செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை கோட்டாபயவின் வெளியேற்றமும் ரணில் விக்ரமசிங்கவின் வருகையும் | பேராசிரியர் எம். ஏ. நுஃமான்

கோட்டாபயவின் வெளியேற்றமும் ரணில் விக்ரமசிங்கவின் வருகையும் | பேராசிரியர் எம். ஏ. நுஃமான்

7 minutes read

கோட்டாபய ராஜபக்ஷ 2019ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில்  தெரிவுசெய்யப்பட்டவர். சிங்கள மக்கள் மத்தியில் இஸ்லாமிய பீதியை விதைத்துப் பெற்ற வெற்றி அது என்பது ஒன்றும் ரகசிம் அல்ல. 69 இலட்சம் வாக்காளர்கள் – பெரும்பாலும் சிங்கள பௌத்த வாக்காளர்கள் – அவரைத் தெரிவுசெய்தனர். தங்களுக்கு ஒரு உறுதியான தலைவர் கிடைத்துவிட்டார் என்று மிக ஆரவாரத்துடன் பால்சோறு பொங்கி  அந்தவெற்றியைக் கொண்டாடினர்.

அதை அடுத்து 2020ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றது. மஹிந்த பிரதமரானார். ராஜபக்ச குடும்பம் சிம்மாசனத்தில் ஏறியது. இன்னும் இருபது ஆண்டுகளுக்கு இவர்களை அசைக்க முடியாது, இவர்களே ஆட்சியில் இருக்கப்போகிறார்கள் என்று ராஜபக்சக்களின் விசுவாசியான முன்னாள் அமைச்சர் அலி சப்றி ஒரு கூட்டத்தில் பிரகடனம் செய்தார். இருபது வருடங்கள் இல்லாவிட்டாலும் பத்து வருடங்களாவது பதவியில் இருப்பார்கள் என்று பலரும் நம்பினார்கள். எல்லாம் ஒரு கனவுபோல் இருக்கிறது. இரண்டரை வருடம் முடிய முன்னரே நிலைமை மாறிவிட்டது. வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் – குறிப்பாக சிங்கள பௌத்த பெரும்பான்மையினர், வரலாற்றில் முதல்முறையாக கணிசமான சிறுபான்மையினரின் ஆதரவுடன் – ராஜபக்ஷக்களின் அதிகாரத்துக்கு எதிராகத் திரண்டனர். கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி ஆரம்பித்த  இந்த மக்கள் எழுச்சி மூன்று மாதங்களுக்குள் ஒரு சுனாமிபோல் திரண்டு ஜூலை 9 ஆம் திகதி ராஜபக்சக்களின் ஆட்சியை முற்றிலும் துடைத்தெறிந்தது. கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறினார், ஏனையோர் அரசியல் அரங்கை விட்டு வெளியேறினர். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சர்வாதிகார ஆட்சிகளுக்கு எதிராக, ஊழலுக்கு எதிராக உலகின் பல நாடுகளில் நடைபெற்ற மக்கள் எழுச்சிகளுள் ஒன்றாக இதுவும் வரலாற்றில் பதிவாகிவிட்டது.

இத்துடன் மக்கள் போராட்டத்தின் முதல் கட்டம் பேரழிவுகள் இன்றி சுமுகமாக நிறைவடைந்தது என்று மக்கள் மகிழ்ச்சி அடையலாம்.  ஆனால் அதன் இரண்டாது கட்டம் – ஒரு இடைக்கால சர்வகட்சி ஆட்சியை அமைத்தல், அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துதல், பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாணுதல்  –  அவ்வளவு சுமுகமாக நடைபெறும் என்று தோன்றவில்லை. இந்நாட்டில் நீண்ட காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட கட்சி மைய, கொள்கைப் பிடிப்பற்ற, சந்தர்ப்பவாத,, பதவி ஆசைகொண்ட அரசியல் கலாசாரம்  அதற்குப் பாரிய முட்டுக்கட்டையாக இருக்கப்போகின்றது என்று தெரிகின்றது.

