துருக்கியில் உக்ரைனுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எவ்வித முன்னேற்றங்களும் காணப்படவில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு இன்று விளக்கமளித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மேலும் முன்னேற்றம் குறித்த எந்த நம்பிக்கையும் தமது நாட்டுக்கு இல்லை என்று குறிப்பிட்டார்.
நேற்றைய சந்திப்பின்போது, ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை கெய்வ் மற்றும் செர்னிஹிவில் குறைக்க விரும்புவதாகக் கூறியது.
அதேநேரம் உக்ரைன் “நடுநிலை” நாடாக மாறுவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியிருந்தது.
இந்தநிலையில் உக்ரைனிய தரப்பு குறைந்த பட்சம் அது முன்மொழிவை எழுத்து மூலம் முன்வைத்தமையே சாதகமான விடயமாக இருந்தது என்று பெஸ்கோவ் கூறியுள்ளார்.
இதனை தவிர மிகவும் நம்பிக்கைக்குரிய எதுவும் இல்லை என்று அவர் இன்டர்ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை 2014 இல் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரிமியா பிராந்தியமானது “ரஷ்யாவின் ஒரு பகுதியாகும். எனவே அது தொடர்பில் வேறு யாருடனும் விவாதிப்பதை ரஷ்ய அரசியலிமைப்பு ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்.