கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சமுர்த்தி வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் பல இலட்சம் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் கணக்காய்விற்காக 4 விசேட குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கண்டாவளை சமுர்த்தி வங்கிக் கிளையில் கடந்த வெள்ளிக்கிழமை எழுமாறான முறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போதே குறித்த வங்கி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் பல இலட்சம் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த சமுர்த்திக் கிளையின் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டு பிரதேச செயலாளரினால் வங்கிக் கிளை பொறுப்பெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக கிளிநொச்சி மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு பிரிவு, சமுர்த்தி திணைக்களத்தின் மாவட்ட கணக்காய்வுப் பிரிவு, கண்டாவளை பிரதேச செயலக உள்ளக கணக்காய்வுப் பிரிவு, மாவட்டச் செயலக புலனாய்வு உத்தியோகத்தர்கள் என நான்கு குழுக்கள் நேற்றைய தினம் கணக்காய்வினை ஆரம்பித்துள்ளதாக பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வங்கிக் கிளையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டதைத்தொடர்ந்து மேலும் ஆராய்ந்த பொழுது இன்னும்; பல முறைகேடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிருந்தா கரன் தெரிவித்துள்ளார்.
கணக்காய்வு தொடர்பான விசாரணைகள் முடிவதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வங்கிக் கிளை உத்தியோகத்தர்கள் சிலரும், 3 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் முறைகேட்டுடன் தொடர்புபட்டவர்களாக அடையாளம் காணப்பட்டதாகவும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயனாளிகளின் கையொப்பமின்றி வங்கி கணக்கிலிருந்து பணம் மீளப்பெற்றுக்கொண்டமை, கையொப்பங்கள், கைநாட்டுக்களை முறைகேடாக பயன்படுத்தி நிதி மோசடி செய்தமை, பயனாளிகளின் அனுமதி மற்றும் சம்மதமின்றி வங்கிக் கடன்களை பெற்றுள்ளமை உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளும் மோசடிகளும் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதுவரை அடையாளம் காணப்பட்ட விடயங்களின் அடிப்படையில் சுமார் 2 மில்லியன்களுக்கு மேல் முறைகேடு இடம்பெற்றுள்ளமையை உறுதி செய்யக்கூடியதாக உள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் யாரைக் குற்றம் சொல்வது? தாராளமாக கையாடும் வரை விட்டு இறுதியாக குழு அமைத்து விசாரணைகளில் ஈடுபடும் உயர் அதிகாரிகளையா? இல்லை என்னதான் செய்தாலும் மாட்ட மாட்டோம் என்கிற துணிவுடன் குறித்த காரியங்களை செய்த உத்தியோகத்தர்களையா?
இலங்கையில் தற்போதுள்ள சமூகப் பாதுகாப்பு முறைமையானது நாட்டின் 50% க்கும் அதிகமான வறியவர்களை உள்ளடக்காமல் ஒதுக்கியுள்ளதுடன், வறியோர் அல்லாதவர்களுக்கு நன்மைகளை வழங்குகிறது. அத்தகைய ஒதுக்கல் மற்றும் உள்ளீர்ப்பு பிழைகளுக்கு ஒரு முக்கிய காரணம் தகுதியை நிர்ணயிப்பதில் அரசியல் செல்வாக்கு பயன்படுத்தப்படுவதாகும்.
இங்கு சமுர்த்தி பயனாளிகளை தீர்மானிப்பது அவர்களது வறுமைக்கோடு மற்றும் அடிப்படை வசதிகளற்ற தன்மையும் அல்ல அரசியல் நோக்கோடு ஊருக்குள் ஒருவர் தலைமை தாங்கி அதன் மூலம் ஒரு குழுவை உருவாக்கி கிட்டத்தட்ட அங்கு அவர்கள் வைத்தது தான் சட்டம் என்று சொல்லும் அளவுக்கு இயங்கி அவர்களுக்கு ஆதரவாக செயற்படும் அனைவரையும் இவ்வாறான பொதுத் திட்டங்களுக்குள் உள்வாங்கி உண்மையில் கஷ்டப்படும் பாமர குடிமகன் கடைசி வரை தான் உழைத்து தான் உண்ண வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே உள்ளான். மற்றையவன் அனைத்து அரச இலவச மானியங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ்கிறான்.
உண்மையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களா சமுர்த்தி திட்டத்தில் பயனாளிகளாக உள்ளார்கள் என்பதை ஒரு தகுதியான குழு ஆராய்ந்து பார்த்தால் மீளாய்வு செய்தால் தெரியும்.
திருடிய பின் திருடிய தொகையைச் சொல்லி போன வழியை ஆராய குழு நியமிப்பது அல்ல நிர்வாகம் “அவர்களின்” நிர்வாகத்தின் கட்டமைப்பை அங்கு இருந்தவர்களிடம் கேட்டு அறிந்தாவது கொஞ்சம் முன்னேற முயற்சி செய்யுங்கள் அப்போது எம் வன்னிப் பெரு நிலப்பரப்பில் தான் எத்தனை வளங்கள் எதையாவது ஒன்றை யாராலும் கையாட முடிந்ததா? ஒரு மரத்தை வெட்டுவதற்கு அனுமதி வழங்க முன் பத்து மரங்களாவது நட்டு பின் வெட்டுவதற்கு அனுமதித்த முற்போக்கு சிந்தனை அதிகம் கொண்ட நிர்வாகம் “அவர்களது” இன்றும் நாம் அவற்றின் நிழலில் கடந்து போகும் போதெல்லாம் எப்படியான ஒரு கட்டமைப்பில் வாழ்ந்தோம் என்பது நினைவுக்கு வரத்தான் செய்கிறது. உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டை
உங்களுக்கு என்ன? “ராஜா வீட்டு கன்று குட்டிகள்” உங்களை இஷ்டம் போல சூறையாடுங்கள்.
எழுத்துரு
M.கோகுலன்