இதில் முக்கியமானது ரணில் விக்கிரமசிங்கவின் வருகை எனலாம். ஜனநாயகரீதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, எவ்வித தார்மீக உரிமையும் இல்லாத விக்கிரமசிங்க எப்படி பிரதமரானார், எப்படி பதில் ஜனாதிபதியானார் எப்படி இடைக்கால ஜனாதிபதியானார் என்பது ஒரு பெரிய கேள்வி. நமது அரசியல் யாப்பில் உள்ள குளறுபடிகளைத் தவிர இதற்கு நியாயமான காரணங்கள் எவையும் இல்லை.

சர்வ வல்லமை உள்ள ஜனாதிபதி ஒருவர், தான் நினைத்த எதையும் செய்யமுடியும் என்ற அடிப்படையில்தான் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குள் நுழைந்த ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி இல்லாத நிலையில் பிரதமர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என்ற யாப்பு விதியின்படிதான் அவர் பதில் ஜனாதிபதியானார். இப்போது இடைக்கால ஜனாதிபதி பதவிக்குப்  போட்டியிட்டு, 134 வாக்குகள் பெற்று, எதிர்பாராத அளவுக்கு  52 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். ராஜபக்சக்களின் விசுவாசிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட, மொட்டுக் கட்சியினரும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த  கணிசமான உறுப்பினர்களும் அவருக்கு வாக்களித்துள்ளனர். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர்களுள் ஒருவரான அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்திலேயே குற்றம் சாட்டியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரணில் பிரதமராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து அவரும் பதவி விலகவேண்டும் என்றே ஆர்ப்பாட்டக் காரர்கள் கோசம் எழுப்பிவந்தனர். அவர் ராஜபக்சக்களின் பாதுகாவலர் என்று குற்றம் சாட்டினர். ரணில் ஜனாதிபதியாகப் பதவி ஏற்ற பின்னர் அவரைப் பத்திரிகையாளர்கள் சந்தித்தபோது நீங்கள் ராஜபக்சக்களின் நண்பர்தானே” என்று ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோது” நான் ராஜபக்சக்களின் நண்பன் அல்ல, நான் மக்களின் நண்பன், நான் எப்போதும் ராஜபக்சக்களுக்கு எதிராகவே இருந்திருக்கிறேன்” என்று அவர் பதில் சொன்னார். ராஜபக்சக்கள் தங்கள் எதிரியை ஜனாதிபதியாக ஆக்குவதற்காகத் தங்கள் மறைவிடத்திலிருந்து பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்றத்துக்கு வந்து வாக்களித்தார்கள் என்பது ஆச்சரியம்தான்.

ரணில் விக்கிரமசிங்க (1949)  செல்வாக்கான குடும்ப, அரசியல் பின்னணி உடையவர். இலங்கைப் பல்கலைக்கழகச் சட்டத்துறைப் பட்டதாரி, அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்று கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி அவரைக் கௌரவித்துள்ளது. 1977 முதல் 2020 வரை 43 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிவகித்தவர். இக்காலப் பகுதியில் துணை அமைச்சராகவும், அமைச்சராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும், அரைகுறையாகவேனும் ஐந்துமுறை பிரதமராகவும் பதவிவகித்தவர். இருமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்.

அசருடைய நீண்டகால அரசியல் அனுபவம் காரணமாக அவருடைய தகுதிக்குமீறிய பல ஐதீகங்கள் (myths  ) அவரைப்பற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளன. அவர் சர்வதேச அரங்கில் செல்வாக்கு மிக்கவர், இன்றைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரேஓருவர் அவர்தான் என்று கோட்டாவால் அவர் பிரதமராக நியமிக்கப்பட்டபோது பலர் நம்பிக்கை தெரிவித்தார்கள். ஆனால் எதிர்காலம் இன்னும் சிக்கலாக இருக்கப்போகிறது என்று எதிர்வு கூறியதைத் தவிர அவரால் எதுவம் செய்ய முடியவில்லை. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சியான அவருடைய அரசியலை நடுநிலையாக மதிப்பிடும் ஒருவர் இலங்கையின் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சிக்கு அவருடைய பங்களிப்பைப் பொறுத்தவரை அவர் காலத்து ஏனைய அரசியல் தலைவர்களைப் போலவே அவரும் ஒரு  தோல்வியடைந்த (unsuccessful) அரசியல் தலைவர்தான் என்ற முடிவுக்கே வரமுடியும்.

