மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் வந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால், சட்டவிரோத குடியேறிகளாக அறியப்படக்கூடிய சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட மியான்மரிகளை நாடுகடத்தக்கூடாது என மலேசிய அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவை மலேசிய அரசு மீறியிருக்கின்றது.
மலேசிய தரப்பில், இதில் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் உள்ளடக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள போதிலும் தற்போது நாடுகடத்தப்பட்டவர்களில் 6 பேர் ஐ.நா. அகதிகள் முகமையிடம் பதிவுச்செய்தவர்கள் என ஐ.நா.தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த குடியேறிகளை அழைத்துக் கொள்வதற்காக மலேசியாவுக்கு மியான்மர் ராணுவத் தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட கப்பல்கள் மூலம் மியான்மர் குடியேறிகள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்த நாடுகடத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் உள்ளிட்ட மனித உரிமைத் தரப்புகள் கோலாலம்பூர் நீதிமன்றத்தை நாடி, நாடுகடத்தல் நடவடிக்கையை தற்காலிக நிறுத்தி வைப்பதற்கான உத்தரவைப் பெற்றிருந்தனர். இந்த உத்தரவினை மீறியே மியான்மரைச் சேர்ந்த குடியேறிகள் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்நாடுகடத்தலை மலேசிய அரசு மேற்கொண்டது மனிதத்தன்மையற்றது என்றும் கொடுமையானது என்றும் மலேசிய ஆம்னெஸ்டி இண்டர்நேஷன்ல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் Katrina Jorene Maliamauv எனத் தெரிவித்திருக்கிறார்.
“மலேசிய அரசின் இந்த செயல் மியான்மர் நாட்டவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டுமல்ல, மலேசிய உயர் நீதிமன்றத்தின் அப்பட்டமாக புறக்கணித்துள்ளது,” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய சட்ட ஆலோசகர் Linda Lakhdhir கூறியுள்ளார்.
மலேசியாவில் ஐ.நா. அகதிகள் முகமையிடம் பதிவுச் செய்த மொத்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 178,610 ஆக உள்ள நிலையில், இதில்
இதில் மியான்மரைச் சேர்ந்தவர்கள் மட்டும் 154,030 ஆக உள்ளது . இந்த எண்ணிக்கையினுள் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் எண்ணிக்கை 102,250 ஆக உள்ளது, சின் இனத்தவர்களின் 22,410 ஆக உள்ளது, இன்னும் பிற இனக்குழுக்களின் எண்ணிக்கை 29,360 ஆக உள்ளது. இவர்கள் அனைவரும் மியான்மரில் உயிர் அச்சுறுத்தல் மிக்க சூழலை எதிர்கொண்டதன் அடிப்படையில் மலேசியாவில் தஞ்சமடைந்தவர்களாவர்.