களவாடப்பட்ட சார்ல்ஸ் டார்வின் எழுதிய இரு குறிப்புப் புத்தகங்கள் 22 ஆண்டுகளுக்குப் பின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு மர்மமான முறையில் மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளன.
டார்வினின் ‘உயிர்மரம்’ வரைபடத்தை உள்ளடக்கிய தோலால் கட்டப்பட்ட இந்த சிறிய புத்தகங்கள் பல மில்லியன் டொலர்கள் பெறுமதி கொண்டதாகும்.
‘நான் மகிழ்ச்சியில் உள்ளேன்’ என்று பல்கலைக்கழகத்தின் நூலகர் கலாநிதி ஜெசிகா கார்ட்னர் தெரிவித்தார். ‘அவை பாதுகாப்பானதாகவும், நல்ல நிலையிலும் உள்ளன’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கையெழுத்துப் பிரதிகளை புகைப்படம் எடுப்பதற்கு நூலகத்தின் சிறப்பு சேகரிப்புகள் அறையில் இருந்து அகற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்ட பின்னர் 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதமே கடைசியாக இவைகளை காண முடிந்துள்ளது.
கலபகோஸ் தீவுகளில் இருந்து டார்வின் திரும்பிய பின்னரான இந்த குறிப்புப் புத்தகம் 1830களின் பிற்பகுதியைச் சேர்ந்ததாகும். இதில் ஒரு பக்கத்தில் அவர் வரைந்துள்ள மரத்தின் படம், அவரின் பரிணாம கோட்பாட்டுக்கு உதவியுள்ளது.