செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை பொசன் நாடகம்? நிலாந்தன்

பொசன் நாடகம்? நிலாந்தன்

6 minutes read


கடந்த12 ஆண்டுகாலத் தமிழ் அரசியலின் இயலாமையை வெளிக்காட்டும் குறிகாட்டிகளில் ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம். கடந்த12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் வினைத்திறன் மிக்க விதத்தில் போராடவில்லை என்பதற்கு அது ஒரு குறிகாட்டி. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ் அரசியல் தலைமைகள் பொருத்தமான வெற்றிகள் எதனையும் பெறத் தவறி விட்டார்கள் என்பதற்கு அது ஒரு குறிகாட்டி.

தமிழ்க் கட்சிகளில் துருத்திக்கொண்டு தெரியும் பலரும் சட்டத்துறை ஒழுக்கத்தை சேர்ந்தவர்கள்.ஆனால் கடந்த12 ஆண்டுகளில் அரசியல் கைதிகளுக்காக போராடுவதற்கென்று சட்ட உதவிக் கட்டமைப்பு எதையும் இன்று வரையிலும் எந்த ஒரு அரசியல் கட்சியும் உருவாக்கியிருக்கவில்லை. மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான மையம் போன்ற எத்தனை செயற்பாட்டு அமைப்புக்கள் தமிழ்மக்கள் மத்தியில் உண்டு?

இப்படிப்பட்ட ஒரு வெற்றிடத்தில்தான் கைதிகள் காலத்திற்கு காலம் போராடத் தொடங்குவார்கள். குறிப்பாக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க தொடங்குவார்கள்.உண்ணாவிரதிகளின் உடல்நிலை நலிவுறத் தொடங்கும்பொழுது சமூகத்துக்குள் ஒரு கொதிப்பு ஏற்படும்.அப்பொழுது கட்சிகள் அதில் தலையிடும். தலையிட்டு ஏதாவது வாக்குறுதியை வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைக்கும்.ஆனால் வாக்குறுதியளித்தபடி கைதிகளை விடுவிக்க கட்சிகளால் முடிவதில்லை. இதுவிடயத்தில் கட்சிகளின் வேலை என்னவென்று பார்த்தால் உண்ணாவிரதத்தை முடித்து வைப்பதுதான் என்ற ஒரு நிலைமையே கடந்த12 ஆண்டுகளாகக் காணப்படுகிறது. இவ்வாறானதொரு அரசியற் சூழலில்தான் அரசாங்கம் கடந்த பொசன் தினத்தை முன்னிட்டு 16 அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்திருக்கிறது.

மன்னிப்பு என்றால் என்ன அர்த்தம்? அவர்கள் எந்த அரசியலுக்காகப் போராடினார்களோ அந்த அரசியல் ஒரு குற்றமாகப் பார்க்கப்படுகிறது என்று பொருள்.அதனால்தான் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான தேசிய அமைப்பானது பொது மன்னிப்பு என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக கைதிகளை விடுவிப்பது என்று ஓர் அரசியல் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆனால் விடுவிக்கப்பட்ட கைதிகளும் அவர்களின் உறவினர்களும் இது விடயத்தில் கொள்கை நிலைப்பாட்டை விடவும் தமது உறவுகள் ஆகக்கூடிய விரைவில் விடுவிக்கப்படுவது முக்கியம் என்று வலியுறுத்துகிறார்கள். கொள்கையை வலியுறுத்தும் கட்சிகள் அல்லது செயற்பாட்டு அமைப்புகள் கைதிகளை விடுவிக்கும் வல்லமையோடு இல்லை என்பதைக் கடந்த 12 ஆண்டுகள் நிரூபித்து விட்டன. இந்த இயலாமையின் பின்னணியில் அரசியல்கைதிகள் எப்படித் தண்டனையைப் பெற்றுக் கொண்டு வெளியே வரலாம் என்றே சிந்திக்கிறார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் எப்பொழுது விசாரணை? எப்பொழுது தண்டனை? என்று தெரியாமல் காலவரையறையின்றிக் காத்திருப்பதை விடவும் ஏதாவது ஒரு தண்டனையை ஏற்றுக்கொண்டு அதன்படி விடுதலை செய்யப்படும் திகதியைத் தெரிந்து கொண்டு நிம்மதியாக இருக்கலாம் என்று கைதிகள் கருதுகிறார்கள்.

