முற்றுகையிடப்பட்ட காசா பகுதியில் ஹமாஸ் நிலைகளை குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் வான் வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் ஆறு வயதி சிறுமியும் 20 வயதுடைய இளைஞர் ஒருவரம் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உத்தியோகபூர்வ பாலஸ்தீன செய்தி நிறுவனமான வாஃபாவின் கூற்றுப்படி, இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா பகுதியின் கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சனிக்கிழமையன்று தொடர்ச்சியான ஏவுகணைகளை வீசியது, திறந்த விவசாய நிலங்களை சேதப்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டியது.
அத்துடன் இந்த தாக்குதல்கள் கிழக்கு பகுதிகளில் மின்வெட்டுக்களை ஏற்படுத்தியதுடன், குழந்தைகள் மருத்துவமனை, அங்கவீனமாருக்கோன நிலையம் மற்றும் சில குடியிருப்பு கட்டிடங்களின் ஜன்னல்களை உடைத்தது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை இரவு காசாவிலிருந்து இஸ்ரேல் நோக்கி வீசப்பட்ட ராக்கெட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இஸ்ரேலிய விமானப்படை ஹமாஸ் பயங்கரவாத இலக்குகளை தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளது.
தெற்கு இஸ்ரேலிய நகரமான அஷ்கெலோனில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்த சிறிது நேரத்திலேயே, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது வெள்ளிக்கிழமை இரவு ராக்கெட் வீசப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது..
எனினும் இராணுவத்தின் இரும்பு டோம் ஏவுகணை எதிர்ப்பு வான் பாதுகாப்பு அமைப்பால் இந்த ஏவுகணை தடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.