சுவிஸ் நகரம் ஒன்றில் கற்பனைக்கதைகளில் வருவதுபோல் வானிலிருந்து சொக்லேட் மழை பெய்வதைக் கண்ட மக்கள் சற்று குழப்பமடைந்தார்கள்.
சூரிச்சுக்கும் பேசலுக்கும் நடுவில் அமைந்துள்ள Olten என்னும் நகரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தரையில் அப்படியே கொக்கோ பவுடர் படர்ந்திருக்க, வானிலிருந்து தொடர்ந்து பனிபோல் சொக்லேட் பவுடர் பொழிய, நம்ப முடியாமல் திகைத்த மக்களுக்கு பின்னர் உண்மை தெரியவந்தது.
அந்த நகரில் அமைந்திருக்கும் சொக்லேட் தயாரிக்கும் The Lindt & Spruengli நிறுவனம், தங்கள் சொக்லேட் தொழிற்சாலையின் வெண்டிலேட்டரில் ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாகவே, சொக்லேட் துகள்கள் வெளியேறியதாக தெரிவித்தது.
காற்று வீசியதில், அந்த சொக்லேட் துகள்கள் பரவ, பார்ப்பதற்கு வானிலிருந்து சொக்லேட் மழை பெய்ததைப்போல் காட்சியளித்திருந்திருக்கிறது.
இப்போது அந்த வெண்டிலேட்டர் பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்ட நிலையில், சொக்லேட் படர்ந்த கார் ஒன்றை சுத்தம் செய்ய தாங்கள் பணம் கொடுப்பதாக நிறுவனம் அறிவித்தது.
ஆனால், அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள யாரும் முன்வரவில்லை. ஒருவேளை, கற்பனைக் கதைகளில் மட்டுமே நிகழ சாத்தியமான ஒரு நிகழ்வை உண்மையாக்கிக் காட்டியதால், மக்கள் அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்களோ என்னவோ!