செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை வங்க தேசத்தின் மொழிப் போரும் ஈழத்தில் தனிச்சிங்கள சட்டமும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

வங்க தேசத்தின் மொழிப் போரும் ஈழத்தில் தனிச்சிங்கள சட்டமும் | ஐங்கரன் விக்கினேஸ்வரா

8 minutes read

உலக தாய்மொழி தினம்- பெப்ரவரி 21:

——————————————————

    – ஐங்கரன் விக்கினேஸ்வரா

தாய் மொழிக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறி, உலகில் அனைத்து மக்களின் தாய் மொழி உரிமையைப் பாதுகாக்கும் வகையில், பெப்ரவரி 21ம் தேதியை சர்வதேச தாய்மொழி தினமாக ( International Mother Language )ஐ,நாவின் யுனெஸ்கோ 1999ம் ஆண்டு பிரகடனப் படுத்தியது. இதையடுத்து 2000ம் ஆண்டிலிருந்து, பெப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும் வண்ணம் வங்க தேசத்தின் மொழிப் போர் அமைகிறது. இதற்கான மூல காரணம் சரியாக எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் இன்றைய வங்கதேசத்தில் எழுந்த மொழிப் போரே இன்றைய சுதந்திர பங்களாதேஷின் விடுதலையின் அடிப்படைக் காரணமாகிறது.

1956 தனிச் சிங்களம் சட்டம்:

ஈழத்திலும் நீண்ட காலமாக நடக்கும் இனப் போராட்டத்தின் மூல காரணியும் மொழியே ஆகும். தனிச் சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala Only Act) அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டில் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு யூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழியாக (Official Language Act) அறிவிப்பின் பின்னரே தமிழ் மக்கள் கொடுமையாக அரசால் ஓடுக்கப்பட்டனர்.

தனிச் சிங்கள சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி மட்டுமே ஆட்சி மொழியாக்கப்பட்டது. நீண்ட காலமாக

பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. அரசுப் பதவிகளுக்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது.

ஆயினும் 1936 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற இடதுசாரிகளான என். எம். பெரேரா, பிலிப் குணவர்தனா போன்றவர்கள் ஆங்கிலத்திற்குப் பதிலாக சிங்களம், மற்றும் தமிழ் ஆகியவற்றை ஆட்சிமொழிகளாக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். நவம்பர் 1936 இல், ‘இலங்கைத் தீவு முழுவதும் உள்ளாட்சிகள் மற்றும் காவல்துறை நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளிலேயே வழக்குகள் நடத்தப்பட வேண்டும்’ மற்றும் ‘காவல் நிலையங்களில் சாட்சிகளின் மொழிகளிலேயே வழக்குகள் பதியப்பட வேண்டும்’ போன்ற சட்டமூலங்கள் அரசாங்க சபையில் கொண்டுவரப்பட்டு சட்டச் செயலாளருக்கு மேலதிக ஆணைக்காக அனுப்பப்பட்டடன.

1944 இல்ஜேரின் இனவாதம்:

ஆனால் 1944 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்தனா ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களத்தை மட்டுமே அதிகாரபூர்வமொழியாக்க வேண்டும் என அரசாங்க சபையில் கோரினார். இதனூடகவே இனவாதம் இலங்கையில் வேரூன்றியது. ஆனாலும் ஆங்கிலம் தொடர்ந்து 1956 வரை ஆட்சி மொழியாக இருந்து வந்தது.

1956இல் சிங்கள மொழி அரச கரும மொழியானது மட்டுமன்றி இந்த சட்ட மூலமே தீவெங்கினும் வாழ்ந்து வந்த சிங்கள –தமிழ் இனங்களிடையே முரண்பாடுகளை உருவாக்கக் காரணமாயிற்று. இதன் பின்

தமிழர்கள் செறிந்து வாழ்ந்து வரும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் அங்குள்ள அரச நிறுவனங்களில் பணிகள் முடக்கப்பட்டன.

