ஈஸ்டர் தாக்குதல்தல்களை நடத்திய சஹ்ரான் தரப்பினரோடு தொடர்புள்ளவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு கிழக்கு மாகாணத்தின் ஆளுநராகச்செயற்பட்ட ஹிஸ்புல்லா, அமைச்சர்கள் றிஸாட் பதியுதீன், ஆஸாத் சாலி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று சிங்களத்தரப்பினால் கோரிக்கை விடப்பட்டது. (கவனிக்கவும், தமிழ், முஸ்லிம் தரப்பிலிருந்த இந்த வற்றுறுத்தல் எழவில்லை என்பதை).
இது உண்டாக்கிய நெருக்கடியினால் அரசாங்கத்தில் அங்கம் வகித்த அத்தனை முஸ்லிம் அமைச்சர்களும் ஆளுநர்களும் கூட்டாகத் தமது பதவிகளைத் துறந்தனர். அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளதைப்போல தமிழ் பேசும் தரப்பிலிருந்து இப்பொழுது இரண்டு அமைச்சர்கள் மட்டுமே அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கின்றனர். முஸ்லிம் சமூகத்திலிருந்து ஒருவர் கூட இல்லை. ராஜாங்க அமைச்சர்களாக இரண்டு தமிழர்கள் இருக்கிறார்கள். ஒருவர் திருமதி விஜயகலா மகேஸ்வரன். மற்றவர் தமிழ் முற்போக்கு முன்னணியைச் சேர்ந்த இராதாகிருஸ்ணன். மற்றும்படி அநேகமாகச் சிங்களத்தரப்பினால் நிரப்பப்பட்ட அமைச்சரவையாகவே இன்றைய ஆட்சி உள்ளது.
ஆக இந்த அரசாங்கம் சிறுபான்மைத் தேசிய இனங்களிடமிருந்து நடைமுறையில் தொலைவிலேயே உள்ளது என்பது நிரூபணமாகியிருக்கிறது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நெருக்கமாக நின்று ஆதரவைக் கொடுத்தாலும் வெளிப்படையாக அது அரசாங்கத்தை ஆதரிக்க முடியாத நிலையிலேயே உள்ளது. இதுவும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையீனத்தையே வெளிப்படுத்துகிறது.
இவ்வளவுக்கும் இந்த ஆட்சியும் அரசாங்கமும் சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஆதரவின் மூலமே உருவாக்கப்பட்டது. தொடரும் ஆபத்துகளின் மத்தியில் இதைப்பாதுகாத்துக் கொண்டிருப்பதும் சிறுபான்மைத் தேசிய இனங்களாகிய தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளே. எளிய உதாரணம், கடந்த ஒக்ரோபரில் அரசாங்கத்துக்கு வந்த நெருக்கடிளுக்குத் துணிந்து முகம் கொடுத்தது தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளே.
இதனால் இவற்றுக்கு வந்த நெருக்கடிகளும் சோதனைகளும் சாதாரணமானவையல்ல. அப்படியிருந்தும் அதையெல்லாம் கடந்து இந்த அரசாங்கத்தை இவை காப்பாற்றியிருக்கின்றன. இன்னும் காப்பாற்றிக் கொண்டுமிருக்கின்றன. இதைப் பச்சையாகச் சொல்வதென்றால், இவற்றின் தயவில்தான் இந்த அரசாங்கம் உயிர்வாழ்கிறது எனலாம். மறுபக்கத்தில் ஆபத்தில் காப்போரையும் அத்திவாரத்துக்கு உழைத்தோரையும் கைவிட்டிருக்கிறது அரசாங்கம்.
யதார்த்த நிலை இதுவே.
ஆகவே நல்லாட்சி என்ற அடையாளமும் அதற்கான பொருளும் இன்று இல்லாற் போய் விட்டன.
