அண்மைக் காலங்களில் க.பொ.த சாதாரண க.பொ.த உயர்தரப் பெறுபேறுகள் வெளியிடப்படும் போது எல்லாம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் வீழ்ந்து விட்டது சரிந்துவிட்டது என்ற குரல்கள் பரவலாக வெளிப்படுகின்றன. கல்வியடைவுகளை ஒப்பீடு செய்யும் முறைகளை அவதானிக்கும் போது தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் விலை என்ன? மருதனார்மடத்தில் மரக்கறிகளின் விலை என்ன? கிளிநொச்சியில் மரக்கறிகளின் விலை என்ன? என்பது போல மாவட்டரீதியிலும் மாகாணரீதியிலும் பரீட்சையில் பெறும் சித்தி வீதங்கள் ஒப்பிடப்படுகின்றன. கல்வி அடைவு என்பதை சந்தையிலுள்ள மரக்கறிகளின் விலைகள் போல் ஒப்பிட முடியுமா? இவ்வாறான ஒப்பீடுகள் கல்வியியல் ரீதியாகவும் புள்ளிவிபரவியல் ரீதியாகவும் எதாவது அடிப்படைகளைக் கொண்டுள்ளனவா? இவை சரியானவை தானா?
இன்றைய காலத்தில் கல்வி ஒப்பீடுகள் அனைத்தும் புள்ளிவிபரங்களை அடுக்கும் ஒப்பீடுகளாகவே சுருங்கிவிட்டன சித்திவீதம் எவ்வளவு ? கடந்த வருடத்தை விட இந்த வருடம் எத்தனை சதவீதத் அதிக சித்திவீதம் என எண்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகின்றது. ஆனால் கல்வி என்பது புள்ளிவிபரவியல் தொகுப்பு அல்ல அது சிந்தனையை உருவாக்குகின்ற ஒரு கருவி அது மனிதம் சார்ந்தது அப்படி ஒரு சிந்தனை இருப்பின் பரீட்சை முடிவுகள் வெளிவரும் போது வெறித்தனமான கூச்சல்களை காண முடியாது.
கல்வியடைவு பற்றி சதவீதம் மற்றும் தரநிலையை வைத்து விவாதிப்பதற்கு முன்னால் கல்வியியலில் அடைவை அளவிடல் சில எடுகோள்கள் அடிப்படையானவை என்பதனை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு பரீட்சை மூலம் மாணவரின் நடத்தை முழுவதும் அவதானிப்பதோ அல்லது அளவிடவோ முடியாது அளவிடப்படும் நடத்தைகள் அவதானிக்கப்படாத மற்றும் அளவிடப்படாத நடத்தைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது என்ற எடுகோள் அடிப்படையிலே கல்வியடைவு அளவிடப்படுகின்றது. மாணவர் அடைவு என்பது அறிகை மனவெழுச்சி உளஇயக்க ஆட்சிகளில் மாணவர்களின் நடத்தை மாற்றங்களை குறிப்பிடுகின்றது கூடுதலாக பரீட்சைகள் அறிகை ஆட்சியை மாத்திரமே கருதுகின்றன. மாணவரின் அடைவை அளவிட எழுத்துச் சோதனைகள் மூலம் பெறப்படும் தகவல்கள் போதுமானவையல்ல. மாணவரின் சொல்சார் எண்சார் அறிவை வைத்து மாணவரின் உடல் தொழிற்பாடு தொடர்பாக சரியான அனுமானங்களை மேற்கொள்ள முடியாது. உதாரணமாக விஞ்ஞான பாடத்துக்கு A சித்தி பெற்ற மாணவி ஒரு பரிசோதனை செய்வதற்கான பொருட்களை எடுப்பதற்கே அவதிப்படலாம் இவற்றைத்தவிர்த்து கல்வி அடைவு பற்றி சிந்திப்பது அர்த்தமற்றது.
