கொரோனா பெருந்தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டோம் என ரஷ்ய ஜனாதிபதி புதின் தெரிவித்துள்ள நிலையில் தடுப்பூசியின் உண்மைத்தன்மை தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது.
உலக நாடுகள் பலவற்றை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் வல்லரசு நாடுகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
குறிப்பாக தடுப்பூசியை முதலில் யார் கண்டுபிடிப்பது என்பது குறித்து ரஷ்யா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி தொடர்பான தகவல்களை திருடுவதாக இந்த வல்லரசு நாடுகள் ஒருவரை ஒருவர் தொடர்ந்து குற்றம்சாட்டியும் வந்துள்ளன.
இதற்கிடையில், நாடுகள் கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசி 3 கட்ட மனித சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனவும்,
3 ஆம் கட்ட பரிசோதனை குறைந்தது 1 மாதங்களுக்கு மேலான பரிசோதனையாக இருக்க வேண்டும் எனவும் 1,000 பேருக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன் செயல்திறன் தொடர்பாக முழுமையான வெற்றி பெற்றிருக்க வேண்டும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியிருந்த ரஷ்யா உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டோம்,
இந்த தடுப்பூசி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுவிட்டது என்றும் தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு தயாராக உள்ளது எனவும் ஜனாதிபதி புதின் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு உலக நாடுகளில் தீயாக பரவவே, 20 நாடுகள் தங்களுக்கு முதலில் தாருங்கள் என முன் பதிவும் செய்துள்ளன.
ஆனால், தடுப்பூசி கண்டுபிடிப்பின் இறுதிகட்டமான 3-ம் கட்ட பரிசோதனைகளை முழுமையாக நிறைவு செய்யாமல் கொரோனா தடுப்பூசியை முதலில் கண்டுபிடித்தது நாங்கள் தான் என்ற வரலாற்று சாதனைக்காக அவசர அவசரமாக ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த தடுப்பூசி குறித்து பேசிய ஜனாதிபதி புதின், உலகில் இது மிகவும் முக்கியமான தருணம்.
தடுப்பூசி திறம்பட செயல்படுகிறது, வலிமையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்பதை நான் அறிவேன்.
நான் மீண்டும் கூறுகிறேன் இந்த தடுப்பூசி தேவையான அனைத்து ஆய்வுகளிலும் வெற்றிபெற்றுள்ளது என புதின் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த தடுப்பூசி ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ரஷ்யாவின் இந்த அதி விரைவு தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார அமைப்பு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.