நல்லாட்சி என்பதன் சரியான பொருள் கூட்டாட்சி என்பதேயாகும். ஆரம்பத்தில் அப்படித்தான் ஒரு தோற்றம் காண்பிக்கப்பட்டது. இதன்படி ஐ.தே.க – சு.க கூட்டு உருவாக்கப்பட்டது. இவற்றின் விளைவாக ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டார். எல்லோரும் அவருக்கு ஆதரவளித்தனர். அவரும் வெற்றிபெற்றார். தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலிலும் ஏறக்குறைய இந்தக் கூட்டின் அடிப்படையிலேயே ஐ.தே.கவும் சு.கவும் இணைந்து போட்டியிட்டன.
இணைந்து ஆட்சியை அமைத்தன. அமைச்சரவையிலும் இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் அங்கத்துவம் வகித்தனர். ஆனால், இதெல்லாம் தொடர்ந்து நீடிக்கவில்லை. கூட்டாட்சிக் கலாச்சாரம் வளர்வதற்குப் பதிலாக இடையில் முறிந்து, காலாவதியாகி விட்டது. இப்போது ஐ.தே.க மட்டுமே ஆட்சியை நடத்துகிறது. அதிலும் முஸ்லிகளும் பிற சமூகப் பிரதிநிதித்துவமும் இல்லாத ஆட்சி.
அப்படியென்றால் நல்லாட்சி என்ற ஒன்றே இன்று இல்லாமற் போய் விட்டது எனலாமா? அப்படித்தான் சொல்ல வேண்டும். நல்லாட்சி என்று ஒன்று இருந்திருந்தால், இவ்வளவு முறிவுகளும் விலகல்களும் நிகழ்ந்திருக்காதே.
இது முதலாவது காட்சி. இரண்டாவது காட்சியில், பதவி விலகிய ஹிஸ்புல்லா, ஆஸாத் சாலி, றிஸாட் பதியுதீன் ஆகியோர் மீது விசாரணைகளை மேற்கொள்கிறது பாராளுமன்றத் தெரிவுக்குழு.
கூடவே தாக்குதல் நடந்த காலத்தில் பொறுப்பிலிருந்த பாதுகாப்புச் செயலர், பொலிஸ் மா அதிபர், இராணுவத்தளபதி மற்றும் முக்கியமான அதிகாரிகள், பொறுப்புமிக்கவர்கள் அனைவரும் தெரிவுக்குழுவினால் விசாரிக்கப்படுகின்றனர்.
இந்த விசாரணைகள் ஊடகங்களிலும் பகிரங்கப்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் நடந்த ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் சரியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்றொரு தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்ட அமைச்சர்கள் பதவியைத் துறந்திருக்கிறார்கள்.
பொலிஸ்மா அதிபர் பதவி விலக்கப்பட்டுள்ளார். அத்துடன் விசாரணைக்கும் உட்படுத்தப்படுகின்றனர். அரசாங்கத்தின் ஆட்களாக இருந்தாலும் தவறென்றால் விசாரணை செய்யப்படும். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே. கடவுளே என்றாலும் தவறென்றால் தவறுதான் என்றமாதிரி.
உளவியல் ரீதியாக இது பெரும்பாலானோருக்கு திருப்தியானதாகவே இருக்கும். கண்டிப்பாகச் செய்யப்பட வேண்டிய விசயம் என்றே இதைப்பார்க்கின்றவர்களும் சொல்லுவார்கள்.
இதனால் அரசாங்கத்துக்கு இரண்டு அனுகூலங்கள் உண்டு. ஒன்று, மிகச் சரியான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்வது. இதன் மூலம் அரசுக்குண்டாகும் நெருக்கடியைத் தணிப்பது.
இரண்டாவது, குற்றம்சாட்டப்பட்டவர்களைச் சுத்தப்படுத்துவது. அவர்கள் பகிரங்கமாக விசாரிக்கப்படுகிறார்கள். இப்படி விசாரிக்கப்படும்போது, அவர்கள் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்கள்.