அரசியலப் பொறுத்தவரை தனது மாமன் ஜே. ஆரைப் போலவே  அவரும் சர்வாதிகார மனப் போக்குடையவர் எனலாம். 1994ல் கட்சித் தலைமையை ஏற்றபின் அதற்குள் வேறு தலைமைத்துவம் உருவாவதை அவர் அனுமதிக்கவே இல்லை. அதுவே பின்னர் அவருடைய வீழ்ச்சிக்கு வழிகோலியது. அவருடைய விட்டுக்கொடுக்காத மனப்பாங்கினால் 2019 ஜனாதிபதி தர்தலில் அவருடைய கட்சி இரண்டாக உடைய நேர்ந்தது. 2020 பொதுத் தேர்தலில் அவருடைய கட்சி முற்றாகத்  துடைத்தெறியப்பட்டது. 1977ல் ஆறில் ஐந்து பெரும்பான்மை பெற்ற கட்சியில் தலைவர் உட்பட ஒருவரும் வெற்றிபெற முடியவில்லை. அகில இலங்கை ரீதியில் அவருடைய கட்சிக்கு 249435 (2.15%) வாக்குகளே கிடைத்தன. அவர் போட்டியிட்ட கொழும்பு மாவட்டத்தில் அவரது கட்சிபெற்ற மொத்த வாக்குகள் 30875 (2.61%) மட்டுமே. ஒரு காலத்தில் ஐந்து லெட்சம் வாக்குகள் பெற்ற விக்கிரமசிங்க ஐயாயிரம் வாக்குகளே பெற்றார் என்று கூறப்படுகின்றது (சரியான எண்ணிக்கை கிடைக்கவில்லை). 2020 பொதுத் தேர்தலில் ரணில்  நாடளாவிய ரீதியில் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட அரசியல் தலைவரானார். அவருடைய கட்சிக்குத் தேசியப் பட்டியலில் மட்டும் ஒரேஒரு இருக்கை கிடைத்தது. அந்த இடத்துக்கு யாரை நியமிப்பது என்பது பற்றி ஆறு மாதங்களுக்குமேல் இழுபறிப்பட்டு கடைசியில், தானே பாராளுமன்றத்துக்குள் நுழைந்தார். ரணில் விக்கிரமசிங்கவின் சுருக்கமான அரசியல் வரலாறு இதுதான்.

அவர் ஜனநாயக மரபுகளை மதிக்கும் ஒரு அரசியல் தலைவராக இருந்தால் அவர் அப்போதே அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்க வேண்டும் தேசியப் பட்டியலில் வேறு ஒருவரைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக நமது அரசியல் பண்பாட்டில் அந்த நாகரீகத்துக்கு இடம் இல்லை. தேசியப் பட்டியல் மூலம் அவர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட்டது அரசியல்  யாப்பு 99 A சரத்துக்கு முரணானது என்று குற்றம் சாட்டப்பட்டது.

