செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைஆய்வுக் கட்டுரை மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் | நிலாந்தன்

மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டம் | நிலாந்தன்

5 minutes read

2009க்கு பின்னர் வரும் 14-வது மாவீரர் நாள் இது.கடந்த 13 ஆண்டுகளாக தாயகத்தில் மறைவாகவும் வெளிப்படையாகவும் ஏதோ ஒரு விதத்தில் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

நினைவுகூர்தல் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரை அழுவது துக்கிப்பது என்பவற்றிற்கும் அப்பால் ஆழமான பரிமாணங்களைக் கொண்டது. 2009க்கு பின்னரான தமிழ் மக்களின் அரசியல் எனப்படுவது இழப்புக்கு நீதி கோரும் அரசியல்தான்.ஈழப்போரில் இதுவரை கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் வேண்டி முன்னெடுக்கப்படும் ஓர் அரசியல்தான்.நீதிக்கான போராட்டத்தில் நினைவுநாட்கள் பின்வரும் முக்கியத்துவங்களை கொண்டிருக்கின்றன.

முதலாவது முக்கியத்துவம்,அவை உளவியல் அர்த்தத்தில் அல்லது மருத்துவ அர்த்தத்தில் துக்கத்தைக் கொட்டித்தீர்க்கும் சந்தர்ப்பங்கள் ஆகும்.குறிப்பாக வெளிப்படையாக நினைவுகூர முடியாத காலகட்டங்களில், அடக்கப்பட்ட துக்கத்தை வெளியே கொட்டும் சந்தர்ப்பங்களாக அந்நாட்கள் அமைகின்றன. இந்தவகையில் அது ஒரு உளவியல் ஆற்றுப்படுத்தல் நிகழ்வாகும். அடக்கப்பட்ட துக்கமானது ஒரு கட்டத்தில் உடல் நலத்தையும் மன நலத்தையும் பாதிக்கும். வெளிப்படுத்தப்படாத துக்கம் வேறு விதங்களில் ஆவேசமாக வெளிப்படும். எனவே துக்கத்தை வெளி வழிய விடுவது என்பது உளவியல் அர்த்தத்தில் ஒரு ஆற்றுப்படுத்தல் செய்முறைதான். ஒரு கவுன்சிலிங்தான்.

இரண்டாவது முக்கியத்துவம், ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுத்துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்ற வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். நினைவுநாட்கள் தமிழ் மக்களை ஒப்பீட்டளவில் திரளாகக் கூட்டிக் கட்டுகின்றன.தாயகத்திலும் புலம்பெயர்ந்த பரப்பிலும் அவை தமிழ் மக்களை ஒப்பீட்டளவில் ஒரு தேசமாகக் கூட்டிக் கட்டுகின்றன.

தேசியம் என்பது அதன் பிரயோக அர்த்தத்தில் திரளாக்கந்தான். நினைவு நாட்கள் தமிழ் மக்களை எல்லை கடந்து,பிரதேசம் கடந்து, மதம் கடந்து, வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து, ஒரு திரள் ஆக்குகின்றன. அவை தமிழ் மக்களை ஒரு கூட்டமாக திரட்டிக்கட்டும் உணர்ச்சிகரமான நிகழ்வுகள்.

தமிழ் மக்கள் தமது கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றும் போது அது நீதிக்கான போராட்டத்தின் உந்துவிசையாக மாறும்.எனவே அந்த அடிப்படையில் கூறின்,நினைவு கூர்தல் என்பது நீதிக்கான போராட்டத்திலிருந்து பிரிக்கப்படவியலாத ஒரு பகுதி.

மூன்றாவது முக்கியத்துவம்,தாயகத்தைப் பொறுத்தவரை,நினைவு கூர்தலில் ஓர் எதிர்ப்பு இருக்கிறது.அரசாங்கம் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் நினைவு கூர்தலை சட்டப்படி தடுக்கின்றது. அல்லது மறைமுகமாக மிரட்டித் தடுக்கிறது. அல்லது நினைவுச் சின்னங்களை இடித்து அழிக்கின்றது. இவ்வாறு நினைவுச் சின்னங்களை இடிக்கின்ற நினைவு கூர்தலைத் தடுக்கின்ற,ஒடுக்கும் அரசியலுக்கு எதிராக நினைவு கூர்தலுக்கான தமது உரிமையை -கூட்டுரிமையை;பண்பாட்டு உரிமையை-தமிழ் மக்கள் நிலைநாட்டும் களங்களாக அவை காணப்படுகின்றன.

இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை வரலாறு என்பது ஒரு விதத்தில் நினைவுச் சின்னங்களை இடிக்கும் வரலாறும், அவ்வாறு இடிக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை திரும்ப கட்டும் வரலாறுந்தான்.கடந்த 13 ஆண்டுகளாக பல மாவீரர் துயிலும் இல்லங்கள் இலங்கை அரச படைகளின் படைத்தளங்களாக காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒப்பீட்டளவில் பெரிய மாவீரர் துயிலும் இல்லம் கோப்பாயில் காணப்பட்டது. அது இப்பொழுது அப்பகுதிக்கான படைத் தலைமையகமாகக் காணப்படுகிறது.

மாவீரர் துயிலும் இல்லங்கள் மட்டுமல்ல, சிவகுமாரனின் சிலை, தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுச் சின்னம், திலீபனின் நினைவுச் சின்னம் போன்ற பல்வேறு நினைவுச் சின்னங்கள் காலத்துக்கு காலம் இடித்து அழிக்கப்பட்டிருக்கின்றன.ஆனால் அவர்கள் இடிக்க இடிக்க தமிழ் மக்கள் தொடர்ந்து புதிதாக கட்டிக் கொண்டேயிருக்கிறார்கள்.

எனது நண்பர் ஒருவர் கூறுவது போல, இடிக்கப்பட முடியாத, எரிக்கப்பட முடியாத,தடுக்க்கப்பட முடியாத நினைவு கூரும் வழிமுறைகளை தமிழ் மக்கள் கண்டுபிடிக்க வேண்டும்.உதாரணமாக முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை அழித்தாலும், அந்த மைதானத்தில் மக்கள் கூடுவதை தடுத்தாலும், அந்த தடைகளையும் மீறி தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தங்கள் வீடுகளில் தயாரித்து அருந்த முடியும்.தமிழ் மக்கள் கஞ்சி குடிப்பதை யாரும் தடுக்க முடியாது.எல்லாக் குசினிகளிலும் கஞ்சி காய்ச்சப்படுவது என்பது முள்ளிவாய்க்காலில் ஒரு நிலத்துண்டில், ஒரு நினைவுச் சின்னத்தின் முன் கூடியிருந்து அழுவதை விடப் பரவலானது.தமிழ் சிவில் சமூக அமையம் கூறுவது போல உணவு ஆயத்தமாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு காலக்கட்டத்தை நினைவு கூர உணவையே பயன்படுத்துவது.

எனவே நினைவுகளை அழிக்கும் ஓர் அரசியலுக்கு எதிராக,தமிழ் மக்கள் நினைவுகளைப் பேணும் ஓர் அரசியலை தொடர்ச்சியாக விடாது முன்னெடுத்து வருகிறார்கள்.குறிப்பாக 2009க்கு பின்வந்த உடனடுத்த ஆண்டுகளில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் நினைவு கூர்தலை பெருமெடுப்பில் முன்னெடுத்தது. இந்த விடயத்தில் குளறுபடிகளும் ஒற்றுமையின்மையும் உண்டு.தோல்வியை ஏற்றுக்கொள்ளாத ஒரு மனோநிலையும் உண்டு. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல தாயகத்திலும் இப்பொழுது நினைவு நாட்களுக்கு உரிமை கோரி நினைவுச் சின்னங்களை தத்தெடுக்கும் ஓர் அரசியல் தலையெடுக்கப் பார்க்கிறது. அதைத் தனியாக ஆராய வேண்டும். ஆனால் இங்கு முக்கியமாகச் சுட்டிக் காட்டப்படுவது என்னவென்றால், நினைவைக் கண்டு அல்லது ஒரு கூட்டு நினைவைக் கண்டு அஞ்சும் ஓர் அரசியலுக்கு எதிராக நினைவையே ஒரு போராடும் கருவியாக தமிழ் மக்கள் திருப்பிப் பிடிக்கிறார்கள் என்பதுதான். நினைவு கூர்தலுக்குள்ள மிக ஆழமான பரிமாணம் இது. அந்த அடிப்படையில் அரசாங்கம் அனுமதிக்காத எல்லா நினைவு நாட்களும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை போராட்டக் களங்கள்தான்.

நாலாவது முக்கியத்துவம், நினைவு கூர்தல் எனப்படுவது நினைவுகளை அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றது. இதன் மூலம் நினைவின் தொடர்ச்சி மட்டும் பேணப்படவில்லை, ஒரு போராட்டத்தின் தொடர்ச்சி மட்டும் பேணப்படவில்லை, ஒரு மக்கள் கூட்டத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியும் பேணப்படுகிறது. அதாவது தலைமுறைகள் தோறும் நினைவுகளைக் கடத்தும் பொழுது தேசமும் தலைமுறைகள் தோறும் நிலை பேறு உடையதாக மாறுகிறது.

