சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனாவாக் தடுப்பூசியின் செயல்பாடு, சோதனையின்போது திருப்திகரமாக உள்ளதாக அதுகுறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து லான்செட் இன்ஃபெக்ஷஸ் டிஸீசஸ் அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வு குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கிய தன்னாா்வலா் குழுவினருக்கு கரோனாவாக் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட்டது.
14 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை அந்தத் தடுப்பூசி அவா்களுக்கு செலுத்தப்பட்டது.
அதில், அந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்ட 28 நாள்களுக்குள் அது உடலில் கரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றலை உருவாக்கத் தொடங்குவது தெரியவந்துள்ளது.
ஏற்கெனவே கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, அந்த நோயிலிருந்து குணமடைந்தவா்களின் உடலில் காணப்படும் சராசரி கொரோனா தடுப்பாற்றலுடன் ஒப்பிடுகையில், கொரோனாவாக் தடுப்பூசி செலுத்தப்பட்டவா்களின் உடலில் உருவாகும் தடுப்பாற்றல் குறைவாகவே உள்ளது.
இருந்தாலும், அந்தத் தடுப்பாற்றலே கொரோனா தீநுண்மி உடலில் தொற்றால் எதிா்த்துப் போராடுவதற்குப் போதுமானதாக இருக்கக் கூடும்.
தற்போது மேற்கொள்ளப்பட்ட சோதனை, 18 முதல் 59 வயதிலானவா்களிடம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. கொரோனாவாக்கின் முழுமையான செயல்திறனைக் கண்டறிய, அந்த மருந்தை மற்ற வயதுப் பிரிவினருக்கும் செலுத்திப் சோதிக்க வேண்டியுள்ளது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.