அந்தப் பதில்களில் அவர்கள் தங்களை நியாயப்படுத்துகிறார்கள். அல்லது தங்களுடைய நியாயங்களை முன்வைக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் வைக்கும் நியாயங்கள் அல்லது செய்யும் நியாயப்படுத்தல்கள் எல்லாம் அவர்களைச் சூழ்ந்திருக்கும் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான படிக்கற்களேயாகும்.
ஏனெனில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் சார்பில் விசாரணை செய்வோர் அரசாங்கத்தின் அமைச்சர்கள். விசாரிக்கப்படுவோரும் இதே அரசாங்கத்தின் ஆட்கள். ஆக என்ன நடக்கும்? என்ன நடக்கிறது?
சிலர் கருதுவதைப்போல பரீட்சை எழுதும் மாணவருக்கான கேள்விகளை ஆசிரியர்கள் முற்கூட்டியே தெரியப்படுத்திய கதையாகத்தான் இருக்கப்போகிறது எல்லாம்.
இந்த விசாரணையை எதிர்த்தரப்புகள் செய்தால் அது ஓரளவுக்கு வேறுவிதமாக அமையலாம். அப்பொழுது முன்வைக்கப்படும் கேள்விகளும் வேறாக இருக்கக் கூடும். அதற்கான பதில்களும் வேறாகலாம். இதனால்தான் சிலர் தெரிவுக்குழுவை நம்ப முடியாது, ஏற்க முடியாது என்கின்றனர்.
ஆனாலும் அரசாங்கம் இதை வெற்றிகரமாகவே செயற்படுத்தி வருகிறது. தெரிவுக்குழுத் திருவிழாவும் அமர்க்களமாகவே நடந்துகொண்டிருக்கிறது.
மூன்றாவது காட்சி கேள்வியோடு சம்மந்தப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் அதனோடு எழுந்த கேள்விகளுக்குமாக உடனடியாகவே அரசாங்கம் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து, உடனடியாகவே விசாரணைகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதுவும் இந்த விசாரணைகள் மக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படுகின்றன.
சரி பிழைகள், குறை நிறைகளுக்கு அப்பால் இந்தக் கலாச்சாரத்தை ஓரளவுக்கு நாம் வரவேற்போம். ஆனால், இதைப்போல அல்லது இதையும் விடப் பாராதூரமான பாதிப்பை உண்டாக்கிய போர்க்காலச் சம்பவங்கள், உயிரிழப்புகள், கைது செய்யப்பட்டவர்கள், காணாமலாக்கப்பட்டோர் பற்றிய விசாரணைகளையும் செய்யலாமே. அதற்கும் இப்படியானதொரு தெரிவுக்குழுவை, விசாரணைக் கமிசனை நியமிக்கலாமே.
இதைப்போல பாதிப்புகளை ஈடு செய்யக்கூடிய, பாதிப்புகளினால் தாக்கத்துக்குள்ளாகியவர்களின் உள நிலையைச் சமப்படுத்தக் கூடிய செயற்பாடுகளை முன்னெடுக்கலாமே…
இதையெல்லாம் செய்வதற்கு அரசாங்கம் பின்னிற்பது ஏன்? இதைச் செய்ய வேண்டும் என்று ஐ.நா உள்பட அனைத்து நாடுகளும் வலியுறுத்தியும் வருகின்றன. அப்படியிருந்தும் அதைக் கண்டு கொள்ளாமல், காதிலே போடாமல் காலம் கடத்துவதன் மரம்மம் என்ன?
இதற்கெல்லாம் ஒரு விசாரணைக் கமிஸனைப் போட்டால் அல்லது இவற்றோடு சம்மந்தப்பட்டவர்களை விசாரித்தால் அது அரசாங்கத்துக்கு நெருக்கடியாகவே மாறும்.