தந்தை செல்வா தலைமையில் போராட்டங்கள்:

தனிச் சிங்கள சட்டமூலத்தின் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.

இச்சட்டத்தினை தமிழ், மற்றும் சிங்கள இடதுசாரி உறுப்பினர்கள் எதிர்த்தனர்.

ஆயினும் தமிழர் தரப்பில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பல போராட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற தமிழர் பகுதிகளில் அரசின் செயற்பாடுகள் இயங்க விடாது செய்யப்பட்டன.

இந்தப் போராட்டங்களையடுத்தே பண்டாரநாயக்கா 1958 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க திருத்தச் சட்டமொன்றை கொண்டு வந்ததுடன் தமிழ் மொழிக்கு சில விட்டுக்கொடுப்புகளை வேண்டா வெறுப்பாக ஏற்படுத்தினார். ஆயினும் இத்திருத்தங்கள் வெறும் கண்துடைப்பாகவே இருந்தன.

அன்று தொடங்கிய ஈழத் தமிழரின் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. எத்தனையோ இனப்படுகொலைகள் தமிழர் தாயகம் மீது நிகழ்த்தப்பட்டும், சர்வதேசம் இன்னமும் கண்ணை மூடிக் கொண்டே உள்ளது.

அங்கீகரிக்கப்படாத தமிழர் இறையாண்மை:

உலக தாய்மொழி தின பிரகடனத்தின் மூல காரணியே வங்க தேசத்தின் மொழிப் போர் ஆகும். மொழிப்போரால் வெற்றி அடைந்த வங்க தேசத்தின் வரலாற்றை உலகம் அறிந்தாலும், ஈழத்தில் தனிச்சிங்கள சட்டம் மூலம் அழிந்த தமிழரின் இறையாண்மையை சர்வதேசம் அங்கீகரிக்காமல் இருப்பது கவலைக்குரியதே. ஆயினும் காலங் கடந்தாவது தமிழ் தேச இறையாண்மையை உலகம் ஏற்குமென நம்புவோம்.

மொழிப் போரில் வென்ற இன்றைய பங்களாதேஷில், (அன்றைய கிழக்குப் பாகிஸ்தான்) “எங்களுக்கு வங்க மொழியே ஆட்சி மொழி; பாகிஸ்தான் திணிக்கும் உருது மொழியை ஆட்சி மொழியாக ஏற்க முடியாது” என்று அறிவித்து, 1952-ஆம் ஆண்டில் வங்காளிகள் நடத்திய உருதுமொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நான்கு மாணவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்கள் கொல்லப்பட்ட நாளான பெப்ரவரி 21-ஆம் நாள் உலகத் தாய்மொழி நாளாக அறிவிக்கப்பட்டது.

அன்றைய கிழக்கு பாகிஸ்தானில், உருது மட்டுமே தேசிய மொழியாக இருந்தது. ஒரே மதத்தினராக இருந்தாலும், மேற்கு பாகிஸ்தானில் அதிகம் பேசப்படும் உருது மொழியானது, கிழக்கு பாகிஸ்தானில் திணிக்கப்படுவதை, வங்காள மக்கள் ஏற்கவில்லை.

வங்கமொழி இயக்கம்:

இதையடுத்து கிழக்கு பாகிஸ்தானில் தேசிய மொழியாக வங்க மொழியே வேண்டும் என்று 1952-ம் ஆண்டு பெப்ரவரி 21ம் தேதி ‘வங்க மொழி இயக்கம்’ உருவானது. இதையடுத்து வங்க மொழி இயக்கத்தைச் சார்ந்த மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசாரின் நடவடிக்கையால், மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். போராட்டம் தீவிரமாக பரவியது. அதன்பின் 1956ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் மொழியாக வங்க மொழி அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தலைநகர் டாக்காவில் நடைபெற்ற போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும், பெப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழிகள் தினமாகக் கடைபிடிக்க வேண்டும் என்கிற தீர்மானத்தை வங்கதேச அறிஞர் ரபீக்குல் இஸ்லாம் 1998ம் ஆண்டு யுனெஸ்கோவில் முன்மொழிந்தார். 2000ம் ஆண்டிலிருந்து, பெப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

