மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இவ்வாறான தருணத்தில், ஆஸ்திரேலியாவில் விசா காலாவதியாகும் நிலையில் உள்ள மியான்மர் நாட்டவர்களை நாடுகடத்தக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விசா காலாவதியாகும் நிலையில் உள்ள சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மியான்மர் நாட்டவர்களை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எதிர்க்கட்சி தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.
“மியான்மருக்கு திரும்ப விரும்பாதவர்களை மியான்மருக்கு நாடுகடத்தக்கூடாது,” என ஆஸ்திரேலிய அரசுக்கு எழுதியுள்ள தெரிவித்திருக்கின்றனர் வெளிவிவகாரங்கள் தொடர்பான எதிர்க்கட்சியின் பேச்சாளர் பென்னி வாங் மற்றும் உள்துறை விவகாரங்களுக்கான பேச்சாளர் கிறிஸ்டினா கெனிஅலே.
மியான்மரில் மோசமடைந்து வரும் நிலை ஆஸ்திரேலியாவில் மியான்மர் புலம்பெயர் சமூகத்தை கடுமையாகப் பாதித்துள்ளதாகவும அவர்கல் குறிப்பிட்டு இருக்கின்றனர்.
கடந்த பிப்ரவரி மாத கணக்குப்படி, மியான்மரைச் சேர்ந்த 3,366 விசாவாசிகள் ஆஸ்திரேலியாவில் உள்ளனர். அதில் 1,680 பேர் மாணவர்கள், 612 பேர் இணைப்பு விசாக்களில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதனால் ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் உள்ள மியான்மர் நாட்டவர்களின் தங்கும் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறோம்,” என ஆஸ்திரேலியாவின் முக்கிய அமைச்சர்களுக்கு எழுதப்பட்டுள்ள எதிர்க்கட்சி தரப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.