தமிழ் மக்கள் தெரி­வித்­தி­ருக்கும் செய்­தியைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்த, முயற்­சிப்பார் ஜனா­தி­பதி என்ற எதிர்வு கூறலை கூட்­ட­மைப்பின் பிர­தான தலை­மைகள் தெரி­வித்து வரு­வதை நாளாந்த செய்­திகள் மூலம் அறியக் கூடி­ய­தா­க­வுள்­ளது.

ஜனா­தி­ப­தியின் அழைப்பு விரைவில் வர­லா­மென்ற எதிர்­பார்ப்பில் கூட்­ட­மைப்­பினர் காத்­தி­ருப்­ப­தாக வெளி­நாட்டு செய்தி சேவைக்கு ஒரு பேட்டி வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. குளத்­துக்குள் கொக்கு ஒன்று ஒற்­றைக்­காலில் நின்று காத்­தி­ருப்­பது போன்ற நிலையை இது உணர்த்­து­கி­றதா அல்­லது ஓடுமீன் ஓட உறுமீன் வரு­ம­ளவும் காத்­தி­ருக்கும் கொக்கின் கதையை கூறு­கி­றதா என்­பது இப்­போ­தைக்கு புரி­யாத விட­யந்தான்.

புதிய ஜனா­தி­ப­தியின் வருகை ஒரு புதிய யுகத்தை நோக்கி நக­ர­வி­ருப்­ப­தாக எல்­லோரும் பேசிக் கொள்­கி­றார்கள். சில பெளத்த தரு­மத்­தி­னரும் பேரி­ன­வாத, தீவி­ர­வாத தலை­வர்­களும் ஜனா­தி­ப­தியின் வெற்­றி­யா­னது பெளத்த மற்றும் சிங்­கள தேசி­யத்தின் வெற்­றி­யாக பெரு­மைப்­பட்டுக் கொள்­கி­றார்கள். இப்­பெ­ரு­மைப்­ப­ட­லுக்கு இன்­னொரு காரணம் சிறு­பான்மை சமூ­கத்தின் ஆத­ர­வின்றி தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார் ஜனா­தி­ப­தி­யென்ற தற் ­பெ­ரு­மை­யா­கவும் இருக்­கலாம்.

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில்தான் ஜனா­தி­ப­தியின் அழைப்பு தங்­களை நோக்கி விரைவில் வரக்­கூ­டு­மென்ற நம்­பிக்­கையை கூட்­ட­மைப்­பினர் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர். கூட்­ட­மைப்பின் இந்த நம்­பிக்கை அல்­லது எதிர்­பார்ப்பு உட­ன­டி­யாக நிறை­வேறக் கூடிய சாத்­தி­யமும் சந்­தர்ப்­பமும் ஏற்­ப­டுமா என்­பது தொடர்­பாக அக­வழி முறையில் புற­நிலை சூழ­லையும் வைத்து ஆராய வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.

முதலில் அக­வழி முறையில் உள்ள கார­ணி­களை ஆரா­ய்ந்தால், ஜனா­தி­ப­தி­ தேர்­தலில் களம் இறங்­கு­வ­தற்கு முன்­னமே, சிறு­பான்மை சமூ­கத்தின் ஆத­ர­வின்றி தேர்­தலில் வெற்றி பெற முடி­யு­மென்ற தனது ஊகத்தை வெளி­யிட்­டி­ருந்­தது மாத்­தி­ர­மன்றி அத்­த­கை­ய­தொரு வெற்­றிக்­கான ஊகங்­களை வகுத்து வந்­ததன் கார­ண­மா­கவே எந்­த­வொரு சிறு­பான்மை தரப்­பினர் சார்ந்த கட்­சி­யையும் தனக்­கான ஆத­ர­வைக்­கோரி அவர் பேச்­சு­வார்த்தை நடத்­த­வு­மில்லை, நடத்­து­வ­தற்­கு­ரிய முயற்­சி­யை  மேற்­கொள்­ள­வுமில்லை.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் தெரி­வித்த ஒரு செய்­தியின் பிர­காரம் தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு முன் தன்னை தனி­யாக அழைத்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போது கூட்­ட­மைப்பின் தலைவர் உட்­பட கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­களின் தலை­வர்­க­ளையும் அழைத்து தாங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­து­வதே பொருத்­த­மான விட­ய­மென தான் ஆலோ­சனை வழங்­கி­ய­போதும் அதை விரும்­பியும் விரும்­பா­மலும் ஏற்றுக் கொண்ட கோத்­த­பாய,  சிங்­கப்­பூ­ருக்குச் சென்று வந்­த­பின்பு நடத்­து­வோ­ம் என்று கூறி­யவர் இது­வரை எங்­களை அழைக்­க­வில்­லை­யென அண்­மையில் பேட்­டி­யொன்றில் தெரி­வித்­தி­ருந்­தமை கவ­னத்தில் எடுத்துக் கொள்­ளப்­பட வேண்­டிய விடயம்.