இவ்வாறானதொரு பரிதாபகரமான சூழ்நிலையில் ஒரு பெருந் தொற்றுநோய் காலத்தில் சமூகத்தில் மறக்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட ஒரு தரப்பினராக தமிழ் அரசியல் கைதிகள் காணப்படுகிறார்கள்.
எல்லாத் தமிழ்க்கட்சிகளும் அரசியல் கைதிகளை விடுவிக்க போவதாக கூறுகின்றன.ஆனால் யாராலும் இதுவரை அது குறித்து ஓர் அரசியல் தீர்மானத்தை எடுக்குமாறு எந்தவோர் அரசாங்கத்தையும் நிர்ப்பந்திக்க முடியவில்லை.நல்லாட்சி காலத்தில் ரணில் விக்ரமசிங்கவோடு நெருக்கமாக இருந்த கூட்டமைப்பாலும் அதைச் செய்ய முடியவில்லை. அக்காலகட்டத்தில் ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டார்கள் ஆனால் அதை கூட்டமைப்பு தனது சாதனையாக கூறிக்கொள்ள முடியாது என்று கைதிகள் கூறுகிறார்கள். ஏனெனில் வழமையான சட்ட நடைமுறைகளினூடாக அவர்கள் இயல்பாக விடுவிக்கப்பட்டார்களே தவிர அரசாங்கம் ஒரு கொள்கை தீர்மானத்தை எடுத்து யாரையும் விடுவிக்கவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்தவாரம் விடுவிக்கப்பட்ட 16 அரசியல் கைதிகளில் 14பேருக்கு  இது பொருந்தும். இவர்கள் அனைவரும் தண்டனை வழங்கப்பட்டவர்கள். தண்டனை காலம் முடிவதற்கு சிலருக்கு ஆகக்கூடியது 18 மாதங்களே உண்டு.குறிப்பாக இவர்களில் ஒருவருடைய தகப்பனார் மிக அண்மையில் சுன்னாகத்தில் இறந்து போனார்.அக்கைதியை சற்று முன்னதாக விடுதலை செய்திருந்தால் அந்தப்பிள்ளை தன் தகப்பனை உயிரோடு பார்த்திருக்கும்.

அரசியல்கைதிகளை விடுவிப்பது என்று அரசாங்கம் முடிவெடுத்தபின் அது குறித்து நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இந்த வாரம் உரையாற்றினார்.அவருடைய உரை ஒரு தமிழ்தேசியவாதியின் உரை போலிருக்கிறது.சில  கைதிகள் சிறையில் இருக்கும் காலம் தன்னுடைய வயதுக்குக் கிட்டவரும் என்று நாமல் கூறுகிறார்.அவர் ஒர் அரசியல்வாதி.எனவே அவர் பேசுவதை;செய்வதை;எல்லாவற்றையும் அரசியலாகவே பார்க்கவேண்டும்.

ஆனால் அரசியல் கைதிகள் கூறுகிறார்கள் கடந்த ஆட்சியின்போது நாமல் அவர்களோடு சிறையில் வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவருக்கு அரசியல்கைதிகள் தொடர்பில் ஒருவித நெருக்கம் கலந்த புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கலாம் என்று. ஏனெனில் நாமல் மகசின் சிறையில் வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் தமிழ் அரசியல்கைதிகளோடு நெருக்கமாகப் பழகியிருக்கிறார்.அது அரசியல்கைதிகளின் உணர்வுகளைப புரிந்துகொள்ள அவருக்கு உதவியிருக்கலாம்.சிறையில் சில சமையம் அரசியல் கைதிகளே அவருக்கு தேனீர் தயாரித்து வழங்கியதுண்டாம்.அதிலும் குறிப்பாக தேநீருக்கு வேண்டிய பொருட்களை அவர் அரசியல்கைதிகளிடம்தான் கொடுத்து வைத்திருந்தாராம். அவர்களிடம்தான் அவை பத்திரமாக இருக்கும் என்றும் அவர் நம்பினாராம்.இவ்வாறு அவரோடு சிறையில் இருந்த ஒரு கைதி விடுவிக்கப்பட்ட பின் கிளிநொச்சியில் அந்தக் கைதிக்கு அவர் ஒரு வீடு கட்டிக்கொடுத்தார்.

அவரைப் போலவே பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரரும் சிறையில் இருந்தபொது அரசியல் கைதிகளின் உணர்வுகளை அதிகம் புரிந்து கொண்டவராக காணப்பட்டதாகக் கைதிகள் கூறுகிறார்கள்.சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபின் அவரும் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசியிருந்தமையை இங்கு நினைவுபடுத்தலாம்.

எனவே அரசியல்கைதிகளை விடுவிப்பதற்கான நாமலின் முயற்சியானது கைதிகளோடு அவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட  நெருக்கத்தின் விளைவாகவும் இருக்கலாம்.ஆனால் அரசியலில் எந்த ஒரு தனிப்பட்ட நெருக்கமும் அதன் இறுதி விளைவைப் பொறுத்துக்கூறின் அரசியலாகவே பார்க்கப்படும். நாமல் ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே ஓர் ஆதரவுத்தளம் உண்டு. சில கிழமைகளுக்கு முன் அவர் சீனாவின் தடுப்பூசிகளை எடுத்துக்கொண்டு யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார்.இப்பொழுது அரசியல்கைதிகளுக்காக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.தவிர 16கைதிகளும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றின் மூலம் வடக்கில் நாமலின் ஆதரவுத் தளத்தை பலப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் சிந்திக்கும்.