இவற்றை கருதத்தில் கொண்டு தான் பல கல்வியியலாளர்கள் பரீட்சை ஒப்பீடுகளை எதிர்கின்றார்கள் இந்தியாவின் தலைசிறந்த கல்வியியலாளர் டாக்டர் இராதகிருஸ்ணன் கல்வியில் ஒரே ஒரு சீர்திருத்தம் மட்டும் மேற்கொள்ள முடியும் எனின் அது பரீட்சைமுறையிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறுகின்றார். எமது நாட்டில் பிரதான பரீட்சைகளான தரம் 5 புலமைபரிசில் க.பொ.த சாதாரண க.பொ.த உயர்தர பரீட்சைகள் என்பன பாடசாலைக் காலத்தில் நடைபெறுகின்றது. தரம் 5 புலமைபரிசில் பரீட்சையானது வறிய மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கவும் வசதியுடைய பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்புக்களை வழங்கவும் பயன்படுகின்றது..ஆனால் அது அறிமுகப்படுத்தப்பட்டதின் நோக்கம் இன்று தடம்மாறிச் செல்கின்றது.
க.பொ.த.சாதாரணப் பரீட்சையினை அப்பரீட்சையானது உயர்தரத்தில் பொருத்தமான பாடத்துறைகளைத் தெரிவு செய்யவும் ஏனைய கற்றல் செயற்பாடுகளைத் தொடரவும் மற்றும் வேலை வாய்ப்புக்களுக்கு அடிப்படைத் தகைமையாகவும் கொள்ளப்படுகிறது. இது ஒரு போட்டிப் பரீட்சை அன்று. க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வடமாகாண தர நிலையை நோக்கினால் வடமாகாண தர நிலையானது அண்மைய காலங்களில் இறுதி நிலையாகிய ஒன்பதாம் நிலையிலேயே காணப்படுகிறது. எனவே வடமாகாணம் கல்வியில் பின்னடைந்துவிட்டது என கூறமுடியுமா? இவ்வாறான ஒப்பீடுகள் சரியானவையா?
அட்டவணை – மொழி,சமயப்பாடங்களில் c அல்லது அதற்குமேல் பெற்றோர் சதவீதம் & வடமாகாணத் தர நிலை, வடமாகாண சித்திவீதம்(%) | ||||||
ஆண்டு | c அல்லதுஅதற்குமேல் பெற்றோர் சதவீதம் | வடமாகாண தர நிலை | வடமாகாண சித்திவீதம்( %) | |||
பௌத்தம் | சைவநெறி | சிங்களம் | தமிழ் | |||
2005 | 57.09 | 65.11 | 56.84 | 57.28 | 4 | 48.29 |
2006 | 63.74 | 61.91 | 55.51 | 59.49 | 4 | 51.84 |
2007 | 64.47 | 68.34 | 58.46 | 52.92 | 3 | 52.82 |
2008 | 65.71 | 75.23 | 58.31 | 48.14 | 5 | 53.51 |
2009 | 59.15 | 86.66 | 48.41 | 43.81 | 2 | 55.71 |
2010 | 62.23 | 69.85 | 52.91 | 47.31 | 6 | 56.93 |
2011 | – | – | 60.3 | 44.69 | 9 | 54.26 |
2012 | 72.61 | 86.59 | 67.54 | 52.45 | 8 | 59.99 |
2013 | 67.81 | 84.81 | 65.76 | 56.05 | 6 | 65.33 |
2014 | 67.38 | 71.07 | 70.88 | 51.41 | 9 | 64.19 |
2015 | 76.13 | 64.33 | 72.24 | 53.56 | 9 | 60.38 |
2016 | 77.72 | 66.36 | 69.09 | 51.55 | 9 | 60.66 |
2017 | 71.3 | 60.96 | 75 | 69.06 | 9 | 66.12 |
2018 | 72.08 | 66.74 | 76.79 | 71.77 | 8 | 69.99 |
2019 | 74.59 | 65.3 | 72.46 | 62.26 | 9 | 67.74 |
2020 | 74.55 | 65.52 | 75.91 | 71.19 | 9 | – |
(மூலம் : பரீட்சைத்திணைக்களம்) |
