ஈழத்தின் வடக்கில் வயலும் வயல் சூழ்ந்த நிலமும் காட்சியளிக்கும் கிளிநொச்சியில் உள்ள அழகிய கிராமங்களில் ஒன்றுதான் குமரபுரம். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற முன்னோர்களின் சிந்தனையை மனதில் நிறுத்தி இக் கிராமத்தில் வாழ்ந்த அற்புத மனிதர் சுப்பிரமணியம் அவர்கள். தனது இரண்டு கண்களையும் பொது வாழ்வு குறித்தே வரித்துக் கொண்டார். ஒன்று ஊர். மற்றையது கோயில். தன் துணையுடன் ஊருக்காயும் வாழ்ந்த அந்த உன்னத மனிதர்களின் கனவுகள் நிஜமாகின்ற காலம் இதுவாகும்.
பச்சைப் பசேரென்ற கிராமம் குமரபுரம். உழைப்பும் ஊக்கமும் ஆக்கமும் மிகுந்த மனிதர்கள் இந்தக் கிராமத்தவர்கள். குமரபுரத்தின் அடையாளங்களில் ஒன்றுதான் குமரபுரம் ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயம். தமிழர்களின் பண்டைக் கடவுளான குமரன் குடியிருக்கும் இந்த கிராமம், எப்போதும் செழிப்போடும் மகிழ்வோடும் இருந்தது. ஆனாலும் போர் எங்கள் எல்லோரது கனவுகளையும் சூறையாடி பொழுதில் இக் கிராமத்து மக்களும் பெருந் துயரிற்கு முகம் கொடுத்தார்கள்.
ஈழப் போரில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆனையிறவை அண்டியிருந்த குமரபுரம், கடந்த முப்பது ஆண்டுகளாகவே போரின் கொடும் தாக்குதல்களுக்கு உள்ளாகியது. பெரும் கனவுகளுடன் வாழ்ந்த இக் கிராமத்து மக்கள், நிலம் பெயர்ந்து உலகம் எங்கும் அலைந்தனர். போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், இப்போது மீண்டும் தன் பச்சை சிறகுகளை மெல்ல மெல்ல விரித்து வருகின்றது இக் கிராமம். இக் கிராமத்தின் முகமாகிவிட்ட சித்திரவேலாயுதர் ஆலயமும் புதிய தோற்ப் பொலிவுடன் ஊர் மக்களை உயிர்ப்பித்து வருகிறது.
இக் கிராமத்தின் எதிர்கால வாழ்வு இன்னமும் சிறக்க வேண்டும் என்ற நோக்குடனும், கோயிலும் சமூகமும் இணைந்த இக் கிராமத்தின் வாழ்வை இன்னமும் அர்த்தபூர்வாக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடனும் உருவாக்கியுள்ளது சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் மணிமண்டபம். ஒரு பெருந் தந்தையின், ஒரு பெருந் தாயின் நிழலாய் இக் கிராம மக்களுக்கு ஆதரவு அளிக்கும் பெரு வீடு இதுவாகும்.
திரு சுப்பிரமணியம் அவர்கள், குமரபுரம் கிராமத்தின்மீது பெரும் காதல் கொண்டவர். இக் கிராமத்தின் இதயமாக இருக்கும் சித்திரவேலாயுதர் ஆலயத்தின்மீது பெரும் பக்தி கொண்டவர். ஊர் மக்கள்மீது தான் கொண்ட பேரன்பினால் மக்கள் துன்பத்துடன் வரும்போதெல்லாம், கருணையுடன் அவர்களுக்கு உதவினார். ஊரும் கோயிலும் சனங்களும் தன் இதயத்துள் கொண்ட சுப்பிரமணியம் அவர்கள் தனது பிள்ளைகளையும் கிராம, சமூக, தேசப் பற்றுக் கொண்டவர்களாக ஆளாக்கினார்.
ஈழத்தின் மூத்த, தலைசிறந்த எழுத்தாளர் தாமரைச்செல்வியை ஈழத்திற்கு ஈந்தளித்தவர்கள் சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகள். ஈழத்து மக்களின் வாழ்வையும் போராட்டத்தையும் தன் எழுத்துக்களினால் ஆவணங்களாக செதுக்கியவர் தாமரைச்செல்வி. அத்தகைய தந்தையின் நினைவாய்தான் குமரபுரம் சித்திர’வேலாயுதர் ஆலயத்தின் சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபம் திறந்து வைக்கப்படவுள்ளது.
கோயில்கள் சமூகப் பணியை ஆற்றும் சமூக நிறுவனங்கள். இந்த தத்துவத்தை அர்த்தமாக்கின்றது சுப்பிரமணியம் இராசம்மா மணிமண்டபம். ஈழத்தில், அதுவும் கிளிநொச்சியில், தற்காலத்தில் திருமணங்களை நடத்துவது பெரும் பணச்செலவு கொண்டதாக காணப்படுகின்றது. ஏழை எளியவர்களின் திருமணக் கனவுகள் சிதறுகின்ற இக் காலத்தில், இந்த மணிமண்டம் ஒரு கோயிலாகத்தான் இருக்கும். இங்கு திருமணங்களை மாத்திரமின்றி எல்லா விழாக்களையும் நடாத்தலாம்.
அத்துடன் இந்த மணிமண்டபத்தின் வாயிலாக பெறப்படும் நிதி, ஆலய மேம்பாட்டிற்கும் ஏழை மக்களின் வாழ்வாதரத்திற்குமே பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைப்பாளர்கள் கூறுகின்றனர். ஏழை எளிய பிள்ளைகளின் கல்விக்கும் கைகொடுக்கப்படவுள்ளது. மிகவும் தூரநோக்கு கொண்டதாகவும், மக்களுக்கு நிரந்தரமான பயனளிப்பதாகவும் இந்த திட்டம் அமைகின்றது. அத்துடன் மணிமண்டப திறப்பு விழாவினை தொடர்ந்து விசேடமாக இலவசமாக திருமணங்கள் செய்து வைக்கப்படவுள்ளன. அத்துடன் அந்த தம்பதியினருக்கு கைகொடுக்கும் வேறு நற்காரியங்களும் செய்யப்பட இருப்பதும் மகிழ்வானது.
ஊரை உயிரெனக் கொண்ட மனிதனின் எண்ணங்களை உறுதியான நிரந்தரமான ஒரு கோயிலாக இம் மண்ணில் பொறிக்கும் இந்த மணிமண்டபம் காலம் முழுவதும், வரலாறு முழுவதும் ஓர் எளிய மனிதன் கனவின் தடமாக இருக்கும். இம் மண்ணில் பிறந்து வாழும் ஒவ்வொரு மனிதர்களும் இப்படிப் பணிகளை செய்தால், துன்பங்கள் நீங்கி, இன்பம் சூழ்ந்து தெய்வங்கள் ஆசிர்வதிக்கும் வாழ்வை பெருக்கலாம்.
வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன்