அமெரிக்காவைத் தொடர்ந்து, சீனாவுக்கான சிப் ஏற்றுமதியை நெதர்லாந்தும் கட்டுப்படுத்தவுள்ளது.
அதன்படி, தேசிய பாதுகாப்புக் கருதி, சிப் ஏற்றுமதியில் சில கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக டச்சு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் கோடை காலத்துக்கு முன் அறிமுகமாகுமென நெதர்லாந்து வர்த்தக அமைச்சர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அழுத்தம்
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ஜப்பான் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் சிப் தயாரிப்புத் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கின்றன.
சிப் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை சீனா மீது அமெரிக்கா ஏற்கெனவே விதித்துள்ளது. எனினும், அவை எதிர்பார்த்த பலனைத் தரவேண்டுமானால், ஜப்பானும் நெதர்லாந்தும் அது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.
எனவே, நெதர்லாந்து மற்றும் ஜப்பானை கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு, அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது. இது குறித்து கடந்த சில மாதங்களாக இந்த மூன்று நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.
தற்போது சீனாவுக்கான சிப் ஏற்றுமதியை கட்டுப்படுத்தவுள்ளதாக நெதர்லாந்தும் அறிவித்துள்ளது.
“இது ஓர் உண்மையான முன்னேற்றம். அமெரிக்காவுக்கு ஓர் உண்மையான வெற்றி. சீனாவுக்கு இது மிகவும் மோசமான செய்தி. அமெரிக்கா-சீனா உறவுகள் ஏற்கெனவே மோசமான இடத்தில் உள்ளன. இந்த விடயம் நிலைமையை இன்னும் மோசமாக்கும்” என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட அட்லாண்டிக் கவுன்சில் சிந்தனைக் குழு (Atlantic Council think tank) பிபிசியிடம் கூறியுள்ளது.
மேலும், “தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு அடிப்படையில் நெதர்லாந்து இந்தத் தொழில்நுட்பத்தை விரைவில் கட்டுக்குள் கொண்டுவருவது அவசியம் என்று கருதுகிறது” என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
தென் கொரியா அதிருப்தி
இதேவேளை, அமெரிக்காவின் சிப் கொள்கை குறித்து தென் கொரியாவின் வர்த்தக அமைச்சு அதிருப்தி தெரிவித்துள்ளது.
“சிப் சட்டத்தின் நிபந்தனைகள் வணிக நிச்சயமற்ற தன்மைகளை ஆழப்படுத்தலாம். நிறுவனங்களின் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப உரிமைகளை மீறலாம் என்பதை தென் கொரிய அரசாங்கம் தெளிவுபடுத்தும்” என்று தென் கொரியா வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய மெமரி சிப் தயாரிப்பாளரான Samsung உட்பட முக்கிய நுண்செயலி உற்பத்தியாளர்களின் தாயகமாக தென் கொரியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.