க.பொ.த.சாதாரணப் பரீட்சை ஆறு பிரதான பாடங்களையும் மூன்று தொகுதிப் பாடங்களையும் கொண்டது தமிழ் , சிங்கள மாணவர்களிடையே க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் பிரதான பாடங்களில் மொழி மற்றும் சமயம் என்பன வேறுவேறு வினாத்தாள்களை உடையன. அட்டவணை யினை அவதானிக்கின்ற போது தமிழ் , சிங்களம் மற்றும் பௌத்தம் , சைவநெறி என்பவற்றில் சிங்களம் , பௌத்தம் என்பவற்றில் c அல்லது அதற்கு மேல் பெற்றோர் சதவீதம் தமிழ் , சைவநெறி ஆகியவற்றில் c அல்லது அதற்கு மேல் பெற்றோர் சதவீதத்திலும் விட குறிப்பிடத்தக்களவு அதிகமாகும் போது வடமாகாணத்தின் தரநிலை பின் நோக்கி நகர்வதனை அவதானிக்கக் கூடியதாகக் காணப்படுகிறது. வேறுவேறு பாடங்களான மொழி மற்றும் சமயம் என்பன வேறுவேறான கடினச்சுட்டி கொண்டவை. எனவே இவற்றின் பெறுபேறு நிச்சயமாகத் தரநிலையில் தாக்கத்தைச் செலுத்தும். சிங்கள மாணவர்கள் மொழி மற்றும் சமயப் பாடங்களில் c அல்லது அதற்கு மேல் பெறுபவர்களின் சதவீதம் அதிகமாகும் போது அவர்கள் 3C,3S எடுப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றது. ஆனால் தமிழ் மாணவர்கள் மொழி மற்றும் சமயத்திற்கு c அல்லது அதனிலும் அதிகமாகப் பெறுபவர்களின் சதவீதம் சிங்கள மாணவர்களை விடக் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே 3C,3S எடுப்பதற்கான வாய்ப்புகள் சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்களுக்குக் குறைவாகின்றது. வேறுவேறு வினாத்தாள்களில் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தோற்றி அவற்றின் புள்ளிகளை ஒரே நியம அளவீட்டுக்கு மாற்றாமல் தரங்களை இட்டு மாகாண தரவரிசையைக் கணிப்பது புள்ளிவிபரவியல்ரீதியில் தவறானவை. இவற்றின் அடிப்படையில் வடமாகாணம் கல்வியில் பின்னடைந்து விட்டது என்பதும் ஏற்புடையதன்று. வடமாகாணம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் பல பௌதீக , சமூக , பொருளாதார , கலாச்சாரக் காரணிகளையும் தாண்டி க.பொ.த உயர்தரத்;திற்குத் தகுதியுடையோர் சதவீதத்தைப் படிப்படியாக அதிகரிக்கின்றது வடமாகாணத்தின் வளர்ச்சி வீதத்தை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுவது தவறானது ஆகும். ஒப்பீடுகளே மனிதர்களுக்கு உளைச்சலைக் கொடுக்கும் போது சிறுவர்களின் உளநிலையை உளவியல் ரீதியாக சிந்திப்பதும் அவசியமானது.ஆகும்
இதே வேளை தொகுதிப்பாடங்களில் நாடகமும் அரங்கியல் பரதநாட்டியம் போன்ற பாடங்களும் தமிழ் சிங்கள மாணவர்களிடையே வேறுவேறானவை இவ்வாறான வேறு வேறு பாடங்களை கொண்ட பரீட்சையில் 3C,3S அடிப்படையாக சித்தவீதத்தை கணித்து மாகாண தரநிலையை கொண்டு மாகாண கல்வி நிலையை மதிப்பிடுத்தல் எவ் வகையில் சரியான ஒப்பீடு ஆக இருக்க முடியும்.
வடமாகாண க.பொ.த உயர்தரத்துக்குத் தகுதியுடையோர் சதவீத அதிகரிப்பு ஏனைய மாகாணங்களில் க.பொ.த உயர்தரத்துக்குத் தகுதியுடையோர் சதவீத அதிகரிப்பிலும் குறைவானது. எனவே வடமாகாணம் கல்வியில் பின்னடைந்து விட்டது என்று கூறமுடியுமா? இந்த ஒப்பீடுகள் எந்தளவு சரியானவை வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அண்ணளவாக 90,000 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் காணப்படுகின்றன. அதேவேளை நாட்டின் வறுமை கூடிய மாவட்டங்களான முல்லைத்தீவு ,கிளிநொச்சி மற்றும் வவுனியா மன்னார் மாவட்டங்கள் வடமாகாணத்திலே காணப்படுகின்றன. இவ்வாறான பல புறச்சூழல்கள் காணப்படும் மாகாணத்தை மற்றைய மாகாணங்களோடு ஒப்பிடும் முறையே தவறானது.
