வைரஸ் தொற்று அதிகமாகி தனிமைப்படுத்தல் முகாம்களை இலங்கை அரசாங்கம் திறந்த பொழுது முதலில் கிழக்கில் திறக்கப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையம் ஹிஸ்புல்லாவின் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழக வளாகத்தில் திறக்கப்பட்டது. அப் பல்கலைக்கழக வளாகம் கடந்த ஓராண்டுக்கு மேலாக படையினரின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருந்து வருகிறது. ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின் அது ஒரு படை வளாகமாகத்தான் காணப்படுகிறது. ஒரு பல்கலைக்கழக வளாகத்தை அரசாங்கம் தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றியது என்பது முஸ்லிம்களுக்கு எதிரான மற்றொரு நகர்வு என்று பார்க்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பல தனிமைப்படுத்தல் முகாம்கள் வடக்கு கிழக்கில் திறக்கப்பட்டன. இது தொடர்பில் தமிழகத்திலிருந்து வெளிவரும் ஆனந்த விகடன் சஞ்சிகையின் நிருபர் ஒருவர் மார்ச் மாதம் பிற்கூறில் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டார்…..தனிமைப்படுத்தல் முகாம்கள் வடக்கு கிழக்கு பகுதிகளிலேயே அதிகம் உருவாக்கப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு வருகிறதே? என்று. அவருக்கு நான் சொன்னேன்…… “(அப்போதைய தகவல்களின்படி) இதுவரை 16தனிமைப்படுத்தல் மையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஆறு மட்டுமே வடக்கு கிழக்கில் உண்டு. எனவே வடக்கு கிழக்கில் மட்டும்தான் தனிமைப்படுத்தல் முகாம்கள் உருவாக்கப்படுகின்றன என்று கூறப்படுவது சரியான ஒரு புள்ளிவிவரம் அல்ல” என்று.
“அது மட்டும் அல்ல அடையாளம் காணப்படும் நோயாளிகள் தென்னிலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தான் அனுப்பப்படுகிறார்கள். அதாவது மருத்துவர்களின் வார்த்தைகளில் சொன்னால் சிகிச்சை அளிக்கும் பரப்பு (treatment area) தெற்கில்தான் உண்டு. எனவே நோயாளிகள் சிங்கள மக்கள் மத்தியில்தான் வைத்துப் பராமரிக்கப்படுகிறார்கள். எனவே தர்க்கத்தின்படி சிங்கள மக்களுக்குத்தான் தொற்று ஆபத்து அதிகம். அதோடு தனிமைப்படுத்தல் முகாம்களை படையினரே பராமரிக்கிறார்கள.; இதனால் படையினருக்கே அதிகரித்த அளவில் நோய்த் தொற்று வாய்ப்பு உண்டு. எனவே இந்த விடயத்தை இனரீதியாக பார்க்கும்போது அதிகம் நிதானம் தேவை..
“1974இல் ஜேவிபியின் முதலாவது கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட ஜேவிபி தலைவர்கள் வடக்குக்கே கொண்டு வரப்பட்டார்கள். யாழ்ப்பாணம் கோட்டையிலும் கிளிநொச்சி அக்கராயன் பள்ளிக்கூடத்திலும் தான் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டார்கள். அதற்கு காரணம் வடக்கானது தெற்கிலிருந்து தொலைவாக இருக்கிறதென்று அரசாங்கம் நம்பியதுதான். இவ்வாறு தொலைவாக இதுக்கும் ஒரு பிரதேசம் என்று அவர்கள் வடக்கை கருதுவதாலும் தனிமைப்படுத்தல் முகாம்களை வடக்கில் அமைக்க கூடும். ஆனாலும் புள்ளிவிவரங்களின்படி வடக்கில் மட்டுமல்ல நாடு முழுவதிலும் தனிமைப்படுத்தல் முகாம்கள் உண்டு. எனவே இதனை எடுத்த எடுப்பில் இன ரீதியாக பார்க்கத் தேவையில்லை” என்றும் நான் ஆனந்த விகடன் நிருபருக்குச் சொன்னேன்.