சுமந்­தி­ரனின் கோரிக்­கைக்கு இது­வரை செவி­ம­டுக்­க­வில்­லை­யென்­பது பல கார­ணங்­களின் அடிப்­படை சார்ந்­த­தாக கருதிக் கொண்­டாலும் தென்­னி­லங்கை மக்­களின் அபிப்­பி­ரா­யங்­களை மீறி அவர் எவ்­வாறு நடந்து கொள்வார் என்­பது சந்­தே­கத்­துக்­கு­ரிய விட­யமே!

இன்­னொரு விடயம், தேர்தல் வேட்­பா­ளர்­களை நோக்கி ஐந்து கட்­சி­களின் 13 அம்ச கோரிக்கையை தமிழ்க்­கட்­சி­கள் முன்­னெ­டுத்தனர். இரு பிர­தான வேட்­பா­ளர்­களும் இந்தக் ­கோ­ரிக்கை தொடர்­பாக நிரா­க­ரித்­துள்­ளார்கள் என்­பது உண்­மை­யாக இருந்­தாலும்  இத்­த­கை­ய­தொரு நிபந்­தனை விதிப்­பா­ளர்­க­ளுடன் தான் எக்­கா­ரணம் கொண்டும் பேசு

­வ­தற்கு தயா­ரில்­லை­யென்­பதை பகி­ரங்­க­மா­கவே மறுத்­தி­ருந்தார். அவ்­வாறு ஏற்றுக் கொள்­வ­தற்­கு­ரிய பாதக, சாதக நிலையைக் கருத்தில் கொண்டே அவ்­வா­றான மறு­த­லிப்பை அவர் தெரி­வித்­தி­ருந்தார் என்­பது சிங்­கள ஆய்­வா­ளர்­களின் கருத்து.

ஆனால் தமிழ்க் கட்­சி­களால் முன்­வைக்­கப்­பட்ட 13 அம்ச கோரிக்­கை­க­ளையும் தமக்கு சாத­க­மாக்கிக் கொண்டு, எதிர்­வேட்­பாளர் தமிழ்க் கட்­சி­களின் கோரிக்­கை­களை ஏற்றுக் கொண்­டு­விட்­டார்கள், சமஷ்டி உரு­வா­கப் ­போ­கி­றது, நாடு பிள­வு­ப­டப்­போ­கி­றது, தமிழ் ராஜ்­ஜி­ய­மொன்று உரு­வாக்­கிக்­கொ­டுக்­கப்­போகும் வேட்­பா­ள­ராக புதிய ஜன­நா­யக முன்­னணி வேட்­பாளர் செயற்­பட்டு வரு­கிறார். வாக்­கு­று­தி­களை நல்கி விட்டார் என்ற எதிர்க்­க­ணியப் பிர­சா­ரங்கள் தென்­னி­லங்கை வேட்­பா­ளர்கள் மத்­தியில் தீபோல் பர­வி­யதன் கார­ண­மா­கவே இந்த வெற்­றியை ஜனா­தி­பதி சுதா­க­ரித்துக் கொண்­டுள்ளார் என்ற விமர்­ச­னங்­க­ளிலும் உண்­மை­ இல்­லா­ம­லில்லை.

இவ்­வா­றான பொது­சன அபிப்­பி­ராயம் வேரூன்றிக் காணப்­ப­டு­கிற ஒரு சூழ்­நி­லை யில் தமிழ்க் கட்­சி­களைப் பேச்­சு­வார்த்­தைக்கு அழைக்­கவோ தமிழ்மக்­க­ளு­டைய பிரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் உட­ன­டி­யாக கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கு­ரிய சூழ்­நிலை உரு­வாக முடி­யுமா என்­பது பல­மான கேள்­விக்­கு­ரிய சந்­தே­கமே.

