டெல்லியில் விவசாயிகள் முற்றுகை !
——————————————————
( இந்திய சுதந்திர போராட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கமான ’டெல்லி சலோ’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு பல விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன)
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும் சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மீண்டுமொரு தொடர் போராட்டத்தை டெல்லியில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தெருக்களில் இறங்கியுள்ளனர்.
’டெல்லி சலோ’ போராட்டம்:
இத்திய சுதந்திர போராட்டத்தின் போது சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கமான “டெல்லி சலோ” (டெல்லி நோக்கிச் செல்லுங்கள்) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தப் போராட்டதிற்காக ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.
மத்திய பாஜக அரசு கடந்த 2020ஆம் ஆண்டில் வேளாண் சட்டங்களை கொண்டு வந்த வேளை, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் பாரிய போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் சுமார் ஓராண்டு வரை நீண்டது. அதன் பின்னரே வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இப்போது தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.
ஹரியானா பஞ்சாப் மாநில விவசாயிகள்:
முக்கியமாக ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கிப் பேரணியை ஆரம்பித்துள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் இதில் கலந்து கொண்டு டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர்.
முன்னதாக இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கும் முன்பு விவசாய சங்கத்தினர் கேரளா, உத்தரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குச் சென்று அந்தந்த மாநில விவசாயிகளிடம் நேரடியாக ஆதரவு கோரியது குறிப்பிடத்தக்கது.
இப்போது விவசாயிகள் டெல்லியில் மீண்டும் போராட்டத்தை அறிவித்து குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு உளவு துறை சமர்பித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியை விவசாயிகள் முற்றுகையிட முயன்றுள்ள நிலையில், அனைத்து நுழைவாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
முக்கிய நுழைவாயில்களை தவிர்த்துவிட்டு தொலைவில் மற்றும் சாலை வசதிகள் முறையாக இல்லாத நுழைவாயில்களை பயன்படுத்தி டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆதரவு:
காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு மத்திய அரசு அநீதி இழைப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதங்களை மோடி அரசு நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெருஞ் சாலைகளில் ஆணித் தடுப்புகள் பற்றிய வீடியோக்கள் வைரலான நிலையில் அதைப் பகிர்ந்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி, விவசாயிகளின் பாதையில் ஆணி அடிப்பவர்கள் நம்பிக்கைக்கு தகுதியற்றவர்கள், அவர்களை டெல்லியில் இருந்து பிடுங்கி எறிந்துவிடுங்கள்.
விவசாயிகளுக்கு நீதியையும் லாபத்தையும் காங்கிரஸ் வழங்கும் எனப் பதிவிட்டிருந்ததுடன், பிரதமர் மோடி, கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகளை ஏமாற்றியுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.
மீண்டுமொரு தொடர் போராட்டம்:
இந்தப் போராட்டம் தொடர்பாக உளவு துறை கொடுத்த முக்கிய தகவல்களின் பட, விவசாயிகள் போராட்டத்திற்காக பஞ்சாபிலிருந்து மட்டும் 1,500 டிராக்டர்கள் மற்றும் 500 வாகனங்கள் வந்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக அடுத்த ஆறு மாதத்திற்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட பொருட்கள் உடன் தான் அவர்கள் இந்த பேரணியை ஆரம்பித்தை உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த டிராக்டர்களை விவசாயிகள் தங்குமிடங்கள் போல மாற்றி உள்ளதாகவும் உளவு துறை கூறியுள்ளது. மேலும், விவசாயிகள் சிறு குழுக்களாக டெல்லிக்குள் வந்து நகரில் இருக்கும் குருத்வாராக்கள், தர்மசாலாக்கள், ஆசிரமங்கள், விருந்தினர் மாளிகைகளில் தங்கவும் பிறகு திடீர் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக உளவு துறை தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் இல்லம், உள்துறை அமைச்சர் அலுவலகம் போன்ற இடங்களில் போராட்டம் நடக்கலாம் என்பதால் அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் 2020 போராட்டம்:
டெல்லியின் எல்லைகளில் 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தனர். இதேபோன்று மீண்டுமொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தற்போது கையில் எடுத்துள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜஸ்தான், உ.பி., பிஹார், கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஜ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
2024 மத்திய தேர்தல் நேரத்தில் மத்திய அரசிற்கு தலை வலியாக உருவெடுக்கும் இப்போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய உணவு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் ஆகியோர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சண்டிகரில் கடந்த 8-ம் தேதி முதல் கட்டமாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை துவங்கினர். அதன்பிறகு பிப்.10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் செய்திருந்தார்.
இந்த பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கடந்த விவசாயிகள் போராட்டத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகள் வாபஸ்பெறவும், போலி விதை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.
ஆயினும் தற்போது டெல்லி காவல் துறையினர் இப்போராட்டத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக,டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில எல்லைகளில் கூட்டங்கள் கூடுவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் தீவிரமாக கையில் எடுத்துள்ள கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டத்தை தொடர அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா