ஒரு சிறு கோளை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அதன் பாதையிலிருந்து வெற்றிகரமாக நகர்த்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் பூமிக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கோள்களைத் தடுப்பதற்கு நம்பிக்கை பிறந்துள்ளது.
டார்ட் என்ற விண்கலம் டைமோர்போஸ் எனும் அந்தச் சிறுகோள் மீது கடந்த மாதம் மோதியது. டைமோர்போஸ் அதன் அருகில் இருந்த டிடிமோஸ் எனும் சற்றுப் பெரிய கோளைச் சுற்றிய குறுகிய பாதைக்கு நகர்த்தப்பட்டது.
அதனால் 160 மீற்றர் விட்டத்தைக் கொண்ட கோளின் வட்டமிடும் நேரம் 4 வீதம் சுருங்கியது. அது 11 மணிநேரம் 55 நிமிடங்களிலிருந்து 11 மணிநேரம் 23 நிமிடங்களுக்குக் குறைந்தது.
பூமியில் ஒரு நகரத்தைத் தரைமட்டமாக்குவதற்குக் கோள்களின் விட்டம் 140 மீற்றருக்கும் மேல் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அத்தகைய கோள்கள் பூமியை அடுத்த 100 ஆண்டுகளுக்குள் தாக்கும் ஆபத்து பெரிதாக இல்லை என்று கூறப்படுகிறது.