 உண்மையில் தேசியப் பட்டியல் உறுப்புரிமை தொழில் ரீதியான அரசியல்வாதிகளுக்கு உரியதல்ல. தேர்தலில் போட்டியிட விரும்பாத, அல்லது தேர்தலில் போட்டியிட முடியாத, அறிவாளிகள், புலமையாளர்கள், தொழில் வாண்மையாளர்கள் போன்ற சமூகத்தில் உயர்நிலையில் உள்ளவர்களின் சேவையை நாட்டு நலனுக்குப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. ஒரு கட்சி தேர்தலில் வேட்புமனு சமர்ப்பிக்கும்போது  தேசியப்பட்டியல் ஒன்றையும் சமர்ப்பிக்கவேண்டும்.. தேர்தல் முடிவு வெளிவந்த பின் அந்தப் பட்டியலில் உள்ளவர்களையே நியமிக்க வேண்டும். ஆனால் அரசியல் கட்சிகள் அதைக் கடைப்பிடிப்பதில்லை. தமக்குச் சாதகமான வகையில் அரசியல் அமைப்புக்கு முரணாகத் தேர்தல் சட்டத்தை மாற்றிக்கொண்டார்கள். அதன்படி தேசியப் பட்டியலுக்குக் கட்சித் தலைமை விரும்பும் யாரையும் நியமிக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. அவ்வகையிலேயே தேர்தலில் தோல்வியடைந்தவர்களையும் தேசியப் பட்டியலுக்கு நியமிக்கும் முறைகேடான வழக்கம் ஏற்பட்டது. இதை யாரும் கேள்விக்கு உட்படுத்துவதில்லை. இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும் (ஏற்கனவே ரத்னசிறி விக்ரமநாயக்க, விஜயதாச ராஜபக்ச ஆகியோரின் நியமனத்தின் போதும் (2004) அண்மையில் பஸில் ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க இருவரின் நியமனத்தின்போதும்) இது கேள்விக்கு உட்படுத்தப்பட்டது. ஆனால் அது மாற்றப்பட வில்லை.

குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது என்பது போல  நாட்டின் இன்றய இக்கட்டான குழம்பிய சூழலைப் பயன்படுத்தி பிரதமராகவும் இடைக்கால ஜனாதிபதியாகவும் அவர் பதவி ஏற்றுவிட்டார். பொதுத்தேர்தலில் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட, மக்கள் ஆணை இல்லாத ஒருவர் இந்தப் பதவிகளுக்கு எப்படி வந்தார்? இடைக்கால ஜாதிபதியாகவும் தானே வரவேண்டும் என்ற மன ஓர்மை அவருக்கு எப்படி வந்தது? இதுதுான் ஆசியாவின் அதிசயம் என வருணிக்கப்படும் இலங்கையின் ஜனநாயகம். இதை வேண்டுமென்றால் சர்வாதிகார ஜனநாயகம் என்று நாம் பெயரிடலாம். ரணில் விக்கிரமசிங்கவின் தேர்வு சட்டரீதியானது என்று யாரும் வாதிடலாம். அது சரியே அனால் அதற்குத் தார்மீக, ஜனநாயக அடிப்படையும் ஏற்புடைமையும் இல்லை என்பதே பலரின் கருத்தாகும். வழக்கில் உள்ள அரசியல் கலைச் சொல் ஒன்றைப் பயன்படுத்திச் சொல்வதானால் பாராளுமன்றத்தில் நடந்துமுடிந்த ரணிலின் தேர்வை அரசியல் யாப்புரீதியான ஒரு சதிப்புரட்சி (constitutional coup) என்று வர்ணிக்கலாம்.  இன்றைய சர்வாதிகார அரசியல் யாப்பை நீக்கி, புதிய அரசியல் முறை ஒன்ற உருவாக்க வேண்டும் என்பதுற்கு இதைவிடத் தகுந்த காரணம் வேறு ஏதும் தேவை இல்லை..