இன்று கல்வியடைவு என்பது பலராலும் புள்ளிவிபரங்களின் தொகுப்பாகவே நோக்கப்படுகின்றது கடந்த வருடத்தை விட இந்த வருடம் சித்தி வீதம் அதிகம் ஆகவே கல்வியில் முன்னேறியுள்ளோம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் சித்தி வீதம் குறைவு ஆகவே கல்வியில் சரிந்து விட்டோம் என்பதாகவே நோக்கப்படுகின்றது. கற்றல் அடைவு பெரும்பாலும் மாணவர் சார்ந்தது அது மாணவரின் குடும்பம் சூழல் சமூகம் பொருளாதாரம் உளவியல் போன்ற பல்வேறுபட்ட காரணிகள் சார்ந்தவை . இவை தனியாள் வேறுபாட்டுக்கு உட்பட்டவை இது இவ்வாறு இருக்க கடந்த வருடம் கற்ற மாணவர்களின் பெறுபேற்றுடன் இந்த வருடம் கற்ற மாணவர்களின் பெறுபேற்றை ஒப்பிடுவது எவ்வளவு நகைப்புக்கிடமானவை. எதன் அடிப்படையில் இவற்றை ஒப்பிடுவது ஏதாவது புள்ளிவிபரவியல் அல்லது கல்வியியல் அடிப்படைகள் உள்ளனவா?
கடந்த வருட மரக்கறி விலையை இந்த வருடத்துடன் ஒப்பிடுவது போன்றதா கல்வி ஒப்பீடுகள் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தரவுகளை கணணி மென்பொருளில் ஏற்றி சிவப்பு பச்சைகளில் நிறந்தீட்டுவதா கல்வி ஒப்பீடுகள் கல்வி ஒப்பீடுகளின் பின்னால் எவ்வளவோ விடயங்கள் உள்ளன அவற்றை கணணி மென் பொருள்களில் தரவுகளை ஏற்றுவதனால் மாத்திரம் மதிப்பி;ட முடியாது அதற்கு பின்னால் உள்ள சமூக உளவியல் பொருளாதார தனியாள் காரணிகள் பற்றிய பின்புலங்களுடனே தான் நோக்க வேண்டும். வட மாகாண கல்வி வளர்ச்சி வீதத்தையும் தேசிய மட்ட வளர்ச்சி வீதத்தையும் ஒப்பிட்டு வரைபை கிறுவதானால் மாத்திரம் கல்வியடைவை ஒப்பிட முடியாது.அவற்குப் பின்னால் உள்ள காரணிகளை நுணுகி ஆராய வேண்டும்.
இதே வேளை தரநிலையை வைத்து ஒப்பிடுதல் தவறானது ஏன் எனில் முதலாவது நிலைக்கும் இரண்டாவது நிலைக்கும் இடையிலான சித்தி வீத வேறுபாடு மூன்றாம் நான்காம் இடத்துக்கு இடையிலான சித்தி வீத வேறுபாடும் வேறு வேறானவை எனவே தர நிலையானது இந்த மாகாணத்தை விட இந்த மாகாணம் முன்னிலையானது என்பதை தவிர எந்தளவு முன்னிலையானது என்ற தரவைத் தராது. இவைகள் இவ்வாறு இருக்க வடமாகாணம் கல்வியில் சரிந்த விட்டது என பலர் கூப்பாடு போட 2018 ஆண்டு உலக வங்கியும் வறுமை ஒழிப்பு நிறுவகமும் இணைந்து மேற் கொண்ட ஆய்வு ஒன்றில் இலங்கை மாணவர்கள் கல்வியில் 4.7 ஆண்டுகள் பின் நிற்பதாக அறிக்கைப்படுத்தியுள்ளது என்பதும் நோக்கத்தக்கது.
