செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரைவிபரணக் கட்டுரை பொலநறுவை காலம்- வரலாற்றில் பன்மைத்தனத்தின் அடையாளம்:  து.ஜெயராஜா 

பொலநறுவை காலம்- வரலாற்றில் பன்மைத்தனத்தின் அடையாளம்:  து.ஜெயராஜா 

6 minutes read

 

ஒரு நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்கள் வாழ்ந்து தமது பண்பாடுகளை சுதந்திரமாய் பேணுவதும், சுதந்திரமான அரசியல்; தெரிவுகளில் ஈடுபடுவதும் பல்லினப்பண்பாட்டை அடையாளப்படுத்தும் விழுமியங்கள். இவ்விடயங்கள் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒரு நாட்டில் நிலவுமாயின் அந்நாடு பல்லினப்பண்பாடு கொண்ட நாடு என நோக்கப்படுகின்றது. இலங்கையில் இன்று பல இனங்கள் வாழுகின்ற போதிலும் அது பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய பல்லினப்பண்பாட்டை இன்னமும் நெருங்கவில்லை. ஆனால் மிக நீண்டகாலமாக இந்நாட்டில் பல இன, மத, மொழி, கலாச்சார அம்சங்களைப் பேணுகின்ற மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றுகளுண்டு.

இலங்கை அரசாங்க அருங்காட்சியகம் 1960ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆவணத்தில் இலங்கை தமிழ், சிங்கள, பறங்கி, முஸ்லிம், செட்டி, மலாய இனங்கள் என பல இனங்களைக்; கொண்ட நாடு என குறிப்பிட்டமையானது குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே இந்நாடு பல இனங்களைக் கொண்ட நாடு என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இதனை பேராசிரியர் சுதர்சன் செனவிரட்ண புராதன இலங்கையில் கூட குறிப்பிட்ட மதம், இனம் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என்கிறார். அக்கால மக்களது பண்பாட்டு உருவாக்கமானது பல்வேறு நாடுகளுடன்; கொண்டிருந்த உறவினால் ஏற்பட்ட தென்பது அவரின் கருத்தாகும். இலங்கையானது நீண்டகாலமாக பல்லினப்பண்பாடு கொண்டதாய் இருந்து வந்துள்ளமையை சரியாக வெளிப்படுத்தும் காலமாகப் பொலநறுவை விளங்குகின்றது. இதனை நிரூபிப்பதற்கு பல்வேறு இலக்கிய தொல்லியல் சான்றுகளுண்டு.

கி.பி.993 தொடக்கம் கி.பி.1215ஆம் ஆண்டுவரை சுமார் 230  ஆண்டுகள் இலங்கையில் நிலவிய சோழர்காலமானது பல விளைவுகளை ஏற்படுத்தியது. அவை பண்பாட்டு ரீதியிலானவையாக அமைந்துள்ளது. பெரும்பாலும் சிங்களப்; பண்பாட்டில் பெரும் பாதிப்பை உண்டுபண்ணியது. ஆயினும் சிங்கள தமிழ் மக்கள் ஒன்றிணைந்து உயர்ந்த நாகரீகம் உருவாக உழைத்தனர். இரு இனங்களுமே தத்தம் பண்பாட்டு வரை பாடுபட்டனர். சுதந்திரமான முறையில் அதனை நடைமுறைப்படுத்தினர். சோழர்கள் வணிக நோக்கிலான படையெடுப்பை மேற்கொண்டிருந்தால் இங்கு வாழ்கின்ற மக்களது ஆதரவைப் பெற்றே ஆட்சி நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. வட இந்தியாவில் அழிக்கப்பட்ட இந்துக்கோயில் செல்வங்களை கொண்டு வந்து தமிழகத்தில் இந்துப்பண்பாடு வளர்த்தனர். ஆனால் கடல் கடந்த நாடுகளில் தாம் கைப்பற்றுகின்ற நாட்டு மக்களது பண்பாடு வரைவும் உழைத்தனர். இலங்கையில் சோழர் காலத்தில் பௌத்தமதத்திற்காக பெரும்பள்ளி அமைக்கப்பட்டது. அத்தோடு சைவமும் தமிழும் மிக உன்னத நிலையை அடைந்தன.

சோழர்களை இலங்கையிலிருந்து அகற்றிய 1ஆம் விஜயபாகு இந்நாட்டின் இனவிடுதலை வீரனாக அவனை காவிய நாயகனாக வைத்துப்பாடப்பட்ட சூளவம்சம் கூறுகின்றது. ஆனால் விஜயன் மேற்கொண்டது இனவிடுதலைப் போராட்டமல்ல. சோழர்கள் வணிக ரீதியிலான படையெடுப்பை மேற்கொண்டிருந்தனர். அதனை முறியடிக்க இலங்கையில் வாழ்ந்த தமிழ், சிங்கள மக்களோடு இணைந்த வகையிலேயே விஜயபாகுவினால் படையெடுக்க முடிந்தது.