எனது வெற்­றியில் தமிழ், முஸ்லிம் மக்­களும் பங்­கா­ளி­க­ளாக வேண்டும் என நான் பல­முறை அழைப்பு விடுத்­தி­ருந்தேன். ஆனால் அவர்­களின் ஆத­ரவு கிடைக்கப் பெற­வில்லை. சிங்­கள மக்­களின் ஆத­ர­வி­லேயே நான் வெற்­றி­ பெற்­றுள்ளேன். தேர்­தலில் போட்­டி­யி­டும்­போது சிங்­கள மக்­களின் ஆத­ர­வுடன் வெற்­றி­பெற முடியும் என்­பதை முன்­கூட்­டியே நான் அறிந்­தி­ருந்தேன். இருந்த போதிலும் இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் என்­னுடன் ஒன்றிணைந்து பணி­யாற்ற உங்கள் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கிறேன் என ஜனா­தி­பதி கோத்­த­பாய ராஜபக் ஷ தனது பத­வி­யேற்பு வைப­வத்­தின்­போது சிறு­பான்மை சமூ­கத்­த­வ­ருக்கு அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

அவரின் அ­ழைப்­பா­னது விசு­வா­சமும் தேசியப் பண்பும் கொண்­ட­தாக இருந்­தா­லுங்­கூட, எந்­த­ள­வுக்கு முன்­கொண்டு செல்­லப்­படும் என்­ப­தற்கு கட்­டியம் கூற­மு­டி­யாது. தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை அதிலும் குறிப்­பாக வட­–கி­ழக்கு மக்­களின் தேசியப் பிரச்­சி­னைக்­கான தீர்வு அடிப்­படைப் பிரச்­சி­னைக்­கான தீர்வு என்­பவை சாதா­ரண அல்­லது இல­கு­வான பிரச்­சி­னை­க­ளாக யாரா­லுமே அர்த்­தப்­ப­டுத்தி விட­மு­டி­யாது.

தேசியப் பிரச்­சி­னை­யாக கரு­தப்­படும் இனப்­பி­ரச்­சி­னை­ அது ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டது. அதற்குள் பல்­வேறு விட­யங்கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. அதி­காரப் பகிர்வு, சுய­நிர்­ணய உரிமை, தாயகக் கோட்­பாடு, அதி­கார வலு, வட–­கி­ழக்குப் பிராந்­தியம் என்ற ஏகப்­பட்ட பிரச்­சி­னைகள் உள்­ள­டங்­கிய

ஒரு விட­ய­ ம். இவற்­றுக்கு நிரந்­த­ர­மான தீர்வு காணப்­பட வேண்­டு­மாயின் அர­சியல் சாச­னத்­தி­னூ­டா­கவே காணப்­பட வேண்­டு­மென்­பதை தமிழ்த் தலை­மைகள் அழுத்தம் திருத்­த­மா­கவே கூறி வரு­கி­றார்கள். புதிய அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட்டால் மாத்­தி­ரமே எமது பிரச்­சி­னைக்குத் தீர்வு காண­மு­டி­யு­மென இவ்­வா­ரங்­கூட, கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அழுத்தம் திருத்­த­மாக கூறி­யுள்ளார். இவ்­வா­றான சங்­க­டங்கள் நிலவும் நிலையில் கூட்­ட­மைப்பை அழைத்து புதிய ஜனா­தி­பதி பேசக்­கூ­டிய கருப்­பொருள் எது­வாக இருக்க முடியும் அது­வு­மன்றி சிறு­பான்மை இனத்­த­வ­ரு­ட­னான நல்­லி­ணக்க செயல்­மு­றை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு அபி­வி­ருத்­தியே ஒரே வழி­யென கூறி­வரும் ஜனா­தி­பதி நல்­லி­ணக்க செயற்­பாடு தொடர்­பான விவ­கா­ரங்­களில் அதி­காரப் பகிர்வு பற்­றியோ அர­சியல் சாசன முன்­னெ­டுப்பு தொடர்­பா­கவோ மூச்­சு­வி­ட­வே­யில்லை. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் புதிய அர­சியல் சாசனம் தொடர்­பாக முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலையில் இன்­றைய பிர­த­ம­ரான மஹிந்த ராஜபக் ஷ  தனது கடு­மை­யான எதிர்ப்பை வெளிக்­காட்­டி­யி­ருந்­தமை மறந்­து­விட முடி­யாது. அதுவு­மன்றி புதிய அர­சியல் சாசனம் தொடர்பில் தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் விஷ­மத்­த­ன­மான, விப­ரீ­த­மான பிர­சா­ரங்கள் முன்­வைக்­கப்­பட்­டதன் விளைவே இன்­றைய ஆட்சி மாற்­றத்­துக்­கான கார­ணங்­க­ள் என்ற உண்­மையையும் மறந்­து­விட முடி­யாது. இவ்­வாறு இருக்கும் நிலையில் மீண்­டு­மொரு பேச்­சு­வார்த்­தைக்­கான சூழல் எப்­படி உரு­வாகப் போகி­றது என்­பது கற்­பனை பண்ணிப் பார்க்க முடி­யாத புள்­ளி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது.

