தமிழர் மண்ணில் ஒரு மகத்தான விடுதலைப் போராட்டம் நடந்திரா விட்டால் இன்றைக்கு நம்மில் பலர் அழிக்கப்பட்டிருப்போம். கருவிலேயே இல்லாமல் செய்யப் பட்டிருப்போம். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதம் தாங்கி ஒரு போராட்டத்தை முன்னெடுத்து, முப்பது ஆண்டுகள் அதனை நிலத்தில் நிலை நிறுத்தியமையால் தான் தமிழர் மண்ணில் பல கிராமங்கள் இன்னும் ஈழக் கிராமங்களாக இருக்கின்றன. உண்மையில் இன்று ஈழத்தில் நாம் வாழும் வாழ்க்கையும் அனுபவிக்கும் உரிமைகளும் ஈழவிடுதலைப் போராட்டத்தினால்தான் கிடைத்தவை.
பொதுவாக அரச ஊழியர்கள், அரசாங்கத்திற்கு நேர்கமையாக இருக்க வேண்டும் என்பதும் அரசியல் பேசக்கூடாது என்பதும் எழுதப்பட்டாத விதியாகத்தான் இருக்கின்றது. அரச அலுவலகம் ஒன்றில், அரச உயர் பதவியில் இருப்பவர் முதல் சாதாரண உத்தியோகத்தர் வரை, அரசியல் உரிமை மறுக்கப்பட்டவராக கருதப்படுகிறார். உண்மையில் இந்த நிலை வடக்கு கிழக்கில்தான் இருக்கின்றது. தென்னிலங்கையை பொறுத்தவரையில், அரச உத்தியோகத்தர்கள் பலரும் பல்வேறு கட்சிகளிவுலும் கட்சிகளின் தொழிற்சங்கங்களிலும் உறுப்பினராக இருந்துவருவதைப் பார்த்திருக்கிறோம்.
ஆனால் இன்றைக்கு போர் முடிந்து கடந்த பதினொரு ஆண்டுகளில் தமிழ் தேசத்தைப் பொறுத்த வரையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் அரச ஊழியர்களை அச்சுறுத்தி வருகின்றன. இராணுவ, அதிகாரத்தை கொண்டு ஆட்சி செய்ய முனைகின்ற பேரினவாதக் கட்சிகள் அரச ஊழியர்களை அச்சுறுத்தி தமது கட்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஏற்படுத்துகின்றன. அரச ஊழியர்களுக்கு மறைமுகமான அச்சுறுத்தல்களும் நேரடியான அச்சுறுத்தல்களும் விடுக்கப்படுகின்றன. அரச ஊழியர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் தமது ஆதங்கங்களையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளனர்.
என்றாலும்கூட அரச ஊழியர்கள் தமது தீர்க்கமான முடிவுகளை ஒரே குரலில் வெளிப்படுத்தியே வருகின்றனர். தேர்தல்களின் போது அனைத்துப் பொதுமக்களுடனும் ஒரே அணியாக நின்று ஒரே குரலில் தங்கள் முடிவை தெரிவித்து வருகின்றார்கள். குறிப்பாக தமிழின அழிப்பாளர்களை தோற்கடிப்பதிலும் அவர்களது ஆட்சிக்கு முடிவு கட்டுவதிலும் அவர்களின் கட்சிகளைத் தோற்கடிப்பதிலும் அரச ஊழியர்களின் பங்களிப்பு தமிழ் சனத்தின் மனசாட்சியாகவே இருந்து வந்திருக்கின்றது.
அத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்ட காலத்தில் அரச ஊழியர்கள் வழங்கிய பங்களிப்பு என்பது சாதாரண விடயமல்ல. தமது ஊதியத்தை போராட்டத்திற்கு அளித்த பல அரச ஊழியர்கள் உள்ளனர். அத்துடன் ஊதியத்தை போராட்டத்திற்கு அளித்துவிட்டு, களத்தில் நின்று சமராடியவர்களும் உண்டு. அதிபர், ஆசிரியர் என பல உயர் பதவிகளில் இருந்து விட்டு, அதனை விட்டேறிந்து போராட்டத்தில் இணைந்து களத்தில் பல சாதனைகளை செய்து வீரமரணங்களை அடைந்தவர்களும் உள்ளனர். அந்தத் தியாகங்களை வரலாறு ஒருபோதும் மறவாது.