உதாரணமாக தென்னிலங்கையிலிருந்து 1055ஆம் ஆண்டு விஜயபாகு சோழருக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பில் தமிழ் தளபதிகளும், தமிழ் படைகளும், படைக்குழுமங்களும் இருந்தள்ளதைக் குறிப்பிடலாம். 1067ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சோழக்கல் வெட்டொன்று விஜயபாகுவின்; படைத்தளபதி குருகுலத்தரையனை கொன்றதாகக் குறிப்பிடுகின்றது. சூளவம்சம் விஜயபாகுவின் படையில் இருந்த தமிழ் தளபதிகளான சள மற்றும் ரவிதேவ போன்றோர் சோழப்படையில் இணைந்ததாகக் கூறுகின்றது. சோழர் தென்னிலங்கை நோக்கி படையெடுக்கையில் அங்கு இரு பாண்டிய இளவரசர்களும், ஒரு வட இந்திய இளவரசனும் இருந்ததாகக் கூறுகின்றது. எனவே இதனை ஒரு இன விடுதலைப் போராட்;டமாக குறிப்பிட முடியாது. அங்கு பல்லினப் பண்பாடு கொண்ட மக்கள் வாழ்ந்துள்ளனர். அவர்கள் அரசியல், படையியல், கலாசார நடவடிக்கையில் சம அந்தஸ்துடன் பங்கெடுத்துள்ளனர்.

இது விஜயபாகு சோழர்களை இலங்கையிலிருந்து அகற்றிய பின்னரும் வெளிப்பட்டிருக்கின்றது. பொலநறுவை வெற்றியின் முன் சிங்கள்படை வீரர்களே கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் தமிழகம் சென்று படையுதவி பெற்று வந்துள்ளனர்.

அடுத்து பொலநறுவையில் நிலவிய பல்லினப் பண்பாட்டின் உச்சமாக விளங்குவது திருமணத் தொடர்புகளாகும். அதாவது விஜயபாகு அரசியல் நலன்களோடு பேணிய திருமணத் தொடர்பு இதனை வெளிக்காட்டி நிற்கின்றது. விஜயபாகு யாரை எதிரியாக கொண்டானோ அந்த குலோத்துங்க சோழனின் மகள் சுந்தரவல்லியை தன் சகோதரி மகன் வீரபாகுவிற்கு திருமணம் செய்து வைத்தான். விஜயபாகு தன் சகோதரி மித்திராவை பாண்டிய இளவரசனுக்கு மணம் முடித்து வைத்தான். அப்பாண்டிய இளவரசனின் மகளின் மகனே 1ஆம் பராக்கிரமபாகு. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட திருமணத் தொடர்புகள் இருந்த உறவு அடிப்படையில் கூட பொலநறுவையில் பல்லினப் பண்பாடு மேன்மை பெற்றதைக் காட்டுகின்றது.

அடுத்து பல்லின பண்பாட்டை சரியாக வெளிப்படுத்தும் மத நடவடிக்கைகளைப் பேணியதிலும் பொலநறுவை பல்லினப் பண்பாட்டைப் பேணியதில் உச்சம் பெற்றுள்ளது. சோழர் ஆட்சிக்காலத்தில் இந்துமதம் மேலோங்கியது. இதற்கு சோழர் காலம் பொலநறுவையில் அமைக்கப்பட்ட இந்து ஆலயங்களும், பிராமணக் குடியேற்றங்களும், இந்து ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட தானங்கள் பற்றிய குறிப்புக்களும் சான்றாகும். ஆனால் பௌத்தமதம் செல்வாக்கிழந்தது. ஆயினும் சோழர் பௌத்தத்தை அழித்தனர் என குறிப்பிட முடியாது. பௌத்த மதத்திற்காக திருகோணமலையில் பெரும் பள்ளியை அமைத்தனர். இது வணிகநோக்கில் அமைக்கப்பட்டதாகும்.

