இலங்கை தீவு சுற்றுலா பயணிகளை கவரும் ஒரு அழகிய தீவு மட்டுமல்ல, பல வளங்களை தன்னகத்தை கொண்ட அருமையான ஒரு தேசமாகும். நாட்டின் ஆட்சி அதிகாரத்தை தம்மிடம் வைத்துள்ள சிங்கள பௌத்த அரசு, சிறுபான்மையான தமிழர்களை திட்டமிட்ட வகையில் அழித்தொழிக்கும் இனவழிப்பை கட்டவிழ்த்து விட்டு, அதில் வெற்றியும் கண்டது. பல ஆண்டுகளாக தமிழினத்தை அடிமைப்படுத்தி இனபேதத்தை உருவாக்கி, நிம்மதியாக தமது சொந்த தேசத்தில் வாழ வேண்டிய தமிழினத்தை ஏதிலிகளாக்கியது மட்டுமன்றி, மிலேச்சத்தனமான முறையில் அவர்களை கொன்றொழித்து வந்தது. பல ஆயிரக்கணக்கானவர்களை காணாமல் ஆக்கி உளவியல் ரீதியாக முடக்கி வைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
ஐக்கிய நாடுகள் பொது சபையின் இனப்படுகொலை குற்றத்தை தடுக்கும் மற்றும் தண்டிப்பதற்கான மாநாடு பற்றிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் ஐந்து விடயங்களில் ஏதேனும் ஒன்றை நிரூபிக்கும் பட்சத்தில் இலங்கையில் நடந்தது ஒரு இனப்படுகொலை என நிரூபிக்க முடியும். இனப்படுகொலை என்பது ஒரு தேசிய, இன, அல்லது மதக் குழுவை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றாகும். அதில் முதலாவதாக ஒரு இனத்தை சேர்ந்தவர்களை கொலை செய்தல், இரண்டாவதாக ஒரு இனத்தை சேர்ந்தவர்களுக்கு உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தீங்கிழைத்தல்.
மூன்றாவதாக ஒரு இனத்தினுடைய வாழ்க்கை முறைகளில் வேண்டுமென்றே முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிவை அல்லது குழப்பத்தை ஏற்படுத்துதல்.நான்காவதாக ஒரு இனத்தின் இனவிருத்தியை திட்டமிட்ட வகையில் தடுத்தல். ஐந்தாவதாக ஒரு இனத்திற்குரிய குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறு இனத்திற்கு மாற்றுவது போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட விடயங்களில் ஒன்றை நிரூபித்தாலே, தமிழ் ஈழத்தில் நடை பெற்றது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும்.
1956-ம் ஆண்டில் இருந்து பல வழிகளில் தமிழரை அடிமைப்படுத்தும் முகமாக செயற்படுத்தப்பட்ட முயற்சியின் உச்சகட்டமாக 1983-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசால் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது . அதன் கோரத்தாண்டவத்தால் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் “தமிழர்” என்ற ஒரே காரணத்திற்காகவே ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர். அந்த காலப்பகுதியில் இருந்து தொடர்ச்சியாக அப்பாவிப் பொதுமக்கள் மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் அநியாயமாக கொலை செய்யப்பட்டதுமன்றி, பல வழிகளில் துன்புறுத்தப்பட்டனர். அந்த குரூர சம்பவங்களின் சாட்சிகள் இன்றும் நீதி கிடைக்கப் பெறாமல் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதனை தொடர்ந்து தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தில், இலங்கை அரசாங்கத்தினால் மிலேச்சத்தனமாக பொதுமக்கள் வாழ்விடங்களையும், பாடசாலைகளையும், வைத்தியசாலைகளையும் இலக்கு வைத்து வீசப்பட்ட குண்டுகளிலும், எறிகணை வீச்சுகளிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களும், இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் படிப்பு, வேலை நிமித்தமாக சென்றபோது, கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. இது எல்லாவற்றையும் விட 2009-ல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் அவலம் இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்ட வகையில் ஒரு சிறிய நிலப்பகுதிக்குள் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்களை பாதுகாப்பு வலயம் என அறிவித்து, அதற்குள் சட்டவிரோதமான குண்டுகளை வீசி, நாற்பதாயிரத்திற்கும் அதிகமான மக்களை கொன்றொழித்தது. இது ஒரு கொடூரத்தின் உச்ச கட்டமாகும்.
ஒரு அரசாங்கம் தான் பாதுகாக்க வேண்டிய தமது குடிமக்களை, பாதுகாப்பு பிரதேசம் என நம்ப வைத்து, அதற்குள் வர வைத்தது மட்டுமல்ல, அவர்களுக்கு போதிய உணவுப் பொருட்களை அனுப்பாது பட்டினி சாவுக்கு வழிவகுத்தது. கொத்து குண்டுகளை வீசி மருந்து பொருட்களை தடை செய்து திட்டமிட்டு அப்பாவி தமிழ் மக்களை கொன்றொழித்தது. போதிய அடிப்படை வசதி இன்மையால் தொற்று நோய்களுக்கு உள்ளாகி, கொட்டும் மழைக்குள் அவதியுற்ற அப்பாவி மக்களை ஆட்லறி எறிகணைகளாலும், கிபிர் குண்டுத்தாக்குதல்களாலும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்ததற்கும், உடல் அவயங்களை இழக்க செய்ததற்கும் என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்?