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ரணில் விக்கிரம சிங்க இப்போது நிறைவேற்று அதிகாரமுடைய  ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு, பதவி ஏற்றிருக்கிறார். ஆயினும் போராட்டக் காரர்கள் இன்னும் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். ஆட்சிமாற்றத்துக்கான அவர்களுடைய கோரிக்கை அப்படியே இருக்கிறது. ரணில் விக்ரமசிங்கவைப் பதவிக்குக் கொண்டுவருவதற்காக அவர்கள் போராடவில்லை. அதிகார வர்க்கத்தினர், அரச ஆதரவாளர்கள் சிலர் கருதுவதுபோல இது வழிதவறிய இளைஞர்களின், ஜனநாயக விரோதிகளின், பாசிச வாதிகளின் போராட்டமல்ல. அதிகார வர்க்கத்தினரால் உலகெங்கும் இத்தகைய மக்கள் எழுச்சிகள் இவ்வாறுதான் அடையாளப்படுத்தப்படுகின்றன. அது தவறான விளக்கமாகும். காலிமுகத் திடலில் உள்ளவர்கள் மட்டுமல்ல போராட்டக்காரர்கள். அவர்கள் அதில் ஒரு சிறு பகுதியினர்தான். முன்னரங்கில் இருப்பவர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட, தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்த இலட்சோப இலட்சம் மக்களின் போராட்டமாக அது கருதப்பட வேண்டும். நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பல்லாயிரக் கணக்கான மக்கள் தெருவில் இறங்கி  எதிர்ப்புத் தெரிவித்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்..  ஜனநாயக உணர்வுகொண்ட முற்போக்காளர்களான ஏராளமான கல்வியாளர்கள், தொழிவாண்மையாளர்கள், தொழிற்சங்க இயக்கங்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள், சிவில் சமூகத்தினர், மதகுருமார் பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற சமூகத்தின் பல்வேறு பிரிவினர்கள் இதற்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.இவர்கள் எல்லோருடைய நோக்கமும் ராஜபக்சக்களை அகற்றிவிட்டு வேறு ஆட்சியாளரைப் பதவியில் இருத்துவதல்ல. பதிலாக, புதிய அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, எல்லோருக்கும் சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்கும் இனவாதமற்ற, ஊழலற்ற மக்கள்நல அரசு ஒன்றை நிறுவுவதுதான் என்பதை பாராளுமன்றத்தில் இருப்பவர்கள் புரிந்துகாள்ள வேண்டும்.. அந்தப் புரிதல் பரவலாக ஏற்பட்டிருப்பதாகத் தெரியவில்ல.

ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகார மனப்பான்மை உடையவர் என்று சொன்னேன். ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் நாற்றுமேடையில் வளர்க்கப்பட்டவர் அவர். 1977ல் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தவர் ஜே. ஆர். தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் அவர் செய்துகொண்ட உடன்பாட்டுக்கு ஏற்ப, பேச்சுவாதர்த்தைகள் மூலம் மிக இலகுவாக அதிகாரப் பகிர்வு மூலம் தேசிய இனப்பிரச்சினைக்கு ஒரு சுமுகமான தீர்வை அவர் கண்டிருக்கமுடியும். ஆனால் அதற்கு அவர் சம்மதமில்லை. 1978ல் புதிய அரசியல் அமைப்பைக் கொண்டுவந்து சர்வ வல்லமை கொண்ட முடிசூடா மன்னராகத் தன்னை நியமித்துக்கொண்டு, தமிழ்விடுதலை இயக்கங்களை அழிப்பதற்கென்றே பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டுவந்து பயங்கரவாதத்தை அழிப்பதற்குப் பதிலாக அதை வலுப்படுத்தி முப்பது ஆண்டு யுத்தத்தில் நாட்டை அழிவுப்பாதையில் இழுத்துவிட்டவர் அவர். ரணில் விக்கிரமசிங்க அவரோடு இணைந்து செயற்பட்டவர். அதே அடக்குமுறை மனப்பாங்குதான் இன்னமும் அவரிடம் இருப்பதாகத் தெரிகின்றது. தற்காலிக ஜனாதிபதியாக அவர் பதவியேற்ற   உடனேயே போராட்டக்காரர்களை பாசிசவாதிகள் என்று பட்டம் சூட்டியதும் ராணுவத்தை ஏவிவிட முயன்றதும் அதன் விளைவுதான். இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியேற்ற 24 மணிநேரத்துக்குள் போராட்டக் காரர்மீது வன்முறையைப் பிரயோகித்து அவர்களை அகற்ற முயன்றதும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறுவதும் அவர் இன்னும் அதே மனப்பாங்குடன்தான் இருக்கிறார் என்பதையே காட்டுகின்றது. இது நாட்டை இன்னும் சிக்கலுக்குள்ளும் நெருக்கடிக்குள்ளும் தள்ளிவிடுவதிலேயே முடியும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.

போராட்டக்கார்களுக்கும் மக்களுக்கும் தனது புதிய கொள்கை செயற்பாடுகள் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி பயன்படுத்த முயலாத படைபலத்தை அதிஷ்டம் அடித்து இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்த முயல்வது புத்திசாலித்தனம் அல்ல.

பேராசிரியர் எம். ஏ. நுஃமான்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More