—————————————————
கட்டுரையாளர் – ஐங்கரன்விக்கினேஸ்வரா
(ஏழுஸ்வரங்களுக்குள் எத்தனையோ பாடல்களை பாடிய இசைவாணியின் இதயககுரல் இயற்கையோடு இணைந்து ஓய்ந்துள்ளது. தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்த பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வதுவயதில் காலமானார். அவர் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகிறது)
தமிழில் மல்லிகையாய் மணம்வீசி
எழு சுவரங்களுக்குள் எத்தனையோ பல பாடல்களை பாடிய பாடகி வாணி ஜெயராம் அவர்கள், பல ஈழ விடுதலைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியவில்லை.
காலம் கடந்தும் வாழ்வார்!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பாடல்கள் பாடிய மூத்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வது வயதில் காலமானார். பத்தாயிரம் பாடல்களை பலமொழிகளில் பாடியிருக்கும் அந்தக் குரலிசைக் கலைஞர் காலமானாலும் காலம் கடந்தும் வாழ்வார்.
பாடும் பறவைகள் வாருங்கள்…புலி வீரத்திலீபனை பாடுங்கள்….என்று தியாக தீபத்தின் தியாகத்தை உணர்வோடு பாடியஇசைக்குயில் வாணி ஜெயராம்..உயிர் பிரிந்ததாலும் ஓயாத அந்த இசைக் குயில் எப்போதும் மீண்டும் மீண்டுமாய் எங்கோ ஒரு மூலையில் இசைத்துக் கொண்டே இருக்கும்.
” வீசும் காற்றே தூது செல்லு தமிழ்.
நாட்டில் எழுந்தொரு செய்தி சொல்லு…” மேகங்களே இங்கு வாருங்கள்…எனப்பல எழுச்சி பாடல்களை பாடிய தென்னிந்திய பிரபல மூத்த பாடகி வாணி ஜெயராம், இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு காலப் பகுதியில் இருந்து, எமது தாயக விடுதலைப் பாடல்கள் பலவற்றை உணர்வுபூர்வமாக பாடி, விடுதலைக்கு உணர்வூட்டிய குரல் ஓய்ந்து போனது ஈழ மக்களின் மனதை நெருடிக் கொண்டுள்ளது.
வீசும்காற்றே தூது செல்லு..
“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி…காணும் மனிதருக்குள் எத்தனை சலனம்…வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்…என கணீரென ஒலித்த இவரின் குரலிசைஅமைதியின்றி தவிக்கும் அகங்களுக்கு என்றென்றும்.
அருமருந்தாகியதே என்று கூறலாம்.
‘நல்லூர் வீதியில் நடந்தது யாகம்..
நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம்..
தியாகத்தின் எல்லையை மீறிய பிள்ளை
திலீபனை பாடிட வார்த்தைகள் இல்லை’ என வரலாற்றில் தன் பாடல்கள் மூலம் பங்களிப்பு செய்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறுவர்.
தாயக விடுதலைக்கு தோள் கொடுத்தவர்:
தமிழகத்தில் பலரும் பாடத் தயங்கிய சூழலில் துணிச்சலாகக் ‘களத்தில் கேட்கும் கானங்கள்’ இறுவட்டிற்காக ‘வீசும் காற்றே தூது செல்லு..தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு..ஈழத்தில் நாம் படும் வேதனைகள் – அதை
எங்களின் சோதரர் காதில் சொல்லு..
கத்திடக் கேட்டிடும் தூரமல்லோ..கடல்
கை வந்து தாங்கிடும் நீளமல்லோ.,
எத்தனை எத்தனை இங்கு நடந்திட
எங்களின் சோதரர் தூக்கமல்லோ..
இங்கு குயிலினம் பாட மறந்தது..
எங்கள் வயல் வெளி ஆடை இழந்தது..
இங்குள்ள பேய்களும் செய்ய மறந்ததை.. உங்களின் ராணுவம் செய்து முடிக்குது…எனும் உணர்ச்சிமிக்க பாடலைப் பாடி தாயக விடுதலைக்கு தோள் கொடுத்த வாணி ஜெயராம் அம்மையாரை ஈழ மண் ஒருபோதும் மறவாது.