இன்­னு­மொரு யதார்த்­த­மான நிலையை தமிழ் தலை­மைகள் விளங்கிக் கொள்ள வேண்­டும். நல்­லி­ணக்க அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்ட காலத்­தி­லி­ருந்த அனைத்து சூழலும் திட்­ட­மிட்ட முறையில் இன்று மாற்­றப்­பட்டு விட்­டது. இது­வொரு துர­திஷ்­ட­மான நிலைதான். பொருத்­த­மான வாய்ப்­பையும் சந்­தர்ப்­பங்­க­ளையும் சாத்­திய சூழ­லையும் நாம் கைந­ழுவ விட்­டு­விட்டோம் என்­ப­தனை நாம் ஏற்­றுத்தான் ஆக வேண்டும். அர­சனை நம்பி புரு­ஷனை கைவிட்­டது போல் சில சிங்­கள தலை­மை­களை நம்­பி­யதன் ஒட்­டு­மொத்த விளை­வையே இன்று நாம் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கிறோம். அவர்கள் கதி­ரையை விட்டு சுதந்­தி­ர­மாக இறங்கி விடை­பெற்று விட்­டார்கள். விடை­பெற ஆயத்­த­மா­கி­றார்கள். ஆனால் வலியைச் சுமக்கும் தலை­மை­க­ளாக தமிழ் தலை­மைகள் ஆளாக்­கப்­பட்டுவிட்­டன.

தென்­னி­லங்கை மக்கள் மத்­தியில் மீண்டும் இனத்­துவ சிந்­த­னைகள் தலை­தூக்க தொடங்கி விட்­டன. பெளத்த அடிப்­ப­டை­வாதம் முளை­விட்டுக் கொண்­டி­ருக்­கி­றது. துட்­ட­கை­முனுவாதம், தன்னை மீள் பார்வை செய்யத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. பெளத்தம் சிங்­களம் என்ற மேலா­திக்கவாதம் மீண்டும் நாட்டை ஆட்சி செய்ய வேண்­டு­மென்ற இனத்­துவக் கருத்­துக்கள் மலிந்து கொண்­டி­ருக்­கிற சூழல் உரு­வாகி வரு­வ­தாக எண்­ணப்­பா­டுகள் தோற்றம் கொண்­டி­ருக்கும் நிலையில் நாட்டில் வாழும் சிறு­பான்மை சமூ­கத்தின் அபி­லா­ஷைகள் செல்லாக் காசா­கி­விடும் என்ற பயமே இன்று காணப்­ப­டு­கின்­றது.

நாம் அடுத்து எதிர்­பார்க்கும் புற­நிலைச் சூழல் பற்­றியும் சிறிது கவனம் செலுத்­து­வோ­மாயின் எமக்கு எஞ்­சி­யி­ருக்கும் ஒரே வழி­யா­கவும் தெரி­வா­கவும் காணப்­ப­டு­வது அயல் நாடான இந்­திய அரசின் அனு­ச­ரணை அழுத்தம் எமக்கு உத­வ­லா­மென்று.