இப்போது ஒரு நெருக்கடியான கால கட்டம். தமிழீழ மக்கள் மிகவும் அவதானத்துடனும் கூர்மையாகவும் சிந்திக்க வேண்டிய தருணம். அன்றைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டிக்காட்டப்பட்ட தலைத்துவம் இன்று வழி தடுமாறிப் போய் நிற்கின்றது. இதுவரை நாளும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் பேசிப் பேசி வாக்குகளை வென்றவர்கள், இன்றைக்கு அந்த மாவீரர்களையும் தலைவரையும் பிழையாகக் காட்டி அரசியல் செய்யத் தொடங்கியுள்ளார்கள்.
அன்றைக்கு தலைவரால் கைகாட்டப்படவர்களை அகற்றியதுடன் தலைவன் சுமத்தி வைத்த கொள்கையையும் இன்று கைவிட்டு, சிங்கள அரசுக்கு துணைபோயிருக்கிறது தமிழ் தலைமைகள் எனச் சொல்லப்பட்டவர்கள். கடந்த காலத்தில் ரணில் – மைத்திரிபால சிறிசேன அரசாங்க காலத்தில், அரச ஊழியர்களின் உரிமைகளை வென்று கொடுத்தார்களா? அல்லது தமிழ் இனத்தின் உரிமைகளை வென்று கொடுத்தார்களா? உண்மையில் தமது தனிப்பட்ட நலன்களை மாத்திரமே இவர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் வெளிப்படையானது.
ரணில் – மைத்திரி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய எமது தலைமைகள், என்ன சொன்னார்கள்? 2015இல் நடந்த தேர்தலில் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி தீர்வை பெறுவோம் என்றார்கள். நடந்த இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை பெற்றுத் தருவோம் என்றார்கள். இப்படிச் சொன்னமையால் தமிழ் மக்கள் வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். போய் இலங்கை அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினார்கள். புதிய அரசியலமைப்பு என்று சொல்லி காலத்தை இழுத்தார்கள். உண்மையில் இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்றால் ஏன் தமிழ் மக்கள் இத்தகைய அழிவுகளை சந்திக்க வேண்டும்? இப்படி பெரிய இழப்புக்களுடன் போராட்ட வேண்டும்?
சர்வதேச தலையீடும் சர்வதேச விசாரணையும் சர்வதேச நீதி வழங்கலும்தானே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வை தரும். இந்த தீவில் புரையோடிப்போன இனப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும். எமது ஆதரவை பெற்ற தமிழ் தலைமைகள் சர்வதேசத்தில் இலங்கை அரசுக்கு கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்து இனப்படுகொலைக்கும் போர்க்குற்றத்திற்கும் ஆதரவுஅளித்தன. அப்படி செய்தமையின் மூலம் ஒரு வரலாற்று தவறும் துரோகமும் இழைக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கண்ணீருக்கும் சாபத்திற்கும் எமது தலைமைகள் ஆளாகியமை இதனால்தானே.
இன்னும் இந்த தலைமையை ஆதரித்தால், அங்கீகரித்தால், இவர்களுக்கு வாக்களித்தால், இனப்படுகொலைக்கான நீதி என்பது கானல் நீராகிவிடும். ஈழத் தமிழினத்தின் விமோசனம் என்பது பொய்கதையாகும். இன்று எம்மிடம் உள்ள ஆயுதம் இனப்படுகொலை. அதற்கு நேர்மையாக இருக்கும் புதிய தலைமையை தேர்வு செய்வோம். இனப்படுகொலைக்கான நீதியை வலியுறுத்துபவர்களுக்கு எமது வாக்குகளை அளிப்போம். மாபெரும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் இனத்தின் விடுதலையும் அமைதியும் இனப்படுகொலைக்கான நீதியை வெல்லுதலில்தான் தங்கியிருக்கிறது.
படித்தவர்களாகிய நாம், புத்திஜீவிகளாகிய நாம் இந்தக் கடமையிலிருந்து ஒதுங்கியிருந்தால், தயங்கியிருந்தால், எமது இனத்திற்கும் சந்ததிகளுக்கும் துரோகம் இழைத்தவர்களாக மாறுவோம். எனவே இம்முறை மிகவும் விழிப்புணர்வுடன் வாக்களிப்போம். எமை காலம் காலமாய் ஏமாற்றுபவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, இனப்படுகொலையை எதிர்ப்பவர்களை, அதற்கான நீதிக்காய் உழைப்பவர்களை பாராளுமன்றம் அனுப்புவோம். நேர்மையானவர்களை தேர்வு செய்து சர்வதேச ரீதியாக எமது நீதியை நிலைநாட்டி உரிமையை வெல்ல வாக்களிப்போம்.