இதைவிட இன்று பல பிரபலமான பாடசாலைகள் 100 சதவீத சித்தி என்று தம்பட்டம் அடிப்பதனை காணமுடியும். இந்த பாடசாலைகளின் மாணவர் சேர்க்கை தொடக்கம் மாணவர்களின் பொருளாதாரப் பின்னனிகளை ஆராய்ந்து பார்த்தால் அந்தப்ப பாடசாலைகள் 100 சதவீத சித்தியை பெறாவிட்டால் தான் தவறு என எண்ணத் தோன்றும். மாணவர்களை வடிகட்டிப் பாடசாலைக்கு எடுத்து விட்டு 100 சதவீத சித்தியை பெறுததில் சாதனைகள் இல்லை இவ்வாறான பாடசாலைப் பெறுபேறுகளை ஏனைய கிராமப்புற பாடசாலைகளின் பெறுபேறுகளுடன் ஒப்பிடும் தவறுகள் திருத்திக் கொள்ளப்பட வேண்டும்.
இது இவ்வாறு இருக்க இன்று பலரும் சில அட்டவணைகளையும் வரைபுகளையும் வரைந்து ஆய்வுக் கட்டுரை என்கின்றனர் ஆய்வு என்பது பல படிமுறைகளைக் கொண்டது கல்வியலில் ஆய்வு என்பது அவசியமானது தான் ஆனால் சமூக விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளும் போது மாறிகளைக் கட்டுப்படுத்தல் என்பது கடினமான காரியம் கூடியனவற்றைக் கவனம் செலுத்தி விஞ்ஞானரீதியான உண்மைகளை உரிய நியமங்களுடன் வெளிக் கொண்டு வந்தாலே அதை ஒரு ஆய்வாகக் கருதலாம் இன்று வட கிழக்கு மாகாணங்கள் பின்னிலையில் இருப்பதாக ஆய்வுகளின்றி ஆர்பரிப்பவர்களுக்கு உரிய பதிலை விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் கண்டறிந்து வெளிக் கொண்டு வந்து அதற்கான முன்மொழிவுகளை மேற்கொள்ள வேண்டிய வடகிழக்கு மாகாணங்களிலுள்ள பல்கலைக் கழக கல்வித்துறை விரிவுரையாளர்கள் அதற்குரிய ஆய்வுகளை மேற் கொண்டுள்ளனரா? எதாவது முன்மொழிவுகளை கல்வி நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளனரா? அவற்றை மேற்கொள்வதற்கான வாண்மைத்துவ தகுதிகளுடன் உள்ளனரா? என்பவை சிந்திப்பதற்குரிய வினாக்கள் ஆகும்.
இது இவ்வாறு இருக்க நவீன கல்வியியல் சிந்தனையாளரும் கல்வி கூடத்தில் இருந்து விடுபடும் சமுதாயம் என்ற நூலின் ஆசிரியருமான இவான் இல்லிச் கூறுவது போல் கற்பித்தலை கற்றலோடு குழப்பி க்கொள்ள கூடாது, என்றும் அதிக புள்ளிகளை பெறுவதை கல்வியோடு குழப்பிக்கொள்ள கூடாது என்றும் பட்டங்களை தகுதியோடு குழப்பிக்கொள்ள கூடாது என்றும் பொலிஸ் தரும் பாதுகாப்பை உறுதி என்றும் படை அணிவகுப்பை தேசிய பாதுகாப்பு என்றும் வணிகப் போட்டியை வளர்ச்சி பணி என்றும் தவறாகக் கொள்ளப்படுகின்றது இதே போல் தான் மாணவர் பெறும் புள்ளியை கல்வி அடைவு என்றும் கொள்கிறோம் என கூறுகின்றார்