ஜனா­தி­பதி பத­வி­யேற்றுக் கொண்­டதன் பின் தனது முதல் வெளி­நாட்டுப் பய­ண­மாக இந்­தியா சென்­றுள்ளார். பிர­தமர் நரேந்­தி­ர­மோ­டியின் விசேட அழைப்பை ஏற்று அவரின் அயல்­நாட்டு விஜயம் அமைந்­துள்­ளது. இவ்­வே­ளையில் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன்  கருத்­தொன்றை வெளி­யிட்­டுள்ளார். தமிழ் மக்­களின் விட­யத்தில் இலங்கை அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்­பதை பாரதப் பிர­தமர் நரேந்­தி­ர­மோடி, ஜனா­தி­பதியிடம் நிச்­ச­ய­மாக வலி­யு­றுத்­துவார், எனினும் தமிழ் மக்­களின் அர­சியல் தீர்வு விட­யத்தில் இந்­தி­யாவின் ஈடு­பாடு இன்­னமும் அதி­க­மாக இருக்க வேண்டும் என நாம் விரும்­பு­கின்­றோ­மென அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அத்­துடன் சுமந்­திரன் இன்­னு­மொரு ஆரூடத்­தையும் கூறி­யுள்ளார். ஜனா­தி­ப­தியின் இந்­திய விஜ­யத்தின் போது, இலங்கை தமிழ் மக்கள் பிரச்­சினை தொடர்பில் அழுத்தம் பிர­யோ­கிக்­கப்­படும். அவ்­வா­றா­ன­தொரு சூழ்­ நி­லையில் ஜனா­தி­ப­தி­ கூட்­ட­மைப்பை அழைத்துப் பேசு­வ­தற்­கு­ரிய சந்­தர்ப்­ப­மொன்று நிச்­சயம் உரு­வாகும் என்ற நம்­பிக்­கை­யையும் அவர் தெரி­வித்­தி­ருக்­கிறார்.

ஜனா­தி­பதி பத­வி­யேற்­றதன் பின்­னுள்ள முத­லா­வது அயல்­நாட்டு விஜ­ய­மாக காணப்­படும் அவரின் இந்­திய விஜ­யத்­தின்­போது அவ­ருடன் செல்லும் குழுவில் இடம்­பெற்­றி­ருக்கும் ராஜ­தந்­தி­ரி­க­ளாக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பி.பி.ஜெய­சுந்­தர, முன்னாள் ஜனா­தி­ப­தியின் செய­லாளர் லலித் வீர­துங்க, வெளி­வி­வ­கார அமைச்சின் செய­லாளர் ரவிநாத் ஆரி­ய­சிங்க பாது­காப்பு அதி­கா­ரிகள் மூவர் உள்­ள­டங்­கி­யி­ருக்­கி­றார்கள். அதி­கா­ரிகள் மட்ட குழு­வாக இக்­குழு காணப்­ப­டு­கி­றதே தவிர அமைச்­சர்கள் மற்றும் ராஜ­தந்­தி­ரிகள் இதில் சேர்த்துக் கொள்­ளப்­ப­ட­வில்லை.

பொது­வாக முன்­னைய காலங்­களில் இவ்­வா­றா­ன­தொரு விஜ­யத்தின் போது இரண்­டொரு  அமைச்சர்கள் அதிலும் சிறு­பான்மை சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­துவோர், வெளி­வி­வ­கார புல­மைசார் வல்­லுநர்கள் இடம்­பெ­று­வார்கள். இது வழமை. இப்­போ­தைய சூழலில் இந்­தி­யாவின் அழைப்பு இரு­நாட்­டுக்கும் இடை­யி­லான பேச்­சு­வார்த்­தைகள் எது சார்ந்­த­தாக அமையப் போகி­றது என்­பது தொடர்­பாக உட­ன­டி­யாக அனு­மா­னிக்க முடி­யாது.