எனினும் எல்லாவிதமான வாதப்பிரதிவாதங்களும் அப்பால் பல ஆண்டுகளுக்குப்பின் 16கைதிகள் தமது குடும்பத்தினருடன் இணைந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியானது. அதே சமயம் மிச்சமுள்ள கைதிகள் தொடர்பில் ஓர் அரசியற் தீர்மானம் எடுக்கப்பட வண்டும்.

அரசியல் கைதிகளின் விவகாரம் என்பது ஒரு சட்ட விவகாரம் மட்டும் அல்ல. மனிதாபிமான விவகாரம் மட்டும் அல்ல. அவற்றைவிட ஆழமான பொருளில் அது ஓர் அரசியல் விவகாரம். எனவே கைதிகளின் விடுதலை தொடர்பான தீர்மானமும் ஓர் அரசியல் தீர்மானமாகவே இருக்க வேண்டும். அவ்வாறு அரசியல் தீர்மானம் எடுக்கப்பட்டால்தான் இப்பொழுதும் சிறையில் இருக்கும் அனைத்து கைதிகளும் விடுவிக்கப்படும் ஒரு நிலைமை வரும்.

தவிர கஜேந்திரகுமார் அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியதைப்போல பயங்கரவாதத் தடைச்சட்டம் இருக்கும் வரையிலும் இனிமேலும் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளை நிரப்பிக் கொண்டேயிருப்பார்கள்.ஏனெனில் அரசாங்கம் தமிழ்மக்களின் அரசியலை பயங்கரவாதமாக சித்தரித்து ஆயுதப் போராட்டத்தை மீளுருவாக்கம் செய்கிறார்கள் என்று கூறி யாரையும் கைது செய்யக் கூடிய ஒரு நிலைமை தொடர்ந்தும் இருக்கிறது.எனவே இங்கு பிரச்சினை தமிழ் மக்களின் போராட்டத்தை பயங்கரவாதமாக பார்க்கும் அச்சட்டம்தான். அச்சட்டத்தை அகற்ற வேண்டும்.இது தொடர்பில் ஐரோப்பிய யூனியன் முன்வைத்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட காரணத்தால்தான் 2017ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை சிறிய தேசிய இனங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பாவித்து வரும் ஒரு பின்னணியில் அதற்கு எதிராக ஐரோப்பிய நாடாளுமன்றம் அண்மையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. தவிர கடந்த திங்கட்கிழமை தொடங்கிய ஐநாவின் 47வது கூட்டத் தொடரிலும் மையக்குழு நாடுகளின் அறிக்கையில் இது சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

பெருந்தொற்று நோயால் நாட்டின் பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் ஜிஎஸ்பி வரிச்சலுகையும் நிறுத்தப்பட்டால் நிலைமை மேலும் பாரதூரமாக மாறலாம்.அதனால் அரசாங்கம் மேலும் சீனாவை நோக்கிப் போவதை தவிர வேறு வழி இருக்காது. அவ்வாறு போகக்கூடாது என்பதைத்தான் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். சீனாவிடம் கடன் வாங்குவதற்கு பதிலாக அனைத்துலக நாணய நிதியத்திடம் போகலாம் என்று அவர் ஆலோசனை கூறுகிறார்.

எனவே 16அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பை வழங்கியதன் மூலம்  அரசாங்கம் தன்னை சுதாகரித்துக் கொள்ள முயற்சிக்கிறது.பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யப்போவதாக நிதியமைச்சர் அறிவித்திருப்பதும் ஒரு சுதாகரிப்பே. இவையாவும் ஐரோப்பிய யூனியனை சமாதானப்படுத்தும் முயற்சிகளே.

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான  தேசிய அமைப்பின் இணைப்பாளரான பாதர் சக்திவேல் சொன்னார்…..”ஒரு புனித பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் எமது அமைப்பைப் பொறுத்தவரை இது ஒரு அமாவாசை நாள்” என்று. “ஏனென்றால் அரசாங்கம் இதுவிடயத்தில் முதலாவதாக ஓர் அரசியல் தீர்மானத்தை எடுப்பதிலிருந்து தப்பியிருக்கிறது. இரண்டாவதாக அரசியல் கைதிகளையும் துமிந்த சில்வாவையும் சமப்படுத்தியிருக்கிறது.துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பை வழங்கும் பொசன் நாடகத்தின் ஒரு பகுதியாகவே அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மன்னிப்பு கிடைக்காவிட்டாலும் அக்கைதிகளிற் பலர்  சில மாதங்களில் விடுதலை பெற்றுவிடுவார்கள்.எனவே இதில் மன்னிப்பின் பொருளையும் அரசாங்கம் கொச்சைப்படுத்தியிருக்கிறது.மொத்தத்தில் ஒரு பொசன் நாளில் புத்த பகவானின் பெயரால் இவை எல்லாவற்றையும் செய்து புத்த பகவானையும் அவர்கள் கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள்” என்று.

நிலாந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More