ஈராக் தலைநகர் பக்தாதில் செல்வாக்குமிக்க ஷியா முஸ்லிம் மதத் தலைவர் மொக்ததா அல் சத்ர் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இதுவரை 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சத்ர் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்ததை அடுத்து நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக சத்ர் அறிவித்ததை அடுத்தே இந்த வன்முறை வெடித்துள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்த தேர்தலில் அவரது கூட்டணியே அதிக ஆசனங்களை வென்றது. எனினும் அரசொன்றை அமைப்பதற்கு ஈரான் ஆதரவு ஷியா குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மறுத்து வந்தார்.
இதனையொட்டி கடந்த ஓர் ஆண்டு காலமாக ஈராக்கில் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நீடித்து வருகிறது.
கடந்த திங்கட்கிழமை இரவு வீதிகளில் மோதல் வெடித்ததோடு போராளிகள் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அண்மைய ஆண்டுகளில் ஈராக் தலைநகரில் ஏற்பட்ட மோசமான வன்முறையாக இது உள்ளது.
பெரும்பாலான மோதல்கள் அரச கட்டடங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்கள் இருக்கும் தலைநகரின் ‘பசுமை வலய’ பகுதியிலேயே இடம்பெற்று வருகின்றன. மோதல்கள் காரணமாக நெதர்லாந்து தூதரகப் பணியாளர்கள் ஜெர்மனி தூதரகத்திற்கு மாற்றப்பட்டனர்.
இதில் சில வன்முறைகள் சத்ருக்கு விசுவாசமான அமைதிப் படையணி மற்றும் ஈராக் இராணுவத்திற்கு இடையே இடம்பெற்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். சில போராளிகள் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவது சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்களில் தெரிகிறது.
இந்த மோதலுக்கு மத்தியில் ஈரான் தனது ஈராக் எல்லையை மூடியிருப்பதோடு தமது பிரஜைகளை ஈராக்கில் இருந்து உடன் வெளியேறும்படி குவைட் அறிவுறுத்தியுள்ளது.
30 சத்ர் ஆதரவாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 700 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த பதற்றத்தை தணிப்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்கும்படி ஐ.நா பொதுச் செயலாளரின் பேச்சாளர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். சத்ரின் கூட்டணியைச் சேர்ந்தவரும் ஈராக்கின் இடைக்கால பிரதமருமான முஸ்தபா அல் கதிமி, பதற்றம் ஏனைய நகரங்களுக்கு பரவ ஆரம்பித்ததை அடுத்து தேசிய அளவில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
அமைச்சரவை சந்திப்புகளை இடைநிறுத்தி இருக்கும் அவர் நிலைமையை கட்டுப்படுத்த தலையிடும்படியும் வன்முறையை நிறுத்தும்படியும் மொக்ததா அல் சத்ருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் வன்முறைகள் மற்றும் அனைத்து தரப்புகளும் ஆயுதங்களை பயன்படுத்துவதை நிறுத்தும் வரை சத்ர், உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
48 வயதான சதிர் ஈராக் அரசியல் மற்றும் பொது வாழ்வில் கடந்த இரண்டு தசாப்தங்களாக செல்வாக்கு செலுத்துபவராக உள்ளார். நாட்டின் பலம்மிக்க போராட்டக் குழுவாக உருவெடுத்த அவரது மஹதி இராணுவம் சதாம் ஹுசைன் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின் அந்நாட்டு இராணுவத்துடன் இணைந்து இயங்கியது.
பின்னர் அந்த போராட்டக் குழு அமைதிப் படையணி என்று பெயர் மாற்றப்பட்டதோடு தற்போது ஈராக் படையின் ஓர் அங்கமாக இயங்கி வருகிறது. அந்தப் படையணி நாட்டின் மிகப்பெரிய போராட்டக் குழுவாக உள்ளது.