செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சீனாவின் உளவுத்துறைக்கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் | சீமான்

சீனாவின் உளவுத்துறைக்கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் | சீமான்

2 minutes read

சீனாவின் உளவுத்துறைக்கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டுள்ள பெரும் அச்சுறுத்தல் எனக் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது “சீன நாட்டின் உளவுத்துறைக்கப்பல் இலங்கையில் அந்நாட்டு அரசின் அனுமதியுடன் நிலைகொள்ளவிருக்கும் நிலையிலும் இந்தியாவை ஆளும் பாஜக அரசு தனது வலிமையான எதிர்ப்பினைப் பதிவுசெய்யாது வாய்மூடிக்கிடப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கை நாடும், சிங்கள ஆட்சியாளர்களும் ஒருநாளும் இந்தியாவுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள்; அவர்கள் இந்தியாவுக்கெதிரான சீனாவின் பக்கம்தான் முழுமையாக நிற்பார்களெனப் பல ஆண்டுகளாக உரைத்து வந்து உண்மைக்கான நிகழ்காலச் சாட்சியாகவே இச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

‘யுவான் வாங் – 5’ எனும் சீன நாட்டின் உளவுத்துறை கப்பல் இந்தியப்பெருங்கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, தங்கள் நாட்டுக்கு அக்கப்பல் வரப்போவதில்லை என மறுத்தறிவித்த இலங்கை அரசின் ஆட்சியாளர்கள், தற்போது அம்பந்தோட்டை துறைமுகத்தில் அக்கப்பல் நிலைகொள்வதற்கு அனுமதி வழங்கியிருப்பது இந்திய நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகும். ஒருபுறம், இந்தியாவோடு உறவைப்பேணி, பொருளாதார உதவிகளைப் பெற்றுக்கொண்டு, மறுபுறம், சீனாவின் ஊடுருவலுக்கும், ஆக்கிரமிப்புக்கும் வழிகோலும் இலங்கை அரசின் செயல்பாடு இந்திய நாட்டுக்குச்செய்யும் பச்சைத்துரோகமாகும்.

ஆகஸ்ட் 11 முதல் 17 வரை அம்பந்தோட்டை துறைமுகத்தில் சீனக்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டு, செயற்கைக்கோள் குறித்தான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமென இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவை இந்திய நாட்டின் பிராந்திய நலன்களுக்கு ஒருபோதும் ஏற்புடையதல்ல என்பதை இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ‘யுவான் வாங் – 5’ எனும் அக்கப்பல் 750 கிலோமீட்டர் வரையிலுள்ள பகுதிகளைக் கண்காணிக்கும் எனக்கூறப்படும் நிலையில், இலங்கையிலிருந்துகொண்டே தமிழகம், கேரளா, ஆந்திரா போன்ற பெருநிலங்களின் முக்கிய இடங்களையும், தென்னிந்தியாவிலுள்ள ஆறு துறைமுகங்களையும் உளவுபார்க்க முடியுமென்பது சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய விவகாரமல்ல! இந்தியாவின் வடகிழக்கில் அருணாச்சலப்பிரதேசத்தை, ‘தெற்கு திபெத்’ எனக்கூறி சொந்தம் கொண்டாடி,

எல்லையில் அத்துமீறி நுழைந்து, ஆக்கிரமித்து வரும் சீனா, தற்போது தெற்கே இலங்கையில் அந்நாட்டு அரசின் ஒத்துழைப்போடு உளவுத்துறை கப்பல் மூலம் இந்தியாவின் தெற்குப்பகுதிகளைக் கண்காணிப்பது நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்டுள்ள பெரும் சவாலாகும். ஏற்கனவே, அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன அரசின் நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்குவிட்டு, அதனையொட்டி 269 ஹெக்டர் பரப்பளவில் சிறப்புப்பொருளாதார மண்டலத்தை அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் தனிச்சட்டமியற்றி சீனாவின் ஆதிக்கத்திற்கு அடிகோலியதன் நீட்சியாகவே, சீனாவின் உளவுத்துறை கப்பலுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது இலங்கை அரசு என்பது வெளிப்படையானதாகும்.

இந்தியா, இலங்கையோடு எவ்வளவுதான் நெருக்கமாக நட்புறவுபேணினாலும், பொருளாதார உதவிகளை வாரிவழங்கி, நிதியை அள்ளி அள்ளிக்கொடுத்தாலும் இலங்கையின் சீன ஆதரவு நிலைப்பாடு ஒருநாளும் மாறப்போவதில்லை என்பது மீண்டுமொரு முறை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. உலகெங்கும் வாழும் 13 கோடி தமிழர்களின் பெருந்தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டை தன்னகத்தே கொண்டுள்ள இந்தியப்பெருநாட்டுக்கு தமிழர்கள் செய்தப் பெரும்பணிகளும், அளித்தப் பெருங்கொடைகளும் சொற்களில் நிறைவுசெய்ய முடியாத வரலாற்றுச்சுவடுகளாகும். அன்றைய நாட்டு விடுதலைப்போராட்டம் தொடங்கி இன்றைய நாட்டின் வரிப்பொருளாதாரம் வரை எல்லாவற்றிலும் இந்தியாவுக்கு தமிழ்நாடும், தமிழர்களும்தான் நிறைந்தப் பங்களிப்பைத் தந்து முதுகெலும்பாகத் திகழ்ந்து வருகிறார்கள் என்பது உலகறிந்த உண்மையாகும்.

அத்தகைய வரலாற்றுப்பாத்திரங்களையும், பங்களிப்புகளையும் அலட்சியப்படுத்திவிட்டு, தமிழர்களின் உணர்வுகளைத் துளியும் மதித்திடாது பகையினமான சிங்களர்களோடு உறவுகொண்டாடி, ஈழ இனப்படுகொலையை நடத்தி முடித்து, தமிழக மீனவர்களின் படுகொலைகளை மூடி மறைத்த துரோகத்தின் விளைச்சலை இன்றைக்கு முழுவதுமாக அறுவடை செய்துகொண்டிருக்கிறது இந்திய நாடு. இந்திய – சீனப்போரின்போது சீனாவின் பக்கமும், இந்திய – பாகிஸ்தான் போரின்போது பாகிஸ்தானின் பக்கம் இலங்கை நின்றது என்பது வரலாற்றுப்படிப்பினை. இருந்தபோதிலும், தொலைநோக்குப் பார்வையின்றி இந்திய நாட்டின் நலன்களையும், பூகோள அரசியலையும் கணக்கிடாது கண்மூடித்தனமாக இலங்கையை ஆதரித்து வரும் இந்திய நாட்டின் ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் வெட்கக்கேடானது. அதுதான், இன்றைக்கு இந்தியாவுக்கு இலங்கையால் பெருங்கேடு உருவாகும் நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பது திண்ணம்.

ஆகவே, கடந்தகாலத் தவறுகளிலிருந்து இனியாவது பாடம் கற்றுக் கொண்டு, சீனாவின் காலனி நாடாக மாறி நிற்கும் இலங்கையுடான உறவுகளை முழுமையாகத் துண்டித்து அறிவிக்க வேண்டுமெனவும், சீனாவின் உளவுக்கப்பல் இலங்கையில் நிலைகொள்ளவிருப்பதற்கு எதிராக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக இந்திய மத்தியத்தை ஆளும் பாஜக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More