இன அழிப்புக்களை இனக்கலவரம் என்று சொல்லுகிற பழக்கம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. கலவரம் என்பது பரஸ்பரம் தாக்கிக் கொள்ளுகிற செயல். ஆனால் இன அழிப்பு என்பது ஒரு இனத்தை இன்னொரு இனம் தாக்கி அழிக்கின்ற செயல். அப்படி ஒரு நிகழ்வுதான் 1958இல் மே 22ஆம் திகதியிலும் துவங்கியிருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு மே மாதம் என்பது கனத்துப்போனவொரு காலம். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முடிவேறிய நாட்கள். இதே காலத்தில்தான் 1958இனப்படுகொலையும் நடந்திருக்கிறது. சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட முதல் வன்செயல் இது. தமிழர்களை இந்த நாட்டின் பிரஜைகளாக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை வன்முறையால் சொன்ன நிகழ்வு.
1956இல் அப்போதைய இலங்கை பிரதமர் பண்டாரநாயக்கா, தனிச்சிங்களச் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றினார். இது தமிழ் பேசும் மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. சுதந்திரம் பெற்று சில ஆண்டுகளிலேயே, சுதந்திரத்திற்காகவும் ஒன்றுபட்ட இலங்கைக்காகவும் போராடிய தமிழ் மக்களை, பெரும் ஏமாற்றிற்குள் தள்ளிய செயற்பாடு.
தமிழ் மக்களின் மொழி, பொருளாதரம், கல்வி எனப் பலவற்றை பாதிக்கும் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழரசுக் கட்சி போராட்டங்களை நடாத்தியது. இதனையடுத்து கிழக்கில் கல்லோயாவில் 150 தமிழ் மக்களை சிங்கள இனவாதிகள் படுகொலை செய்தனர். தமிழ் – சிங்கள இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் விரிவடையத் தொடங்கின.
தமிழ் மக்களின் உரிமை, அவர்களின் தனித்துவம் பாதிக்கப்படுவதாகவும் தமிழ் இனத்தை ஒடுக்கவே தனிச்சிங்களச் சட்டம் என்றும் அப்போதைய தமிழ் தலைவர்கள் குரல் கொடுத்தனர். இதனையடுத்து தந்தை செல்வாவுக்கும் இலங்கை பிரதமர் பண்டார நாயக்காவிற்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று நடைபெற்றது. இதுவே பண்டா – செல்வா ஒப்பந்தம்.
இலங்கைத் தீவில் காலம் காலமாக ஒரு அரசியல் நடந்து வருகிறது. ஆட்சியில் உள்ள கட்சி தீர்வு ஒன்றை முன்வைத்தால் எதிர்கட்சி அதனை கிழித்தெறிந்து எதிர்க்கும். அப்படித்தான் பண்டா செல்வா ஒப்பந்தத்திற்கும் நடந்தது. அன்றைய எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜெயவர்த்தன குறித்த ஒப்பந்தத்திற்கு எதிராக கண்டிக்கு நடைப்பயணம் மேற்கொண்டதையடுத்து பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.
ஸ்ரீ ஒழிப்புச் செயற்பாடுகள், பண்டார நாயக்காவின் இனவெறுப்பு பேச்சுக்கள் காரணமாக ஏற்பட்ட இன முரண்பாடுகள் தீவிரமடைந்து கலவரமாகவும் பிறகு இன அழிப்பாகவும் மாறியது. இதில் 300 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்று தமிழர்களின் தாயகத்திலும் இவை அரங்கேற்றப்பட்டன.
மே 21 தொடங்கிய இன அழிப்புச் செயல்கள் மே 28வரை நீடித்தது. ஊரடங்கு சட்டம் பிறக்கப்பட்ட பிறகும்கூட தமிழர்கள்மீது தாக்குதல்கள் மிக சுதந்திரமாக முன்னெடுக்கப்பட்டது. தனிச்சிங்கள சட்டமே இந்த தாக்குதலின் பிரதான காரணமாக சொல்லப்படுகிறது. அத்துடன் பண்டா அரசின் செயற்பாடுகளும் ஜே.ஆர். ஜெயவ்த்தனவின் அரசியலுமே சிங்கள மக்களை வன்முறைக்கு தூண்டியதாகவும் கூறப்படுகின்றது.
தனிச்சிங்கள சட்டத்தால் இப்படுகொலைகள் நடந்த பின்னரும்கூட இன்னமும் தமிழ் மொழியை அரச மொழியாக நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. 1958 இனப்படுகொலையை தடுத்திருந்தால் 1983 ஜூலைப்படுகொலைகளையும் அதற்குப் பிந்தைய படுகொலைகளையும்கூட தடுத்திருக்கலாம்.
ஆனாலும், இன உரிமைகளை மறுப்பதற்காகவும் தமிழ் மக்களின் எதிர்புப் போராட்டங்களை முடக்கவும் இனப்படுகொலைகளே வழியாகவும் ஆயுதமாகவும் பயன்படுத்தப்பட்டது என்பதே கசக்கும் உண்மையாகும்.
-கவிஞர் தீபச்செல்வன்