ஏனெனில் அந்த விசாரணையில் முக்கியமான தரப்பினர் படைத்துறையோடு சம்மந்தப்பட்டவர்களாவே இருக்கிறார்கள். படைத்துறையின் மீது யாரும் குற்றம் சாட்ட முடியாது என்பது இலங்கையின் எழுதா விதி. அப்படிக் குற்றம் சாட்டினால் அதனுடைய விளைவுகள் பாரதூரமாக இருக்கும். அந்தளவுக்குப் படையினர் உயர் நிலைப்படுத்தப்பட்டுள்ளனர் Super Man களாக்கப்பட்டுள்ளனர்.
ஆக எது இலகுவானதாக உள்ளதோ, எதைச் செய்து நிலைமையைச் சமாளிக்க முடியுமோ அதைச் செய்வதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. இது உடனடிச் சமாதானங்களையும் தீர்வுகளையும் தரலாம். நீண்டகால அடிப்படையில் நன்மைகளையோ தீர்வையோ தரப்போவதில்லை.
அதற்கு றிஸ்க் எடுக்க வேணும். செய்ய வேண்டிய வேலைகளைத் துணிச்சலாக முன்னெடுக்க வேணும். அதற்கு வருகின்ற எதிர்ப்புகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை. செய்யும் வேலைகள் தேசியப் பணிக்குரியவை. நாட்டின் நலனுக்கும் சமூகங்களின் பாதுகாப்புக்கும் முன்னேற்றத்துக்கும் ஏற்றவை என்ற தெளிவோடு அவற்றைச் செய்ய வேண்டும். அதையே நல்லாட்சி அரசாங்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது அதையெல்லாம் செய்யவேயில்லை. அதனால்தான் அது நான்கு ஆண்டுகளுக்குள்ளேயே தோற்றுப்போனது.
கூட்டரசாங்கம் என்பது இன்று கேள்வியாகிப்போனது மட்டுமல்ல, அதனுடைய பங்காளிகளையே தோற்கடித்திருக்கிறது. இந்தப் பங்காளிகள் அனைவரும் இன்று பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனர். அப்படிப் பாதிப்பைச் சந்திக்கும்போதும் அரசாங்கத்தை எதிர்க்க முடியாத, அதிலிருந்து முற்றாக விலக முடியாத நெருக்கடிச் சூழலுக்குள் மூழ்கி விட்டனர்.
ஆக மொத்தத்தில் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மையாகும். நல்லாட்சி என்பது ஜனநாயக அடிப்படைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக சிங்கள மேலாதிக்கத்துக்கே இடமளித்துள்ளது. இதன் வெளிப்பாடே நாடு முழுவதிலும் பல்வேறு விதங்களில் நடந்து கொண்டிருக்கும் அரசியல் நடவடிக்கைகள். அது புத்தர் சிலை வைப்பாக இருக்கலாம். முஸ்லிம் அமைச்சர்கள், ஆளுநர்களின் பதவி துறப்பாக இருக்கலாம். கைவிடப்பட்ட அரசியல் தீர்வாக இருக்கலாம். பேசாப்பொருளாகி விட்ட அரசியலமைப்பாக இருக்கலாம்.
இதற்குள் அடுத்து வரப்போகிறது அடுத்த ஜனாதிபதித் தேர்தல். இந்தளவு நெருக்கடிகளுக்குள்ளிருந்து கொண்டே அதற்கும் முகம் கொடுக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் சிறுபான்மைத் தேசிய இனத்தினர்.
முறையாகச் சிந்தித்தால் அதை ஒரு ஆயுதமாக, கருவியாக மாற்ற முடியும். இது அறிவினாலும் பொறுதியினாலும் நேர்மையினாலும் உலகாளும் யுகம். இங்கே பெரிது சிறிது, பெரும்பான்மை – சிறுபான்மை என்ற பேதங்களெல்லாமில்லை.
கையாளும் முறையும் சிந்திக்கும் விதமுமே முக்கியமாகும்.
நன்றி எழுத்தாளர் – கருணாகரன்