இந்­தியத் தரப்­பி­னரைப் பொறுத்­த­வரை குறிப்­பாக நரேந்­தி­ர­மோடி பிர­த­ம­ராகப் பத­வி­யேற்றுக் கொண்­டதன் பின்­னுள்ள கடந்­த­கால அனு­ப­வங்­களைக் கொண்டு பார்க்­கையில் இலங்கை தமிழ் மக்கள் பிரச்­சினை தொடர்பில் அவர்கள் காட்­டி­வந்த அக்­க­றையில் ஒரு கையறு நிலையே காணப்­ப­டு­கி­றது. வெறுமனே, “என்னை நம்­பு­கின்­றீர்­களா?”என்ற வார்த்தை ஜாலங்­களைத் தவிர பல­மான எந்த ஆதா­ரங்­க­ளையும் இந்­தியத் தரப்­பி­லி­ருந்து கிடைக்கப் பெற­வில்லை. 13 ஆவது அர­சியல் சாசனம் உரு­வாவ­தற்கு கார­ண­மாக இருந்த இலங்கை இந்­திய ஒப்­பந்தம் இன்னும் அமுலில் இருந்து கொண்­டி­ருக்­கி­றது. இது தொடர்பில் இந்­தி­யாவின் அக்­கறை எவ்­வாறு இருந்­தது என்­பது பற்றி விரி­வாக ஆராய வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் சீனாவின் பிர­சன்­னங்கள் செல்­வாக்­குகள் மேல்­நிலை பெற்று வந்­துள்­ளதை இந்­தியா பார்த்துக் கொண்­டுதான் இருக்­கின்­றது. சில சந்­தர்ப்­பங்­களில் இந்­தி­யாவால் இது சுட்­டிக்­காட்­டப்­பட்­டு­முள்­ளது. இன்­றைய ஜனா­தி­ப­தி­ இவ்­வி­வ­கா­ரத்தை பகி­ரங்­க­மா­கவே ஒப்­புக்­கொண்­டுள்ளார்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வுக்கு 99 வருட குத்­த­கைக்கு முன்னாள் ஜனா­தி­ப­தி, பிர­த­மர் கொடுத்தது மிகப் பெரிய தவறு. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக் காலத்தில்

சீனா­வு­ட­னான இலங்­கையின் நெருங்­கிய ஈடு­பாடு வெறு­மனே வர்த்­தக நோக்­கி­லா­னது. இந்­நிலை மாற்­றப்­பட்­டது பெரிய பாதிப்­புக்­கு­ரிய விடயம். சீனா மாத்­திரம் முத­லீடு செய்­வ­தற்கு அனு­ம­திக்­காமல் இந்­தி­யாவும் ஏனைய முக்­கிய நாடு­களும் இலங்­கையின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு உதவ வேண்டும். இந்­தி­யாவின் பாது­காப்பு நலன்­க­ளுக்கு குந்­தகம் ஏற்­ப­டாமல் இலங்கை நடந்து கொள்ளும் என்ற ஒரு கருத்தை ஜனா­தி­பதி தெரி­வித்­தி­ருக்கும் நிலை­யி­லேயே அவரின் இந்­தியப் பயணம் அமைந்­தி­ருக்­கி­றது.

இப்­ப­யணம் தொடர்பில் பல்­வேறு வித­மான ஆரு­டங்­களும் ஊடகங்­களும் தெரி­விக்­கப்­பட்­டாலும் இந்­தியத் தரப்­பி­னரால் அர­சியல் தீர்வு தொடர்­பிலோ அல்­லது 13ஆவது திருத்­தத்தை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வது சம்­பந்­த­மா­கவோ அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­படுமா என்­பதை பொறுத்­தி­ருந்­துதான் பார்க்க வேண்டும். இருந்த போதிலும் அண்­மையில் இலங்­கைக்கு அவ­ச­ர­மாக விஜயம் செய்­தி­ருந்த ெஜய்­சங்கர் சில விட­யங்­களை வலி­யு­றுத்திச் சென்­றுள்­ள­தாக கூறப்­படும் நிலையில் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் நாட்டில் வாழும் தமிழ்மக்­க­ளுக்கு நீதி­யா­கவும், சுதந்­தி­ர­மா­கவும் வாழ்­வ­தற்கு ஜனா­தி­பதி முன்­னின்று செயற்­பட வேண்டும். இதனை இந்­தி­யாவும் தெளி­வாக கூறி­யுள்­ளது என தெரி­வித்­துள்ளார்.