இவ்வாறானதொரு பின்னணியில் அண்மை நாட்களில் வடக்கில் புதிதாக தனிமைப்படுத்தல் முகாம்கள் உருவாக்கப்படுவது தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. குறிப்பாக படைத் தரப்பின் மத்தியில் நோய்த் தொற்று தொடங்கியதை அடுத்து தனிமைப்படுத்தல் முகாம்களை அரசாங்கம் அதிகம் வடக்கிலேயே உருவாக்க முனைகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது. இலங்கைதீவில் ஒப்பீட்டளவில் அதிக தொகை படையினர் வடக்கு கிழக்கிலேயே நிலை கொண்டிருப்பதனால் தனிமைப்படுத்தல் முகாம்களையும் அவர்கள் வடக்கு கிழக்கில் உருவாக்க முயற்சிக்கக் கூடும். இது இலங்கை தீவின் படைகட்டமைப்பின் பெரும்பகுதி தமிழ்ப் பகுதிகளில் நிலை கொண்டிருப்பதனை எடுத்துக்காட்டும் ஒரு உதாரணமாகும். இன்னும் ஆழமாக சொன்னால் தமிழ் பகுதிகள் எந்த அளவுக்கு படைக்கப்பட்டுள்ளன என்பதை இது காட்டும்.
அதேசமயம் வடக்கு கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முக்கிய பொதுக் கட்டிடங்களையும் பாடசாலைகளையும் அரசாங்கம் தனிமைப்படுத்தல் முகாம்களாக மாற்ற இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. படையினர் மத்தியில் தொற்று ஏற்பட்டதும் அரசாங்கம் அதிகம் உசாரடைந்து பதடமடந்ததன் விளைவே அது. எனவே இது விடயத்தில் தமிழ்ப் பகுதிகளைக் குறிவைத்துத் தனிமைப்படுத்தல் முகாம்கள் உருவாக்கப்படுவதாக குற்றஞ்சாட்ட முன் இதுதொடர்பான புள்ளிவிவரங்களை ஆழமாக ஆராய வேண்டும்.
வைரசுக்கு எதிரான யுத்தத்திலும் அரசாங்கம் சிங்கள பௌத்த தேசியவாத கண்கொண்டே நிலைமைகளை அணுகுகிறது என்பதற்கு ஆகப் பிந்திய வேறு உதாரணம் உண்டு. பசில் ராஜபக்ஷவின் தலைமையில் உருவாக்கப்பட்ட செயலணியில் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை. ஒரே ஒரு தமிழர் மட்டும் அதில் உண்டு. மேலும் நோயில் இறந்த முஸ்லிம்களின் மையத்தை அடக்கம் செய்வது தொடர்பிலும் அரசாங்கம் முஸ்லிம்களின் உணர்வுகளை மதித்திருக்கவில்லை. அதோடு உலகத்தின் கவனமும் தமிழர்களின் கவனமும் வைரஸின் மீது குவிந்து இருந்த போது போர்க்குற்றச்சாட்டுக்கு இலக்காகியவரும் நீதிமன்றத்தால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படடவருமாகிய ரட்நாயக்கவை அரசாங்கம் விடுதலை செய்தது. இவ்வாறு ஒரு நோய்த் தொற்று காலத்திலும் அரசாங்கம் தனது இனவாதப் போக்கை கைவிட வில்லை என்ற குற்றச்சாட்டுக்களின் மத்தியில்தான் இப்பொழுது படைத்தரப்பினருக்கான தனிமைப்படுத்தல் முகாம்களை வடக்கில் அதிகம் நிறுவ முற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இலங்கைத்தீவின் மிகவும் நிறுவனமயப்பட்ட் கட்டுக்கோப்பான மிகவும் அதிகமான ஆளணிகளைக் கொண்ட் மிக அதிக வளங்களை அனுபவிக்கின்ற் ஒப்பீட்டளவில் நோய் எதிர்புச்சக்தி அதிகமடைய மிகப்பெரிய ஒரு கட்டமைப்பு படைக் கட்டமைப்பு ஆகும். எனவே அனர்த்த காலங்களில் குறிப்பாக வைரசுக்கெதிரான போரில் படைத்த தரப்பை களத்தில் இறக்குவது தவிர்க்க முடியாதது.
இலங்கைத்தீவின் சுகாதாரத்துறை அனைத்துலக அளவில் மதிக்கப்படும் வளர்ச்சிகளை பெற்றிருக்கிறது. இவ்வாறான ஒரு சிவில்க்;; கட்டமைப்பு இருக்கத்தக்கதாக வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் படைத்தரப்பை ஈடுபடுத்தியது குறித்து பலரும் விமர்சித்தார்கள். ஒரு சிங்கள செயற்பாட்டாளர் டுவிட்டரில் பின்வருமாறு எழுதியிருந்தார் “சுகாதாரத்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை படைத்தரப்பு செய்தால் அவர்கள் நோயாளியை ஒரு பயங்கரவாதி போல அணுகுவார்கள்” என்று.
அரசாங்கம் வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குரிய செயலணியை “கோவிட் கிளர்ச்சிக்கு” எதிரான செயலணி என்றும் பெயரிடப்பட்டது. எல்லா இலங்கை வாழ் மக்களுக்கும் அனுப்பப்பட்ட ஒரு கைபேசிச் செய்தியில் அவ்வாறுதான் அழைக்கப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் தொற்றை கிளர்ச்சி என்று பெயரிட்ட ஒரே அரசாங்கம் இது. அதோடு,வைரசுக்க எதிரான நடவடிக்கைகளைப் பற்றிப் பேசும்போது பிரதமர் மகிந்தவும் உட்பட சில சிங்கள் அரசியல்வாதிகள் வுpடுதலைப் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்டதை ஞாபகப்படுத்தியே பேசிவருகிறார்கள்.
இலங்கைத்தீவில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் படைத்தரப்பின் பங்களிப்பை குறித்து அண்மையில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அப்படிப்பட்ட பாராட்டுக்களை எதிர்பார்த்துத்தான் அரசாங்கம் படைத்தரப்பைக் களத்தில் இறக்கியது. தமிழ் மக்களால் போர் குற்றம் சுமத்தப்படும் ஒரு படைத்தரப்பை வைரசுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தி அதில் அவர்கள் வெற்றி பெறும் பொழுது அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள பலவீனமடைந்து விடும் என்று அரசாங்கம் எதிர்பார்த்தது. அதாவது படைத் தரப்பை புனிதப்படுத்துவதே அவர்களுடைய நோக்கம். அமெரிக்காவினால் பயணத் தடை விதிக்கப்பட்ட ஒரு தளபதியை வைரசுக்கு எதிரான போரிற்குத் தலைமை தாங்க விட்டு அவரைப் புனிதப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது.
வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் படைத்தரப்பு முன்னணியில் நின்றது. தனிமைப்படுத்தல் முகாம்களை கண்காணிப்பது; தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களை கண்காணிப்பது; சோதனைச் சாவடிகளில் வாகனங்களை பரிசோதிப்பது; தப்பிக்கும் தொற்றுநோய் சந்தேகநபர்களை பின்தொடர்வது; அதில் படைப் புலனாய்வின் உதவியைப் பெறுவது; மக்கள் கூடும் இடங்களில் தனியாள் இடைவெளியை பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்துவது; கடை முதலாளிகளுக்கு அறிவுறுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளிலும் படைத்தரப்பே ஈடுபட்டது. ஊடகங்களில் படைப் பிரதானிகள் கோவிட்-19 தொடர்பில் கருத்துக் கூறுகிறார்கள்.