வங்கம் பிறந்த வரலாறு:

இந்தியா-பாகிஸ்தான் என இரு நாடுகளாக 1947 ஆகஸ்ட் மாதத்தில்

பிரிந்தபோது, பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 6.9 கோடி. இதில் 4.4 கோடிப் பேர் கிழக்குப் பாகிஸ்தானில் வசித்தனர். அவர்களின் தாய்மொழி வங்காளியாக இருந்த அதேநேரத்தில், மேற்கு பாகிஸ்தானில் இருந்த மக்கள் உருது, பஞ்சாபி, பஷ்தூ, சிந்தி ஆகிய மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தனர்.

கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் ஆட்சி என காலனிய ஆட்சியின் தலைமைப் பீடமாக வங்காளம் நீண்ட காலம் இருந்துவந்த நிலையில், இயற்கையாகவே கிழக்குப் பாகிஸ்தான் பகுதி பொருளாதார உற்பத்தி மட்டுமின்றி, கல்வி உட்படப் பல்வேறு சமூகத் தளங்களிலும் மேற்கு பாகிஸ்தானை விட வெகுவாக முன்னேறிய நிலையில் இருந்தது.

மொழிப்போர் தியாகிகள் தினம்:

இந்தப் பின்னணியில் 1948 பெப்ரவரி 23 அன்று கூடிய பாகிஸ்தான் அரசியல் நிர்ணய சபை, தனது உறுப்பினர்கள் உருது அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசலாம் என முடிவெடுத்தது. இதை எதிர்த்த கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த உறுப்பினர் திரேந்திரநாத் தத்தா ‘வங்க மொழியையும் அதில் சேர்க்க வேண்டும்’ என்று முன்மொழிந்தார். எனினும், அன்றைய பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கான், கிழக்குப் பாகிஸ்தான் முதல்வர் க்வாஜா நசிமுதீன் உள்ளிட்ட பலரின் உதவியுடன் வங்க மொழிக்கு ஆதரவான தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. இதற்கு எதிராக கிழக்கு பாகிஸ்தான் போர்க்கோலம் பூண்டது.

1948 மார்ச் 11-ல் பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. மார்ச் 19-ல் பாகிஸ்தான் அதிபர் முகமது அலி ஜின்னா அரசுமுறைப் பயணமாக டாக்கா வந்து கலந்துகொண்ட இரண்டு நிகழ்ச்சிகளிலுமே, மக்களின் கடுமையான எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே, ‘பாகிஸ்தானின் அரசு மொழியாக உருது மட்டுமே இருக்கும்’ எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அரசியல் மட்டத்தில் தொடங்கிய எதிர்ப்பு மாணவர்கள், இளைஞர்கள், அறிவுஜீவிகள் மத்தியிலும் வேகமாகப் பரவியது. இவ்வாறு தாய்மொழியான வங்க மொழிக்கு ஆதரவாக 1948-ல் தொடங்கிய இந்த இயக்கம் தொடர்ந்து வலுப்பெற்று 1952-ல் உச்சம் எய்தியது.

டாக்கா மாணவர்களின் கிளர்ச்சி:

அந்த ஆண்டு பெப்ரவரி 21 அன்று டாக்கா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கிளர்ச்சியை ஒடுக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ரஃபீக் உதீன் அகமது, அப்துல் ஜப்பார், அப்துல் பரக்கத், அப்துல் சலாம் ஆகிய மருத்துவக் கல்லூரி மாணவர்களோடு, ஒன்பது வயதேயான ரஹியுல்லா என்ற சிறுவன் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றனர்.

இவர்கள் உயிர்நீத்த அதே இடத்தில் பெப்ரவரி 23 அன்று தியாகிகள் நினைவுச் சின்னம் தற்காலிகமாக உருவானது. அன்றிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் அரசின் கடுமையான ஒடுக்குமுறைக்கு இடையே பெப்ரவரி 21ஐ மொழிப் போர் தியாகிகளின் தினமாக கிழக்கு பாகிஸ்தான் மக்கள் கடைப்பிடித்து வந்தனர்.