சோழர்களை அடுத்து வந்த விஜயபாகு பௌத்த மதத்தை மேன்மையடையச் செய்தான். ஆனால் சைவத்தையும் ஆதரித்தான். விஜயபாகு அவைக்களத்தில் பிராமணியர் ஆதிக்கம் ஏற்பட்டிருந்தது. விஜயராஜேஸ்வரம், ராஜ ராஜ சதுர்வேதி மங்கலம் போன்ற சைவ மரபுகளை வளர்க்கும் மையங்களை அமைத்தான். பிராமணிய செல்வாக்கு அரச சபையிலும், விழாக்களிலும் முன்னிலை பெற்றது. இதற்கு பொலநறுவை கால அரசர் பௌத்தர்கள் அல்லாத பிராமண குடும்பங்களில் திருமண உறவுகளை ஏற்படுத்தியமை சான்றாகும். விஜயபாகு அயோத்தி இளவரசி லீலாவதி கலிங்க இளவரசி திரிலோக சுந்தரி போன்றோரை திருமணம் செய்தமையைக் குறிப்பிடலாம். திரிலோக சுந்தரி பௌத்தத்திற்கு மாறாக நடந்தாள் எனப்பாளி இலக்கியங்கள் கூறுகின்றன. திரிலோக சுந்தரியின் மகன் விக்கிரமபாகு பௌத்தர் அல்லாத பிராமணப் பெண்ணை மணந்ததால் பிராமணியம் அரச சபையில் செல்வாக்குப் பெற்றது. இவளுக்கு மகனாகப் பிறந்த கஜபாகு ஒரு சைவனாகவே ஆட்சி நடத்தினார். கஜபாகு பிற்கால ஆட்சியில் கோணேஸ்வரம், கந்தளாய், சதுர்வேதி மங்களத்தில் கழித்தான். என்பதற்குப் பல ஆதாரங்களுண்டு. எனவே பொலநறுவைக்காலத்தில் மத அடிப்படையில் பல்லினப் பண்பாடு நிலவியுள்ளது.

பொலநறுவையைச் சூழ தமிழ், சிங்கள மக்கள் செறிந்து வாழ்ந்தமையால் நிர்வாக நடவடிக்கைகளிலும் பல்லினத் தன்மையை பேண வேண்டிய கட்டாயம் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. கல்வெட்டுக்களும், அரச ஆணைகளும் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. முதன்முதலாக சிங்கள மொழியுடன் தமிழும் நிர்வாக மொழியாகிறது. விஜயபாகு, பராக்கிரமபாகு, கஜபாகு போன்றோர் தமிழ் மொழியிலேயே கல்வெட்டுக்களை வெளியிட்டுள்ளனர். இக்காலத்தில் வெளியிடப்பட்ட தமிழ்லிகிதா நூல் தமிழர் பொலநறுவை நிர்வாகத்தில் இடம் பெற்றிருந்தமைக்கு சான்றாகின்றது.

 படைக் கட்டமைப்பிலும் பல்லினத் தன்மை பேணப்பட்டமைக்கு பல சான்றுகள் உண்டு. விஜயபாகு பெருமளவில் தமிழ்ப் படைகளிடையே தங்கியிருந்தான். இக்காலத்தில் வேலைக்காரர், அகப்படியார், வீரக் கொடியார் முதலான படைகள் இங்கு பணியில் அமர்த்திப்பட்டிருக்கின்றனர். இவர்கள் தமிழகத்திலிருந்து வருகை தந்த படையணிகளாகும். அத்தோடு பொலநறுவைக்கால மன்னர்கள் மேற்கொண்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் படையெடுப்புக்களுக்கு இவர்களைப் பயன்படுத்தியுள்ளனர். இவர்கள் தமிழ் அதிகாரிகளின் கீழ் இயங்கினர். விஜயபாகு, வேளைக்காரப் படையில் தங்கியிருந்தான். பொலநறுவைக்கால தந்த தாதுவின் பாதுகாப்புப் பணிகள் இப்படையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. இவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த கஜபாகு, பராக்கிரமபாகு, நிசங்க மல்லன் காலத்திலும் இப்படைப்பிரிவுகள் இருந்தன. பராக்கிரமபாகுவின் பர்மியப்படையெடுப்பு தமிழ்த் தளபதி ஆதித்தன் தலைமையில்; நடைபெற்றது. நிசங்கமல்லனின் படையில் சிங்களப்படை வீரர்களுடன் தமிழ்ப்படை வீரர்களும் இருந்தனர்.

