ஈரானில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 17 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஹிஜாப் கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண்ணை பொலிஸார் கைது செய்து கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மாஷா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கபட்டு வந்த நிலையில் அவர் கடந்த 17 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மாஷா அமினி உயிரிழந்த சம்பவம் பெரும் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மாஷா மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்ததாக ஈரான் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 18 ஆம் திகதி முதல் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டம் ஈரானில் தீவிரமடைந்துள்ள நிலையில் போராட்டம் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது.
ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக துருக்கியில் இஸ்லாமிய பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதேபோல், கனடாவிலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது. இந்நிலையில், ஈரானில் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.