மேற்குறிப்பிட்ட தொடர்ச்சியான திட்டமிட்ட ஒரே இனத்திற்குள் நிகழ்த்தபட்ட மனித படுகொலைகள், உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியமை, ஒரு இனத்திற்கான ஒரு இயல்பு நிலை வாழ்வை சிதைத்து வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்திய காரணிகள் இனப்படுகொலை என்கிற விடயத்துக்குள் அடங்குகிறது. அப்படியிருந்தும் ஏன் சில தமிழர்கள் உட்பட பல சர்வதேச அமைப்புகள் இலங்கையில் நடந்தது ஒரு இனவழிப்பு என ஏற்றுக் கொள்ளவில்லை?
80களில் நிரூபிக்கப்பட வேண்டிய விடயம் ஏதேதோ காரணங்களால் தவற விடப்பட்டதுமின்றி, 2009-ல் பல சாட்சிகளை கொண்டிருந்தும் முன்னெடுக்கபடாதது கவலைக்குரிய விடயமே. இதன் காரணத்தை அலசி ஆராய்ந்து பார்த்தோமானால் தமிழர்களுக்கு இனப்படுகொலை பற்றிய போதிய அறிவு இன்மையும், அதை எப்படி நிறுவுவது என்கிற விழிப்புணர்வு இன்மையும் அந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிய ஒரு குழுவை அமைத்து போதிய தெளிவை பெற்று சரியான வேலை திட்டத்தை வகுக்காததையும் காரணங்களாக கொள்ள முடியும்.
ஒரு நீதிமன்றில் நாம் குற்றவாளியை நிரூபிக்க போதிய சாட்சிகளை வழங்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் நீதிபதிக்கும் ஊர் உலகத்துக்கும் அந்த குறிப்பிட்ட நபர் குற்றவாளி என தெரிந்திருந்தாலும், போதிய சாட்சிகள் இல்லாவிட்டால் வழக்கையே தள்ளுபடி செய்து விடுவார்கள். இதுதான் நிதர்சனம். இது இப்படியிருக்க, தமிழர்கள் தேவையான சாட்சிகளை வழங்கி நடந்தது இனப்படுகொலையே என ஒருமித்த குரலோடு நிரூபிக்க என்ன முயற்சி மேற்கொண்டுள்ளோம்? ரோஹிங்கிய மக்கள் ஆயிரக்கணக்கான வழக்குகளை பதிவு செய்தது மட்டுமன்றி தம்முடைய பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையின் அதியுயர் நீதிமன்றுக்கு கொண்டு சென்று தமது குரலை ஓங்கி ஒலிக்கவைத்து உலகத்தை திரும்பி பார்க்க வைத்தார்கள். உலகமெங்கும் பறந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் எத்தனை வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்? இதிலிருந்து தமிழர்கள் சரியான ஒரு திட்டம் வகுத்து எந்த ஒரு வேலைத்திட்டத்தினையும் காத்திரமாக முன்னெடுக்கவில்லை என்பது நிதர்சனமாகிறது.
ஒவ்வொரு சாக்கு போக்குகளை சொல்லிக் கொண்டு சரியான வேலை திட்டத்தை வகுக்காது, வெறும் பேச்சளவில் மட்டும் பல காரியங்கள் நின்று விடுவதால் தமிழர்கள் பாரிய பின்னடைவை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழர்களே தமக்கு நடந்தது இனப்படுகொலை அல்ல என ஏற்க மறுப்பதுவும், அதனையே பிரச்சாரம் செய்வதுவும் தமிழினத்திற்க்கு எதிரான ஒன்றாகவே மாறியிருக்கிறது என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஐக்கிய நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வரையறைக்குள் முதல் மூன்று விடயங்கள் தமிழ் மக்களுக்கு நடந்தேறியது, அதில் உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி, அவர்கள் அன்றாட வாழ்வை சீர்குலைக்கும் செயல்கள் இன்றும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இதற்கு உதாரணமாக சொந்த காணிகளை மக்களுக்கு வழங்கி, அங்கு குடியேற அனுமதிக்காமல் அவர்கள் அல்லாடவிட்டமை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் விபரம் தொடர்பாக அவர்கள் குடும்பங்களுக்கு அறிவிக்காமல் அந்த குடும்பங்களை உளவியல் ரீதியாக சிதைத்து கொண்டு வருவது போன்ற விடயங்களை குறிப்பிடலாம். தமிழர் வாழும் பகுதியில் மாத்திரம் 80%குமதிகமான இராணுவத்தினரை குவித்து வைத்துள்ளமை மட்டுமன்றி, புதிய புதிய சோதனை சாவடிகளை உருவாக்கி வருகின்றமை எதை குறிக்கிறது?
தமிழர்களாகிய நாம் என்ன செய்யப்போகிறோம் என்பதை சிந்திக்க வேண்டிய காலத்தில் தற்போது இருக்கின்றோம். துவண்டதில் இருந்து மீண்டெழுந்து அறிவுப் பூர்வமாக எம்மினத்தின் விடிவுக்காய் உரிமைக்காய் செயல்பட வேண்டிய நேரம் இது. “எழுந்திருங்கள்! உறுதியுடனும் தைரியத்துடனும் இருங்கள். பொறுப்பு முழுவதையும் உங்கள் தோள்களிலே சுமந்து கொள்ளுங்கள். உங்களின் விதிக்கு நீங்களே காரணம் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.” என்கிற சுவாமி விவேகானந்தாவின் வாக்கினை நினைவுபடுத்தி, புதிய நம்பிக்கையுடன் நம்பாதம் பதிப்போம். வரலாறு படைப்போம். நாளை நமதே !!
ராஜி பாற்றர்சன் (கனடா)