 அடுத்து தமிழ் இனத்தின் முக்கிய மதமான சைவமும், சிங்கள இனத்தின் முக்கிய மதமான பௌத்தமும் பரஸ்பர நல்லுறவை பேணிய வகையில் பல்லினத்தன்மையைப் பேணியுள்ளன. கி.பி. 6ஆம் நூற்றாண்டு தொடக்கம் 10ஆம் நூற்றாண்டு வரையான ஆட்சிக்காலம் பொலநறுவையில் மதவேறுபாட்டை ஏற்படுத்தினாலும் சோழர் ஆட்சியை தொடர்ந்து ஒற்றுமை நிலவியது. சோழர் ஆட்சியில் தமிழகத்ததில் சைவம் முன்னிலை பெற்றிருந்தாலும் பௌத்தம் அறியவில்லை. நாகபட்டணம், இலங்கை போன்றன இக்காலத்தில் பௌத்த பரிமாற்ற மையமாக தொழிற்பட்டது. இக்காலத்தில் இலங்கையிலிருந்த பௌத்த துறவி ஆனந்த வனரத என்பவரிடம் தமிழ் பௌத்த துறவி தீபங்கரர் கல்வி கற்றார். இவரைப் போல காசியப்பர், புத்தமித்திரர், ஆனந்தர், அனுருத்தர் பற்றிய குறிப்புண்டு. அமரதாஸ லியனகே தனது நூலில் தமிழ் பௌத்தர்கள் மதிக்கப்பட்டதையும், தம்பதேனிய தலை நகராக்கப்பட்டபோது பௌத்த சங்கம் சீர்குலையாது இருந்தமைக்கும் தமிழ் நாட்டு பௌத்த துறவிகளின் பங்களிப்பே பிரதான காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே மத கொடுக்கல் வாங்கல் என்ற ரீதியிலும் பொலநறுவைக் காலமானது பல்லினத்; தன்மையைப் பேணியுள்ளது.

பொலநறுவைக்கால நாகரீக வளாச்சியில் அக்காலம் உன்னத வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு அங்கு இன்னும் இருக்கும் கட்டட. சிற்பங்களே சான்றாகும். இங்கு காணப்படும் கட்டடங்களும். சிறபங்களும் தமிழ் சிங்கள மக்களின் கூட்டு முயற்சிக்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டென கூறப்படுகின்றது. இங்குள்ள பௌத்த இந்து கோவில்கள், அரசவைக் கட்டடங்கள் முன்னைய சிங்கள கலைமரபையும், சமகால தென்னிந்திய கலை மரபையும் பிரதிபலிக்கின்றன. தமிழ்ச் சிற்பிகள் இதில் சிங்கள சிற்பிகளுடன் இணைந்து செயற்பட்டனர் என்பதற்கு சமகால பாளி இலக்கியங்கள் சான்றாகும். கட்டடங்களில் எழுதப்பட்ட குறிப்புக்களில்; தமிழ் பங்கெடுத்ததைக் காட்டுவதாக பேராசிரியர் பரண விதான கூறுகின்றார். பேராசிரியர் பண்டார நாயக்க வெளித்தோற்றத்தில் சிங்கள கலைமரபு காணப்பட்டாலும் அதில் பெருமளவு தென்னிந்தியகலை மரபின் தாக்கம் இருப்பதாக கூறுகின்றார். பொலநறுவையில் உள்ள பௌத்த தூபி தமிழர் தூபம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதற்கு அந்த கட்டட சிற்பிகளே முழுமுதற்காரணம்.

தொடர்ந்து வந்த காலத்திலும் பல்லின பண்பாடு மிக உன்னத நிலையடைந்திருந்தமைக்கு அங்கு இன்றும் நின்று நிலைக்கும் பௌத்த, இந்து கட்டட எச்சங்கள் சான்றாகும். இனங்களுக்கிடையே நல்லுறவு இல்லாமல், ஆக்கிரமிப்பு மனோபாவம் மேலோங்கியிருந்தால் அவை மாறி மாறி எழுச்சி பெற்ற இனங்கங்கனால் அழிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு செய்யப்படாமல் இன்று வரை நின்று நிலைக்க பொலநறுவை காலத்தில் நிலவிய பல்லினத் தன்மையே காரணம்.

பொலநறுவைக்கால மக்களும், மன்னர்களும் பேணிய பல்லினப் பண்பாடானது அந்நாகரீகம் சிறப்புப் பெற காரணமாக அமைந்து விட்டது. ஆனால் தொடர்ந்து வந்த இலங்கையின் வரலாற்று யுகங்கள் அதற்கு இடமளிக்கவில்லை. இலங்கையஜல் இரண்டாக பிளவுண்ட இனவுறவு உணர்வுமயப்பட்ட நிpலையில் அழிக்க முடியா குரோதமாக வளர்ந்தது. ஆங்கிலேய படர்ச்சி முடிவில் அது மேலும் விரிவடைந்து கசப்பான இணன்றைய நிலையை உருவாக்கிவிட்டது.

 -து.ஜெயராஜா 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More