செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை எமது மண்ணை பிரபாகரன் பாதுகாத்தார். நாசப்படுத்தியது நீங்களே! தீபச்செல்வன்

எமது மண்ணை பிரபாகரன் பாதுகாத்தார். நாசப்படுத்தியது நீங்களே! தீபச்செல்வன்

2 minutes read

நேற்றைய தினம், முல்லைத்தீவுக்கு வந்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைவர் பிரபாகரன் பற்றி சிங்களப் பேரினவாதத்தின் பார்வையில் சில வார்த்தைகளைக் கூறியுள்ளார். வடக்கில் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி, நாட்டை நாசப்படுத்தியதைப் போல, முஸ்லீம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி நாட்டை நாசப்படுத்த வேண்டாம் என்று மைத்திரி திருவாய் மலர்ந்துள்ளார்.

நேற்றைய தினம், முல்லைத்தீவில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஆற்றிய உரையில், இன்னொரு விடயத்தையும் அவர் கூறியுள்ளார். முல்லைத்தீவில்தான் காட்டு வளம் நன்றாக இருக்கிறதாம். பாதுகாக்கப்பட்டுள்ளதாம். கடந்த காலத்தில் வடக்கு கிழக்கு காடுகள் தொடர்பிலும் மைத்திரிபால சிறிசேன கருத்துக்களை கூறியது நம்மவருக்கு நன்றாகவே நினைவிருக்கும்.

இலங்கையில் வனவளம் அழிந்திருப்பதாகவும், வடக்கு கிழக்கிலேயே காடுகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும், போர்க்காலத்தில்கூட அவை பாதுகாக்கப்பட்டுள்ளன என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வனவளம் பாதுகாக்கப்பட்டதும், அதற்குப் பிந்தைய சிங்கள இராணுவக் காலத்தில் அந்த வனவளம் அழிக்கப்பட்டிருப்பதும் நாம் தொடர்ந்து சுட்டிக்காட்டும் விடயம்.

விடுதலைப் புலிகளின் காலத்தில், பிரபாகரன் காலத்தில் காடுகள், மரங்கள்கூட பாதுகாக்கப்பட்டன. பிந்தைய காலத்தில் அவை நாசமாக்கப்பட்டுள்ளன என்பதை மைத்திரிபாலவே ஒத்துக்கொள்கிறார். அப்படியிருக்கையில் நேற்றைய தினம் முல்லைத்தீவில் வைத்து அவ்வாறு குறிப்பிடுவது எந்த வித்தில் நியாயமானது?

உண்மையில், பிரபாகரன் காலத்தில் எமது நிலம் பாதுகாக்கப்பட்டது. எமது காடுகள் பாதுகாக்கப்பட்டன. அப்போது ரிசாத் பதியூதீன் வந்து காடுகளை அழித்து தனது ஆதரவாளர்களை குடியேற்றவில்லை. இராணுவத்தினர் காடுகளை அழித்து இன்று பாரிய முகாமிட்டுள்ளனர். கேப்பாபுலவிலிருந்து முல்லைத்தீவு மாவட்டம் முழுவதும் காடுகளை குடைந்து இராணுவம் பாரிய இராணுவத் தளவாடங்களை அமைத்துள்ளது.

ஆனால், அன்றைக்கு விடுதலைப் புலிகள் காடுகளையும் சக போராளிகளாகவே பாதுகாத்தனர். ஒவ்வொரு மரமும் ஒரு போராளி. காடுகள்தான் போராளிகளுக்குப் பாதுகாப்பு. அதைப்போலவே எமது மக்களுக்கும் பாதுகாப்பு இருந்தது. கஞ்சாப் போதைப் பொருள் இல்லை. வாள்வெட்டுக் கலாசாரம் இல்லை. சிங்கள இராணுவ விமானங்கள் வரும் நேரத்தை தவிர எமது மண் அமைதியோடும் நிம்மதியோடும் இருந்தது.

இன்றைக்கு, சிங்கள மக்கள், கொக்கிளாயில் குடியேறி விட்டு, முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் வந்து நின்று, அதற்கு சிங்களப் பெயர் சூட்ட வேண்டும் என்று போராடுகின்றனர். அது சிங்கள நிலம் என்று எமது மண்ணின் அமைதியை கெடுத்து நாசம் செய்கின்றனர். நாங்கள், தென்னிலங்கை சென்று இப்படி ஏதும் செய்கிறோமா? ஏன் எங்கள் நிலத்தில் மாத்திரம் வந்து நின்று இப்படி எல்லாம் அநியாயம் செய்யப்படுகின்றது?

இரண்டொரு நாட்களின் முன்னர் சிங்கள மக்கள் வந்து நின்று முல்லைத்தீவுக்கு எதிராக கூக்குரலிட்டு செல்ல, நேற்று மைத்திரி வந்து இப்படி பேசுகிறார். உண்மையில் மைத்திரியும் சிங்கள மக்களுமே எமது தேசத்தை நாசம் செய்கின்றனர். எமது தேசம் மீதான உங்கள் ஆக்கிரமிப்பை அடாவடியை நிறுத்துங்கள் ஜனாதிபதி அவர்களே. எம்மை கொன்று முள்ளிவாய்க்கால் எங்கும், நந்திக்கடல் எங்கும் வீசிவிட்டு, அதே மண்ணில் வந்து நின்று அநியாயம் பேசாதீர்கள். இதுவே நாசகரமான செயலும் பேச்சும்.

வணக்கம் லண்டனுக்காக தீபச்செல்வன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More