இதன் முந்தைய சங்க இலக்கியப் பதிவு- 6 இல் பட்டினப்பாலை பாடிய காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பையும், சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமையையும் பார்த்தோம். ஆனால் 301 அடிகளால் ஆன பட்டினப்பாலை இலக்கியத்தில் முக்கியமான பகுதியை இங்கு உற்று நோக்குவோம்.
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் (பர்மாத் தேக்குப் பொருட்கள்)
“தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்”
என்று வரும் வரிகளானது தென் கடலில் இருந்து முத்துக்களும் கிழக்குக் கடலில் இருந்து சீனப் பட்டும் கங்கையிலிருந்து வாரியும்(செல்வம்) வருவாயும் காவிரி ஆற்றால் விளைந்த பொருள்களும் ஈழத்திலிருந்து உணவும் கடாரத்துப் (பர்மா) பொருள்களும் வந்து குவிந்து கிடக்கும் தெருக்களை உடையது காவிரிப்பூம்பட்டினம் என்று பட்டினப்பாலையில் காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையை கடியலூர் உருத்திரங்கண்ணனார் அவர்கள் பாடுகின்றார்.
ஈழத்துப் பூதந்தேவனார்
சங்க இலக்கியங்களான அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் ஏழு பாடல்களை ஈழத்துப் பூதந்தேவனார் என்னும் புலவர் பாடி இருக்கின்றார். இவர் மதுரை கடைச் சங்கப் புலவருள் ஒருவர். ஈழ நாட்டிலிருந்து பாண்டிய நாடு சென்று மதுரை கடைச் சங்கத்தில் புலவராய் இருந்து இலக்கியம் புனைந்தார். தந்தை ஈழத்துப் பூதன் என்பாரோடு மதுரை வந்து கற்றுப் புலவர் ஆனார் என்றும் கூறுவதுண்டு.
சம்பந்தர், சுந்தரரின் ஈழத்துப் பதிகம்
ஏழாம் நூற்றாண்டு மற்றும் எட்டாம் நூற்றாண்டில் சம்பந்தரும், சுந்தரரும் திருக்கேதீஸ்வரத்தையும் திருக்கோணேஸ்வரத்தையும் பற்றியும் பதிகம் பாடியுள்ளனர். இவர்கள் இலங்கை சென்று அங்கு பாடினார்கள். அல்லது இராமேஸ்வரத் திருக் கரையிலிருந்து தொழுது பாடினார்கள் என்று வெவ்வேறு கருத்துக்களும் உள்ளன.
முத்தொள்ளாயிரத்தில் ஈழம்
ஒன்பதாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழர் காலத்தில் வந்த முத்தொள்ளாயிரம் என்ற சிற்றிலக்கியத்தில், ஈழம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
“தத்து நீர் தன் நெஞ்சை தான் மிதியா
பிற்றையும் ஈழம் ஒரு கால் மிதியா
வருமே”
என்று வரும் அடிகளில் கிள்ளிவளவனின் யானையானது காஞ்சிபுரத்தை ஆக்கிரமித்து பின்னர் வட இந்திய நகரான உஜ்ஜயினியில் ஒரு காலையும் அங்கிருந்து திரும்பி ஈழத்தில் மறு காலையும் வைத்து சோழனின் ஆதிக்கம் தமிழ் நாட்டில் மட்டுமன்றி இந்தியாவிலும் கடல்கடந்து ஈழநாட்டிலும் பரவியிருந்தது என்று பாடப்படுகின்றது.
ஈழம் மட்டுமல்ல, இலங்கை என்ற சொல் கூட பண்டைய தமிழ்ப் பெயர் தான் என்பதை சிறுபாணாற்றுப்படையில் வரும் மாவிலங்கை என்ற சொல் எமக்கு காட்டி நிற்கின்றது. இது தமிழ்நாட்டில் திண்டிவனம் பகுதியில் இருந்திருக்கின்றது. இந்த மாவிலங்கை என்ற நகரை நல்லியக்கோடன் என்ற அரசன் ஆண்டு வந்தான் என்று கூறும் சிறுபாணாற்றுப்படைப் பதிவை நாம் முன்னே பார்த்திருந்தோம்.
சிலப்பதிகாரத்தில் இலங்கை
ஐந்தாம் நூற்றாண்டில் பாடப்பட்ட சிலப்பதிகாரத்தில் “சேர அணும் போர் மடிய தொல் இலங்கை
கட்டு அழித்த”
என்று வரும் அடியில் இலங்கை என்ற சொல்லை இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.
மணிமேகலையில் ஈழத்திலுள்ள சில ஊர்கள் பற்றி குறிப்பிடப்படுகின்றது.
ஆக ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவு சங்க காலம் தொட்டே தொடர்ந்து வந்த தொப்புள் கொடி உறவு என்பது இங்கு தெட்டத் தெளிவாகின்றது.
ஆனால் இதில் என்ன வேதனை என்றால் சங்க காலத்திற்குப் பிறகு 13 ஆம் நூற்றாண்டு வரை எவ்விதமான ஈழத்து இலக்கியப் பாடல்களோ பதிவுகளோ எங்கும் இல்லை.
14 ஆம் நூற்றாண்டில் மட்டுமே சரசோதிமாலை என்ற இலக்கிய நூல் போசராசர் என்ற ஈழத்துப் புலவரால் முதன் முதல் ஈழத்தில் இயற்றப்பட்டது என்கின்றனர். 14ஆம் நூற்றாண்டுக்கு பிறகு வந்த இலக்கியங்கள் கூட சிதைக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காலத்தில் ஞானப்பள்ளு மற்றும் அர்ச். யாகப்பர் அம்மானை என்ற இரண்டு நூல்கள் மட்டுமே உயிர் பெற்றிருந்தன.
இதில் முன்னரே குறிப்பிட்டபடி ஈழத்துப் பூதந்தேவனார் மிகப் பெரும் புலவர். சங்க இலக்கியத்திற்கு தனது பெரும் பங்கை செய்திருக்கின்றார். இவர் ஈழத்தில் இருந்து மதுரைக்கு போய் கடைச்சங்கப் புலவராக இருந்திருக்கின்றார். அப்போ இவரது வழித்தோன்றல்கள் எங்கே? ஈழத்தில் இவரை, இவர் போன்றவர்களை ஆசானாகக் கொண்ட மாணவர்களின் இலக்கியங்கள் எங்கே?
சங்க காலத்தில் இருந்து பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை எந்தவித ஈழத்து இலக்கியப் பாடல்களோ பதிவுகளோ ஏன் தோன்றவில்லை என்ற கேள்வி எம்முள் எழுகின்றது அல்லவா? நிச்சயமாக தோன்றியிருக்கும். ஆனால் அவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
ஜெயஸ்ரீ சதானந்தன்