பால்நிலை சமத்துவமானது, இப்போதைய உலகிலிருந்து 300 ஆண்டுகள் தொலைவில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் அன்டோனியோ கட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜெனிவாவிலுள்ள ஐ.நா சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா பெண்கள் அமைப்பின் மதிப்பீட்டுப் படி, பால்நிலை சமத்துவமானது எமது கண் முன்னே மறைந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் பெரும்பாலான நாடுகள் இனப்பெருக்க உரிமைகள், பிரசவத்தின் போதான தாய் இறப்பு விகிதம், பால்ய திருமணங்கள் மற்றும் கல்வி மறுக்கப்படுதல் போன்ற விடயங்களில் இன்னும் பின்வாங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளை பெயரிட்டு, அங்கு பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்பட்டதாக அன்டோனியோ குறிப்பிட்டுள்ளார்.
“தசாப்தங்கள் கடந்த ஆணாதிக்க, பாகுபாடுகள் நிறைந்திருந்த உலகம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தில் பெரும் பாலின இடைவெளியை உருவாக்கியுள்ளது. சர்வதேச கட்டமைப்புகள் பெண்களுக்காக உழைப்பதில்லை” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமைகள் மாற வேண்டும் என்றும் அவர் அவ்வறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.