ஈழப் போரின் உச்சக் கட்ட காரங்களான 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய “சென்பகமே சென்பகமே ..சிறகை விரித்து வா.. என்ற பாடலை வாணி ஜெயராம் அவர்கள் அவருடைய இனிமையான குரலில் மிக அற்புதமாக பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் தேவேந்திரன்தான் இசையமைத்த “ஈட்டி முனைகள்” என்ற இசைத் தொகுப்பில் இப்பாடல்கள் வெளியிடப்பட்டன.
1974இல் ‘தீர்க்க சுமங்கலி’
1974-ம் வருடம் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான ‘தீர்க்க சுமங்கலி’ படத்தின் சுவரொட்டியில், படம் வெளிவரும் முன்பே பிரபலமாகியிருந்த ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’ என்ற பாடலின் முதல் வரியைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். அப்படி விளம்பரம் செய்யத் தூண்டிய குரல், அன்று துளிர்விட்டிருந்த புதிய பாடகியான வாணி ஜெயராமினுடையது. இந்தப் படத்துக்கு முன்பே 1973-ம் வருடம் வெளிவந்த ‘வீட்டுக்கு வந்த மருமகள்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ ஆகிய இரு படங்களில் வாணி ஜெயராம் பாடி இருந்தாலும் அவரது குரலை இல்லம் தோறும் கொண்டு சேர்த்த பெருமை ‘தீர்க்க சுமங்கலி’க்குக் கிடைத்தது.
கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். “எல்லா மொழிகளிலும் அவற்றினுடைய இலக்கணம் தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே” – என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்.
இசை மருந்து விருந்து:
பேசும்போதும் மிக மென்மையாக பேசக்கூடிய அவர் தமிழ் திரைப்படங்களில் அவர் பாடிய பலப் பாடல்கள் பலருக்கும் மிகவும் பிடித்தமானவை. இசை என்பது ஒரு வித மருந்து. அதை தம் குரல்களால் விருந்தாக படைக்கும் இசை வைத்தியர்கள் வரிசையில் பாடகி
வாணி ஜெயராம் முன்னிலையில் என்றும் நிற்கிறார் என்பதே உண்மை.
பிரபல தென்னிந்திய திரையிசைப் பாடகி, வாணி ஜெயராம் தனது 78வது வயதில் காலமாகியது பலரையும் கண்ணீரில் மூழ்க வைத்துள்ளது.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த “பாடும் பறவைகள் வாருங்கள் என்ற பாடலுடன், களத்தில் கேட்கும் கானங்கள் ஒலி நாடாவில் வீசும் காற்றே தூது செல்லு, தென்னங் கீற்றில் தென்றல் வந்து மோதும், என்னும் பாடல்கள், பாசறைப் பாடல்கள் ஒலி நாடாவில் பரணி பாடுவோம் புதியதானதோர் பரணி பாடுவோம், மேகங்கள் இங்கு வாருங்கள், வீரன் மண்ணில் புதையும் போது, போன்ற விடுதலைப் பாடல்களுடன், தலை வாரி பூச் சூடினேன், செந்தமிழ் வீரனடா சீறிடும் வேங்கையடா எங்கள் … போன்ற இன்னும் பல எழுச்சிப் பாடல்களைப் பாடி தாயக விடுதலைக்கு உயிர்க்குரல் கொடுத்தவர் வாணி ஜெயராம்
அவர்களை ஈழத்துக் கலைஞர்கள் கண்ணீர் வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதுடன் ஒருபோதும் மறவர்.
இசை வாணியின் இதயக்குரலால் எத்தனையோ மொழிகள், எத்தனையோ ஆயிரம் பாடல்கள் பிரசித்தி பெற்றன.
இசை வாணியின் மாயக் குரலில் மயங்கிக் கிடந்த காலங்கள் பல. வானலைகளில் தேனென ஒலித்த அந்த குரல் ஓய்ந்து போனாலும், ஈழத்து தெருக்கள் எங்கும் இசை வாணியின் இதயக் குரல் என்றும் ஒலித்த வண்ணமே உள்ளது.