பெரும்பாலான எல்லாத் தனிமைப்படுத்தல் முகாம்களும் படையினரின் கட்டுப்பாட்டுக்கள் இருக்கின்றன. இதனால் படைத்தரப்புக்கு அதிகம் தொற்று ஏற்படும் ஆபத்து இருக்கிறது. ஆனால் அண்மையில் படைத் தரப்பினர் மத்தியில் தொற்று அதிகரித்துச் செல்வதற்கு தனிமைப்படுத்தல் முகாம்கள் தான் காரணமா என்று கூறுவதற்கு தேவையான புள்ளிவிவரங்கள் இக்கட்டுரை எழுதப்படும் இந்நாள் வரையிலும் கிடைக்கவில்லை.
இந்த வாரத்தின் முற்பகுதியிலிருந்து எற்பட்ட இப்புதிய தொற்று அலை காரணமாக இலங்கைத்தீவின் கோவிட்-19 புள்ளி விபரங்களில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முதலாவது நோயாளிக்கும் நூறாவது நோயாளிக்கும் இடையே 54 நாள் இடைவெளி இருந்தது. 101ஆவது நோயாளிக்கும் இருநூறாவது நோயாளிக்கும் இடையே 19 நாள் இடைவெளி இருந்தது. 201ஆவது நோயாளிக்கும் 300 ஆவது நோயாளிக்கும் இடையே எட்டு நாள் இடைவெளி. 301 ஆவது நோயாளிக்கும் 400 ஆவது நோயாளிக்கும் இடையே நாலு நாள் இடைவெளி. 401ஆவது நோயாளிக்கும் ஐநூறாவது நோயாளிக்கும் இடையே இரண்டு நாள் இடைவெளி. 501 ஆவது நோயாளிக்கும் அறுநூறாவது நோயாளிக்கும் இடையே இரண்டு நாள் இடைவெளி. இதன்படி இலங்கைத் தீவின் மொத்த வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அறுநூறைக் கடந்து விட்டது. இதில் 200க்கும் குறையாதவர்கள் படைத்தரபபைச் சேர்ந்தவர்கள்; என்று கூறப்படுகிறது. அதாவது மொத்த நோயாளிகளில் மூன்றில் ஒரு பகுதி. அதுமட்டுமல்ல இந்த 200க்கும் குறையாத தொகையினரும் இந்த வாரத்தின் முற்பகுதியளவில்தான் கண்டுபிடிக்கப்பட்டார்கள்.
அதிகம் நிறுவனமயப்பட்ட படைத் தரப்பிற்குள் நோய் பரவும் போது அதன் விளைவுகள் விபரீதமாக அமையும்.ஏனெனில் படைத்தரப்பு வழமையாகப் பேணிவரும் தனியாள் இடைவெளிக்கும் நோய்த் தொற்று காலத்தில் பேணவேண்டிய தனியாள் இடைவெளிக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. இதனால் படை முகாம்களில் படையினர் வழமைபோல நிறுவனமாகத் தங்குவது நோய் தொற்றை ஊக்கவிக்கக்கூடும். இப்படிப்பட்ட நடைமுறைப் பிரச்சினைகள் பல உண்டு.
ராஜபக்சவின் இரண்டாவது வருகைக்குப்பின் இலங்கைத்தீவின் சிவில் கட்டமைப்புகள் பல படை மயப்படுத்தப்பட்டன. இப்பொழுது கோவிட் -19 படையினர் மத்தியில் பரவத் தொடங்கிவிட்டது. இதனால் படை மயப்பட்ட எல்லாக் கட்டமைப்புக்களும் அந்த தொற்று விரிவடைந்தால் என்ன நடக்கும்? படையினருக்கு தொற்று ஏற்பட்டதால் அது இலங்கைத் தீவின் கோவிட்-19 புள்ளிவிபரங்களில் ஒரு புதிய அலையை தோற்றுவித்திருக்கிறது. ராஜபக்சக்களின் செல்லப் பிள்ளைகளான படையினருக்கு வந்திருக்கும் வைரஸ் தொற்றை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவிட்டால் அது சிலவேளை அவர்கள் திட்டமிட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான நிகழ்ச்சி நிரலைக் குழப்பி விடுமா?
-நிலாந்தன்