மக்களின் கடுமையான எதிர்ப்பினை அடுத்து 1956 பெப்ரவரி 16 அன்று பாகிஸ்தானின் அரசு மொழிகளில் ஒன்றாக வங்க மொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும், மேற்கு பாகிஸ்தானின் ஆதிக்க உணர்வு மங்கிவிடவில்லை. பொருளாதாரரீதியாகவும், சமூகரீதியாகவும் கிழக்கு பாகிஸ்தான் மக்களை ஒடுக்கவும், மதரீதியாக அவர்களைப் பிளவுபடுத்தவுமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.

கிழக்கு பாகிஸ்தான் மீதான, தொடர்ச்சியான புறக்கணிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்துவந்த அவாமி லீக் தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான், அகர்தலா சதிவழக்கில் கைது செய்யப்பட்டு மேற்கு பாகிஸ்தானில் சிறை வைக்கப்பட்டார்.

1970 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் கிழக்கு பாகிஸ்தான் பகுதியின் மொத்தமுள்ள 169 இடங்களில் 167 இடங்களை அவாமி லீக் கட்சி கைப்பற்றி, ஆட்சியைப் பிடிக்கத் தகுதிபெற்றிருந்த நிலையில், ‘‘நாங்கள் ஆட்சியமைக்க வழிவிட வேண்டும்; புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும்” என்ற முஜிபுர் ரஹ்மானின் கோரிக்கையை பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமை பூட்டோ அரசு கடுமையாக எதிர்த்தது.

மொழிப் போரால் பிறந்தநாடு:

இவ்வாறு தாய்மொழிக்காகத் தொடங்கிய போராட்டம் படிப்படியாக அரசியல்ரீதியாக வலுப்பெற்று, விடுதலைப் போராக உருமாறியது. இப்போரின்போது கிழக்கு பாகிஸ்தான் மக்களை அடக்கி ஒடுக்க பாகிஸ்தான் ராணுவப் படைகள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை வெறியாட்டத்தில் முப்பது லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்; மூன்று லட்சம் பெண்கள் மிகக் கொடூரமான வகையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாயினர். கிழக்கு பாகிஸ்தானில் காலம்காலமாக இருந்து வந்த கட்டமைப்பு வசதிகள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டன.

ஒருவகையில், இதை இன ஒழிப்பு நடவடிக்கை என்றே கூறிவிடலாம். வங்கதேசம் உருவாகி 50 ஆண்டுகள் ஆனபிறகும் கூட இந்த இன ஒழிப்பு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் இன்றுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதோடு, இனப் படுகொலை குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட 195 போர்க் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இறுதியில், உலகிலேயே முதன்முறையாக ஒரு மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனியொரு நாடு உருவாக வழிவகுத்தது. இந்தப் பின்னணியில்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேசக் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, வங்கதேசத்தின் மொழிப் போர் தொடங்கிய பெப்ரவரி 21-ஐ உலகத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என 1999 நவம்பர் 17-ல் தீர்மானம் நிறைவேற்றியது. பின்பு, ஐக்கிய நாடுகள் சபையும் தனது உறுப்புநாடுகள் இதைக் கொண்டாட வேண்டுமென பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றியது.

ஒவ்வொரு தாய்மொழி நாளும் பெப்ரவரி 21 அன்று கொண்டாடப்படும் வேளையில், உலகத்துக்குச் சொல்லும் பாடம் ஒன்று தான். தேசிய இனங்களுக்கான உரிமைகளை, அவர்களது மொழி, பண்பாடு ஆகியவற்றை, ஒற்றை ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரத் துடிக்கும் எந்தவொரு அரசும் இறுதியில் சிதறுண்டு போனதையே உலக வரலாறு நிரூபித்துள்ளது.

    – ஐங்கரன் விக்கினேஸ்வரா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More