கல்வி என்பது பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் கற்றவை எல்லாம் மறந்து போன பின்னர் என்ன மிச்சம் இருக்கிறதோ அதுதான் கல்வி என்கிறார் ஐன்ஸ்ரின். அதே போல் கென் ராபின்சன் கற்றல் என்பது எனக்குள் நடப்பது அதற்கும் என் ஆசிரியருக்கு எவ்வளவு தெரியும் ,ஒரு கேள்வித்தாளில் என்னவரும் என்பதற்கும் சம்பந்தமே இல்லை என்கிறார் யுனெஸ்கோ 21 ஆம் நூற்றாண்டுக் கல்விக்கு நான்கு பிரதான நோக்கங்களை உலகுக்கு அறிவித்தது திறன் தேர்ச்சி அடிப்படையில் கல்வியை பிரித்தது அறிவதற்காக கற்றல் ஆற்றுவதற்காக கற்றல் இணைந்து வாழக்கற்றல் நிலைத்திருப்பதாற்கான கற்றல் என நான்கு பிரதான நோக்கங்களை டோலர் அறிக்கையில் அறிவித்தது இவைகளின் மேம்பாடே 21 நூற்றாண்டின் கற்றல் கற்பித்தல் நோக்கங்கள் என்றும் பரிந்துரைத்தது இது இவ்வாறு இருக்க யுனெஸ்கோவின் 21 ஆம் நூற்றாண்டுக்கான கல்வி நோக்கங்களை மாணவர் அடைந்தார்களா என மதிப்பிட வேண்டிய நாடு இன்றும் 20 ஆம் நூற்றாண்டை தாண்டாத மதிப்பீடுகளை வைத்துக்கொண்டு மாணவர்களையும் பாடசாலைகளையும் கல்விக்கோட்டங்களையும் வலயங்களையும் மாவட்டங்களையும் மாகாணங்களையும் தமக்குள் ஒப்பிடும் முறைகள் நகைப்புக்கிடமானவை
இன்றைய பரீட்சை முறைமையில் 35 புள்ளி எடுத்தவன் சித்தி 34 எடுத்தால் சித்தியில்லை இவ்வாறு 34 க்கும் 35 இக்கும் இடையில் எத்தனை மாணவர்களின் வாழ்க்கைக் கனவுகள் தொலைந்து இருக்கும் என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும் ஒரு பாடப் பரீட்சையில் ஒரு மாணவன் பூச்சியம் புள்ளிகளை எடுத்தால் கூட அவனுக்க அப் பாடம் பற்றிய அறிவு பூச்சியம் என்பது அல்ல வேறு ஒரு பரீட்சையில் அவனால் கூடிய புள்ளிகளை பெறமுடியும் உன்பதனையும் ஒப்பிடுவதற்கு முன் சிந்திக்க வேண்டும். எது எவ்வாறு இருந்த போதும் ஒவ்வொரு மாணவர்களிடமும் வேறு வேறு ஆற்றல்கள் காணப்படும் எனவே ஒவ்வொரு மாணவரையும் மதிப்பிட தனித் தனி தராசு வேண்டும் இன்று ஒரு மாணவன் அறிவைத் தேடிப் பாடசாலைக்கு வர வேண்டிய அவசியம் இல்லை அறிவு இணையம் முழுவதும் கொட்டிக்கிடக்கின்றது. ஒரு மாணவன் தன் திறன்களை வளர்த்துக் கொள்ளத்தான் பாடசாலைக்கு வரவேண்டும். மாணவர்களின் பல்திறன்களுக்கு மதிப்பளிக்கும் மதிப்பீட்டுமுறை சரியாக பின்பற்றப்பட்டால் தோல்வியடையும் மாணவர் என்று ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். ஒப்பீடுகளுக்கும் அவசியம் இருக்காது.
ஆன போதிலும் வடகிழக்கு மாகாணங்கள் கல்வியில் பல படிகள் மேம்பட வேண்டும் அதற்கு ஆரம்பக்கல்வியில் இருந்து தான் முயற்சிக்க வேண்டும் ஆனால் அது நடைபெறப் போவதில்லை பல அதிபர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் நான் ஒய்வு பெற்ற பின்னர் தான் இந்த பிள்ளைகள் க.பொ.த சாதாரணம் க.பொ.த உயர்தரப் பரீட்சை எடுப்பார்கள் என்றே சிந்திக்கிறார்கள் ஆரம்ப பிரிவு மாணவர்களில் எழுத வாசிக்க கூட்ட கழிக்க தெரியாத மாணவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் மேம்படப் போவதில்லை.
இராமச்சந்திரன் நிர்மலன் – ஆசிரியர்.
புற்றளை