைகளும் அதனை நிரூபித்தன! மிக அருகிலே அதற்கான அங்கீகாரமும் இருந்தது..!

வதிலைப் பிரபா, எழுத்தாளர் மற்றும் சிற்றிதழ் ஆசிரியர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More