இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்றுவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், சர்வதேச வர்த்தகத்தை இந்திய ரூபாயில் தீர்த்து வைப்பதற்கான வழிமுறை அமைக்கப்படும் என இந்திய மத்திய அரசு தெரிவித்திருந்தது.
டொலர் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், INR இல் சர்வதேச வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், செயல்முறையை சீராக செய்வதற்கும் அந்நாடுகள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), சர்வதேச வர்த்தகத்தை இந்திய ரூபாயில் தீர்த்து வைப்பதற்காக வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்க 18 நாடுகளை சேர்ந்த வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது என இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இலங்கை, இங்கிலாந்து, மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், தான்சானியா, உகாண்டா, போட்ஸ்வானா, பிஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல் மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கு வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.