ஜனா­தி­பதி, தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை அழைத்து தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சினை தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வாரா அவ்­வா­றா­ன­தொரு சந்­தர்ப்பம் உரு­வா­குமா? என்­பது பற்­றிய தர்க்­கத்­துக்கு அப்பால் சில நியாயங்­களும் யதார்த்­தங்­களும் உண்டு என்­பதை அவர் புரிந்து கொள்ள வேண்­டு­மென்­ப­தையே தமிழ்த் தரப்­பினர் சுட்­டிக்­காட்டி வரு­கின்­றார்கள் என்­ப­தே­யுண்மை. அவ்­வ­கையில் தமிழ்மக்­க­ளு­டைய நீண்­ட­காலப் போராட்­ட­மென்­பது அடிப்­படை சார்ந்த ஒரு அர­சியல் பிரச்­சினை. அதற்­கான நிரந்­தரத் தீர்வு காணப்­பட வேண்டும்.

 அவ்­வாறு நிரந்­த­ர­மான தீர்வு காணப்­பட வேண்­டு­மாயின் அர­சியல் சாசனம் ஒன்றின் மூல­மா­கவே காணப்­பட வேண்­டு­மென்ற யதார்த்­தத்தை ஜனா­தி­ப­தி­ புரிந்து கொள்வார் என்­பது எல்­லோரும் நம்­பு­கின்­ற­வி­ட­ய­ம்.

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்கள் அளித்த வாக்­குகள் என்­பது ஒரு தலை­மைக்கு எதி­ரா­கவோ அன்றி குறித்த கட்­சிக்கு எதி­ரா­கவோ அளிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளா­கவோ அன்றி ஒட்­டு­மொத்த எதி­ர­ணி­யி­ன­ரு­டைய வாக்காகவோ கருதிக் கொள்வது என்பது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வாக முடியாது. சிறுபான்மை மக்களின் வாக்குகளை வெற்றி பெற்ற ஜனாதிபதி ஒருவர் பெறவில்லையென்பது அவரை மறுதலித்துப் பார்க்கும் சமூகத்தை அவர் ஆட்கொள்ளவில்லையென்ற கருத்தையே புலப்படுத்தி நிற்கின்றது. குறித்த ஒரு சமூகத்தின் ஆதரவை அல்லது நம்பிக்கையை வெற்றிபெற்ற ஜனாதிபதி பெற முடி யாமல் போயிருப்பது ஜனநாயகத்தின் பலவீனத்தையே எடுத்துக்காட்டுகிறது.

இவ்வாறு ஒரு குழுமத்தவர்கள் அல்லது இனத்தவர்கள் ஆதரவு தரவில்லையென்ற விடயத்தை ஆராய்ந்து பார்ப்பின், அடிப் படையில் அம்மக்களுக்குள்ள பிரச்சினை அது தீர்க்கப்படாமல் நீறுபூத்த நெருப்பாக இன்னும் புகைந்து கொண்டிருக்கிறதென்ற உண்மைத்தன்மையையே வெளிப்படுத்திக் காட்டுகிறது. இவ்வாறானதொரு நிலையில் நீண்டு பயணித்துக் கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டுமென்பதில் புதிய ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்பது அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிற விடயம். இதைத் தீர்ப்பதற்கு திறந்திருக்கும் ஒரே வழிப்பாதை தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிக அனுபவமும் வலிமையும் கொண்ட கட்சியாக விளங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஆழமான பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி துணிவுடனும் திறனுடனும் மேற்கொள்ள வேண்டுமென்பதே தமிழ் மக்களுடைய நியாயமான எதிர்பார்ப்பு.

கடந்துவந்த சூழலையும் இன்றைய அரசியல் சூழலையும் ஒப்பிட்டுப் பார்ப்பின் தமிழ் மக்களுடைய நீண்டகால பிரச்சினைக்கு துணிச்சலுடனும் ஆளுமையுடனும் தீர்வு காணக்கூடிய ஒரு தலைமையாக இன்று நம்பப்படுகிறவர் ஜனாதிபதி கோத்தபாய என்பது பொதுவான அபிப்பிராயம் மாத்திரமல்ல நம்பிக்கையும்கூட, இந்த நம்பிக்கையும் அபிப்பிராயமும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் தமிழ்த் தரப்பினர் எதிர்பார்ப்பதுபோல் அழைத்து உரையாடி நீண்ட காலப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வுகாண ஜனாதிபதி தீவிரமாக செயற்பட வேண்டியது அவசியமாகிறது.

நன்றி – வீரகேசரி