கனடாவில் வசிக்கும் கவிஞர் சேரன் கூறுவது போல முதலாவது தலைமுறை நிலத்தை இழந்தது. ஆனால் மொழியை நினைவுகளை வைத்திருக்கிறது. அந்தத் தலைமுறையிடம் காணப்படும் தாயகத்தை நோக்கிய பிரிவேக்கந்தான் போராட்டத்தின் உந்துசக்திகளில் ஒன்று.ஆனால் இரண்டாவது தலைமுறையைப் பொறுத்தவரை அதனிடம் நிலத்தைப் பற்றிய நினைவுகள் இல்லை. மொழி இரண்டாகிவிட்டது,பண்பாடும் இரண்டாகிவிட்டது.அப்படியென்றால் மூன்றாவது தலைமுறையின் நிலை? இவ்வாறு புலப்பெயர்ச்சியால் திரைந்து போகும் ஒரு தேசம் நினைவு கூர்தலின்போது ஓரளவுக்காவது தன் தொடர்ச்சியைப பேணக்கூடியதாக இருக்குமா?

ஐந்தாவது முக்கியத்துவம்,நினைவுகூர்தல் என்பது யாரை நினைவு கூர்கிறோமோ அந்த தியாகியின் அரசியலைத் தொடர்வது மட்டும் அல்ல, அதைவிட ஆழமான பொருளில் அந்த தியாகியின் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பை அந்த தியாகியில் தங்கி இருந்தவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்வதும்தான்.நாட்டில் எல்லாத் தியாகிகளின் குடும்பங்களும் மகிழ்ச்சியாக நிறைவாக வாழ்கின்றன என்று கூற முடியாது. குடும்பத்தின் அச்சாணி போன்ற பிள்ளை தியாகியான காரணத்தால் குலைந்துபோன குடும்பங்கள் உண்டு. அவற்றிற்கெல்லாம் உதவி வேண்டும்.யாருடைய தியாகத்தை நினைத்து தமிழ் மக்கள் பொது வெளியில் விளக்குகளை ஏற்றுகிறார்களோ, அந்த தியாகிகளின் வீடுகளில் அடுப்பு எரிகிறதா என்றும் பார்க்க வேண்டும். யாருடைய தியாகத்தை நினைத்து தமிழ் மக்கள் பெருமைப்படுகிறார்களோ,அந்த தியாகியின் இளம் மனைவியும் பிள்ளைகளும் கடந்த 13 ஆண்டுகளில் என்னவானார்கள் என்று தேட வேண்டும். எத்தனையோ பெண்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. பல இடங்களில் புதிய திருமணங்களும் கசந்து போய்விட்டன. இது தொடர்பாக யாரிடமும் சரியான புள்ளி விவரங்கள் இல்லை. குடும்பத்தில் அச்சாணி போன்ற நபர் இறந்து போனதால் கைவிடப்பட்ட பெற்றோர் உண்டு ;சகோதரர்கள் உண்டு ; மனைவியர் உண்டு; பிள்ளைகள் உண்டு. எனவே தியாகிகளைப் போற்றுவது என்பது தியாகிகளின் இழப்பினால் அவர்களுடைய குடும்பத்தில் விழுந்த வெற்றிடத்தை நிரப்புவதுந்தான்.பல தியாகிகள் வீட்டைவிட்டு நாட்டுக்காக போராட வந்த பொழுது அவர்களுடைய வீடுகள் எப்படி இருந்தனவோ அப்படித்தான் இப்பொழுதும் இருக்கின்றன. முன்னாள் இயக்கத்தவர்களுக்கும் தியாகிகளின் குடும்பங்களுக்கும் சமூகத்தில் கிடைக்கும் மரியாதையைப் பார்த்துத்தான் அடுத்த தலைமுறை அரசியல் செய்யத் துணியும். இது போன்ற பல விடயங்களை தமிழ் மக்கள் சிந்திப்பதற்கு வேண்டிய சூழலை நினைவு நாட்கள் உருவாக்குகின்றன.

எனவே மேற்சொன்ன காரணங்களை தொகுத்துப்பார்த்தால் நினைவு கூர்தலின் பல்பரிமாணம் தெரியவரும்.அது ஒரு கவுன்சிலிங்.அது ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி.அது ஒரு எதிர்ப்பு. அது ஒரு போராட்டம். அது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுத் துக்கத்தை அரசியல் ஆக்க சக்தியாக மாற்றும் பண்புருமாற்றக் களம். மிலன் குந்தேரா கூறியதுபோல “அதிகாரத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் என்பது, மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டந்தான்”

நிலாந்தன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More