புதிய தனியுரிமை கொள்கை தொடர்பாக பதிலளிக்குமாறு பேஸ்புக், வட்ஸ்அப் நிறுவனங்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட குறுஞ்செய்தி தளமான வட்ஸ் அப், அண்மையில் தனியுரிமை கொள்கையில் மாறுபாடு செய்தது.
ஆனால், இதற்கு கடும் எதிர்ப்புகள் எழவே தனியுரிமை கொள்கை மாறுபட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இதற்கிடையே, வட்ஸ் அப்பின் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி இந்திய உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்றையதினம் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவகாரம் தொடர்பாக இந்திய மத்திய அரசு, வட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றை பதிலளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, மனு மீதான அடுத்த விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.
முன்னதாக விசாரணையின் போது, தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுவதாக கூறிய உயர் நீதிமன்றம், மக்களின் தனியுரிமையை பாதுகாக்க நாங்கள் தலையிட வேண்டியிருக்கும் எனவும் கருத்து கூறியது.